நீலம் -ஜெயமோகன்

கண்ணன் பிறந்த நாளையொட்டி ஜெயமோகன் தளத்தில் நீலம் பற்றிய வாசகர் கடிதங்களைப் படித்ததும், எனக்கு, நான் நீலம் பற்றி எழுதிய நாட்கள் நினைவில் எழுந்தன. மீண்டும் நான் அவற்றை வாசித்துப் பார்த்தேன். ஜெயமோகனின் பித்து என் எழுத்திலும் இருப்பதைக் காணமுடிந்தது. நாம் என்ன வாசிக்கிறோமோ அதுவாகவே ஆகிறோம் என்பதை உணர்ந்த மறுகணம், அதை மீண்டும் பகிர்ந்து கொள்ளத் தோன்றியது.

1. மனம் மயக்கும் நீலம்

வண்ணக்கடல் முடித்ததும் உடனடியாக நீலத்தை வாசிக்கமுடியுமா என்ற சந்தேகம் இருந்தது. இருந்தபோதிலும் எதற்கும் இருக்கட்டும் என்று நேற்றே (10.03.2015) புத்தக அலமாரியிலிருந்து நீலத்தை எடுத்து மேசையின் மீது வைத்திருந்தேன். இன்று அதிகாலையில் நீலத்தை வாசித்துவிடுவது என்று எழுந்தேன். மேசை மீதிருக்கும் நீலத்தையே பார்த்தவாறு அமர்ந்திருந்தேன். புத்தகத்தை முன்னும் பின்னும் திருப்பியவனாக, உள்ளிருக்கும் படங்களைப் பார்வையிட்டேன். எனினும் வாசிப்பில் உடனடியாக இறங்க முடியவில்லை. மனம் நிலையற்று, அலைப்புண்டு சிதறி ஓடியது. கம்சனும், தேவகியும், வசுதேவரும், ராதையும், நினைவறையில் இருந்து வெளியேவர, அவர்களைத் தொடர்ந்து நீலவண்ண மேனியன் கண்ணன் புன்னகையுடன் வேய்ங்குழலை இசைத்தபடி வந்திட்டான். நான் கன்றுக்குட்டியாக மனம் துள்ள, மயக்கத்தோடு அவனை ஏறிட்டேன்.

மாயச் சகட முதைத்து மருதிறுத்து
ஆயர்க ளோடுபோய் ஆநிரை காத்துஅணி
வேயின் குழலூதி வித்தக னாய்நின்ற
ஆயர்க ளேற்றினைப் பாடிப்பற
ஆநிரை மேய்த்தானைப் பாடிப்பற

எனும் நாலாயிர திவ்யப் பிரபந்த வரிகள் மன ஆழத்திலிருந்து மேலெழ, கூடவே மோகப் பெருமயக்கு என்ற சொற்றொடரும் நினைவில் அலைமோத, பாரதியின் வரிகளுக்கு மனம் தாவியது. குழலூதும் கண்ணன் மறைந்து பாஞ்சாலி வேண்டி நின்ற மாயக் கண்ணன் தோற்றம் மனதில் நிறைந்தது.

சக்கரம் ஏந்திநின்றாய்-கண்ணா
சார்ங்கம்என் றொருவில்லைக் கரத்துடையாய்
அஷரப் பொருளாவாய்-கண்ணா
அக்கார அமுதுண்ணும் பசுங்குழந்தாய்
துக்கங்கள் அழித்திடுவாய்-கண்ணா
தொண்டர்கண் ணீர்களைத் துடைத்திடுவாய்
தக்கவர் தமைக்காப்பாய்-அந்தச்
சதுர்முக வேதனைப் படைத்துவிட்டாய்

கண்ணனை நினைக்கையிலே மனம் கொள்ளும் உவகை சொல்லில் அடங்குவதில்லை. வெண்ணெய் திருடும் குழந்தையாய், கன்னியர் உள்ளம் கவரும் கள்வனாய், எதிரிகளை முறியடிக்கும் தந்திரனாய், பகவத் கீதையை அருளியவனாய் அவனுக்கு எத்தனை எத்தனை முகங்கள்? கண்ணனை ஏற்காதோர் என்று எவரும் உண்டோ இப்பூவுலகில்? அனைவருக்கும் ஏற்புடையவனாய் ஏதேனும் ஓர் உருவத்தில் காட்சியளிக்கும் சாகசக்காரன் அவனன்றோ! பாரதி அவனை நண்பனாய், மந்திரியாய், நல்லாசிரியனாய், சேவகனாய், தெய்வமாய் தரிசித்தது அதனாலன்றோ?

திடீரென தி.ஜானகிராமனின் மோகமுள் நாவலை மறுவாசிப்பு செய்தால் கட்டுரைக்கு வைக்க நினைத்திருந்த தலைப்பு ஞாபகம் வந்தது. உடனே அது நீலத்துக்கு பொருத்தமாக இருக்குமென்று தோன்றவே, “மனம் மயக்கும் நீலம்” என்ற தலைப்பு தோன்றியது. மனம் கடலலையென புரண்டெழ, சிந்தனைகள் கட்டின்றி ஓடியது தறிகெட்ட புரவியைப் போல. படிக்காமலேயே நீலத்தைப் பற்றி எழுத முடியும் என்று தோன்ற, ஒருகணம் வியப்புற்று திடுக்கிட்டேன்!

2. மனமொழியும் கவிமொழியும்

அழகே உருவான ராதை துயில்கிறாள். அழகான பெண்கள் தூங்கும் காட்சி இன்னும் அழகானதன்றோ? ‘மண்ணிலினி ஒரு போதும் நிகழமுடியாத பேரழகி நீ’ எனும் சொற்றொடரால் அவள் அழகை நாம் உணரமுடிகிறது. அவள் ஒரு பிறப்பு அல்ல நிகழ்வு எனக்குறிப்பது அர்த்தம் நிரம்பியது; அலாதியானது. இனி இப்படியான ஒரு பேரழகி எப்போதோ? என்ற வினா அதில் தொக்கி நிற்கிறது. அவள் இன்னும் உறங்குவது கண்டு பொறுக்காத தென்றல், “இன்னுமும் துயிலுதியோ இளநங்காய்? இனியும் வேளை வருமென்று எண்ணினாயா? எத்தனை பிறவிப்படிகளில் ஏறி ஏறி இங்கு வந்துசேர்ந்திருக்கிறாயென அறிவாயா?” என்று ராதையை எழுப்புகிறான். அவள் அங்கம் முழுதும் தீண்டிய பொல்லாத அந்தக் கள்வன் அவளை மட்டுமா எழுப்பினான்? அவள் பெண்மையையும் அல்லவா எழச்செய்தான்? நாமே தென்றலாக ராதையை துயிலெழச் செய்துவிட்டதாக உணர்கிறோம்!

ஓர் உயிர் தன்னைத் ‘தான்’ என்றுணர்ந்த மறுநொடி பிறிதோர் உயிர் மீது விருப்புக்கொள்கிறது. எனவே அது, ‘ஏனுளேன்’ எனக்கேட்டு ‘இங்குளேன்’ என்றுணர்ந்து தன்னில் மாற்றம் கொள்கிறது. அவளுள் அப்படி மாற்றம் கொண்ட அந்தப் பெண்மையின் சிறப்பென்ன? அது ஆணைவிடச் சிறந்ததா இல்லை அவனைவிடவும் உயர்ந்ததா? “சூல்கொள்ளும் வயிற்றையும் அமுதூறும் முலைகளையும் அவன் ஆணுக்கு அளிக்கவில்லை. உண்ணப் படுவதற்கான உதடுகளையும் பருகப்படுவதற்கான புன்னகையையும் அளிக்கவில்லை. கனிவதன் மூலமே கடப்பதன் கலையை கற்பிக்கவில்லை. அளிப்பதன் வழியாக அடைந்து நிறைவுறும் அறிவையும் கொடுக்கவில்லை” என்று சொல்லும்போது பெண்மையின் உயர்வை சிறப்பை ஆண்களும் உணர முடிகிறது.

உடல்தீண்டாது உளம்தீண்டாது உயிர்தீண்டி எழுப்பியது எது? செவிநுழையாது சிந்தையறியாது சித்தமறிந்தது எது? விதைவிட்டெழுந்த முளை போல அணிமலர் பாயில் எழுந்தமர்ந்தாள் ராதை எனும்போது அந்த வரிகளின் சந்தநயம் நம் மனதைக் கவர்கிறது. ராதைக்கு கண்ணனைக் காணும் ஆவல். அவனைக் காண ஆயர்குடிக்கு விரைகிறாள். அவளுள் உற்சாகம்; இளமை தரும் உத்வேகம். மான் போல் துள்ளிக்குதித்து ஓடுகிறாள். அந்தக் காட்சியை மனக்கண்ணில் காணும்போது உள்ளம் துள்ளுகிறது; உடல் சிலிர்க்கிறது; மனம் உவகை கொள்கிறது.

ஆயர்குடியை அடைகிறாள் ராதை. “சற்றுமுன் விழித்தெழுந்த ஊரெங்கும் கன்றுகள் முலைக்குத் தாவும் குரலும் அன்னைப்பசுக்கள் அருகழைக்கும் மறுகுரலும் கேட்டுக்கொண்டிருந்தன. கொதிக்கும் எண்ணையில் நீர் விழும் ஒலிபோல பால்கறக்கும் ஒலிகள் எழுந்தன. ஒலித்து ஒலித்து நிறைந்து நுரைத்து ஞானத்தின் அமைதிகொண்டன சிறுபாற்குடங்கள். உள்ளே சென்று பெருங்கலத்தில் ஒழிந்தபின் முக்தியின் வெறுமையை அள்ளிக்கொண்டன” என அதிகாலை ஒசையைக் காட்சிப்படுத்துகிறார் நாவலாசிரியர். அதிகாலை தரும் உற்சாகம் போலவே இந்த வரிகளும் நமக்கு உற்சாகத்தைத் தருகிறது. எல்லாம் முன்னரே கனவில் கண்டது போலவே அவள் யசோதையின் வீட்டை அடைகிறாள். கனவும் நனவும் நினைவும் இணைந்த நிகழ்வுகளே வாழ்க்கை என்பதால் எல்லாம் முன்னரே அறிந்தது போல மனமயக்கம் கொள்கிறாள் ராதை.

அங்கே அவள் கண்ணனைக் காண்கிறாள். அவனைக் காணாத கண்ணும் கண்ணல்ல என்று அவளுக்கு மட்டுமல்ல நமக்கும் தோன்றுகிறது. ஜெயமோகன் வரிகள் நிகழ்த்தும் அற்புதம் என அந்தக் குழந்தைக் கண்ணனின் வர்ணிப்பைச் சொல்லலாம். “அமுது எனச் சொல்லிக் குவிந்திருந்தது கொழுங்கன்னம். முலை என்று அமைந்திருந்தது செம்மணி வாய்மலர்க்குமிழ். அம் என கீழுதடு அழுந்த, மு என்று மேழுதடு வளைந்து மேலே குவிந்திருக்க அத்தனை குழந்தைவாயும் சொல்லும் அச்சொல்லிலா நீயும் வந்தமைந்திருக்கிறாய்?” ஜெயமோகன் வரிகளால் அழுந்திய கீழுதடும் குவிந்த மேலுதடும் கொண்ட அந்த முகம் கற்பனையில் நம் அருகே நெருங்கி வருவதாக உணர்கிறோம். அந்த முகத்தில் ‘இச்’சென ஒரு முத்தம் பதிக்கவேண்டுமென மனம் விழைகிறது!

“அய்யோ, நீயுமொரு குழந்தையேதானா?” எனக் கேட்கும்போது நம் உள்ளம் அனலிட்ட மெழுகாய் உருகுகிறது! அவனை வேறு என்னதான் சொல்வது? அவன் வெறும் குழந்தைதானா? ஐயோ! என்ன சொல்லி உன்னைச் சொல்ல? கம்பன் இல்லை கவிதை சொல்ல எனத் தோன்ற, அவனைக் கையில் எடுத்து மார்போடு அணைத்து, சின்னஞ்சிறு சிசுவின் வாசனையை நுகரும் இன்பம் கிட்டுகிறது!

“சுட்டுவிரலால் சற்றே தொட்டு வைத்ததுபோன்ற சிறு மூக்கு. பொன்னகையில் கொல்லன் ஊதிஊதியிட்ட இருசிறு துளைகள். மூச்சிலாடும் கழுத்தின் கதுப்பு. மூடிய இமைகளுக்குள் கனவிலாடும் விழிகள் நெளிந்தமையும் சிறு நடனம். நடக்கும் யானைகளை மூடிய நீலப்பட்டுக் கம்பளங்கள். கருங்குழல் நுரைச்சுருள்கள் விழுந்துகிடக்கும் நீலஎழில்நுதல். காற்றசைக்கும் குழல்பிசிறுகள் நெளிந்தாடி நெளிந்தாடி கொன்று படைத்து உண்டு உலகாண்டன” என்பதை வாசிக்கும் போது நாமும் இறந்து இறந்து பிறக்கிறோம். சொல்லில் அடங்காப் பெருங்கவிதையென கண்ணனின் அழகு மேலும் மேலும் கூடும் விந்தை வாசிப்பில் நிகழ்கிறது.

ஒரு படைப்பாளியின் மனவெளியில் எத்தனையோ தோன்றலாமெனினும் அவை அத்தனையையும் சொற்களாக்குவது எளிதல்ல. ஆயினும் வெண்முரசு வரிசையான நீலத்தில் அந்த விந்தை நிகழ்ந்திருக்கிறது. ஜெயமோகனின் சொல்லாட்சி நம்மை பிரமிக்கச் செய்ய, இன்னும் இன்னும் என மனம் விழைகிறது அறியஅறிய அறியாமை பெருகுவது போல. வார்த்தைகளும் வாக்கியங்களும் அவருக்கு ஏவல் செய்கின்றன அகத்தியரின் கமண்டலத்தில் அடங்கிய கங்கையைப் போல. கவித்துவ வார்த்தையாய் வெளிப்படும் நீர்த்துளிகள் வாக்கியங்களெனும் காட்டாற்று வெள்ளமென பொங்கிப் பிரவகிக்கிறது. கால்கள் நிலத்தினின்றும் மேலெழுந்து அந்தரத்தில் பறக்கும் உணர்வைத்தர, மொழியின் உச்சபட்ச சாத்தியமாக, மனமொழியை கவிமொழியில் தந்திட்ட அற்புதம் நீலம்.

3. பெயரழிந்து நிற்றல்

கண்ணனால் தனக்கு ஆபத்து வருமோ என்று அஞ்சுகிறான் கம்சன். எனவே அவனிடம் ஐயம், தனிமை, விழிப்பு, குரூரம், அதிருப்தி ஆகியன ஒன்றாக சேர்ந்து ஆணவமாக உருக்கொண்டு அவனை தீய சிந்தனையில் தீய வழியில் நடத்துகிறது. “அது தொட்டவனை தான்கொண்டு செல்வது. பட்டகுடியை பாழ்நிலமாக்கிய பின்னரே விலகுவது” எனும் வரிகளில் கம்சனின் அறியாமை வெளிப்படுத்தப்படுகிறது. அவன் தனது குலத்தை, குடியை அரியணையில் வைத்திருக்கவே அத்தனையும் செய்கிறான். ஆனால் அவன் செய்யும் அந்தச்செயல்களே அவன் குடியை நீர்மூலமாய் அழிக்கிறது!

அவன் இரக்கமின்றி தேவகியின் ஏழு குழந்தைகளைக் கொல்கிறான். முதன் முதலாய் கம்சன் கதையைக் கேட்டபோது எனக்குள் பல்வேறு கேள்விகள் எழுந்தன. குழந்தையைக் கொள்வதற்கு பதிலாக தேவகியை அவன் ஏன் கொல்லக்கூடாது? கம்சன் குழந்தைகளை கொல்லப்போகிறான் என்று தெரிந்தும் வசுதேவரும் தேவகியும் ஏன் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்? கண்ணன் மட்டும் காப்பாற்றப்பட மற்ற குழந்தைகள் ஏன் கைவிடப்பட்டனர்? போன்ற பல கேள்விகள் மனதில் தோன்றின. வளரவளர அக்கேள்விக்கான பதில்கள் வேண்டியிருக்கவில்லை. இப்போது நீலத்தை வாசிக்கையில் அக்கேள்விக்கான பதில்கள் இருப்பதைக் காண்கிறேன்.

எட்டாவது குழந்தை தப்பிவிட்டதை அறிந்து கம்சன் அஷ்டமிரோகிணியில் பிறந்த அனைத்துக் குழந்தைகளையும் கொல்லச்சொல்கிறான். வசுதேவரிடம் அந்தக் குழந்தை எங்கே எனக்கேட்கும் போது, “உம் நெஞ்சில் அச்சமாகவும் உம் தம்பியர் படைக்கலங்களில் வஞ்சமாகவும் அங்கே நகருறையும் அன்னையர் கண்களில் கண்ணீராகவும் அவர் தந்தையர் நெஞ்சில் பழியாகவும் விளைபவன் அவனே” என்கிறார் வசுதேவர். கண்ணன் எங்கேயும் செல்லவில்லை மாறாக கம்சன் உள்ளத்திலே அச்சமாக உறைகிறான் என்று வசுதேவர் குறிப்பது கவனிக்கத்தக்கது. கம்சனே கண்ணன் உருவாகக் காரணமாகிறான். வஞ்சம், பகை, உறவு அன்பு ஏதோன்றையும் தன் உள்ளத்தில் கருக்கொண்டு உருக்கொண்டு பிறக்கச் செய்பவன் தனக்கான எதிராளியை தானேதான் உருவாக்கிக்கொள்கிறோம் என்பதை அறிவதில்லை.

கண்ணனின் பெயர்சூட்டு விழா நடக்கிறது. அந்த விழாக்காட்சியும் பெண்களின் கூட்டமும் நம் உள்ளத்தை ரம்மியமாய் நிறைக்கிறது. அங்கே வரும் பெண்களின் பெயர் பட்டியல் மிக நீண்டது. ஆண்களும் பெண்களும் மட்டுமின்றி உலகத்து உயிர்கள் அனைத்தும் அதில் பங்கேற்கின்றன. எல்லோரும் அருகிருக்க ராதை இல்லாதிருப்பதை அறிந்து அவளை வரவழைக்க அழுகிறான் மாயக் கண்ணன். "சிற்றெறும்பு கடித்ததோ? சிறுக்கியரின் நகம்தான் பட்டதோ? சிறுவயிறு வலித்ததோ? சீறும் விழிக்கோள் கொண்டதோ?" என அவன் அழுகையைக் கண்டு ஒவ்வொருவரும் தவிக்கிறார்கள். அவன் அழுகையை செவிமடுத்தது போல அங்கே வந்துசேர்கிறாள் ராதை. அப்போது அவளைப் பார்த்து மந்தன், “காணுமெதையும் காணாத கண்கள். காணாதவற்றை எல்லாம் கண்டறியும் கண்கள். அவள் கண்களறிபவை கண்களுக்குரியவை அல்ல” என்கிறான். எப்போதும் ராதை கண்ணனைப் பார்க்கிறாள் எனினும் அவள் கண்கள் கண்ணனை மட்டும் காண்பதில்லை. கண்ணனைக் காணாதபோதோ காணும் அனைத்திலும் கண்ணனையே காண்கிறாள். எனவே அவள் கண்கள் அறிபவை கண்களுக்குரியவை அல்ல கண்களுக்கும் அப்பால் அவள் ஆன்மாவுக்குரியவை என்றறியும் போது நம் மெய் சிலிர்க்கிறது!

மந்தன் மேலும் உணர்ச்சிப் பெருக்கால், “யாழ்தேரும் விரலுடன் பிறந்தமையால் நான் வாழ்த்தப்பட்டேன். சொல்தேரும் நாவு கொண்டிருப்பதனால் நான் முழுமை பெற்றேன். கண்ணே, என் சொல்லே, கருத்தே, நான் கற்ற கவியே, இக்கணத்தை இப்புவியின் அழியாக் காலத்தில் நிறுத்து!” என்று கூவுகிறான். நாம் முழுமையான இன்பத்தில் திலைத்து நிற்கும்போது இந்த உலகமும் ஒரு கணம் நின்றுவிடுகிறது. அது கலவியாக இருக்கலாம், காணும் அழகாக இருக்கலாம் அன்றி நாம் கற்கும் நூலாக இருக்கலாம். அப்படி அந்தக்கணத்துடன் உலகம் நின்றுவிட்டால் எத்துனை அற்புதமாக இருக்கும்? வரும்துன்பம் இனி வராமலே போகுமன்றோ?

மண்ணளந்து விண்ணளந்து மாவெளியளந்து தன்னளந்து தனித்தோன் கையளவு உடல்கொண்டு வந்தமைந்த சிறுதொட்டிலைச்சுற்றிச் சூழ்ந்து நின்று களிவெறியெழுந்து கூவினர் பெண்கள் எனும்போது நமக்குள்ளும் அந்தக் களிவெறி கூடுகிறது. ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாய் அணிசெய்து மகிழ்கிறார்கள். என்னதான் செய்தாலும் அவன் அழகு குறைவதில்லை பூரணத்திலிருந்து பூரணத்தை எடுத்த பின்னரும் பூரணமே எஞ்சியிருப்பது போல. ராதை அவனுக்கு மயிற்பீலி சூடுகிறாள். காணும் அனைவரும் மயங்கி நிற்கிறார்கள். கண்ணா! மணிவண்ணா! மணிமுத்தே! பொன்னே! பொற்பதமே! என நம் மனம் அரற்றுகிறது. “இன்பக் கதைகளெல்லாம் – உன்னைப்போல் ஏடுகள் சொல்வதுண்டோ? அன்பு தருவதிலே – உனைநேர் ஆகுமோர் தெய்வமுண்டோ?” என்று கோகுலமே மகிழ்ந்து இன்புறுகிறது.

கண்ணன் வளர்கிறான். உலகைப் படைத்தவனே உலகைப் புதிதாய் கண்டு வியக்கும் விந்தையைக் காண்கிறோம்! ‘தா தா’ என்றும் ‘உம்’ என்றும் ‘மா’ என்றும் ‘பா’ என்றும் ‘..ண்ணன்’ என்றும் ‘போ போ’ என்றும் மழலை பேசி, ‘ராதை’ என்கிறான். ராதை உள்ளம் நெக்குருகி கல்லாய்ச் சமைந்து நிற்கிறாள். ஆராதிப்பவள் ஆராதிக்கப்படும் விந்தை அங்கே நிகழ்கிறது. ‘என்ன உறவு இது!’ என்று நாம் வியந்து நிற்கிறோம். கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அறியும் ஐம்புலனும் கண்ணனிடம் உள என்று ராதை உணரும் தருணம் அப்போது வாய்க்கிறது. ஒரு நாள் கண்ணனைக் காணாது ராதை அவனைத்தேடி காட்டிற்குச் செல்கிறாள். அங்கே அவன் அவளை ‘சியாமை!’ என அழைத்து அணைக்க, அவள் அவனை “நீ கனசியாமன்’ என்று சொல்லி அவனை முத்தமிடுகிறாள். ‘நான் நீ’ எனும் இருளழிந்து ‘நாம்’ எனும் ஒளி உருவாகி, இருவரும் பெயரழிந்து நிற்கும் நிலை அது.

கட்டுடைத்து கரையுடைத்து ஆர்ப்பரித்துச் செல்லும் நீலத்தில், இழுபடும் சிறு துரும்பென, அதன் போக்கில் பயணிக்கிறேன். கையில் இருக்கும் இனிப்பு தீர்ந்துவிடுமோ என அஞ்சும் சிறு குழந்தையாக சிறிதுசிறிதாக சுவைக்கிறேன்.

4. பித்தின் உச்சநிலை

‘தன்னைக் கடந்துசெல்லும் தனிவழி கண்டவன் ஒருவனைக் காட்டுக’ என்று துர்வாசர் நெருப்பிடம் கேட்கும்போது நெருப்பு கம்சனைக் காட்டுவதிலிருந்து தனக்கிணையான ஒப்பாரும் மிக்காருமில்லாத ஆற்றலுடையவன் கம்சன் என்பதை நாம் அறிகிறோம். ஆயினும் வழிகண்டவன் விழியில்லாதவனாக அதில் செல்லாது வேறு பாதையில் போகிறான். அதை அவனுக்கு நினைவுறுத்தவே சிறுகுருவி அவனிடம், ”யார் நீ?” என்று கேட்கிறது. இருந்தும் அவன் தன்னைத் ‘தான்’ என உணரவும் அறியவும் தவறிவிடுகிறான். அப்படி அறிந்திருந்தால் அவன் இத்தனைக் குருதியை நகரமெங்கும் ஓடச் செய்திருக்கமாட்டான். 

பூதனை, திருணவிரதன் ஆகியோர் மூலம் கண்ணனைக் கொல்ல முயற்சிகள் நடக்கின்றன. பூதனை அரக்கியல்ல தன் மகவைப் பறிகொடுத்துப் பித்தியான மானிடப்பெண் எனவும், தன்பொருட்டு அவ்வாறான அவளுக்கு கண்ணன் சித்தியளிக்கிறான் என்றும் சித்தரித்திருப்பது அழகானது; ஏற்புடையது. அந்நிகழ்வுகளை நேரடியாகக் காட்சிப்படுத்தாமல் சொல்லாகவும் கனவாகவும் காட்டியிருப்பது ரசிக்கத்தக்கது. அதை கண்ணன், ராதை, யசோதை மூவர் வாயிலாகவும் காட்சிப்படுத்தும் சாத்தியக்கூறு இருப்பதை எண்ணிப் பார்க்கும்போது வாசிக்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக புராணங்களை அணுகமுடியும் என்பதே அதன் அழகும் சிறப்பும் என்பதை அறியமுடியும். வரலாற்றைவிடவும் புராணங்களே உயிர்த்துடிப்பானவை; நம்மை விழிப்புணர்வுக்கு இட்டுச் செல்பவை என்று ஓஷோ சொல்வது அதனால்தான்.

கண்ணன் விளையாடுகிறான். அலகிலா விளையாட்டுடையோன் விளையாடுவதில் வியப்பேது? பேசுகிறான், ஒடுகிறான், குழலிசைக்கிறான், மண்ணுண்ட வாய்திறந்து விண் முழுதும் காட்டி மாயம் செய்கிறான். அன்னையரும் ராதையும் வார்த்தைகளால் அளவிடமுடியா இன்பத்தில் திளைக்கிறார்கள். வாழும் ஒவ்வொரு கணந்தோறும் ராதை கண்ணன் அருகே இருக்கிறாள். அவள் கண்ணன் மீது கொண்டிருக்கும் பிரேமை கண்டு யசோதை வியக்கும்போது, “நான் எண்ணுவதே இல்லை. கண்ணனென்ற பேரில் கருத்திழந்து சொல்லிழந்து வெட்டவெளியில் விரிந்தழியும் ஒளி போலாகிறேன்” என்கிறாள். அவன் அருகில்லாத போதும், அவன் அவளையும், அவள் அவனையும் காண்பதில் எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள் தத்துவத்தைச் சொல்கிறார் ஜெயமோகன். வாசிக்கும் பக்கங்கள் தோறும் நமக்கும் அவ்வாறே தோன்ற எப்போதும் கண்ணன் நம்முடனே இருப்பதாக உணர்கிறோம்.

இரட்டை மரங்களை வீழ்த்தி யசோதை மனக்குறை தீர்க்கிறான். காளியன் எனும் பாம்பை அடக்கி மாயம் செய்கிறான். இந்திரனின் சினத்திலிருந்து கோவர்த்தன மலையைக் குடையாக்கி ஆயர்பாடியைக் காக்கிறான். அவன் செய்யும் லீலைகள் அனைத்தும் ஜெயமோகனின் கவித்துவமிக்க மொழியால் நம் உள்ளம் உடல் இரண்டையும் ஆக்கிரமித்து இணையற்ற இன்பத்தில் நம்மை ஆழ்த்துகிறது. அவன் செய்யும் தொல்லைகள் நாளும் புகார்களாய் அவன் இல்லம் வந்து சேரும்போது, தந்தைக்கும் தனயனுக்கும் இடைநிகழும் உரையாடல் அசைவின்மையிலிருந்து அசைவையும், பற்றிலிருந்து பற்றின்மையும் உணர்த்தி ஜீவாத்மா பரமாத்மா தத்துவத்தைச் சொல்கிறது.

திருமணம் ராதையைக் கண்ணனிடமிருந்த பிரிக்கிறது எனினும் எப்போதும் அவன் குழலிசை கேட்கும் இன்பத்தில் பித்து நிலை ஆட்கொண்டு ‘பிச்சி’ என அனைவராலும் ஏசப்படுகிறாள். அவள் மெல்லமெல்ல யோகநிலையின் உச்சத்திற்குச் செல்வதை அவள் நுகரும் முல்லை, அந்திமந்தாரை, அல்லி, மணிசிகை, பூவரசு, தாழம்பூ, பிரம்மகமலம், செண்பகம், சம்பங்கி, மனோரஞ்சிதம், பாரிஜாதம் ஆகிய மலர்களின் வாசனையைக் கொண்டு நமக்கு உணர்த்துகிறார் ஜெயமோகன். இப்பகுதிகளுக்கு அவர் சூட்டியிருக்கும் அணிபுனைதல், காத்திருத்தல், கருத்தழிதல், கடத்தல் முதலிய தலைப்புகளும் அந்த யோகநிலையின் படிப்படியான உச்சத்தைக் காட்டுகிறது. அவள் புலன்கள் கூர்பெற மணமும் ஓசையும் அவளை ஆக்ரமிக்கிறது. யான் எனது என மறந்து எங்கும் எத்திசையும எப்பொருளும் கண்ணனாக, எல்லாமும் அவனாக பித்தத்தின் உச்சநிலையில் சித்தம் தடுமாற மோகத்தின் பெருமயக்கம் அவளைக் காமத்திலிருந்து கடவுளுக்கு இட்டுச்செல்கிறது. ராஸலீலையின் அற்புத கணங்கள் இப்பக்கங்கள் முழுதும் நிரம்பி நீக்கமற நிறைந்திருக்கும் பரம்பொருளில் நம்மை லயிக்கவைக்கிறது.

நீலம் வழக்கமாக எழுதப்பட்டிருந்தால் அதில் நிகழ்ந்திருக்கக்கூடிய சாத்தியங்களை எண்ணிப் பார்க்கிறேன். அது நம் மனதைத் திறந்து காட்டியிருக்கும் ஆனால் இதுவோ நம் இதயத்தைத் திறக்கிறது. அது ஒரு வகை எனில் இது ஒரு வகை. சிந்திப்பதைவிட உணர்வதால் கிட்டும் இன்பம் பேரின்பமன்றோ? சிந்தனை எப்போதும் துன்பத்தைத் தருவதால் சிந்தனையிலிருந்து விடுபடும் போதே வாழ்க்கை கொண்டாட்டமாகிறது. நீலம் தரும் வாசிப்பனுபவத்தை வார்த்தைகளில் சொல்லவியலாது ஏனெனில் அதைச்சொல்ல நம்மிடம் வார்த்தைகள் ஏதும் எஞ்சியிருப்பதில்லை. நீலம் நம்மை நடக்கவைக்கிறது, சிலசமயம் ஒடவைக்கிறது, சில சமயம் தரையிலிருந்து எம்பி வானத்தில் மிதக்க வைக்கிறது. இலக்கியத்தின் வாயிலாக இறை உணர்வை சாத்தியமாக்கும் ஓர் அற்புத அனுபவம் நீலம்.

Related Posts Plugin for WordPress, Blogger...