படிக்க... படிக்க... எழுத… எழுத…

இதுவரை மூன்று பர்வங்களை முடித்திருக்கிறேன். படிக்கப் படிக்க பிரமிப்பும், வியப்பும் கூடிக்கொண்டே போகிறது. வாசிக்கையில் தோன்றும் முதல் எண்ணம் மகாபாரதம் அசாத்தியமான ஒரு ஸ்கிரிப்ட் என்பதுதான். என்ன மாதிரியாக கதையை நடத்திச் செல்கிறார் வியாசர் என்பதை அறிகையில், அவர் ஒரு மிகச்சிறந்த படைப்பாளி என்ற எண்ணமே மேலோங்குகிறது.

எழுத எழுத சுவாரஸ்யம் கூடிக்கொண்டே போகிறது. கதை பரபரப்பாக நகரும் விதம் மனவெழுச்சியைத் தருகிறது. இத்தனை நாள் மகாபாரதத்தை முழுமையாகப் படிக்கத் தவறிவிட்டது குறித்து வருத்தமே எழுகிறது. ஜெயமோகன் ஒரு தவமாக ஆழ்ந்து இதை எழுதுவது ஏன் என்று இப்போதுதான் புரிகிறது. படிக்கும் எவரையும் தன்னை நோக்கி ஈர்த்துக்கொள்ளும் ஆற்றல் மகாபாரதத்திற்கு அபரிமிதமாக இருக்கிறது. அதுவே அதன் மிகப்பெரிய பலமும் இயல்பும்.

இதுவரையிலும் கடலொன்றின் கரையில் நின்று பாதங்களைத்தான் நனைத்திருக்கிறேன். கடலோ அலைகள் ஆர்ப்பரிக்க, பேரோசையுடன் கண்முன்னே பரந்து விரிந்து கிடக்கிறது. பாதங்களை நனைத்ததே இவ்வளவு பரவசமெனில், அலைகளோடு கட்டிப்புரண்டு செல்கையில் மனம் எத்தகைய நிலையை அடையக்கூடும்?

வாழ்நாளில் ஒருமுறையேனும் மகாபாரதத்தை முழுமையாகப் படியுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன். ஆரம்பிப்பதில் இருக்கும் தயக்கம் ஆரம்பித்த பிறகு மறைந்துவிடுகிறது என்பதும், ஆழ்ந்து மனம் லயிக்க வாசிக்க முடிகிறது என்பதும்தான் என் அனுபவம்.

Related Posts Plugin for WordPress, Blogger...