இதுவரை எழுதியதில்...

எப்படியோ தொடங்கி எழுத ஆரம்பித்துவிட்டேன். இன்னும் மூன்று பர்வங்களைக் கூடத் தாண்டவில்லை. அதற்குள் எத்தனை எத்தனை கதைகள். அந்தக் கதைகளுக்குள் எத்தனை விஷயங்கள். கதைகளின் விளக்கத்தையும் பொருளையும் எழுத ஆரம்பித்தால் அதுவே பெரும் கதையாக ஆகும். மகாபாரதம் குறித்த கட்டுரைகள் எழுதும் எண்ணம் மேலோங்குகிறது. வியாசபாரதத்தோடு வில்லிப்புத்தூரார் பாரதத்ததையும் ஒப்பிட்டால் பல சுவையான விஷயங்கள் கிடைக்கும்.

இதுவரை எழுதியதில் தேவாசுர யுத்தம் மிகச் சிறப்பாக வந்திருக்கிறது என்பேன். ஆரம்பத்தில் இருந்த தடுமாற்றம் நீங்கி வார்த்தைகள் தம்போக்கில் வந்து விழுந்து வாக்கியங்களை அமைக்க எளிதாக உணர்ந்தேன். எழுத்தில் என்னை நான் திரும்பப் பெற்றுவிட்டேன் என மகிழ்கிறேன்.

இன்னும் செல்லவேண்டிய தூரம் மிக அதிகம். ஏதோ உருப்படியாக ஒன்றைச் செய்கிறோம் என்ற சந்தோஷம் ஏற்படுகிறது. இதை எத்தனை பேர் வாசிப்பார்கள் அல்லது விரும்புவார்கள் என்று தெரியவில்லை. அதற்காக நான் கவலையும் படவில்லை. ஏனெனில் எனக்காகவே நான் இதை எழுதுகிறேன்.

Related Posts Plugin for WordPress, Blogger...