February 14, 2017

ஒரு புளியமரத்தின் கதை பொன் விழா பதிப்பு

சென்னை புத்தகத் திருவிழாவின் செய்திகளில் என்னைக் கவர்ந்த ஒரு முக்கிய புத்தகம் சுந்தர ராமசாமியின் ஒரு புளியமரத்தின் கதை. அதன் ஐம்பது வருட நிறைவை ஒட்டி இப்புத்தகத்தை கெட்டி அட்டையில் சேகரிப்பாளர் பதிப்பாக வெளியிட்டிருக்கிறது காலச்சுவடு. தமிழில் பல முக்கிய புத்தகங்கள் பலவும் இப்படி சேகரிப்பாளர் பதிப்பாக வெளிவருவதற்கு இப்புத்தகம் ஒரு முன்னோடியாக அமையும் என்று கருதுகிறேன்.

நான் முதன் முதலாக தீவிர இலக்கியத்தின் பக்கமாக வந்தபோது படித்தது ஒரு புளியமரத்தின் கதைதான். முதல் வாசிப்பிலேயே என்னை வெகுவாக தன்பால் ஈர்த்துக்கொண்ட புத்தகம் அது. அதன் பிறகு அந்த நாவலை பலமுறை வாசித்திருக்கிறேன். இப்போது அதை அழகான கெட்டி அட்டையில் வித்தியாசமான அளவில் பார்க்கையில் அதை மீண்டும் வாசிக்கவும் அதைப்பற்றி எழுதவும் ஆவல் எழுகிறது.

ஒரு புத்தகம் தொடர்ந்து ஐம்பது வருடங்களாக தொய்வில்லாமல் விற்றுக் கொண்டிருப்பது சாதாரணமானது அல்ல. இது தன்னுடைய முதல் நாவல் என்றும், அதைவிடவும் சிறந்த நாவல் ஒன்றை தான் பின்னாளில் எழுதக்கூடும் என்றும் இதன் முன்னுரையில் சுந்தர ராமசாமி குறிப்பிட்டிருப்பார். ஆனால் இதைவிட சிறந்த நாவல் எதுவும் அவரிடமிருந்து வரவில்லை என்பதுதான் உண்மை. அதன் பிறகு வந்த ஜே.ஜே.சில குறிப்புகளும், குழந்தைகள் பெண்கள் ஆண்களும் ஒரு புளியமரத்தின் கதை அளவிற்கு வாசகர்களைச் சென்றடையவில்லை என்றே சொல்லவேண்டும். ஆயினும் அவை இரண்டுமே அருமையான நாவல்கள் என்பதில் சந்தேகமில்லை.

ஒரு புளியமரத்தின் கதையின் பலமே அந்த வட்டார வழக்கு மொழிதான். அதை நாவலில் சுந்தர ராமசாமி மிக அனாயசமாக கையாண்டிருப்பார். அதில் தொய்ந்திருக்கும் எள்ளலும் கேலியும் ஒவ்வொரு முறை வாசிக்கையிலும் நம்மைக் கவர்ந்து ரசிக்க வைக்கும். ஒரு மனிதனின் வளர்ச்சியையும் ஒரு மரத்தின் வீழ்ச்சியையும் பிணைத்து அவர் நாவலை புனைந்திருக்கும் விதம் அபாரமானது. அதை நாம் ஒவ்வொரு வாசிப்பிலும் கண்டு வியக்க முடியும்.

இந்நாவலைப் பற்றி சுகுமாரன் இப்படிச் சொல்வது மிக்க பொருத்தமுடையது:
சுந்தர ராமசாமி, தமக்கு இடங்கள், காலங்கள், மனிதர்கள், மனித உறவுகள் மீது அக்கறை உண்டு என்றும் அதன் விளைவே தமது நாவல்கள் என்றும் குறிப்பிடுகிறார். ஒரு புளியமரத்தின் கதை இடமும் காலமும் சார்ந்த படைப்பு. ஜே.ஜே.சில குறிப்புகள் காலமும் கருத்தும் சார்ந்த படைப்பு. குழந்தைகள் பெண்கள் ஆண்கள் மனித உறவுகளைச் சார்ந்த படைப்பு என்று சுட்டிக்காட்டியிருக்கிறார்.

இடத்தையும் காலத்தையும் சார்ந்த படைப்பாக சுந்தர ராமசாமியால் சொல்லப்படும் ஒரு புளியமரத்தின் கதை உண்மையில் அவரது பிற்கால நாவல்களுக்கு முன்னோடியானது.

இடமும் காலமும் மட்டுமல்ல மனிதர்களும் உறவுகளும் கருத்துக்களும் இந்த முதல் நாவலிலேயே விரிவாகப் பேசப்படுகிறது. புளியமரத்தின் நிழலில் துளிர்விட்ட முளைகள்தான் பிந்திய நாவல்களாக வேரூன்றியிருக்கின்றன. அந்தவகையில் ஒரு புளியமரத்தின கதை சுந்தர ராமசாமியின் நாவல் கலைக்கு முன்னோடி. அதே சமயம் இன்றைய நாவல்களுக்கு நிகரற்ற சவால். எழுதப்பட்டு அரை நூற்றாண்டு காலத்துக்குப் பின்பும் புதிய போக்குகள் கடந்து சென்ற பின்பும், வடிவிலும் மொழியிலும் பொருளிலும் புதுமை குன்றாமல் வாசிப்பின்பம் குலையாமல் நிறைபெற்று நிற்கிறது.
எனவே இந்த பொன் விழா பதிப்பை வாங்கிப் படித்து, புத்தகத்தில் இடம்பெற்றுள்ள பல கோட்டுச் சித்திரங்களை ரசித்து, வாசிப்பின் இன்பத்தில் திளையுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.

குறிப்பு: திருப்பூர் புத்தகத் திருவிழாவில் இப்புத்தகத்தை காலச்சுவடு விற்பனைக்கு வைக்கவில்லை என்றபோதும், நானாக கேட்டு பிரதிகளை வரவழைத்தேன். ஃபிளிப்கார்ட்டிலும் எனது புத்தகக் கடையிலும் விற்பனைக்கு வைத்திருக்கிறேன். மற்றவர்களுக்கு எப்படியோ, புத்தகக் காதலர்களுக்கு இப்புத்தகம் மிகவும் பிடிக்கும். விருப்பமுள்ளவர்கள் கேட்டால் அதிக அளவில் பிரதிகளை வாங்க திட்டமிடுவேன்.Related Posts Plugin for WordPress, Blogger...