February 19, 2017

பதின் -எஸ்.ராமகிருஷ்ணன்

எஸ்.ராகிருஷ்ணனின் புதிய நாவல் பதின். பதின் நாவலை, வழக்கம்போல உயிர்மை வெளியிட்டுள்ளது. பள்ளிப் பருவத்து நண்பர்கள் இருவரது அனுபவங்களைச் சொல்லும் முகமாக நாவல் அமைந்திருக்கிறது. கோர்வையான சம்பவங்களால் அல்லாமல் தனித்தனி சம்பவங்களை விவரிப்பதன் வாயிலாக கதையைச் சொல்வதாக எஸ்.ராமகிருஷ்ணன் நாவலைக் கட்டமைத்திருக்கிறார்  இது ஒன்றும் புதிய யுத்தி அல்ல. ஒற்றன், இன்று நாவல்களில் எப்போதோ அதைச் செய்துகாட்டியிருக்கிறார் அசோகமித்திரன்.

நான் இந்த நாவலை முழுதும் வாசிக்கவில்லை. நாவலைப் பற்றி குறிப்புகள் எழுதவேண்டும் என்பதற்காக, முதல் நாற்பது பக்கங்களையே படித்தேன். இது சிறுவர்களுக்கான நாவல் என்பதைத் தவிர, பெரியவர்கள் இந்த நாவலை ரசிக்க முடியாது என்றே நினைக்கிறேன். எளிமையான சம்பவங்களால் கட்டமைக்கப்பட்டதால் இந்நாவல் சிறுவர்களையே பெரிதும் கவரும். சிறுவர்களுக்காக இப்படி ஒரு நாவல் சமீபத்தில் வெளிவரவில்லை எனும்போது, இது சிறுவர்களுக்கான நாவலாக வந்திருப்பது வரவேற்கத் தக்கதே.

சுந்தர ராமசாமியின் குழந்தைகள் பெண்கள் ஆண்களில் வெளிவரும் பாலுவின் பள்ளிப் பருவத்து வாழ்க்கையை இந்நாவல் நினைவுக்குக் கொண்டுவருகிறது. ஆனால் அது எவ்வளவு அடர்த்தியாகவும், உளவியல் தன்மையுடனும் பின்னப்பட்டிருந்தது என்பதை ஒப்புநோக்குகையில் பதின் முழுக்க முழுக்க சிறுவர்களுக்கான நாவல்தான் என்று சொல்லிவிடலாம். பல சிறுவர்களுக்கான நாவலை பெரியவர்களும் படிக்க முடியும், ரசிக்க முடியும் எனினும் பதினை அந்த வகையில் சேர்க்க முடியாது.

Related Posts Plugin for WordPress, Blogger...