மனுஷ்யபுத்திரனின் மூன்று கவிதைப் புத்தகங்கள்-1

திருப்பூர் மாநகரில் கடந்த ஐந்து நாட்களாக புத்தகக் கண்காட்சி நடந்துகொண்டிருக்கிறது. புத்தகப் பிரியர்களுக்கு இத்தகைய கண்காட்சிகளைவிட இன்பம் தரும் விஷயம் வேறொன்று இருக்க முடியாது என்று நிச்சயமாகச் சொல்லலாம். அந்த வகையில் இந்தக் கண்காட்சி இனிதே நடந்துகொண்டிருக்கிறது. இந்த திருவிழாவில் என்னை கவனிக்க வைத்த புத்தகங்கள் சிலவற்றை தொடர்ந்து பேசலாம் என நினைக்கிறேன். இவைகள் ஆழ்ந்து வாசித்தவற்றின் வெளிப்பாடுகள் அல்ல மாறாக மேலோட்டமான வாசிப்பில் நனைந்தவற்றின் சாட்சிகள்!

சமீபத்தில் வெளியான மனுஷ்யுபுத்திரனின் தித்திக்காதே, காந்தியுடன் இரவு விருந்திற்குச் செல்கிறேன், இருளில் நகரும் யானை என்ற மூன்று கவிதை நூல்கள் என்னை வெகுவாகக் கவர்ந்தன. மனுஷ்யபுத்திரனின் கவிதை வரிகள் வெகு சகஜமாக வந்து விழுந்து நம்மை புன்னகைக்கவும், திகைக்கவும், சபாஷ் போடவும் வைக்கின்றன. சிக்கல்களும் சிடுக்குகளும் இல்லாத வரிகளினூடே கவிதையின் நுட்பத்தைப் பொதித்து வைத்திருக்கும் இலாவகம் அவருக்கே உரித்தானது. 

இந்தப் புத்தகங்களைப் பார்த்ததும் முதலில் அதன் தலைப்பு நம்மை எத்தகைய சிந்தனைகளுக்கு இட்டுச்செல்கிறது என்பதை கவனிப்பது சுவாரஸ்யமானது. தித்திக்காதே என்பது காதலைப் பற்றிய கவிதைகள் என நாம் அனுமானிக்கிறோம். ஆனால் காதல் என்பது தித்திப்பதாயிற்றே கவிஞர் தித்திக்காதே என்று சொல்கிறாரே என்ற யோசனையில், ஒருவேளை காதல் தோல்வி பற்றிய கவிதைகளாக இருக்குமோ என எண்ணுகிறோம். காதலையும் தோல்வியையும் நம்முடைய கவிஞர்கள் சலித்துப் போகுமளவிற்கு பேசிவிட்டபின், இவர் என்னதான் பேசப்போகிறார் என்ற கேள்வி எழுகிறது. 

ன் அறையில்
நான் மட்டும்தானே
இருக்கிறேன்?

எதையாவது
நான் உடுத்திக்கொண்டிருக்க வேண்டும்
என்று அவசியமா என்ன?

அன்பே
நம் அறையில்
நாம் மட்டும்தானே
இருக்கிறோம்?

என்பதாக அவர் கவிதைகளை வெளிப்படுத்துகையில், உடுத்துவதன் மீது நம் கவனம் முற்றாகக் கவியும்போது கவிதையின் எல்லைகள் விரிந்து அதன் நுட்பங்கள் பலவும் நமக்குப் புலப்படுகிறது.

இத்தொகுப்பு காதலின் பிரியத்தின் கவிதைகள்தான் என்றாலும், அவைகள் இரு உறவுகளுக்கிடையே நிகழும் கவிதைகளாக மட்டுமே இல்லாமல் இந்தப் பிரபஞ்சம் முழுமையும் வியாபித்திருக்கும் உயிர்களின் பிரியத்தைப் பேசுகிறது என்பதை உணர முடிகிறது. எனவேதான் மனுஷ்யபுத்திரன் நம்மை நோக்கி, “அன்பின் வழிமுறைகள் ஏன் இத்தனை பதட்டமுடையதாக இருக்கவேண்டும்? அதில் ஏன் துடைத்துத்தீராத கண்ணீர் துளிகள் துளிர்த்தவண்ணம் இருக்கவேண்டும்? காதலின் அனல்மூச்சுகளில் நம் இதயத்தின் பாறைகள் உருகும்போது பெருகும் வெள்ளத்தில் நாம் பற்றிக்கொள்ள ஒரு கிளை இல்லாமல் தவித்துப்போகிறோம். நேசத்தின் இந்தத் தித்திப்பு நம்மை பைத்தியமாக்குகிறது. “தித்திக்காதே” என்று நாம் தாளமுடியாமல் குரல் எழுப்பும்போது தேனாய் இனிக்கும் அந்த சமுத்திரத்தின் அலைகள் நம்மை நோக்கி இன்னும் ஆவேசமாக எழுந்து வருகின்றன” எனச் சொல்வதில் பொதிந்திருக்கும் ஆழந்த உண்மை நம் இதயத்தைப் பிழிகிறது.
 
தித்திக்காதே தொகுப்பின் சில கவிதைகள்:

1. அன்பின் ஒப்பனைகள்

முகப்பூச்சைக்
கழுவுவது போன்றதுதான்
எனக்கு
பிரியத்தைக் கழுவிக்கொள்வதும்
இல்லாவிட்டால்
சற்று நேரத்தில் கசகசத்துவிடுகிறது

சிகையலங்காரத்தைக்
கலைத்துக்கொள்வது போன்றதுதான்
எனக்கு
உறவைக் கலைத்துக்கொள்வதும்
இல்லாவிட்டால்
சற்று நேரத்தில்
தலைவலிக்க ஆரம்பித்துவிடுகிறது

அன்பின் ஒப்பனைகளைக்
கலைத்துக்கொள்வதில்
ஒரே ஒரு பிரச்சினைதான் இருக்கிறது
அதற்குப் பிறகு
நான் என்னைப் பார்ப்பதற்கு
அவ்வளவு பயப்படுகிறேன்.

2. இல்லாத அன்பு

இல்லாத அன்பை
ஒருவருக்குக் காட்டுவது என்பது
ஒரு கலை

இல்லாத அன்பு என்பது
தொப்பிக்குள் இருந்து
மந்திரவாதி எடுக்கும்
புறாக்கள்

மேஜிக் ஷோ
இல்லாத நேரங்களில்
அந்தப் புறாக்கள்
எங்கே வசிக்கின்றன என்பது
எவரும் அறியவியலாத ஒன்று

3. தூய்மை தரும் தனிமை

உன் அன்பை
உன் காதலை
இவ்வளவு பரிசுத்தமாக
வைத்துக்கொள்ளாதே
என்னால் அதைக்
கூச்சமின்றி
புழங்க முடியவில்லை

4. திரும்புவதற்கான காரணம்

திரும்பி வருவதற்காக
ஒரு காரணமும் இல்லை என்று
எனக்குத் தெரியும்

அதனால்தான்
ஏதோ ஒன்றை
கைமறதியாய் விட்டுச் செல்கிறேன்

நான் அதற்காகவாவது
எப்படியும்
திரும்பி வருவேன் என்று
உன்னை வாழ்நாளெல்லாம்
அமைதியிழந்து காத்திருக்கச் செய்வேன்

5. திரும்பிய நாளில்

ஒரு அன்பை முறிக்கும் நாளில்
நாம் கொடுக்கும் மலர்க்கொத்தில்
ஒரு சிறிய முள்கூட இருக்கலாகாது
மேலும்
அது இருப்பதிலேயே
அதிக வாசனையுள்ள மலர்களால்
ஆனதாக இருக்க வேண்டும்

ஒரு பிரியம் கசக்கும் நாளில்
நாம் ஒரு கிளையைப் பிடித்துக்கொண்டு
வெறுமனே தொங்குவதற்குப் பதில்
இலைபோல
அவ்வளவு சகஜமாய்
நமக்கு உதிரத் தெரிந்திருக்கவேண்டும்

அவமானத்தில் தலை கவிழ்ந்து
திரும்பிய நாளில்
இப்படியெல்லாம் தோன்றவில்லை
நான் சவரக் கத்தியை எடுத்து
தலையை மழித்துக்கொண்டேன்

6. நிரூபணம்

நான் உனக்கு எவ்வளவு இருந்தேன்
என்பதை நீ அறிவதற்காக
நான் இவ்வளவு தூரம்
இல்லாமல் போகவேண்டுமா?

7. தூக்குடா ஆளை

படிக்கட்டுகள்
அதிகம் என்பதால்
நான் என் உயரங்களை நோக்கிச்
செல்லாமல் இருக்க முடியுமா?

லிஃப்ட் வேலை செய்யவில்லை
என்பதாலேயே
நான் கீழ்தளத்திலிருந்து
திரும்பிச் சென்றுவிட வேண்டுமா?

யாரோ ஒருவன்
சக்கர நாற்காலியிருப்பவன்
தோளைத் தொடுகிறான்
“தூக்குடா ஆளை”
என்று இன்னொருவனை
நோக்கிக் கத்துகிறான்

எங்கும் மனிதர்கள் இருக்கிறார்கள்
பயப்பட ஒன்றுமில்லை
எங்கும் மனிதர்கள் இருக்கிறார்கள்
ஒரு மழைத்துளியளவேனும்
எங்கும் புரளாமல் இல்லை
அன்பின் அலைகள்

Related Posts Plugin for WordPress, Blogger...