மனுஷ்யபுத்திரனின் மூன்று கவிதைப் புத்தகங்கள்-3

காந்தியுடன் இரவு விருந்திற்குச் செல்கிறேன் என்ற தலைப்பே வசீகரமாக நம்மை இழுக்கிறது. காந்தி என்றதும் நம் மனதில் விரியும் பிம்பம் என்ன? உண்மை, அகிம்சை, உண்ணாவிரதம் என்ற மூன்றும்தான். உண்ணாவிரதத்தின் வாயிலாகவே அவர் உண்மையையும் அகிம்சையையும் வழி நடத்தினார். பல்வேறு அரசியல் சார்ந்த கடந்த கால நிகழ்வுகளை மையமாகக் கொண்டு இக்கவிதைகள் புனையப்பட்டுள்ளன. நடந்துவிட்ட பல சம்பவங்கள் விடைகாண முடியாததாகவும், அவற்றை அடுத்தடுத்த நிகழ்வுகளின் சரடுகளால் நாம் மறந்தும் கொண்டிருக்கிறோம். ஆக, இன்று காந்தி இருந்திருந்தால் இந்நிகழ்வுகளை எவ்விதம் எதிர்கொண்டிருப்பார் எனும் வினாவை நம்முன் வைக்கிறார் மனுஷ்யபுத்திரன்.

ராம்குமார்-சுவாதி சம்பவங்கள் பற்றியும், ரூபாய் நோட்டுகளை தடை செய்தது குறித்தும், அப்பல்லோவில் நடந்த சம்பவம் குறித்தும் பல கவிதைகள்  இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. நாட்டின் அன்றாட நிகழ்வுகளை மனுஷ்யபுத்திரன் எதிர்கொள்ளும் விதத்தையே இக்கவிதைகள் பேசுகின்றன. நாமிருக்கும் காலத்தை இருண்ட காலம் என்பதைவிட, ஒடுக்குமுறையின் ஊழிக்காலம் என்கிறார் அவர்.

இத்தொகுப்பில் சிறு கல் என்ற தலைப்பிலான கவிதை என்னை வெகுவாகக் கவர்ந்தது. வீழ்ச்சி என்பது எங்கேயும் எப்போதும் இப்படித்தான் ஆரம்பிக்கிறது என்பதை புரிந்துகொள்ளும் தருணம் இக்கவிதையில் அசாதாரணமாக நம் மீது கவிகிறது.

வீழ்ச்சியின் காலம்
கோட்டை சரிவதுபோல
நம் மேல் சரிவதில்லை

சிறிய செங்கல்தான்
முதலில் சரிகிறது
சோற்றில் சிறு கல்போல
அவ்வளவு எளிமையாய்
அது சரிகிறது

அது எங்கிருந்து சரிகிறது
என்று தெரியாமல்
அப்போது நம் கண்கள்
கட்டப்பட்டு விடுகின்றன

என்னைக் கவர்ந்த மற்றோர் கவிதை சமநிலை. இந்தக் கவிதையை வாசித்து முடித்ததும் நாம் சற்றே புன்னகைக்க வேண்டும். அப்படி புன்னகைக்க தவறினால் இந்தக் கவிதை நம்மில் ஏறவில்லை என்றே சொல்லலாம். அந்தப் புன்னகைக்குப் பிறகு நாம் இக்கவிதையை பலவற்றின் மீது பொருத்திப் பார்க்கத் தொடங்குகிறோம். அதுவே இக்கவிதையை சாசுவதமாக்குகிறது.

பூனை வளர்ப்பவர்களை
நாய் வளர்ப்பவர்கள்
சற்று இளக்காரமாகப் பார்க்கிறார்கள்
என்று எனக்கு நீண்டகாலமாக
ஒரு சந்தேகம்

இருவரையும் பொருட்படுத்தாமல்
கடந்து போகிறான்
எங்கள் தெருவில்
குதிரை வளர்க்கும் ஒருவன்

எல்லோருக்குமாக
நாளை வருகிறேன்
ஒரு யானையை
கையில் பிடித்துக்கொண்டு

“இந்த ஆண்டில் இதையெல்லாம் கடந்து வந்தோம் என்பதை நினைக்கும்போது பெரும் மனச்சோர்வு ஆட்கொள்கிறது. நான் இப்படி ஒரு தொகுப்பை இனியொருமுறை எழுத விரும்பவில்லை. நானும் எனது காலத்தின் சில கவிகளைப்போல மொட்டவிழும் மலர்களின் வாசனையையும் பறவைகளின் மெல்லிய இறகுகளையும் மட்டுமே வாழ்நாளெல்லாம் எழுதிக்கொண்டிருப்பவனாக இருந்திருக்கலாம். ஆனால் காலம் யாரோ பயன்படுத்திய ரத்தம் தோய்ந்த குறுவாளை எப்போதும் என் கையில் கொடுத்தனுப்புகிறது. எனக்கு அதை எங்கே வைப்பது என்று தெரியாமல் இந்தக் கவிதைகளுக்குள் ஒளித்து வைத்திருக்கிறேன்” என்று மனுஷ்யபுத்திரன் முன்னுரையில் சொல்கிறார்.

இத்தொகுப்பின் முதல் கவிதை 01.07.2016 இரவு 10.02-க்கு ஆரம்பிக்க இதன் கடைசி கவிதை 09.12.2016 காலை 10.27-க்கு முடிகிறது. இது ஒரு காலத்தின் கவிதைதான் என்றாலும் எக்காலத்துக்குமான கவிதைகளாக அவற்றை மனுஷ்யப்புத்திரன் படைத்திருக்கிறார் என்பதே இவற்றின் சிறப்பு.

காந்தியுடன் இரவு விருந்திற்குச் செல்கிறேன் சில கவிதைகள்:

1. அன்பைப்போன்ற ஒன்று

உங்களுக்கு
ஒருவரில் அன்பைவிட
அடிபணிதல்
ஏன் இவ்வளவு இதமாக இருக்க வேண்டும்?

உனக்கு
சிங்கங்களின் பிடறியைவிட
நாயின் அசையும் வால்கள்
ஏன் இத்தனை கவர்ச்சியாகத்
தோன்ற வேண்டும்?

சிலருக்கு
ஆசையின் முத்தங்களைவிட
பாசாங்கின் ஸ்பரிசங்கள்
ஏன் இத்தனை கிளர்ச்சியூட்ட வேண்டும்?

பலருக்கு
கனிவின் சொற்களைவிட
குழைதலின் மொழிகள்
ஏன்
இத்தனை இணக்கமாக இருக்கவேண்டும்?

இருளில் நிற்கும் வேசி
தன் முலைகளைத் திறந்து காட்டுவது
போலத்தான் இருக்கிறது
எல்லா இடங்களிலும்
நான் என் அன்பைக் காட்டுவது

2. பாதி விடுமுறை தினம்

இன்று செய்தித்தாள்கள்
வரவில்லை
இந்த உலகின்
கால்வாசி துயரங்கள்
தீர்ந்துவிட்டன
இன்று வங்கிகள்
வேலை செய்யவில்லை
இந்த உலகின்
இன்னும் கால்வாசி துயரங்கள்
தீர்ந்துவிட்டன
மிஞ்சியிருக்கும்
துயரங்களில் கால்வாசி தொலைக்காட்சியிலும்
இன்னுமொரு கால்வாசி
சமூக வலைத்தளங்களிலும்
நிகழ்ந்துகொண்டிருக்கின்றன
ஒட்டுமொத்த
விடுமுறை நாளாக இருந்தால்
பெரிய கவலைகள் இன்றி
கையில் ஒரு கோப்பைத் தேநீருடன்
அமைதியாக நாம்
நம் கால்நடைகளுடன்
புல்வெளிகளுக்குத் திரும்பிவிடலாம்.

3. இருப்பும் இறப்பும்

சிலர்
இறந்தபின்
நிரூபிக்கிறார்கள்
தம் இருப்பை

வேறு சிலர்
இருந்துகொண்டிருக்கிறார்கள்
தாம் எப்போதோ இறந்துவிட்டதை
தினம் தினம் நிரூபிக்கவே

4. வேட்டைப் புலி

சொல் என்பது
வேட்டை நாயின் கால்தடம் என்றார்
சுந்தர ராமசாமி

சொல்லைப் பழக்குதல்
எளிதன்று
பழக்கினால்
வேட்டை எளிது என்றார்கள்

நான் என் சொல்லைப்
பழக்கினேன்
ஒரு புலியை வேட்டையாட வேண்டும்
என்பதுதான் என் சித்தம்

என்ன நடந்ததென்று
தெரியவில்லை
நான் இப்போது
ஒரு புலியைக் கையில் பிடித்துக்கொண்டு
வேட்டைக்குச் சென்றுகொண்டிருக்கிறேன்

5. சின்ன மழைத்துளிகள்

கொட்டுகிற மழையில்
பசி பசி என
கார் கண்ணாடியைத்
தட்டுகிறார்கள் சிறுவர்கள்
அவர்கள் கைகளில்
ஏராளமாய் விழுகின்றன
மழைத்துளிகள்

மழைக்கு ஒதுங்கி நின்ற நான்
கருணைக்கான எந்த முடிவையும்
எடுக்க கொஞ்ச நேரம் ஆகும்

அப்போதுதான் அடம்பிடித்து
வாங்கிய ஜஸ்க்ரீமை
தயங்கி நின்ற சிறுமிக்குத் தர
மழையில் விரைகிறார்கள்
என் குழந்தைகள்

கடவுள் எப்போதும்
சின்ன மழைத்துளிகளைத்தான்
அனுப்பி வைக்கிறார்
நாம் எப்படியும் அதைக்
கொஞ்சம் பெரிதாக்குவோம் என்று
அவ்வளவு உறுதியாக நம்புகிறார்

6. உபயோகிக்க முடியாத கருவி

அன்பின் பட்டன் கத்தியை
மடக்கு தம்பி

உனக்கு அதை
சரியாக உபயோகிக்கத் தெரியாது
உன்னால் அதன் மீது
அதிகாரம் செலுத்த இயலாது

பட்டனில் உன் கை
அழுத்துகிற நேரத்திற்கும்
கத்தியை நீ செலுத்துவதற்கும்
இடையே
ஏராளமான விஷயங்களில்
நீ முடிவெடுத்தாக வேண்டும்

அந்த நேரம் அவ்வளவு குறுகியது
அவ்வளவு விரைவானது
இன்னொருவருக்கு
எந்த சந்தர்ப்பத்தையும் அளிக்காதது
சிறு தவறு நிகழ்ந்தாலும்
எல்லாமே குழப்பமாகிவிடும்

உனக்கு யாரோ
தவறாகச் சொல்லித் தந்திருக்கிறார்கள்
அன்பு என்பது
ஆற்றில் இறங்குவதுபோல என்று
அல்லது
மழையில் நனைவதுபோல என்று

உன் அன்பின் பட்டன் கத்தியை
மடக்கு தம்பி
அன்பின் துருப்பிடித்த வாளோடு
நான் இங்கே நெடுங்காலமாக
செய்வதறியாது அமர்ந்திருக்கிறேன்.

Related Posts Plugin for WordPress, Blogger...