மனுஷ்யபுத்திரனின் மூன்று கவிதைப் புத்தகங்கள்-2

மனுஷ்யபுத்திரனின் இரண்டாவது கவிதைப் புத்தகம் இருளில் நகரும் யானை. தலைப்பை வாசித்ததும் நம் மனம் கொள்ளும் கற்பனை என்ன? இருள் கருப்பு நிறமுடையது. யானையும் அவ்வாறே. இரண்டும் ஒரே நிறமுடையதாக இருந்தால் ஒன்றிலிருந்து ஒன்றை பிறித்து பார்க்கவியலாது. இருளில் யானை இருந்தாலும் நம் கண்களுக்குப் புலப்படாது. அப்படியிருக்க அந்த இருளில் ஒரு யானை நகர்ந்தால் என்ன நிகழும்? யானையின் சலனத்தை நாம் கண்களால் காண முடியாவிட்டாலும் உணர முடியும்தானே? அத்தகைய உணர்வுகளால் உருவானதுதான் இத்தொகுப்பு.

புத்தகத்தைப் பிரித்ததும் என் கண்ணில் பட்ட முதல் கவிதையே அற்புதமானது. அது வாசிப்பில் அற்புதமானதா அன்றி அந்தக் கவிதையே அற்புதமானதா என மீண்டும் மீண்டும் அதைப் பல முறை வாசித்தேன். மலரில் மது அருந்திய வண்டு போல மனம் அதிலேயே மயக்கம் கொண்டு, விடுபட முடியாமல், விடுபட விரும்பாமல் சுற்றிச்சுற்றி வந்தது. இந்த உச்சமான கவிதையை வாசிக்கும் கணத்தில் பற்றிப் பிடிப்பது அபாரமான மனக்கிளர்ச்சியைத் தருவது. இனி இத்தொகுப்பின் எந்தக் கவிதையையும் வாசிக்கவேண்டியதில்லை என்று தோன்றிவிட்டது!

வீடு மாற்றும்போது
எதை வைத்துக்கொள்வது
எதைக் கைவிடுவது

பயனற்றதற்கும்
பயனுள்ளதற்கும்
மதிப்புள்ளவைக்கும்
மதிப்பற்றவைக்கும் இடையே
நீங்கள் ஒரு மெல்லிய கோட்டை
கிழிக்க வேண்டும்
அப்போது கைகள் நடுங்காதவர்
எவரும் இல்லை

எது தேவையானது
எது தேவையற்றது என்பதல்ல
எவ்வளவு உங்களால்
எடுத்துச் செல்லமுடியும்
என்பது மட்டுமே
எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது
எடுத்துச் செல்ல முடியாத ஒன்றை
கடைசியில் நீங்கள் என்ன செய்தீர்கள்
என்று உங்களுக்கு நினைவிருக்கிறதா?

உங்கள் சொந்த மனதின் ஒரு பகுதியைக்
கைவிடுவதுதான் முக்கியம் என்று
கண்டுபிடித்துவிடுகிறீர்கள்
நீங்கள் சிக்கலில்லாமல்
புதிய வீட்டை நோக்கிப் போகிறீர்கள்

ஒருவன் திடீரென இறக்கிறான்
மொத்த பிரபஞ்சத்தையும்
அப்படியே போட்டது போட்டபடி
விட்டுப்போகிற அந்த தைரியம்
ஒவ்வொரு முறையும்
என்னைத் திடுக்கிட வைக்கிறது

இந்தக் கவிதையை இன்னும் விரிவாகப் பேசமுடியும். ஆனால் அதற்கான இடம் இதுவல்ல. முடிந்தால் வேறோர் சந்தர்ப்பத்தில் பேசலாம்.

“இந்தத் தொகுப்பின் பெரும்பாலான கவிதைகள் அழிவின், மரணத்தின், இருளின், துக்கத்தின் தடம் பற்றிச் செல்பவை, கண்ணீரின் உப்பை ரகசியமாகச் சுவைப்பவை. மரணத்தையும் துக்கத்தையும் அழிவையும் பயத்தையும் தொடர்ந்து எழுதுவதன் மூலம் அதைக் கடந்து சென்றுவிட முடியமா என்ன? நிச்சயம் இல்லை. மாறாக சொற்கள் அவற்றிற்கு இன்னும் ஸ்தூல வடிவம் கொடுக்கின்றன. எது ஒன்று மங்கலாகவும் புகைமூட்டமாகவும் இருக்கிறதோ அதைக் கண்டு நீங்கள் பதட்டமடைகறீர்கள். கவிதை அதைத் துல்லியமாக்குகிறது. அதற்கு தெளிவான ஒரு உருவத்தை, குரலை, வாசனையை உண்டாக்கிவிடுகிறது” என்று இத்தொகுப்பின் முன்னுரையில் மனுஷ்யபுத்திரன் குறிப்பிடுவது கவனிக்கத்தக்கது.

புத்தனுக்கு போதிமரம் போல் இக்கவிதைகள் நம்மை தெளியவைக்கின்றன. அந்தத் தெளிவு வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்வதற்குப் பெருமளவு உதவுகிறது. வாசிப்பே வாழ்க்கையை தெளிவுபடுத்தத்தானே அன்றி வேறெதற்கு?

இருளில் நரும் யானை தொகுப்பின் சில கவிதைகள்:

1. நிலவு எனும் பெரிய தூக்க மாத்திரை

அதிகாலை
மூன்று மணிக்கு
ஏன் இத்தனை பேர்
விழித்துக்கொண்டிருக்கிறார்கள்?

இப்போது
நான் காணும் நிலவு
ஒரு பெரிய தூக்க மாத்திரையாக இருக்கிறது

எப்படி விழுங்குவது என்றுதான்
தெரியவில்லை.

2. முதல் முறை

அவமானங்களுக்குப் பழகுவதை
எனக்கு வாழும் கலையில்
சொல்லித் தந்திருக்கிறார்கள்

எதுவும் வாழ்வில் துயரமல்ல
அது முதல்முறை என்பதுதான் துயரம்

3. பைத்தியத்தைப் பருகுதல்

இவ்வளவு ஆண்டுகளில்
நீ மாறியிருக்கக்கூடும்
பைத்தியம் தெளிந்திருக்கக்கூடும்
என்றுதான் உன்னைக் காணவந்தேன்

ஆனால்
உன் பைத்திய நிலை என்பது
காலத்தின் அடியில் புதைந்திருக்கும்
திராட்சை ரசம்
உன் வயது செல்லச்செல்ல
பருகுவதற்கு இப்போது
அவ்வளவு தித்திக்கிறது
ஒரு நூற்றாண்டின் மதுவைப்போல

பைத்திய நிலையைப்
பருகமுடியுமா என்று கேட்கிறார்கள்
அதன் ஒரு சொட்டு நாவலில் படும்போதே
கண்கள் கிறங்கிவிடுகின்றன
எப்படி வாழ்கிறாய்
உன்மத்தங்களின் பெருங்கடலாய்?

4. எரியும் வாசனை

எங்கே போனாலும்
எரியும் வாசனையை உணர்ந்துகொள்கிறேன்
கேஸ் கசிகிறதா
மின் வயர்கள் எரிகின்றனவா
பதட்டமடைகிறேன்

நான் உணரும் வாசனைகளை
வேறு எவரும் உணருவதில்லை
நல்லதொரு மனநல மருத்துவனைப் பார்ப்பதே
நல்லது என்கிறார்கள்

அப்படியெனில்
மனிதர்கள் வாழும்
எல்லா இடத்திலும் ஏதோ ஒன்று
கருகிக்கொண்டிருக்கிறது
புகைந்துகொண்டிருக்கிறது
என்பதில் உண்மை இல்லையா?

5. கடைசி ஆணி

என்னைச் சிலுவையில்
அறையவே அறையாதீர்கள்
என்றெல்லாம் கேட்க மாட்டேன்

கடைசி ஆணி
எதுவென்று சற்றே
எடுத்துக்காட்டிவிட்டீர்கள் என்றால்
நான் கொஞ்சம்
ஆசுவாசமாக
கால்மாற்றி நின்றுகொள்வேன்

6. சாவின் சொற்கள்

அகாலத்தில் இறந்த
என் நண்பர்கள் பலருக்கும்
ஒரு பொதுவான பழக்கம்
இருந்திருக்கிறது

அவர்கள்
இறப்பதற்கு முந்தைய தினங்களில்
நிறைய பேசும் பழக்கம்
கொண்டவர்களாக இருந்திருக்கிறார்கள்
அவர்கள் இயல்புக்கு மாறாய்
நிறையப் பேசியதை
ஈமச்சடங்குகளுக்கு வரும்
எல்லோரும் கூறுகிறார்கள்

வாழவின் வாக்கியங்கள்
எப்போதும் சிறியதாகத்தான் இருக்கின்றன
அன்பின் வாக்கியங்கள்
அதனிலும் சிறியவை

சாவின் சொற்களுக்கோ சலிப்பே இல்லை

7. ஒரு நாள்

எனது ஒரு நாள் முடிவதற்குள்
இன்னொரு நாள் வந்துவிடுகிறது

என்ன செய்கிறேன்
எந்த ஒன்றையும் என்னால்
முடிக்க முடியவில்லை
முத்தம்
பாதியிலேயே நின்றுவிடுகிறது
அழுகையைப்
பாதியில் அடக்கிக்கொண்டு
பதைபதைக்க நடக்கிறேன்

ஒரு நாள் முடியாமலே வந்துவிடும்
இன்னொரு நாட்களின் மூலம்
என்னிடம் நிறைய பாதி நாட்கள்
சேர்ந்துவிட்டன

ஒரு நாள் முடிவதற்குள்
ஒரு வருடம் முடிந்து விடுகிறது
எனது ஒரு நாள் முடிவதற்குள்
இந்த உலகமே முடிந்துவிடும் போலிருக்கிறது

8. தேடி வருகிறவர்கள்

இறந்தவனை
எனக்கும் கொஞ்சம் தெரியும் என்பதால்
இறந்தவனின் நண்பர்கள்
என்னைத் தேடி வருகிறார்கள்

ஆறுதலுக்கோ
நினைவுகளைப் பகிர்ந்துகொள்ளவோ
அவர்கள் வருவதாகத் தெரியவில்லை

இறந்தவனை
ஏதோ ஒருவிதத்தில்
கொஞ்சம் திரும்பக் கொடுப்பேன்
என்று வினோதமாக நம்பியபடி
அவர்கள் அங்கேயே
மருகிமருகி
உட்கார்ந்திருக்கிறார்கள்

Related Posts Plugin for WordPress, Blogger...