January 18, 2017

கட்டபொம்மனும் பீட்டாவும்!

பீட்டா: ம், நீர் தான் வீரபாண்டிய கட்டபொம்மனோ?

கட்டபொம்மன்: நீர் தான் பீட்டா அமைப்பைச் சார்ந்தவரோ?

பீட்டா: ஏது, வெகுதூரம் வந்துவிட்டீர்?

கட்டபொம்மன்: நட்பு விரும்பி அழைத்ததாக அறிகிறேன். அதை விரும்பி நானும் வந்துள்ளேன்.

பீட்டா: நட்பு வேண்டும், ஆனால் அதற்கேற்ற நடத்தை இல்லை உம்மிடம்.

கட்டபொம்மன்: கற்றுக்கொடுக்கும் இடம் தமிழ் இனம். நீர் கற்றுக்கொடுக்க முயற்சிப்பது அறிவீனம்.

பீட்டா: அரசிடமிருந்து உரிமை பெற்றிருப்பது நாங்கள். நீ கட்டுப்படத்தான் வேண்டும்.

கட்டபொம்மன்: ஹா...! ஹா...! நாங்கள் இல்லாவிட்டால் நீ இந்த நாட்டுக்குள்ளே நுழைந்திருக்க முடியாது.

பீட்டா: இறுமாப்பு இன்னும் ஒழியவில்லை உன்னிடம்.

கட்டபொம்மன்: எல்லாம் உடன்பிறந்தவை, ஒழியாது.

பீட்டா: உன் மீது குற்றம் சுமத்துகிறேன்.

கட்டபொம்மன்: என்னவென்று?

பீட்டா: எடுத்துரைத்தால் கணக்கில் அடங்காது.

கட்டபொம்மன்: எண்ணிக்கை தெரியாத குற்றம்.

பீட்டா: எனக்கா எண்ணிக்கை தெரியாது? அகங்காரம் பிடித்தவனே, சொல்கிறேன் கேள். உன் நிலத்தில் மேயும் மாடுகளைத் துன்புறுத்துகிறாய். வெகுகாலமாக ஜல்லிக்கட்டு என்ற பெயரில் மாடுகளைச் சித்ரவதை செய்கிறாய். இதற்கெல்லாம் என்ன சொல்கிறாய்?

கட்டபொம்மன்: ஹா ஹா ஹா ஹா. வானம் பொழிகிறது, பூமி விளைகிறது, மாடு வளர்கிறது. உனக்கென்னடா அதிகாரம் ஜல்லிக்கட்டை தடைசெய்ய? எங்களோடு வயலுக்கு வந்தாயா? மாடுகளை வளர்த்தாயா? அவைகளை தெய்வமாகத் தொழுதாயா? கழனியில் உழும் மாடுகளுக்கு கஞ்சிக்களையம் சுமந்தாயா? அங்கு கொஞ்சி விளையாடும் எம்குல மாடுகளுக்கு மஞ்சளரைத்துப் பணிபுரிந்தாயா? அல்லது நீ மாமனா? மச்சானா? மானங்கெட்டவனே! எதற்கு விதிக்கிறாய் தடை? யாரைச் சொல்கிறாய் மனிதாபிமானம் அற்றவன் என்று? போரடித்து நெற்குவிக்கும் மேழிநாட்டு உழவர் கூட்டம், பீட்டாவை போரடித்து, தலைகளை நெர்க்கதிர்களாய் குவித்துவிடும். ஜாக்கிரதை!

பீட்டா: Shut up. அதிகார முத்திரையிட்டு அப்போதே தடைசெய்தாயிற்றே?

கட்டபொம்மன்: அப்படியா? ஹா...ஹா...ஹா...ஹா... பலே, எங்கள் அரசாங்கத்தைக் கொண்டே எங்களுக்குத் தடை உத்தரவு பிறப்பிக்கிறாய் நீ. இது போன்ற ஒரு தடை உத்தரவை பிறப்பிக்க இதுவரை எவனுக்கும் துணிவு பிறந்ததில்லை. அப்படிப் பிறப்பித்த உன்னை, இனியும் இந்த நாட்டில் விட்டுவைப்பது குற்றம். துடிக்கிறது மீசை, அடக்கு, அடக்கு என்று பொறுமை தடுக்கிறது.

பீட்டா: என்ன? மீசையை முறுக்குகிறாயா? அது ஆபத்தின் அறிகுறி. உன்னை சிறைபிடிக்க உத்தரவிடுகிறேன்.

கட்டபொம்மன்: என்ன? வரச்சொல் பார்க்கலாம். ஆ..! மானம் அழிந்துவிடவில்லையடா மறத்தமிழனுக்கு. மடியிலே கை வைத்த உன் தலை உருண்டு போகட்டும்...!

(கட்டபொம்மன் கைதுசெய்யப்படுகிறான்).

பீட்டா: அகங்காரம் அழியவில்லை உனக்கு

கட்ட பொம்மன்: உங்களை அழித்திருந்தால் என் அகமும் அழிந்திருக்கும்.

பீட்டா: ஹ, நல்லவர்களைத் திட்டாதே

கட்ட பொம்மன்: இன்னும் ஏன் பயப்படுகிறாய்? உண்மையைக் கூறு, நாய்களை திட்டாதே என்று

பீட்டா: ஹ ஹ, அரசே, நன்றி உள்ளது நாய் ஒன்று தான்.அதுவும் நமக்கு பெருமை தான்.

அரசு: ஹம், இருந்தாலும் இவன் யார் அதை சொல்ல?

பீட்டா: அதுவும் சரி தான். அடக்கியாளும் உங்களை சொல்ல அடிபட்ட இவனுக்கு என்ன உரிமை இருக்கிறது?

கட்ட பொம்மன்: ஏ அரசே, ஈனச்சொல் பேசாதே, நாவை எடுத்தெறி. வாழ விரும்பினாய், வல்லவனை அழித்தாய், இனி நீ வாழ்ந்துகொள். வீரம் விலையற்றதென்றாய், வீணரை வணங்கினாய், வேண்டுவதை வாங்கிக்கொள். கூலி கேட்டாய், கும்பிட்டாய், கோழையானாய், கூலியை பெற்றுக்கொள். ஆனால் அந்நியன் உன்னை போற்றவேண்டும், அது உனக்கு இனிக்க வேண்டும் என்று மட்டும் எண்ணாதே. நீ காட்டிக்கொடுத்தாய், நான் காட்டிக்கொடுக்கப்பட்டேன். நாம் இருவரும் இதே மண்ணில் விளைந்தவர்கள் தான். உன்னைக் கேடு சூழினும், ரத்தத்தில் இனச்சத்து எங்கோ ஒன்றித்தான் இருக்கும். ஆனால் அவனோ நேற்று வந்தான், இன்றிருப்பான், நாளை போவான் என்ற எல்லைக்கு இலக்கணத்திற்கு உட்பட்டவன். இம்மியேனும் நம்மோடு ஒவ்வாதவன். அவன் கத்தி பார்த்தேனும் கலங்காதே, ஆனால் அவன் பேச்சு கேட்டு மட்டும் வாழாதே. நான் கூறுவது உனக்கு மட்டுமல்ல, எங்களோடு சிங்கங்களாய் பிறந்து, இங்கு குரங்குகளாய் கூணி நிற்கும் இதோ அத்தனை ஈனர்களுக்கும், மானமற்ற மடையர்களுக்கும் கூறுகிறேன். சீ, கூறுவதென்ன? தூ... காறி உமிழ்கிறேன்.

அரசு: நிறுத்து, போதும் உன் பேச்சு. குற்றவாளியாகிய நீ ஏதேனும் சமாதானம் கூறி குற்றத்தை குறைத்துக்கொள்ள முடியுமா என்று பார். நாங்கள் ஒரு நாயை கொல்வதானாலும், சட்டப்படி குற்றம் காணாமல் கொல்லமாட்டோம். We Believe in the Rule of law.

கட்ட பொம்மன்: ஆ, எத்தர்கள் நல்லவர்களாக நடிக்க ஏற்பட்ட எத்தனையோ வழிகளில் இதுவும் ஒன்று. அறிவேன். ஆகப்போகும் முடிவையும் உடனறிவேன். ஊருக்கு, பேருக்கு உன் நாடகத்தை நடத்திக்காட்டு.

அரசு: நீ குற்றவாளி தானே?

கட்ட பொம்மன்: ஆம் உன்னை கொல்லத் தவறிய குற்றவாளி.

அரசு: அ, எடக்கு பேச்சு வேண்டாம். நேர்மையான பதில் தேவை. பீட்டாவின் தடைக்கு நீ ஏன் அடங்கவில்லை?

கட்ட பொம்மன்: பீட்டா அந்நிய நாட்டு நிறுவனம். அதற்குள் அடங்குவதல்ல ஜல்லிக்கட்டும் எங்கள் கலாச்சாரமும்.

அரசு: மடக்குப் பேச்சு. அது என் கோபத்தைக் கிளறுவதாகும்.

கட்ட பொம்மன்: உணர்ச்சி உடையவனுக்குத் தான் கோபம் வரும். உனக்கு வருவதாகக் கூறுவது பொய்.

அரசு: எடக்கு, மடக்கு, இறுமாப்பு, ஏளனம் இத்யாதி இத்யாதி உனக்கு மிக மிக அதிகம்.

கட்ட பொம்மன்: எல்லாம் உடன் பிறந்தவை.

அரசு: இனி அது ஒடுக்கப்படும்.

கட்ட பொம்மன்: நடக்காது. நான் இருக்கும்வரை எக்காலும் இறங்காது. உரக்க உரக்க மேலெழும்.

அரசு: எரிக்கும் சூரியன் இருக்கிறதே, அது கூட எங்களைக் கேட்டுத்தான் எழும், விழும்.

கட்ட பொம்மன்: அ, அந்தக் கதையை இங்கு விடாதே அப்பனே, சூரியனே வேண்டாமென்று ஆண் கூட அல்ல, ஒரு பெண் விரட்டியிருக்கிற கதையெல்லாம் இங்கு ஏற்கனவே ஏராளமாக இருக்கிறது. வேறு ஏதாவது இருந்தால் கூறு.

பீட்டா: ஏனைய எல்லோரும் பணிந்துவிட்டார்கள், பலனடைகிறார்கள். நீ ஒருவன் மட்டும் பணிய மறுப்பதால், அது உனக்கு ஒரு லாபமா?

கட்ட பொம்மன்: எல்லோரும் பணிந்த பிறகு நான் ஒருவன் பணியாததால், அது உனக்கு ஒரு நஷ்டமா?

பீட்டா: அரசே, இவன் பேசத்தெரிந்தவன்.

கட்ட பொம்மன்: ஆம் பேசத்தெரிந்தவன். வெறும் பேச்சல்ல, மானத்தில் பாசமுள்ளவன், வல்லவன், ஜல்லிக்கட்டு தெரிந்தவன். அதனால்தான் ஜல்லிக்கட்டு விளையாடி வாழவேண்டுமென்று நினைக்கிறவன்.

அரசு: 'இரும்புத் தலையன்' என்று எனக்குப் பெயர். என்னிடமே பேசுகிறாய்.

கட்ட பொம்மன்: உருக்கவேண்டிய பொருள். அதனிடம் இரக்கம் காட்டிப் பேசியது தவறுதான். இத்தனை நாளும் உன்னை நம்பியிருந்தது எங்கள் தவறுதான். புல்லனே, பொசுங்கல் அல்ல நான். காதல், மானம், வீரம் என்று கட்டுக்கோப்பிலே வளர்ந்தவன். நாட்டு மாடுகள் பலவும் உள்ள நாடு. வையமும், வானமும் ஒத்துழைக்கும் நாடு. இங்கு பிறந்தவன் பேடியாவதில்லை .

பீட்டா: பேடியாயிருப்பவன்?

கட்ட பொம்மன்: இந்த நாட்டின் அசல் வித்தாக இல்லாதவனாக இருப்பான். பொன்னாட்டு மக்கள் எங்கள் தென்னாட்டு மக்கள். போரென்றால் புலி குணம், பொங்குமின்பக் காதலென்றால் பூமணம், புகழுக்குரிய மானமென்றால் உலகிற்கே ஒரே இனம் என்ற சரித்திரம் கண்டவர்கள் நாங்கள். எங்களுக்கு தடைவிதிக்க ஆண்டவனும் எண்ணியதில்லை. வியபாரம் செய்யவந்த நீங்கள் நரி வேஷம் கட்டி வாலையாட்டி நிற்கிறீர்கள். காலம் உங்களுக்கு கருணை காட்டினும், நல்லவர்கள் உங்கள் காலை பிடித்து வாழமாட்டார்கள் என்பதை மட்டும் மனதில் நிறுத்திக்கொள்.

பீட்டா: போதும் உன் புத்திமதி. மேலும் மேலும் குற்றங்களை கூடுதலாக்கிக் கொண்டே போகிறாய். நான் இப்போதே தீர்ப்புக் கூறப் போகிறேன். உயிர் மேல் ஆசையிருந்தால் உனக்காக ஒரு வினாடி ஒதுக்குகிறேன். மன்னிப்புக் கேட்டுக்கொள்.

கட்ட பொம்மன்: ஹ, நான் மன்னிப்பு கேட்பதா? என் கை கட்டப்பட்டது இதுவரை உன் கழுத்து கழட்டப்படாமல் இருக்க. என் தாய் கேட்டிருக்கவேண்டும் இதை. அவள் தள்ளாத வயதிலும் பொல்லாத புலியாக உன் மீது பாய்ந்திருப்பாள்.என் தம்பி கேட்டிருக்க வேண்டுமிதை, இந்நேரம் உன் பரங்கித் தலை உன் சீதனசீமையை நோக்கி பறந்தே போயிருக்கும். என் தமிழ்ப்புலவன் மட்டும் இங்கு இருந்திருந்தால், அறம் பாடியே உன் ஆவியை கருக்கியிருப்பான். வீரத் தமிழ்குலப் பெண்மணி, என் மனைவிக்கு மட்டும் இது புரிந்திருந்தால், இந்நேரம் உன் உடல் தீப்பற்றி எரிந்திருக்கும். ஆனால் இங்கோ, நாய்களும், பேய்களும், நயவஞ்சக பூனைகளும், வேசித் தனமும், ஆசைகுணமும் கொண்ட அடிவருடிகளும், குடிக்கேடர்களும் கூடியிருக்க நீயும் கூசாமல் தடை போடுகிறாய். என்ன செய்வேன்? என்நாடே, இந்த இழிவு உனக்கா, எனக்கா? அடே பீட்டா, நாங்கள் உன்னை இந்த நாட்டை விட்டே ஓடஓட விரட்டாமல் விடமாட்டோம்.

பீட்டா: இவனைக் கொண்டுபோய் அந்த புளியமரத்திலே தூக்கிலிடுங்கள்.

கட்ட பொம்மன்: ஹா... ஹா... ஹா... ஹா...!
Related Posts Plugin for WordPress, Blogger...