சென்று வா மகனே; செருமுனை நோக்கி!

(கலைஞர் புறநானூறு பாடலுக்கு எழுதிய விளக்கத்தைத் தழுவியது)

காவிரி தந்த தமிழகத்துப் புதுமணலில்
களம் அமைத்துப் பலரும்
உரிமைக்காக போராடிக்கொண்டிருந்த காலமது!
அந்நாளில் மெரீனாவில்,
ஜல்லிக்கட்டு காக்க தாவிப் பாய்ந்து சென்றார்
தந்தை என்ற சேதிகேட்டுத்
தணல்வீழ் மெழுகானால் தமிழகத்துக் கிளியொருத்தி!

அனல் போலும் கண்ணுடனே, அயலூர் சென்றிருந்த
அவள் கணவனும் வந்திட்டான்!
புனல் போக்கும் விழியாலே அவள் போராட்டச்செய்தி தந்திட்டாள்!
“தந்தை போராடச்சென்ற செய்திக்கோ தவித்தாய்” என்றான்.
“இல்லை அன்பே!
முல்லைசூழ் இந்தக் கூட்டத்தில் இன்னும் வீரர் குறைகின்றனறே,
நல்லதோர் போராட்டத்திற்கு இன்னும்
கூட்டம் போதவில்லையே என எண்ணினேன்;
அடைபட்ட கண்ணீர், அணை உடைத்ததத்தான்” என்றாள்.
அவன்,
குகைவிட்டுக் கிளம்பும் ஒரு புலியென,
பகைவிட்டுக் கிளம்பும் எரிமலையென,
பகைவெட்டிச் சாய்க்கும் மனமெடுத்தான்;
சூளுரைத்தான்; சுடர்முகம் தூக்கினான்;
“சுக்குநூறுதான் சூழ்ந்துவரும் தடை” என்றான்,
“ஜல்லிக்கட்டு நடத்தாமல் வீடு திரும்பேன்” என்றான்!
நங்கையோ,
நகைமுழக்கம் செய்து, ”நடந்திடுக கண்ணே” என்றாள்!
“திரும்பி எப்போது வருவேனோ
எதற்கும் இப்போது ஒரு முத்தம்
இந்தா – திரும்பு” என்றான்!
கொடுத்தான் – பின் விரைந்தான்
போராட்டக் களத்தை நோக்கி!

முழக்கம்! முழுக்கம்! முழக்கம்! என
எங்கும் முழங்கின காளையர் குரல்கள்
பார்! பார்! பார்; அந்தப் பைங்கிளியின்
உரிமையாளன் – முழுங்கும் குரல்கேட்டு
கூட்டத்துத் தோழரெல்லாம் வியந்துரைத்தார்! அந்தக்
கட்டாணி முத்தாளும் கண்வழியே சிரித்திட்டாள்,
களத்தினிலே அத்தானின்
முழக்கத்திற்குக் குவிந்து வரும் பாராட்டுகளை கேட்டுவிட்டு!

நாடே திகைத்தது! அரசாங்கம் ஸ்தம்பித்தது!
எம் கொற்றவன் கொட்டும் முழக்கம்
கோடையிடியென கேட்குது! கேட்குது! எனக்
குதித்திட்டாள் – புதுப்பண் அமைத்திட்டாள்!

அக்கம் பக்கத்தவர் வந்தனர் – வெற்றி உன் கணவனுக்கே என்றனர்!
வீட்டோரத்துத் தோழிகள் வந்தனர் – வெற்றி
நீட்டோலை வாசித்து மகிழ்ந்தனர்! அந்த அழகி,
ஆனந்தக் கண்ணீர் பொழிந்தாள் – அப்போது,
ஏனந்த மனிதன் வந்தானோ?
அந்தச் சேதி சொல்வதற்கு! –
”என்னருமைப் பெண்பாவாய்!
கண்ணல்ல – கலங்காதே!
களச்சேதி, கேள் என்றான் –
அந்தோ!
மாவிலைத் தோரணம் கட்டி, மணவிழா மேடைதன்னில்
வாழ்விலே ஒன்றானோம் என்று சொன்ன கண்ணாளன் –
வீடு திரும்ப எத்தனை நாள் ஆகுமென்று தெரியாது என்றறிந்த
ஆரணங்கு, அச்சடித்த தமிழ்ப்பதுமை –
கூவி அழுதாள் – இன்னும் எத்தனை எத்தனை பேர்
போராட்டத்திற்குத் தேவையோ என்றெண்ணி அழுதாள்.
அத்தான் இருக்கும் களம்நோக்கித் தொழுதாள்!

சோகத்தில் வீந்துவிட்ட அவள் காதில் – தொலைக்காட்சி
செய்தி கேட்டதுதான் தாமதம்!
சென்றதுதான் சென்றார்கள் – குடும்பம் முழுவதுமே
போகட்டும் என எழுந்தாள்!
மட்டில்லா புகழ்கொண்ட ஜல்லிக்கட்டுக்கே அன்றி
வீட்டிலோ வீழ்ந்துகிடப்பேன் என்ற தமிழ்நாட்டு மாதரசு,
தொட்டிலிலே இட்டுத் தான் வளர்த்த தூயசெல்வன்
கல்விகற்க, பள்ளி சென்ற நினைவு கொண்டாள்!
அங்கு சென்றாள் – “அம்மா” எனப் பாய்ந்தான்,
அழகுமிழும் மழலைமொழி அன்புத் தங்கம்!
“அப்பா, தாத்தா, வீடு திரும்பினரோ?” என்றான் –
“திரும்பி வந்து போராட்டக் களத்துக்குச் சென்றுவிட்டார்-
கரும்பே – நீயும் வா” என்றழைத்தாள்.
“என்ன வாங்கி வந்தார்?” என்றான்!
“மானம்! மானம்! அழியாத மான” மென்றாள் –
”மகனே! அதைச் சுவைக்க நீயும் வருக!” என்றாள்
வந்துவிட்டான் – குலக்கொழுந்து!
குடும்ப விளக்கு எரிந்து கொண்டே, கூறுகின்றாள் –
”பீட்டாவின் சூழ்ச்சியால் நம் பாரம்பரிய ஜல்லிக்கட்டுக்கு
தடைவந்துவிட்டதடா தம்பீ! போராடச்சென்றதடா நம் குடும்பம்
கவலையில்லை –
களம் சென்றார்; எப்போது மீள்வாரோ?

ஆனாலும் இந்த,
நிலம் உள்ளவரையில் ”மானங்காத்தார்” என்ற பெயர்பூண்டார்!
என் மகனே! நீயும் தோளில்
பலம் உள்ளவரையில் பகையைச் சாடு!
பரணி பாடு! இது உன்
தாய்த் திருநாடு! – உடனே ஓடு” எனத்,
தாவி அணைத்துத் தளிர்மகன் தன்னைச்
சீவிமுடித்துச் சிங்காரித்து,
”சென்று வா மகனே, போராட்டக்களம் நோக்கி!”
என வாழ்த்திவிட்ட திருவிடத்துக்
காட்சிதனைப் – போற்றிப் பாடாதார் உண்டோ!
திருமகளே! இந்தப் பூவுலகில்?....

Related Posts Plugin for WordPress, Blogger...