2016-ல் கவனிக்க வைத்த புத்தகங்கள்

சென்ற வருடத்தில் வெளியான புத்தகங்களில் முக்கியமாக கவனிக்க வேண்டிய புத்தகங்கள் எவை என்று பட்டியலிட்டால் அதில் கீழ்கண்ட புத்தகங்கள் கட்டாயம் சேர்க்கப்பட வேண்டியவை.

1. நட்ராஜ் மகராஜ் -தேவிபாரதி:

வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்
விலை: ரூபாய் 300
பக்கங்கள்: 320
கட்டமைப்பு: மெல்லிய அட்டை

தேவி பாரதி என்ற எழுத்தாளரின் ஆக மேலான படைப்பு நட்ராஜ் மகராஜ் என்று எண்ணுகிறேன். கதையாடலில் நிகழ்த்தியிருக்கும் புதுமையிலும், கதைமாந்தர்களை உருவாக்கியிருக்கும் நேர்த்தியிலும், மொழியைப் பயன்படுத்தியிருக்கும் துல்லியத்திலும் செழுமையிலும் இந்த நாவல் அவரது படைப்பாற்றலின் உச்சத்தைக் காட்டுகிறது. இழை விலகாமல் நெய்ததுபோல நாவலின் எதார்த்தமும் கற்பனையின் மாயமும் பின்னியிருக்கின்றன -சுகுமாரன்.

2. வல்லிசை -அழகிய பெரியவன்:

வெளியீடு: நற்றிணை பதிப்பகம்
விலை: ரூபாய் 240
பக்கங்கள்: 320
கட்டமைப்பு: மெல்லிய அட்டை

இசையில் சுருதி வேறுபாடு இருக்கலாம். சாதி வேறுபாடும் இருக்குமா? பறையை சாதியோடு பிணைத்திருப்பது ஒரு சதி. இது அனைவரும் அறிந்தது. ஆனால் விளக்கங்களைச் சொல்லிக் கொண்டிருப்பதற்கு இது நேரமில்லை. என் கையில் திணிக்கப்பட்ட பறையை நட்ட நடுவெளியில் வீசியெறிகிறேன். அது சமமின்மையை உலுக்கும் வல்லிசையைக் காற்றில் பரசவச்செய்யும். நான் என்னிடமுள்ள தோற்கருவிகளை எரித்துக் குளிர்காய்ந்தபடி அதை உணர்ந்து கொண்டிருப்பபேன் -அழகிய பெரியவன்.

3. பார்த்தீனியம் -தமிழ்நதி:

வெளியீடு: நற்றிணை பதிப்பகம்
விலை: ரூபாய் 450
பக்கங்கள்: 512
கட்டமைப்பு: மெல்லிய அட்டை

அண்மைக் காலத்து வரலாற்றில் இலங்கையில் இன்னொரு அரசின் துணையுடன் நிகழ்ந்துள்ள தமிழின அழித்தொழிப்பு நிகழ்வுகளை உலகம் பார்த்துக்கொண்டுதான் இருந்தது. யுத்தத்தின் கரும்புகை ஈழத்து வானத்தில் இன்னும் படிந்தே கிடக்கிறது. அறம் ஒழித்த மனங்களின் கண்டுபிடிப்பே யுத்தம். யுத்தம் காதல் வாழ்வை சமூக வாழ்வை அன்பை குடும்ப உறவுகளை சிதைக்கிறது. மொத்தமாக மானுட மேன்மையை யுத்தம் கொல்கிறது.தமிழ்நதியின் இந்தப் பார்த்தீனியம் இந்த உண்மைகளைத்தான் மனம் கசியும் விதமாக ஆற்றல் வாய்ந்த ஆனால் எளிய மொழியில் சொல்கிறது. காதலை, நட்பை, உயிர் கலந்த உறவுகளை, சமூக நேசத்தையும் சீரழித்த, கடந்த முப்பது ஆண்டுகால ஈழத் தமிழ்வாழ்வைத் துல்லியமாகச் சித்தரித்துக் கண்முன்னும் நம் மனசாட்சி முன்பும் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார் தமிழ்நதி.உலகத்தின் யுத்தகால கலைப் படைப்புகளில் இந்தப் பார்த்தீனியம் குறிப்பிடத்தகுந்த படைப்பாகப் பல காலம் பேசப்படும் -பிரபஞ்சன்.

4. அ.முத்துலிங்கம் சிறுகதைகள் -அ.முத்துலிங்கம்:

வெளியீடு: நற்றிணை பதிப்பகம்
விலை: ரூபாய் 1200 (இரண்டு தொகுதிகள்)
பக்கங்கள்: 1300
கட்டமைப்பு: கெட்டி அட்டை

நவீனத் தமிழ் இலக்கியத்தின் மகத்தான படைப்பாளுமையான அ.முத்துலிங்கத்தின் 58 ஆண்டுகாலச் சிறுகதைகளை உள்ளடக்கிய செம்பதிப்புப் பெருந்தொகை நூல் இது. இத்தொகுப்பு முத்துலிங்கத்தினுடைய முக்கால் நூற்றாண்டுப் பயணத்தைத் தன்னுள் பொதிந்து வைத்துள்ளது. இலங்கை, கனடா, ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளைத் தன்னுடைய களமாகக்கொண்டு அவர் படைத்துள்ள கதைகள் அவர் வாழ்க்கையை எவ்வளவு விரிவாக வாழ்ந்து வருகிறார் என்பதைக் காட்டும். அவரின் படைப்புலகம் மொழி, மதம், நிறம் போன்ற வேறுபாடுகளைக் கடந்து மனிதத்தில் மட்டும் குவிமையம் கொள்கிறது. நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு ஈழத் தமிழ் தந்திருக்கும் கொடை அ.முத்துலிங்கம் சிறுகதைகள் என்றால் மிகையில்லை. இத்தொகுப்பு இலக்கிய வாசகர்களுக்கான பொக்கிஷம்.

Related Posts Plugin for WordPress, Blogger...