வெய்யோன் கிடைத்தது!

வாசிப்பதற்கு இன்னும் காண்டீபம் காத்திருக்கும் நிலையில் நேற்று வெய்யோன் கிடைத்தது! 850 பக்கங்களில் ஆங்காங்கே சில படங்களுடன் கிழக்கு இப்புத்தகத்தை வெளியிட்டுள்ளது. புத்தகங்களை வெளியிடுவதன் அனுபவங்கள் கூடக்கூட புத்தகத்தின் கட்டமைப்பு நேர்த்தியாக வருகிறது என்றாலும் முதல் அத்தியாயத்தின் முதல் வாக்கியம் முற்றுப்பெறாமல் அந்தரத்தில் தொங்குவது அதிர்ச்சியளித்தது. வெறெங்கோ இடம்பெற வேண்டிய அந்த வரி அங்கே வந்த மாயம் என்னவென்று புரியவில்லை. முதல் வரியே கோணலென்றால் இன்னும் எத்தனை பிழைகள் உள்ளே மலிந்திருக்குமோ என்ற அச்சம் மேலிடுகிறது.

மேலும் பக்கங்கள் கச்சிதமாக நடுவில் அமையாமல் சற்றே விலகி அமைந்து விடுவது புத்தகத்தின் அழகைக் குலைத்து விடுகின்றன என்பதை மறுப்பதற்கில்லை. கிழக்கு இவற்றில் கவனம் செலுத்துவது நல்லது. புத்தகத்தில் இடம்பெற்றுள்ள சண்முகவேலின் ஓவியங்கள் அனைத்தும் சிறப்பாக அமைந்திருக்கின்றன என்று சொல்லமுடியாது. படங்களின் வர்ணங்கள் சரியாகப் பொருந்தாமல் விலகியிருப்பதான தோற்றம் ஓவியங்களில் காணப்படுகிறது. அது அச்சின் தவறா அல்லது ஓவியத்தின் உத்தியா என்பது தெரியவில்லை.

தற்போது அர்ஜுனனை வாசிப்பதா அல்லது கர்ணனை வாசிப்பதா என்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மகபாரதத்தின் இரு பெரும் கதாபாத்திரங்கள் அர்ஜுனனும் கர்ணனும் என்பது யாவரும் அறிந்ததே. சிலருக்கு அர்ஜுனன் உகந்தவனாகவும் வேறுசிலருக்கு கர்ணன் உவப்பானவனாகவும் இருக்கலாம். எனக்குப் பிடித்தது யார் என்று என்னை நானே கேட்டுக்கொள்கிறேன். (அர்ஜுனனை டால்ஸ்டாய் என்று கொண்டால் கர்ணனை தஸ்தாயேவ்ஸ்கி எனலாம்!). இருவரில் யார் எனக்கு உவப்பானவன்? என்னதான் இருந்தாலும் அர்ஜுனனை விட ஒருபடி மேலே கர்ணனே உயர்ந்து நிற்கிறான். அதற்கான தேடலை மேற்கொள்ளும் முகமாக ஜெயமோகனின் இந்த இரு நூல்கள் உதவும் என்று நினைக்கிறேன். பயணத்தின் முடிவில் நான் கொண்டிருக்கும் அனுமானங்கள் மாறிவிடலாம். அப்படி மாறிவிடக்கூடாது என்ற விருப்பத்துடனே இந்நூல்களில் என் பயணத்தை தொடங்கப்போகிறேன்.

பல ஆங்கிலப் புத்தகங்களைப் பற்றிய விமர்சனங்கள் மற்றும் புத்தகங்கள் பற்றிய அறிமுகங்கள் YouTube தளத்தில் வீடியோக்களாக காண்கையில் தமிழ் புத்தகங்கள் பலவற்றையும் அப்படி அறிமுகம் செய்ய ஆவல் எழுகிறது. அதன் ஒரு முயற்சியாக வெய்யோன் புத்தகம் பற்றிய ஒரு வீடியோவை YouTube-ல் பதிவேற்றியிருக்கிறேன்.Related Posts Plugin for WordPress, Blogger...