August 10, 2016

THE ALCHEMIST :A GRAPHIC NOVEL

சிறுவயதில் நான் மிகவும் விரும்பி படித்த புத்தகங்கள் எனில் அவைகள் படக்கதைள் தான். இரும்புக்கை மாயாவியும், டெக்ஸ் வில்லரும், மூகமூடி மனிதனும் இன்னும் பலரும் அந்தப் பருவத்தை இனியதாகச் செய்தார்கள் என்பதில் துளியும் சந்தேகமில்லை. திரும்பக் கிடைக்காத அந்த காலங்களை இன்றும் நினைத்துப் பார்க்கையில் மனதில் அந்த இனிப்பின் சுவையை அறிய முடிகிறது! எவ்வளவு அற்புதமான காலங்கள்! ஒரு மனிதன் வாழ்க்கையில் வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்துவதில் படக்கதை புத்தகங்கள் பிரதான இடம் வகிக்கின்றன. அவற்றுக்கு தன்னை முற்றாக பறிகொடுத்தவன் பிறகு ஒருபோதும் வாசிப்பை நிறுத்தவியலாது என்று நிச்சயமாகச் சொல்லலாம். அதுவே அவனை கடைசிவரை வாசிப்புடன் கட்டிப்போடுகிறது.

சமீபத்தில் நான் படித்த ஒரு படக்கதை புத்தகம்தான் ரஸவாதி. பௌலோ கொய்லோவின் உலகப் பிரசித்திபெற்ற இந்தப் புத்தகத்தை ஹாப்பர் காலின்ஸ் பதிப்பகம் படக்கதை வடிவத்தில் மிக அற்புதமாகக் கொண்டு வந்துள்ளது. தற்போது காமிக்ஸ் உலகம் எப்படியிருக்கிறது என்று நான் அறியேன். ஆனால் இந்தப் புத்தகத்தின் மூலம் அதை அறிய நேர்ந்தபோது வியந்துபோனேன். தற்போதைய காலகட்டம் சிறுவர்களின் வாசிப்புக்கு எத்தகைய பெரும்பங்கை ஆற்றுகிறது என்பதை நினைக்கும்போது அதைச் சிலாகிக்காமல் இருக்க முடியவில்லை. சிறுவர்களின் முன்னே வாசிப்பிற்கு அற்புதமான உலகம் விரிந்திருக்கிறது. ஆனால் அவர்கள் அதை எத்தனை தூரம் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதுதான் கேள்வி. ஒருபுறம் வாசிப்பு அவர்களை ஈர்க்க மறுபுறம் பிற விஷயங்களும் அவர்களை இழுக்கின்றன. இந்த இழுபறியில் அவர்கள் எந்தப் பக்கம் சாய்கிறார்கள் என்பதைப் பொருத்துத்தான் அவர்களின் எதிர்காலம் மட்டுமின்றி காலத்தின் எதிர்காலமும் அடங்கியிருக்கிறது.

சுவை, மணம், திடம் குன்றாமல் ரஸவாதி நாவலை சாறு பிழிந்து கொடுத்திருப்பது போற்றுதற்குரியது. அதற்காக அதன் ஆசிரியரும் ஓவியரும் எத்தனை மெனக்கெட்டிருக்க வேண்டும் என்பதை எண்ணிப் பார்க்கையில் அவர்களின் பணி எத்தனை கடினமானது என்பதை உணர முடிகிறது. நாவலை வாசித்துச் செல்கையில் திரைப்படத்தைப் பார்த்த அனுபவத்தை வாசிப்பு தருகிறது என்பது முக்கியமானது. முக்கியமான இத்தகைய எத்தனை எத்தனை புத்தகங்கள் இப்படி காமிக்ஸ் வடிவத்தில் சிறுவர்களிடம் சென்றடைய வேண்டியிருக்கிறது என்பதை ஒரு பெரும் பட்டியலே போடலாம். அத்தனையும் அவர்களுக்குக் கிடைத்துவிடும் போது இந்தக் காலமும் இனிவரும் காலமும் பொற்காலமாக மாறிவிடும் என்பதை உறுதியாகச் சொல்லலாம். நான் எழுதும் இந்தப் பதிவு ரஸவாதியின் படக்கதையை வாசிக்க யாரேனும் ஒரு சிறுவனுக்கான வாய்ப்பாக அமையுமானால் அதுவே இந்தப் பதிவின் பலன் என்று கருதுகிறேன்.

படங்கள் சேய்மை அண்மைக் காட்சிகள் நிரம்பியதாய் கண் கவரும் வண்ணங்களுடன் அமைந்திருப்பது வாசிப்பிற்கு இன்பம் ஊட்டுவதாக இருக்கிறது. சிறுவர்கள் மட்டுமின்றி பெரியவர்களும் இப்புத்தகத்தை ரசித்து, அனுபவித்துப் படிக்க முடியும். புத்தகத்தின் தொடக்கம் முதல் அதன் இறுதிவரை நமதேயான கற்பனை உலகத்தில் உற்சாகத்துடன் உலவ முடியும். கதாபாத்திரங்கள் அனைவரும் நிஜம் போலவே நமது கண் முன்னே உரையாடுகிறார்கள். இருநூறு பக்கங்கள் உள்ள இந்த நாவலை அவ்வளவு எளிதாக வாசித்துவிட முடியாது என்பதே இந்தப் புத்தகத்தின் செறிவையும் அடர்த்தியையும் புலப்படுத்துகிறது.

இந்நாவலைப் பற்றிச் சொல்லும்போது பௌலோ கொய்லோ, “ரஸவாதியை படக்கதையாக கொண்டுவருவது என்னுடைய கனவுகளில் ஒன்று. இந்நாவல் எனது எதிர்பார்ப்பிற்கு மேலாகவே வந்துள்ளது. நான் இந்நாவலை எழுதும்போது எதைக் கற்பனை செய்தேனோ அதை இந்நாவல் பகிங்கிரப்படுத்தியுள்ளது” என்கிறார். அவர் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை என்பதை இந்நூலை வாசிக்கும் அனைவரும் உணர்வார்கள். இந்நாவலை வாசிக்கும் சிறுவர்கள் ஒவ்வொருவரும் இதன் நாயகன் சந்தியாகுவுடன் பயணித்து, அவனது இன்ப துன்பங்களில் பங்கு கொள்வதோடு, அவர்கள் தங்களுக்கான புதையலை தாங்களே கண்டடைந்து கொள்வார்கள் என்பதை உறுதியாகக் கூறலாம்.

Related Posts Plugin for WordPress, Blogger...