August 10, 2016

Seven Samurai (1954): திரையில் ஒரு பிரம்மாண்டம்!

சுமார் அறுபது வருடங்களுக்கு முன்னர் அகிரா குரோசவா திரையில் நிகழ்த்திக்காட்டிய பிரம்மாண்டம்தான் ஏழு சாமுராய்கள் என்ற திரைக்காவியம். அவர் நிகழ்த்திக்காட்டிய பிரம்மாண்டத்தை இன்றும் நாம் நிராகரிக்க முடியாதபடி அமைந்திருப்பதே இத்திரைப்படத்தின் சிறப்பும் பெருமையுமாகும். காட்சிகளை நிர்மானிக்கும் விதமும், அதை அதன் முழு வீச்சோடு திரைப்படுத்துவதும்தான் அகிராவின் பலம். மெல்லியதான நகைச்சுவை உணர்வை இலாவகத்துடன் திரைப்படம் முழுதும் வியாபிக்கச் செய்வதில் குரோசவா தேர்ந்தவர்! அந்த நகைச்சுவை, காட்சிகளின் தீவிரத்தைக் கூட்டுவதற்காகவே அன்றி வேறெதற்காகவும் அல்ல என்பதை நாம் நுட்பமாக உணரும்போதே அவற்றின் முக்கியத்துவம் நமக்குப் புலப்படும்.

அழகிய மலைச்சிகரத்தில் அமைந்துள்ள ஒரு கிராமத்தை அவ்வப்போது கொள்ளையர்கள் தாக்கி, பெண்கள் மற்றும் உடமைகளை அபகரித்துச் செல்வது வழக்கம். இதனால் கொள்ளையர்களை எதிர்க்க முடியாமல் தவிக்கும் கிராமத்தவர்கள், கிராமத்து தலைவரின் ஆலோசனைப்படி, கொள்ளையர்களை விரட்ட, ஏழு சாமுராய்களை அழைத்து வருகிறார்கள். அவர்கள் கிராமத்தாருடன் இணைந்து எவ்வாறு கொள்ளையர்களை முறியடிக்கிறார்கள் என்பதுதான் கதை. இதில் காதல், வீரம், சோகம் அனைத்தையும் கலந்து, படத்தின் ஒவ்வொரு காட்சியையும் அபாரமாக காட்சிப்படுத்தியுள்ளார் அகிரா குரோசவா.


ஏழு சாமுராய்களும் தனித்துவமிக்கவர்களாக மிளிர்வதோடு, கிராமத்தின் முக்கியமான கதாபாத்திரங்களும் அவ்வாறே தனித்துவமுடையவர்களாக திரையில் வலம் வருவது முக்கியமானது. ஒவ்வொருவருக்கும் அவர்களுக்கென வாழ்க்கையின் பின்னனியும், அதன் அடிப்படையில் அவர்களின் குணாம்சங்களையும் மிக இயல்பாக அமைத்திருக்கிறார் குரோசவா. திரைப்படம் பார்த்து முடித்ததும் ஒவ்வொரு நடிகரின் முகபாவங்களும் நம்முடைய மனதில் துல்லியமாக பதிந்துவிடுவது வியப்பானது! அதுவே அகிரா குரோசவா என்ற ஒப்பற்ற கலைஞனின் மேதமைக்குச் சான்றாக அமைகிறது. கதாபாத்திரங்களின் உணர்வுப்பூர்வமான நடிப்பு காட்சிகளை மேம்படுத்த, சிறந்ததொரு திரை அனுபவம் நமக்குக் கிடைக்கிறது.

நாற்பதுக்கும் மேற்பட்ட கொள்ளையர்களை ஏழு சாமுராய்கள் மட்டுமே எதிர்கொள்வதுடன் கொள்ளையர்கள் அனைவரையும் போர்த்தந்திரத்துடன் முறியடிக்கிறார்கள். அந்தக் காட்சிகளை திரைப்படம் மிகவிரிவாகவே சித்தரிக்கிறது எனினும் அவைகளை குரோசவா தொய்வின்றியும் சுவாரஸ்யத்துடனும் அமைந்திருப்பது கவனிக்கத்தக்கது. அதுவே இத்திரைப்படத்தைப் பார்ப்பதற்கான உந்துதலாகவும் அவசியமாகவும் ஆகிறது. அவற்றின் வாயிலாகவே இத்திரைப்படத்தின் பிரம்மாண்டத்தை நம் கண்முன் நிறுவிக்காட்டுகிறார் இயக்குனர். மொத்தத்தில் அனைவரும் பார்த்து ரசித்து சிலாகிக்க வேண்டிய ஒரு திரைப்படம் ஏழு சாமுராய்கள்.


அகிரா குரோசவா பற்றி சில குறிப்புகள்:

உலகப் புகழ்பெற்ற ஜப்பானிய திரைப்பட இயக்குநரான அகிரா குரோசவா (Akira Kurosawa) டோக்கியோவின், ஓமோரி மாவட்டத்தில் ஓய்மாச்சி என்ற ஊரில் 1910ல் பிறந்தார். அவரது தந்தை, பழைய சமுராய் குடும்பத்தைச் சேர்ந்தவர். அகிராவுக்கு 13 வயதான போது, நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் உடல்களைப் பார்ப்பதற்கு மிகவும் பயந்தார். பயத்தை நேருக்கு நேராகச் சந்திக்க வேண்டும் என்று, அவரது அண்ணன் அவரைப் பார்க்கச் செய்தார். கசப்பான உண்மைகளை எந்த சமரசமும் இன்றி, தீவிரத்துடன் திரைப்படங்களில் வெளிப்படுத்துவதற்கு இந்நிகழ்ச்சி காரணமாக இருந்தது என்று சொல்வதுண்டு.

1936-லிருந்து 1943 வரை முன்னணி இயக்குனர் யமமாட்டோ கஜிரோ உள்ளிட்ட பல இயக்குநர்களிடம் துணை இயக்குநராகப் பணிபுரிந்தார். 1943-ல் இயக்குனராக உயர்ந்தார். 1880களின் ஜப்பானின் ஜூடோ மாஸ்டர்களைப் பற்றிய ‘சான்ஷிரோ சுகதா’ இவரது முதல் திரைப்படம். 1948-ல் வெளிவந்த ‘டிரங்கன் ஏஞ்சல்’ திரைப்படம் இவருக்குப் பெயரையும் புகழையும் ஈட்டித் தந்தது. இவரது “ரஷோமோன்” திரைப்படம் 1951-ல் வெனிஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. சிறந்த வெளிநாட்டுத் திரைப்பட விருதையும் இது வென்றது.


இகிரு (வாழ்வதற்காக) திரைப்படம் சினிமா வரலாற்றின் அற்புதமான படங்களில் ஒன்று என்று விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. ஷேக்ஸ்பியர், பியோதர் தாஸ்தாயேவ்ஸ்கி ஆகியோரின் கதைகளைத் தழுவி திரைப்படங்களை இயக்கி உலகம் முழுவதும் புகழும் பாராட்டுகளும் பெற்றார். 1960-ல் குரோசவா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தைத் தொடங்கித் தனது படங்களை இந்த பேனரிலேயே தயாரிக்கத் தொடங்கினார். சாமுராயை முன்னணிக் கதாபாத்திரமாகக் கொண்டு ஏராளமான திரைப்படங்களை இவர் தயாரித்துள்ளார்.

இவரைப் பற்றிப் பல புத்தகங்கள் வெளிவந்துள்ளன. திரைப்படத் துறையில் திரைக்கதை, காட்சி வடிவமைப்பு, இயக்கம், எடிட்டிங், இசை உள்ளிட்ட ஏறக்குறைய அனைத்துக் களங்களிலும் மேதமை கொண்டிருந்தார். அவர் இயக்கிய மொத்தத் திரைப்படங்கள் 30. 9வது மாஸ்கோ சர்வதேசத் திரைப்பட விழாவில் கோல்டன் பரிசும், 1990-ல் வாழ்நாள் சாதனையாளருக்கான அகாடமி விருதும் பெற்றார். கலைகள், இலக்கியம் மற்றும் கலாசாரம் என்ற பிரிவில் ஏசியன் வீக் பத்திரிகை இந்த நூற்றாண்டின் சிறந்த ஆசியர் (Asian of the Century) என்ற விருதை வழங்கியது. இவரை கவுரவிக்கும் விதமாக சர்வதேச அளவில் இவரது பெயரில் விருதுகள் வழங்கப்படுகின்றன. உலகத் திரையுலகின் மிக முக்கியமான ஒருவராகப் போற்றப்பட்ட அகிரா குரோசவா 1998-ல் தனது 88-வது வயதில் காலமானார்.

Related Posts Plugin for WordPress, Blogger...