The Boy in the Striped Pajamas (2008)

Directed by Mark Herman
Starring: Asa Butterfield, Jack Scanlon, David Thewlis,
Music by James Horner
Cinematography Benoît Delhomme
Studio: BBC Films, Heyday Films, Miramax Films
Release dates: 2008
Running time 94 minutes
Language: English

இது ஒரு அற்புதமான திரைக் காவியம். காட்சிகளும், களன்களும், வசனங்களும், பங்கேற்றவர்களின் நடிப்பும் கனகச்சிதமான அமைந்து நம்மைக் கட்டிப்போடும் சிறந்த திரைப்படம். படத்தைப் பார்த்து முடித்ததும் நம் மனதில் எழும் உணர்வுகளும், கேள்விகளும் இப்படத்தை என்றென்றுமான மிகச்சிறந்த சினிமாவாக ஆக்கியிருக்கிறது. உலக சினிமாவை ரசிக்கும் யாரும் தவறவிடக்கூடாத ஒரு படம் இது என்பதை உறுதியாகச் சொல்லலாம்.

ரால்ஃப் ஹிட்லரின் ராணுவத்தில் பணிபுரியும் ஓர் உயர் அதிகாரி. அவர் மனைவி எல்சா. அவர்களுக்கு 12 வயதான கிரிட்டல் என்ற பெண்ணும், 8 வயதான புருனோ என்ற மகனும் இருக்கிறார்கள். அவருக்கு பதவி உயர்வு கிடைக்கவே, குடும்பத்தோடு அவர்கள் வேறு ஊருக்குச் செல்கிறார்கள். ஆரம்பத்தில் புருனோவுக்கு அந்த புதிய இடமும், வீடும் பிடிக்காமல் இருக்கிறது. விளையாடக்கூட அவனுக்கு துணை யாரும் இல்லாமலிருக்கிறது. தனது படுக்கையறையிலிருந்து தூரத்தில் தெரியும் கம்பிகளால் மின்வேலி அமைக்கப்பட்ட இடத்தையும், அங்கே இருப்பவர்கள் கோடுபோட்ட பைஜாமாவும், சட்டையும் அணிந்திருப்பதைக் கவனிக்கிறான். அது ஒரு பண்ணை என்று அவன் கருதிக்கொள்கிறான். ஆனால் உண்மையில் அது ஹிட்லரின் நாசிப் படையினரின் கான்சன்ட்ரேஷன் கேம்ப். அவர்கள் அனைவரும் கைதிகள்.


தனிமை புருனோவை போரடிக்கச் செய்கிறது. எனவே யாருக்கும் தெரியாமல் வீட்டிலிருந்து வெளியேறிச் சென்று மின்வேலிக்கு அப்பாலிருக்கும் யூதச் சிறுவன் சுமூல் என்பவனோடு நட்புகொள்கிறான். அவன் அங்கிருப்பவர்கள் அனைவரும் கைதிகள் என்று புருனோவுக்குத் தெரிவிக்கிறான். 

ரால்ஃப் தங்கள் குழந்தைகளுக்கு ஆசிரியர் ஒருவரை நியமிக்கிறார். அவரோ ஹிட்லரின் கொள்கைகளை அவர்கள் மனங்களில் பதியவைக்கும் உபதேசங்களைச் செய்கிறார். அது கிரிட்டலுக்கு உவப்பானதாக இருக்கிறது. ஆனால் புருனோவுக்கு அவைகள் வெறுப்பைத் தருகின்றன. தனது தந்தை நல்லவர்தானா என்ற சந்தேகம் அவனுள் எழுகிறது.


இந்நிலையில் எல்சா ஒருவிதமான வித்தியாசமான மணத்தை காற்றிலிருந்து சுவாசிக்கிறாள். தூரத்தே புகைபோக்கியிலிருந்து கரும்புகை கிளம்புவதையும், வெந்து போன கருந்துகள்கள் காற்றில் பறப்பதையும் காண்கிறாள். அதைப்பற்றி கணவரின் உதவியாளர் கோட்லரிடம் கேட்க அவர், “அவர்கள் எரியும்போது இன்னும் மோசமான சுவாசத்தை உணரமுடியும்” என்கிறார். இதனால் அந்த கேம்ப் கைதிகளின் மரணத்திற்கானது என்பதை அறிந்து எலிசா திடுக்கிடுகிறாள். இது குறித்து தனது கணவரிடம் சண்டையிடுகிறாள். குழந்தைகள் இங்கே இருப்பது சரியல்ல என்றும், அவர்களைக் கூட்டிக்கொண்டு தான் தூரமாகச் செல்வதாகவும் சொல்கிறாள். ரால்ஃப் அதற்குச் சம்மதிக்கிறார்.

சுமூலிடம் நெருக்கமாக இருக்கும் புருனோவுக்கு அங்கிருந்து செல்வது வருத்தமளிக்கிறது. தான் அங்கிருந்து செல்லப்போவதாக சுமூலிடம் தெரிவிக்கிறான். அப்போது அவன் தனது தந்தை காணாமல் போய்விட்டதாக சொல்கிறான். அவர் அந்த கேம்பில் எரித்து கொள்ளப்பட்டுவிட்டார் என்பதை அறியாத இருவரும் அவரைத் தேடுகிறார்கள். இதற்காக புருனோ மின்வேலிக்குக் கீழே குழிதோண்டி உள்ளே நுழைகிறான். தான் வித்தியாசமாக தெரியாமல் இருக்க சுமூல் தரும் கோடுபோட்ட பைஜாமாவையும் சட்டையையும் அணிந்து கொள்கிறான்.


இருவரும் பல இடங்களில் நுழைந்து தேடுகிறார்கள். அப்போது அங்கே இருக்கும் பலரையும் உடைகளைக் களைந்தவிட்டு ஒரு அறைக்குள் நுழையச்சொல்கிறார்கள். தங்களைக் குளிக்கத்தான் அவ்வாறு செய்கிறார்கள் என்று அவர்கள் நினைத்து அதனுள் செல்கிறார்கள். கூட்டத்தில் இருக்கும் சிறுவர்களும் அவர்களுடன் செல்ல நேர்கிறது. 

இந்நிலையில் வேறு இடத்திற்குச் செல்லத் தயாராய் இருக்கும் எலிசா புருனோவைக் காணாமல் தேடுகிறாள். அவன் வீட்டில் எங்கும் இல்லாமல் போகவே எல்லோரும் வெளியே தேடுகிறார்கள். அவன் மின்வேலியைக் கடந்து கேம்புக்குள்ளே சென்ற தடயத்தை அறிந்து ரால்ஃப் உள்ளே செல்கிறார்.


ரால்ஃப் உள்ளே எங்கு தேடியும் புருனோ இல்லாமல் போகவே, அவன் கைதிகளைக் கொல்ல உபயோகப்படுத்தும் விஷவாயு அறைக்குச் சென்றிருக்கவேண்டும் என ஊகிக்கிறார். அதை நிறுத்தும் பொருட்டு, “புருனோ புருனோ” என்று கத்தியபடியே செல்கிறார். ஆனால் அதற்குள் எல்லாம் முடிந்துவிடுகிறது. இதை அறியும் எலிசாவும் கிரிட்டலும் பெரும் சோகத்திற்கு ஆளாகிறார்கள். 

அறை முழுதும் கழட்டிப்போட்ட கோடுபோட்ட பலநூறு பைஜாமாக்களைக் காட்டுவதன் மூலம் படம் நிறைவடைகிறது. நம் மனம் ஒரு கணம் உறைந்துபோக நாம் ஸ்தம்பித்து நிற்கிறோம். நம் மனதில் வந்து கவியும் சோகம் வார்த்தைகளில் சொல்லமுடியாதது.

சிறுவர்கள் இருவரும் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார்கள். ஒவ்வொரு காட்சியும், கேமராக் கோணமும் என்றென்றும் மறக்கமுடியாத திரை அனுபவத்தை நமக்கு அளிக்கக்கூடியவவை. வசனங்கள் நச்சென்று அமைந்து, ஒலியைவிட ஒளிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றன. நுணுக்கமான பல காட்சிகள் திரைப்படம் முழுதும் நிரம்பியிருக்கின்றன. வேலைக்காரராக வரும் பாவெல் என்ற யூத டாக்டர் பாத்திரம் அற்புதமான ஒரு சித்தரிப்பு. அவரும்கூட விஷவாயு அறையில்  கொல்லப்பட்டு விடுகிறார் என்பதை அறியும்போது நம் மனம் வலிக்கிறது. 

என்னை பாதித்த பல சிறந்த படங்களில் இந்தப் படம் முதன்மையானது.

(மறுபிரசுரம். முதற்பிரசுரம் ஏப்ரல் 16, 2014)

Related Posts Plugin for WordPress, Blogger...