'கி.ராஜநாரயணன் கதைகள்' வாங்கிய கதை!

கி.ராஜநாராயணன் எனக்கு அறிமுகமானது 1995-ல் என நினைக்கிறேன். அது அவரது 'கோபல்ல கிராமம்' புகழ் பெற்ற நாவலாக வலம் கொண்டிருந்த காலம். அது கிராமத்தைப் பற்றிய ஒரு கதை என்பதைத் தவிர, இன்று வேறெதுவும் நினைவில் இல்லை. அவ்வப்போது அவரது சிறுகதைகள் சிலவற்றை வாசித்துள்ளேன். அவர் ஒரு நல்ல எழுத்தாளர் என்பதைத் தவிர அவரை நெருங்கி அறிய நான் முயன்றதில்லை. 2012-ல் இந்தத் தளத்தைத் தொடங்கிய போது அவர் சிறுகதைகளை வாசிக்க தேடினேன். அவரது முக்கியமான கதைகளான கதவு, நாற்காலி போன்ற கதைகளை வாசித்தேன்.

அவரது முழுக் கதைகளின் தொகுப்பை வாங்க முயன்றபோது அவரது கதைகளை அன்னம் ஒரு தொகுப்பாக கொண்டு வந்திருப்பதை அறிந்தேன். அதைத் தேடி அலைந்த போதுதான் 'கரிசல் கதைகள்' எனும் தொகுப்பை வாங்கினேன். புத்தகங்களுக்காக அலைவதென்பது ஒரு சுகமான அனுபவம்! நாம் ஒன்றைத் தேட வேறு ஒன்று அகப்படும். அந்த ஒன்று வேறு ஒன்றைத் தேட வைக்கும். புத்தகக் கடைகளில் கி.ராவின் தொகுப்பு பழைய பிரதியே கிடைத்ததால் அதை வாங்குவது எனக்கு சம்மதம் இல்லாமலிருந்தது. மேலும் அது கிரவுன் வடிவத்தில் இருந்ததால் அசௌகர்யமாக உணர்ந்தேன். அவரது நல்லதொரு தொகுப்பிற்காக காத்திருந்தேன்.

இந்நிலையில் நேற்று, என் மனதில் இருந்த சந்தேகம் ஒன்றை நிவர்த்திசெய்ய புத்தகம் ஒன்றிற்காக, கடைக்குச் செல்ல வேண்டியிருந்தது. அப்போது கி.ராவின் சிறுகதைகள் தொகுப்பு ஒன்றைக் கண்டேன். அட்டை மிகப் பிரமாதமாக அமைந்து, “என்னை வாங்கு” என்று தூண்டியது. அதுவும் கிரவுன் வடிவத்தில் இருந்த அன்னத்தின் வெளியீடுதான். தற்போது 2016-ல் வெளியான ஆறாவது பதிப்பு. அதன் முதற் பதிப்பு 1988-ல் வந்துள்ளது. புத்தகத்தின் அச்சும், கட்டமைப்பும், காகிதமும் தரமாக அமைந்து புத்தகம் மதிப்பு மிக்கதாக இருந்தது. கைகளில் உணர்ந்த அட்டையின் வழவழப்பும், உறுதியும் புத்தகத்தின் மேல் காதலைத் தந்தது!

தரம் சரி! விலை? பின் அட்டையைப் பார்க்க அது ரூபாய் 550 என்றது. எனக்கு வியப்பு, அதற்கு முன்னால் ஏதாவது இலக்கம் விட்டுப் போயிற்றா என்று! உள்ளே பார்க்க, அதுதான் என்று உறுதியாயிற்று! பத்து சதவீதம் தள்ளுபடி போக, (நான் ரெகுலர் கஸ்டமர்!) ரூபாய் 495-க்கு வாங்கினேன். 575 பக்கங்கள் உள்ள புத்தகம் 495-க்கு என்பது, இந்த 2016-ல் ஓர் அதிசயம்தான்! பதிப்புத் துறையில் எல்லோரும் அன்னம் போல இருந்துவிட்டால் புத்தகப் பித்தர்களுக்கு எத்தனை உதவியாக இருக்கும்? பாலில் கலந்துள்ள நீரை விடுத்துப் பாலை மட்டும் குடிக்கின்ற அன்னத்தின் பண்பு போற்றுதற்குரியது!

கி.ராவின் கதைகளுக்கு அடித்தளமாக இருப்பவை அவர் பிறந்த ஊரும், ஊரின் மனிதர்களும்தான். ஊரின் மீதும், மனிதர்கள் மீதும் அவருக்கிருந்த அளவற்ற பிரியத்தை, தன் மண் மீது அவர் கொண்டிருந்த பிணைப்பை அவரது பின்வரும் வரிகள் தெளிவாக உணர்த்துகின்றன:


இத்தொகுப்பு குறித்து கி.ரா. தன்னுடைய முன்னுரையில் இப்படிச் சொல்கிறார்:
‘தலப்பா’க் கவிஞன் தன்னுடைய கவிதைகள் மிக அழகான பதிப்பாக அமெரிக்காவில் அச்சாக வேண்டும் என்று கனவு கண்டான்.
ருஷ்யர்கள் புத்தக அச்சில் செய்யும் நேர்த்தியும் அதன் கட்டக்கலையும் பார்க்க நேரும் போதெல்லாம் நம்முடைய எழுத்து எதாகிலும் இப்படிப் புத்தக வடிவில் வராதா என்று ஏங்குவேன் நான்.
அப்பதான் பிறந்த குழந்தையை சொளகில் படுக்க வைத்து பெற்றவனிடம் நீட்டுவார்கள் மகிழ்ச்சியோடு; அவன் பார்க்க.
கதிர் என்முன் வந்து அப்படி இத்தொகுப்பை நீட்டும்போதுதான் தெரியும் அமெரிக்காவா, ருஷ்யாவா, தமிழ்நாடா என்று பார்ப்போம்.
அவர் நம்பினாரோ இல்லையோ, நான் நம்ப முடியாதவனாக இப்புத்தகத்தை இப்போது கைகளில் ஏந்தியிருக்கிறேன். எனவே வாசகர்கள் தவறாது இந்தப் புத்தகத்தை வாங்கி நான் பெற்ற இன்பத்தை பெற்றிடுங்கள். கூடவே மனைவியின் வசவுகளையும் இன்னிசையென காதில் வாங்கி மகிழ்ந்திடுங்கள்! ஒவ்வொரு புத்தகத்தை வாங்கியதற்குப் பின்னால் இப்படி ஓர் அனுபவம் இருக்கிறது. அதைப் பகிர்வதைப் போல உற்சாகமான, சுவாரஸ்யமான விஷயம் வேறில்லை!

Related Posts Plugin for WordPress, Blogger...