July 18, 2016

கண்மணி குணசேகரனின் 'அஞ்சலை': கடலில் தத்தளிக்கும் படகு

நட்சத்திரத் தகுதி: ✰✰✰✰

வெளியீடு: தமிழினி
மூன்றாம் பதிப்பு: டிசம்பர் 2010
விலை ரூபாய்: 230
பக்கங்கள்: 320
கட்டமைப்பு: கெட்டி அட்டை
வடிவம்: டெம்மி

யதார்த்தவாத இலக்கிய பாணியில் கண்மணி குணசேகரனின் அஞ்சலை அமைந்திருக்கிறது. அதன் முக்கிய அம்சமான கதை கூறல் முறை உத்தியில் இந்நாவல் எழுதப்பட்டிருக்கிறது. இது எழுதப்பட்ட ஒரு நாவல் என்றாலும் கூட, வாய்மொழிக் கதை சொல்லும் நடையிலேயே நாவல் அமைந்திருக்கிறது. ஒரு மாலை மயங்கிய அந்தி நேரத்தில், மரத்தின் அடியில் கட்டில் ஒன்றில் படுத்தபடி, நம் தாத்தா கதை சொல்வதை நாம் எவ்விதம் ரசிப்போமோ, அனுபவிப்போமோ அதைப் போலவே அஞ்சலையை நாம் வாசித்து ரசிக்கலாம். வானத்து நிலவையும், நட்சத்திரங்களையும் பார்த்தபடி தாத்தா சொல்லும் கதையை நம் மனதில் கற்பனை செய்வதுபோல நாம் நாவலைப் படித்து மகிழலாம்; அஞ்சலையின் துக்கத்தில் நம் மனதைக் கரையவிடலாம். ஒரு கிராமத்துப் பின்னனியில் சாதாரண மனிதர்களின் ஆசாபாசங்கள், துன்பங்கள், இன்பங்கள், ஏமாற்றங்கள், எதிர்பார்ப்புகள், கோபதாபங்கள் அனைத்தையும் இந்நாவலில் வெளிப்படுத்துகிறார் கண்மணி குணசேகரன்.

எந்தவித கவலைகளும் இன்றி ஒரு பட்டாம்பூச்சியைப் போல சுற்றித் திரிந்த அஞ்சலையின் வாழ்க்கையை அவளது திருமணம் எப்படிப் புரட்டிப்போட்டு விடுகிறது என்பதை நாம் அறியும்போது, இந்த சமூகத்தில் திருமணம் என்ற பந்தம் பெண்களை எவ்வாறு சிக்கலுக்கு ஆட்படுத்துகிறது, கொடுமைப் படுத்துகிறது என்பதை அறிய நேர்கிறது. பல மெத்தப் படித்த பெண்களின் வாழ்க்கையையே திருமணங்கள் தலைகீழாக மாற்றிவிடும்போது பாவம் சாதாரண கிராமத்துப் பெண் அஞ்சலை என்ன செய்வாள்? ஆரம்பத்தில் அவள் தனது ஏமாற்றத்தைத் தாங்க முடியாமல் அழுது புலம்புகிறாள்; சாகவும் துணிகிறாள். அவளது அம்மா பாக்கியம் அவளை சாகவிடாமல் தடுத்து, அவளை நடைப்பிணமாக வாழச் செய்கிறாள். தன் சொந்த தம்பி சின்னச்சாமி தனக்கு அஞ்சலையை இரண்டாம் தாரமாகக் கட்டிக்கொடுக்கவில்லை என்பதற்காக மாப்பிள்ளையை மாற்றி திருமணத்தை நடத்திவிடுகிறான். அண்ணனான தேவராசுவைக் காட்டி அவன் தம்பி கணேசனை மணமுடித்துவிடுகிறார்கள். 

இவன்தான் மாப்பிள்ளை என்று காட்டியவனை அஞ்சலைக்கு மிகவும் பிடித்துப் போகிறது. அவனுடன் சந்தோஷமாக வாழ்வதைக் கற்பனை செய்துபார்த்து மகிழ்கிறாள். இருந்தும் தன் ஊரைவிட்டுப் பிரிவது அவள் மனதைத் துயரம் கொள்ளவைக்கிறது. எனவே தான் ஊரைவிட்டுச் செல்லும் முன் ஊரை ஒருதடவை பார்த்துவிட வேண்டும் என்று மரம் மட்டை, குளம் குட்டை, தெருக்கள் என்று சுற்றி வருகிறாள். ஆனால் இப்போது சொந்த ஊரும் இல்லாமலாகி, ஒரு சோப்ளாங்கியைத் தன் தலையில் கட்டிவிட்டது அவளது துக்கத்தை மேலும் அதிகப்படுத்துகிறது. தன் மனதைக் கவர்ந்தவன் ஒருவனாக இருக்க, வாழ்வது வேறொருவனுடன் எனும் நினைப்பே அஞ்சலைக்கு கசக்கிறது. தேவராசுவின் வீடு பக்கத்தில்தான் என்பதால், அவனும் அவள் மனைவியும் கொஞ்சிக் குலவுவது அவளை வேதனையுறச் செய்கிறது. போதாததற்கு ஊராரின் கிண்டல் பேச்சும் ஏளனமும் அவள் துன்பத்தை அதிகரிக்கிறது. தன்னை அண்ணி என்று அழைத்து அவளுடன் உறவாடும் வள்ளிதான் அஞ்சலைக்கு ஓரே ஆறுதல். கணேசனோ அவளை நெருங்கும் துணிவின்றி தவிக்கிறான். தன்னை இந்நிலைமைக்கு ஆளாக்கிய தன் அண்ணன் மற்றும் அப்பா மீது அவனுக்கு ஆத்திரம் வருகிறது. சம்பந்தமே இல்லாத இரு மனங்களின் துயரத்திற்கு பிறர் காரணமாகிவிடும் விசித்திரத்தை என்னவென்று சொல்ல? 

நாட்கள் போகப்போக வள்ளியுடனான நட்பும், முந்திரிக்காடும், உத்திமாக் குளமும் அவளுக்கு மிகவும் பிடித்துப் போகிறது. முந்தரிக் காட்டில் முந்திரி பொறுக்குவதும், மாலையில் வீடு திரும்பும்போது குளத்தின் குளிர்ந்த நீரில் குளிப்பதும் அவள் உடலையும் தாண்டி மனத்தையும் ஓரளவு குளிர்விக்கிறது. முந்திரிக்காடும், அதன் சுற்றிய பகுதிகளும், உத்திமாக் குளமும் நம் மனதில் பெரியதோர் கற்பனையை விரிக்கிறது. இவைகள் நாவலின் கதையோட்டத்தில், வாசிப்பில் நமக்குப் புதியதோர் அனுபவத்தைக் கொடுக்கிறது. சாதாரணமான எளிய நடையில், நம் மனம் கவரும்விதமாக, இவற்றை விவரித்திருக்கிறார் கண்மணி குணசேகரன்.

ஒரு பெண்ணின் மீது விருப்பம் கொண்டவிட்ட ஒரு ஆண் அதை வெளிப்படையாகத் தெரிவிப்பதோடு, உடல் ரீதியாக அவளை நெருங்கவும் தயக்கம் காட்டுவதில்லை. ஆனால் இதையே ஒரு பெண் செய்யும்போது ஒழுக்கம், கற்பு என்று இந்தச் சமூகம் கூச்சலிடுகிறது. தன் கணவனாக வரித்துக்கொண்டுவிட்ட தேவராசுவின் மீது அஞ்சலைக்கு விருப்பம் இருக்கிறது. ஆனால் அவள் அவனை அணுக முடியுமா? ஆனால் அதியமாங்குப்பத்தான் அஞ்சலையை அஞ்சாமல் நெருங்குகிறான். இது ஏன்? இது எவ்வாறு சாத்தியமாகிறது? சமூகம் மனிதரிடையே உயர்வு தாழ்வு என்ற பேதம் கற்பிப்பது ஒரு புறம் இருக்கட்டும், ஆனால் இந்த ஆண் பெண் பேதம் இன்னும் நம்மிடையே ஒழிந்தபாடில்லையே?

வள்ளிக்குத் திருமணம் நடந்தேற, அஞ்சலைகுகு ஒரே ஆறுதலாக இருந்த அவளும் விலகிவிடுகிறாள். இனி தன் வாழ்க்கையில் என்ன இருக்கிறது என்று வருந்தும்போது அவளுக்கும், கணேசனுக்கும், அவன் அப்பாவுக்குமிடையே சண்டை ஒன்று நடந்து அடிதடியில் முடிகிறது. மேலும் அங்கிருக்கப் பிடிக்காத அஞ்சலை வீட்டைவிட்டு வெளியேறுகிறாள். வழியில் தன் பெரியக்கா கல்யாணியைப் பார்க்கிறாள். ஏற்கனவே தன் கொழுந்தனை அஞ்சலைக்கு கட்டிவைக்க அவள் முயன்றது நடக்காது போகவே, இப்போது இதுதான் சமயமென, ஆறுமுகத்திற்கு அஞ்சலையைக்கும் திருமணம் செய்துவைக்கிறாள். அஞ்சலையின் கழுத்தில் மறுதாலி ஏறுகிறது. ஆறுமுகத்தை அஞ்சலைக்கு மிகவும் பிடித்துவிடுகிறது. இத்தனை நாளும் இல்லாமல் அஞ்சலை நிம்மதியாக உறங்குகிறாள். இது நாளும் பாரமாயக் கனத்த அவளின் கால்கள் இப்போது தரையில் பூப்போன்று நடப்பதாய் உணர்கிறாள். அஞ்சலையின் மனதில் இருந்த துக்கத்தை அதன் பாதிப்பை தூக்கம், நடை இவற்றின் வேறுபாட்டால் நம்மை ஆழமாக உணரச்செய்திருக்கிறார் நாவலாசிரியர். 

வாழ்க்கை நம் கற்பனைக்கு எட்டாதது. அடுத்த வினாடி என்ன நடக்குமென்றோ, நடப்பவைகள் ஏன் நடக்கின்றன என்றோ நம்மால் அறியமுடிவதில்லை. ஆனால் எது நடக்கவேண்டுமோ அதை நோக்கித்தான் நம் வாழ்க்கை பயணிக்கிறது என்பதை மட்டும் நாம் உறுதியாக நம்பலாம். அஞ்சலையின் வாழ்க்கையில் நடக்கும் அடுத்தடுத்தத் திருப்பங்களுக்கு நாம் இவ்வாறுதான் காரணம் கற்பித்துக்கொள்ள முடிகிறது. அவளது அக்காவே இப்படி செய்வாளா என்று நமக்கு எழும் சந்தேகம் அஞ்சலைக்கும் எழுகிறது. ஆனால் அக்காவுக்கும் தன் கணவனுக்கும் தொடர்பு இருப்பதை ஒரு நாள் அஞ்சலையே தன் கண்ணால் காண்கிறாள். மீண்டும் அவள் வாழ்க்கை கண்ணீர் என்ற துக்கத்தில் மூழ்க ஆரம்பிக்கிறது. கல்யாணி தன் கொழுந்தனை அஞ்சலைக்குத் திருமணம் செய்ய முடிவெடுக்கும்போது நாவலாசிரியரிடம் வெளிப்படும் கிண்டலான தொனிக்குக் காரணம் நமக்கு இப்போதுதான் தெரியவருகிறது!

“இனிமே எங்க போறது?” நிராதரவாய், பரிதவித்து, வேதனையுற்று, பயமும் சஞ்சலமும் மனதைக் கௌவிப் பிடிக்க வாழ்வின் ஒவ்வொரு இக்கட்டான நிலையிலும் அஞ்சலையிடம் எழும் கேள்வி இது. ஒரு ஆணின் முன்பு சாதாரணமாக தோன்றும் இந்தக் கேள்வி பெண்ணின் முன்னே பூதாகரமாக உருக்கொண்டு எழுந்து நிற்கிறது. ஆண்களைச் சார்ந்து வாழும் எண்ணற்ற பெண்களின் அவல நிலையையே இது சுட்டுகிறது. இது பெண்களுக்கான கேள்வியாக மட்டுமே இந்தச் சமூகத்தில் இருக்கிறது. 

அஞ்சலையிடம் தன் பிள்ளையை நன்றாகப் பெற்றெடுக்க இருக்கும் எச்சரிக்கை உணர்வு, அவள் தன் வாழ்வைத் தேர்வதில் இல்லாமல் போய்விட்டது. அவளது சிரமத்தைக் கண்டு பக்கத்திலிருக்கும் பாட்டி சொல்லும் அறிவுரை அவளுக்குத் தன் தவறை உணர்த்துகிறது. கணேசனுடன் ஒப்பிடும்போது ஆறுமுகம் சிவப்பாக, பார்க்க லட்சணமாக இருக்கிறான் என்றுதான் அவனைத் திருமணம் செய்துகொள்கிறாள். ஆனால் அதன் விளைவு? ஆறுமுகமும், அக்காவும் அவளை ஒரு பொருட்டாக மதிக்காமல், கர்ப்பிணிப் பெண் என்றும் பாராமல், புறக்கணிக்கிறார்கள். இப்படியும் கூட மனிதப் பிறவிகள் இந்த உலகத்தில் இருக்கமுடியும் என்று கல்யாணி ஆறுமுகம் இருவரும் நமக்கு நிரூபித்துக் காட்டுகிறார்கள். பல்வேறு சிரமங்களுக்கிடையே அஞ்சலை பெண் குழந்தையைப் பெற்றெடுக்கிறாள். கர்ப்பிணிப் பெண்களுக்கே ஏற்படும் பல உடல் சிரமங்களை நாவலின் இப்பகுதியில் நுணுக்கமாகச் சித்தரித்திருக்கிறார் கண்மணி குணசேகரன். அப்போது கல்யாணியும் கருத்தரிக்கிறாள். எனவே அஞ்சலை மீண்டும் வீதிக்கு வரும்படி நேர்கிறது.

தன் தாய் வீட்டுக்கு வந்து சில நாட்கள்கூட அவளால் நிம்மதியாக இருக்க முடிவதில்லை. ஊராரின் ஏச்சும் பேச்சும், ஆண்கள் அவளிடம் நடந்துகொள்ளும் முறையும் மொத்த குடும்பத்தையும் பாடாய்ப் படுத்துகிறது. அங்கிருக்கப் பிடிக்காத அஞ்சலை வள்ளியின் ஊருக்குச் செல்கிறாள். தான் கணேசனிடமே போய்விடலாம் என்பதாக அவளிடம் சொல்கிறாள். கணேசனும் அவள் நினைவாய் இருப்பதாகக் கூறும் வள்ளி அவளை அவனிடம் சேர்ப்பிக்கிறாள். கணேசனுடன் அஞ்சலைக்கு இரண்டு பெண்கள் பிறந்து வளர்கிறார்கள். ஊரில் யாரும் அவளுக்கு அணுசரனையாக இல்லாததால் நாளும் அவர்களின் குத்தல் பேச்சுடன் காலம் தள்ளவேண்டியிருக்கிறது. தனது அம்மா வீட்டில் விட்டுவந்த நிலா வளர்ந்து பெரியவள் ஆகிறாள். பல சிக்கல்கள் அவளை எதிர்கொண்ட போதும், தன் தம்பி மணிகண்டன் மகள் நிலாவைக் கட்டிக்கொள்வான் என்று ஆறுதலடைகிறாள். ஆனால் அவனோ, அஞ்சலையின் வாழ்வைப் பாழாக்கிய கல்யாணியின் மகளைத் திருமணம் செய்துகொள்கிறான். கடைசியில் நிலா அஞ்சலையிடமே வந்து சேர்கிறாள். இதனால் வெகுவாக மனமுடைந்து போகிறாள் அஞ்சலை. இனி நிலாவும் ஒரு அஞ்சலைதானா இல்லையா என்பதைக் காலம்தான் தீர்மானிக்க வேண்டும்.

சமூகம், சக மனிதர்கள், உறவுகள் மற்றும் சூழ்நிலைகள் என்று அனைத்துமே அஞ்சலைக்கு எதிராகச் செயலாற்றும்போது பாவம் அவள் என்ன செய்வாள்? முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பது போல அவளது திருமணத்தில் ஆரம்பித்த சிக்கல்கள் அவள் வாழ்க்கை நெடுகிலும் தொடர்ந்து வந்து, மேலும் சிடுக்காகி, தப்பிக்க முடியாத சிலந்தி வலையாக அவளைப் பின்னிக்கொள்கிறது. நாவலை வாசித்து முடித்ததும் நம் மனம் முழுதும் பாரமாகிவிடுகிறது. சமூகமென்ற சக மனிதர்களும், சொந்தமென்ற உறவுகளுமே அவள் வாழ்வைச் சின்னாபின்னமாக்கி விடுகின்றன என்பதை அறியும்போது நம் மனம் வலிக்கிறது. பெண்களின் துன்பத்திற்குச் சீதையை உதாரணம் காட்டுவது வழக்கம். ஆனால் அஞ்சலை படும் துன்பமோ அதைவிடக் கொடுமையானது. இனி சீதைக்கு பதிலாக அஞ்சலையின் பெயரைச் சொல்வதே பொருத்தமாக இருக்கும். நாவல் அஞ்சலை என்ற பெண்ணின் கதையைச் சித்தரித்த போதிலும், அஞ்சலையைப் போலத் தவிக்கும் எண்ணற்ற பெண்களின் வாழ்வாகப் பார்க்கும் பேரனுபவம் வாசிப்பின் முடிவில் நமக்குக் கிட்டுகிறது.

இந்த உலகத்தில் வாழும் கோடானுகோடி மனிதர்களுக்கும் கோடானுகோடி வாழ்க்கை இருக்கிறது. ஒருவரின் கை ரேகை மற்றொருவரின் ரேகையுடன் எப்படி ஒத்துப்போவதில்லையோ அதேபோலத்தான் வாழ்க்கையும். என்னதான் நாம் பிறரது வாழ்க்கையை நகல்படுத்தி வாழ்ந்த போதிலும், ஏதோ ஒரு தருணத்தில் வாழ்க்கை நமக்கானதாக மட்டுமே மாறிவிடுவது புதிரானதுதான். வாழ்க்கையின் அந்தப் புதிர்த் தன்மைதான் அனைவரின் வாழ்க்கையிலும் பொதுவானது. நம் கண்முன் பரந்திருக்கும் முடிவற்ற தரையைக் காண்பதற்கும், எல்லையற்று விரிந்து பரந்த கடலைக் காண்பதற்கும் வேறுபாடு உண்டு. தரை நம்மிடம் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. ஆனால் கடலோ பரவசத்தையும், கிளர்ச்சியையும், பிரமிப்பையும் ஊட்டக்கூடியது. கண்மணி குணசேகரன் தன் கதை சொல்லும் திறத்தால் அஞ்சலை என்ற பெண்ணின் வாழ்வை அத்தகைய ஒரு கடலாக நம் கண்முன் விரியச் செய்துவிடுகிறார். எனவே ஓயாது உள்ளும் புறமும் சதா குமுறும் கடல் மீது தத்தளிக்கும் படகாகவே அவளை நாம் காண்கிறோம். 

எவ்வித மிகைப்படுத்தலும், அதீதக் கற்பனைகளும் இன்றி கதையையும் கதைமாந்தர்களையும் அவற்றின் இயல்பான போக்கில் சித்தரிக்கும் யதார்த்தவாத இலக்கியத்தில், படிப்போரின் மீது பாதிப்பை நிகழ்த்துவதென்பது அசாதாரணமான காரியம். ஆனால் அதை தனது அஞ்சலை நாவலில் பரிபூர்ணமாக, ஆற்றலுடன் செய்திருக்கிறார் கண்மணி குணசேகரன். இயல்பான கதைமாந்தர்கள், இயல்பான கதையோட்டம், இயல்பான நடை என்றாலும் அஞ்சலை நம்மை வெகுவாகக் கவர்ந்து விடுகிறாள். தன்னைத் தானே தளுக்கி மினுக்கிக் கொண்டு திரியாமல் தன் சாதாரண நடை உடை பாவனையாலேயே அஞ்சலை நமக்கு மிகவும் பிடித்துப்போகிறாள். வாழ்க்கையை, மனிதர்களை மற்றும் சமூகத்தை அதன் பல்வேறு பரிமாணங்களுடன் புரிந்துகொள்ள அஞ்சலை நமக்கு உதவுகிறாள்.

(மறுபிரசுரம். முதற்பிரசுரம் ஜுன் 18, 2014)

Related Posts Plugin for WordPress, Blogger...