ஜெயமோகனின் 'இந்திரநீலம்'-2: இனி ஒரு போதும் நிகழாத ஓர் அற்புதம்!

சாத்யகியும், திருஷ்டத்யும்னனும் பங்கு கொள்ளும் போர் காட்சிகளும், போருக்குப் பின்னே, பகை, போர் குறித்த உரையாடல்களும் சிறப்பாக அமைந்து, ஓர் உன்னத அனுபவத்தைத் தருகின்றன. “அம்புகள் சிட் சிட் சிட் என்று ஒலியுடன் வந்து தைத்து நின்று சிறகு நடுங்கின” எனும்போது நம் செவியில் அம்புகளின் ஒலியை மட்டுமின்றி நடுங்கும் சிறகின் ஒலியையும் துல்லியமாகக் கேட்கிறோம். ”மாபெரும் எதிரியைப் பெற்றவனே மாவீரனாக முடியும். எனக்கு கிருதவர்மனே எதிரி. ஒருநாள் அவன் என்னை பழிதீர்ப்பான். இனி என் வாழ்க்கையை பொருள்கொள்ளச் செய்வதே அவன் கொண்ட அப்பகைதான்” என்று திருஷ்டத்யும்னன் சொல்லும்போது, குருஷேத்திரக் களத்தை நினைவில் நிறுத்தி, மகாபாரத கதாபாத்திரங்கள் அனைவரும் இங்ஙனம் ஒருவர் மீது ஒருவர் பகைமை கொண்டிருப்பதே அவர்களின் வாழ்க்கையை ஒருவகையில் பொருள்கொண்டதாகச் செய்கிறது என்பதை உணர்கிறோம்.


மனித மனத்தின் புதிர்களையும், சிடுக்குகளையும் அதன் அடியாழம் வரை சென்று ஆராய்ந்து தெளிவு படுத்தும் இந்திரநீலம் வெண்முரசு வரிசையில் இனி ஒரு போதும் நிகழாத ஓர் அற்புதம்!

சத்யபாமாவின் கதைக்கு முற்றிலும் மாறாக விரியும் ருக்மிணியின் கதை கற்பனைச் செறிவுடனும், எழுச்சியுடனும் அமையப்பெற்று வாசிப்பிற்கு இன்பம் சேர்க்கிறது. மலைச்சரிவில் அமைந்துள்ள கௌண்டின்யபுரி நகரத்தின் தோற்றம் ஒரு கனவு நகரமாக நம் முன்னே விரிகிறது. இல்லங்களின் மேல் பூத்திருக்கும் வண்ண மலர்கள், பூத்த மலைச்சரிவென்று அந்நகரத்தைக் காட்டுவது அபாரமான கற்பனை. வாழ்ந்தால் இப்படி ஒரு நகரத்தில் வாழவேண்டும் என்ற அவாவை கௌண்டின்யபுரியின் தோற்றம் ஏற்படுத்துகிறது. வெண்முரசில் வருகின்ற ஒவ்வொரு நகரத்தின் தோற்றமும் ஒன்றுபோல் இல்லை என்பதையும், ஒவ்வொன்றும் அந்தந்த இயற்கையின் தட்பவெப்ப சூழலுக்கேற்ப தனித்துவமிக்கதாக அமைந்துள்ளது என்பதையும் காண்கையில், ஜெயமோகனின் கற்பனை வெளிப்படும் பாங்கு சிலிர்க்க வைக்கிறது.

படகோட்டியான கர்க்கர் ருக்மிணியிடம் வரதா நதியை, அதன் நீர்ப்பெருக்கை, மழையை எடுத்தியம்பும் பகுதி ரசிப்பதற்குரியது. வரதாவின் புதுப்பெருக்கில் சிசுபாலன் நிகழ்த்திக் காட்டும் நீர்விளையாட்டு, மிகப்பிரமாதமாக அமைந்து, திரைப்படம் ஒன்றின் சாகஸக் காட்சியைக் கண்ட மனநிலையை ஏற்படுகிறது. அதன் பிறகு நிகழும் உண்டாட்டு நிகழ்ச்சி நாம் கற்பனையிலும் நினைக்க முடியாததாக அமைய, கதையின் ஒவ்வொரு கட்டத்திலும் ஜெயமோகன் அமைக்கும் காட்சிகளின் தேர்வு நம்மை திக்குமுக்காட வைக்கிறது. வளர்ப்புத் தாயான அமிதை ருக்மிணியாக கிருஷ்ணனுக்கு மடல் எழுதுவதாக அமைந்த காட்சியை என்னவென்று சொல்ல? திரும்பத் திரும்ப பயன்படுத்திய வார்த்தைகளைக் கொண்டே அதைச் சிலாகிப்பது வார்த்தைகளின் போதாமையையே காட்டுகிறது. “சொல்லி அறிவிக்கும் உணர்வல்ல இது. எச்சொல்லிலும் அமராது சிறகடித்து விண்ணில் தவிப்பது” என அமிதை எழுதியதையே சொல்லாக்க வேண்டியுள்ளது! 

சேய்மை அண்மைக் காட்சிகளின் மூலம் நம்மைக் கிறங்க வைத்த ஜெயமோகன், கிருஷ்ணன் ருக்மிணியைக் கவர்ந்து புரவியில் விரைவதை “மெதுவான இயக்கத்தில்” (ஸ்லோமோஷன்) காட்சிப் படுத்துகிறார். கிருஷ்ணனைக் கண்டதும் அவள் உள்ளத்தில் “சாட்சிபாவம்” கூடுகிறது. அது அவள் நெஞ்சில் அந்த கணத்தை துளித்துளியாக உணரச்செய்ய, கடந்து செல்லும் ஒவ்வொரு கணமும் அவளில் துல்லியமாக காட்சியாகிறது. ருக்மிணியின் வளர்ப்புத் தாயான அமிதை கிருஷ்ணனைக் காணும் காட்சியில் நாமே கிருஷ்ணன் முன் நிற்பதாக பாவனை கொள்கிறோம். அந்த இடத்தில் மனம் நிலையற்று அலைகளென ஆர்ப்பரித்து, ஒன்றுடன் ஒன்று முட்டி மோதி நிலையழிந்து தவிக்க, மேற்கொண்டு வாசிக்க இயலாமற்போகிறது.


பாவத்தின் அளவே தண்டனையும், புண்ணியத்தின் அளவே பலனும் இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. ஒரு பாவ-புண்ணிய செயலின் பின்னுள்ள பாவனையே தண்டனையையும் பலனையும் தீர்மானிக்கிறது.

சியமந்தகமணியைக் காணும் திருஷ்டத்யும்னன், அதைப் பற்றி தன்னுடைய எண்ணத்தை சாத்யகியிடம் பகிர்ந்துகொள்ளும் பகுதி முக்கியமானது. ஏனெனில் சியமந்தகமணியைப் பற்றிய முடிச்சை இந்த இடத்திலேயே மிக அற்புதமாக அவிழ்க்கிறார் ஜெயமோகன். திருஷ்டத்யும்னன், “அப்போது எனக்குத் தோன்றியது என்ன என்று இப்போது வகுத்துக் கொண்டிருக்கிறேன். ஒற்றைச் சொல். கல். இது கல் இது கல் என்றே என் சித்தம் உரைத்தது. ஆம், கல் மட்டுமே. பிறிதனைத்தும் நம் அச்சங்களும் விழைவுகளும் படிந்து உருவானவை” என்று சொல்வது சியமந்தகமணியின் உண்மை நிலையை அவன் உணர்ந்துகொண்டதை தெளிவுபடுத்துகிறது.

சாத்யகி சியமந்தகமணியை எடுத்துச் செல்லும்போது, பின்தொடர்ந்து சென்று திருஷ்டத்யும்னன் சாத்யகியைச் சந்திக்கும் காட்சி நெகிழ்ச்சியும் உருக்கமும் கொண்டது. சியமந்தகமணியை ஓர் இரவு கூட வைத்திருக்கும் ஆற்றல் தனக்கில்லை என்றும் சாத்யகி மணியை எடுத்துச் சென்றதை தான் பலமுறை கனவில் நிகழ்த்திவிட்டேன் என்றும் சொல்வது நாம் நம்மை, நம் அகத்தை ஆராய்ந்து பார்த்துக்கொள்ளும் முக்கிய கட்டம். சியமந்தகமணி ஏன் இப்படி மனிதர்களை ஆட்டிவைக்கிறது? ஒவ்வொரு மனிதனிடத்தும் ஆசை, வஞ்சம், பகை, பொறாமை, ஆணவம் போன்றவை உள்ளுறைகின்றன. கண்ணாடி மனிதர்களின் உருவத்தைப் பிரதிபலிக்கிறது எனில் சியமந்தகமணி அவர்களின் உள்ளத்தைப் பிரதிபலிக்கிறது. எனவே அதன் முன் நிற்கும் மானிடன் தன் உள்ளுறையும் ஆசையின் பிரதிபலிப்பால் அதைக் கவர்வதற்கு முயல்கிறான். அதன் மூலம் தான் மேலான நிலையை எய்த முடியும் என்று கனவு காண்கிறான்.

சியமந்தகமணியால் தன் மீது ஏற்பட்ட அபவாதம் நீங்கும்பொருட்டு கிருஷ்ணர் முயல்வதால், வீண் அபவாதம் நீங்குவதற்கான பிராயச்சித்தமாக சியமந்தகமணி கதையை வாசிப்பதுண்டு. யாரோ ஒருவர் இழைக்கும் தவறு கிருஷ்ணனை ஏன் அபவாதத்துக்கு உள்ளாக்கவேண்டும்? ஒவ்வொரு ஜீவாத்மாவின் இயக்கத்திற்கும் பரமாத்மாவே காரணமாதலால், கிருஷ்ணன் ஜீவாத்மாவின் தவறை தன் மீதான அபவாதமாகக் கருதி நீக்க முயற்சிக்கிறான் எனக்கொண்டால் இந்தக் கதையின் முக்கியத்துவம் பிடிபடும். இறுதியில் சாத்யகியைச் சந்திக்கும் கிருஷ்ணன், “இப்புவியில் ஒவ்வொரு உயிரும் தன்னை முழுதறியும் இறையாணையைப் பெற்றே வந்துள்ளது. தன் இருளையும் ஒளியையும் அறிந்து இருளென்றும் ஒளியென்றும் அமைந்திருக்கும் ஒன்றை அணுகுபவன் விடுதலை அடைகிறான்” எனவும், “நீ நானறியாத ஒரு சொல்லையேனும் சொல்ல முடியுமென்று எண்ணுகிறாயா? நான் என ஆகி, நீ நடித்ததையும் நான் அறிவேன்” என்றும் சொல்வது இதையே உறுதிப்படுத்துகிறது.


ஒவ்வொரு மனிதனிடத்தும் ஆசை, வஞ்சம், பகை, பொறாமை, ஆணவம் போன்றவை உள்ளுறைகின்றன. கண்ணாடி மனிதர்களின் உருவத்தைப் பிரதிபலிக்கிறது எனில் சியமந்தகமணி அவர்களின் உள்ளத்தைப் பிரதிபலிக்கிறது.

சததன்வா, கிருதவர்மன் இருவரையும் தண்டிக்கும் கிருஷ்ணன் அக்ரூரையும் சாத்யகியையும் மன்னிப்பது ஏன்? தவறிழைத்த எல்லோரையும் எப்போதும் ஒரே மாதிரியாக தண்டிக்க முடியாது. காரணம் தவறிழைக்க காரணமாயிருந்த செயலை விடவும் அதன் பின்னே உள்ளுறையும் பாவனை முக்கியமானது. அந்த பாவனையே செயலின் தீவிரத்தைத் தீர்மானிக்கிறது. எனவே பாவத்தின் அளவே தண்டனையும், புண்ணியத்தின் அளவே பலனும் இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. ஒரு பாவ-புண்ணிய செயலின் பின்னுள்ள பாவனையே தண்டனையையும் பலனையும் தீர்மானிக்கிறது.

சியமந்தகமணியை எட்டு அரசிகளின் கையில் வைக்கையில் அவை எட்டுவிதமாக ஒளிர்வதும், சாந்தர் அதை வெறும் கூழாங்கல் என்று சொல்வதும், சியமந்தகமணி சேதனமா அல்லது அசேதனமா என்ற கேள்வியை எழுப்புகிறது. அது பொருளல்ல மாறாக அது பார்ப்பவனின் உள்ளம். அவரவர் உள்ளத்தின் தன்மைக்கேற்ப அது பொருள் கொள்கிறது. மனிதர்களின் விழைவுகளையும் ஆசைகளையுமே அது பிரதிபலிக்கிறது. இறுதியில் சியமந்தகமணி வெறும் கல் என கடலில் விழுந்து அதன் ஆழத்தை அடைகையில் உள்ளம் நிம்மதிப் பெருமூச்சு விடுகிறது.

சியமந்தகமணியை மையமாகக் கொண்டு கதாபாத்திரங்களைப் பிணைத்து இந்திரநீலத்தை மிக விஸ்தாரமாக நமது மனவெளியில் பிரகாசிக்கச் செய்திருக்கிறார் ஜெயமோகன். சாதாரணமாக நாமறிந்த சியமந்தகமணி கதையை அதன் உள்ளுறையும் நுட்பங்களோடும், அழகோடும், காவியச்சுவை ததும்ப எடுத்தியம்பும் இந்திரநீலம் வெண்முரசின் சிகரமாக ஜொலிக்கிறது. மனித மனத்தின் புதிர்களையும், சிடுக்குகளையும் அதன் அடியாழம் வரை சென்று ஆராய்ந்து தெளிவு படுத்தும் இந்திரநீலம் வெண்முரசு வரிசையில் இனி ஒரு போதும்  நிகழாத ஓர் அற்புதம்!

(முற்றும்).

Related Posts Plugin for WordPress, Blogger...