ஜெயமோகனின் 'இந்திரநீலம்'-1: பெருங்கனவும் பேரின்பமும்!

வெண்முகில் நகரத்தில் சாத்யகியுடன் பூரிசிரவஸை இணைத்து கதையை நடத்திய ஜெயமோகன், இதில் சாத்யகியோடு திருஷ்டத்துய்ம்னனைச் சேர்த்துக் கதையை கொண்டு செல்கிறார். இந்திரநீலத்தின் வார்த்தைகள் அனைத்தும் மரத்தைப் பற்றிப் படரும் கொழுகொம்பென ஒன்றை ஒன்று பற்றிப் படர்ந்து, உச்சிக்கு அழைத்துச் சென்று, இலக்கியமெனும் சிகரத்தில் நம்மை நிறுத்துகிறது. வாசிக்க வாசிக்க கதையும் அதன் மாந்தர்களும் நாவலின் பக்கங்களில் எழுந்து, நம்மோடு உறவாடி, கைகோர்த்து உலவுகிறார்கள்.

முனிவரான குணிகர்க்கர் ஏகத்வீபம் எனும் தீவை தனக்குரியதாகக் கண்டடைந்து, “ஒவ்வொரு மானுடனுக்கும் உரிய நிலங்கள் அவனுக்காகக் காத்திருக்கின்றன. அவனை அவை அறிகின்றன” என நாரதரிடம் சொல்வது, ரமண மகரிஷி திருவண்ணாமலை வந்தடைந்ததை நினைவில் நிறுத்துகிறது. ஒவ்வொரு மனிதனையும் எங்கு கொண்டு சேர்க்க வேண்டுமோ அதற்கான ஆயத்தங்களையே இப்பிரபஞ்சம் நிகழ்த்துகிறது. மனிதனின் தனிப்பட்ட முயற்சி என்பது அவனது அகங்காரத்தை அன்றி பிறிதில்லை என்பதையே இது அறிவுறுத்துகிறது. 

குணிகர்க்க முனிவரின் மகள் கர்ணிகையின் தோற்றத்தை ஜெயமோகன் சுட்டும் விதம் அபாரமானது. கற்பனையின் உச்சம் என்று அதைச் சொல்லலாம். “தோளில் தோய்ந்த வெண்பனிக் கூந்தலும் மழைகரைத்த பளிங்குப்பாறை என சுருக்கங்கள் அடர்ந்த முகமும் கனியீன்றபின் மடல்சுருங்கி ஓய்ந்த கதலிவாழை என மேனியும் கொண்டிருந்த அம்முதியவள்” எனும் சொல்லாட்சி நம்முள்ளே அந்த முதிய தோற்றத்தைத் துல்லியமாக துலங்கச் செய்கிறது. “மழைகரைத்த பளிங்குப்பாறை என சுருக்கங்கள்” எனும் போது நம் அகத்தே விரியும் காட்சியை கற்பனை செய்து பாருங்கள்! பளிங்குப்பாறைகளில் மழை நீர் தொடர்ச்சியாக ஓடிஓடி, அது ஏற்படுத்திய வரிவரியான கோடுகள் முகத்தில் அடர்ந்திருந்தால் எப்படியிருக்குமோ அத்தகைய முகம் என அக்காட்சியைக் கற்பனை செய்யும்போதுதான் நான்கைந்து சொற்களை காட்சியாக்க கற்பனையை எத்தனை தூரம் செலுத்த வேண்டும் என்பது புரியும்.

அவ்வாறே, “கனியீன்றபின் மடல்சுருங்கி ஓய்ந்த கதலிவாழை என மேனியும்” என்ற வரிகளை நம் உள்ளத்தே காட்சியாக்க எத்தகைய கற்பனையை விரியச் செய்யவேண்டும்? இங்கே நான் சுட்டிக் காட்டுவது மாதிரிக்குத்தான். ஜெயமோகன் வரிகள் அனைத்துமே, அந்த வரிகளுக்குள் நுழைந்து, சொற்கள் சொற்களாக நம்முடைய அகத்தின் கற்பனையை மீட்டும் போதுதான், கம்பிகளென நீண்டிருக்கும் வரிகளிலிருந்து, இசையென்ற ஒலியைக் கேட்க முடியும். அவ்வாறில்லையெனில் நாம் அபஸ்வரத்தை மட்டுமே செவி கூர முடியும்.


மகாபாரதம் இப்பிரபஞ்ச வெளியில் தீட்டப்பட்ட மானிடனின் பெருங்கனவு எனக்கொண்டால், அதை மீண்டும் மீண்டும் நினைவில் நிறுத்துவது அவனுக்குப் பேரின்பம்! அந்த இன்பத்தை உடல், உள்ளம், ஆன்மா என்ற மூன்றிலும் நிலைபெறச் செய்யும் வெண்முரசு ஓர் அற்புதம்!


திருஷ்டத்யும்னன் சுஃப்ரையை வாளால் வெட்டும்போது, “மூச்சில் முலைகள் மெல்ல ஏறியிறங்கின. முலைக்கண்களின் கருவட்டத்தில் மயிர்ப்புள்ளிகள் சிலிர்த்திருந்தன. விலாவெலும்புகள் வெண்தோலுக்குள் பாலைநில மணலலைகள் போல தெரிந்தன” என்று காட்சிப் படுத்துகிறார். சுஃப்ரையின் விலவெலும்புகள் பாலைநிலத்தின் மணலலைகள்! முலைக்கண்களின் கருவட்டத்தில் சிலிர்க்கும் மயிர்ப்புள்ளிகள்! மிக அற்புதமான அண்மைக் காட்சி! இந்திரநீலத்தின் காட்சிகள் அனைத்தையும் இத்தகைய சேய்மை அண்மைக் காட்சிகளின் ஒருங்கிணைவைக் கொண்டு, ஜெயமோகன் தேர்ந்த ஒளிப்பதிவாளராக படம் பிடித்திருக்கும் விதம், திரைக்காட்சிக்கு நிகரான அனுபவத்தைத் தருகிறது. 

திருஷ்டத்யும்னன் தவிப்பை, நம் உள்ளத்தின் தவிப்பாக உணரச்செய்திருக்கும் விதம் வாசிப்பில் வெகுவாக ஈர்க்கிறது. சுஃப்ரை அவனுடைய உள்ளத்தை எத்தனை தூரம் அலைக்கழிக்கிறாள் என்பதை, அவன் அறையிலிருந்து அவள் வெளியேறுகையில், “அவள் ஆடைகள் உலையும் ஒலியை, திரள்தொடைகள் ஒன்றுடன் ஒன்று உரசிக்கொள்ளும் ஒலியை, கதவு கீல் ஒலிக்கத் திறந்து மூடிய ஒலியைக் கேட்டான். கதவின் விளிம்பு பொருந்தும் ஒலியைக் கேட்டான்” என்பதாக காட்சிப்படுத்தும் வரிகளில் உணர முடியும். நாம் ஒன்றின் மீது மிகவும் ஈடுபாட்டுடன் இருக்கிறோம் என்பதை உணர்த்துவதில் ஒலியே முக்கியமானது. நம் அகம் எதன் மீது அவ்வாறு பைத்தியமாக இருக்கிறதோ அவற்றை ஒலிகளின் வாயிலாகவே நம் மனம் பின்தொடர்கிறது. அதனால்தான் பித்துப் பிடித்தவர்கள் அனைவரும் செவிகளில் ஒலியைக் கேட்கிறார்கள். 

சுஃப்ரையை மீண்டும் அழைக்கும்போது அவள் வர மறத்துவிட்டதையும், அவள் அழுததையும் அறியும் திருஷ்டத்யும்னன், “தசைநார்கள் ஒவ்வொன்றாக முறுக்கிழக்க திருஷ்டத்யும்னன் பீடத்தில் உடல்தளர்ந்து பட்டுச்சால்வைபோல படிந்தான். வெளியே மரங்களில் காற்று ஓடும் ஒலியைக் கேட்டான். இளங்காற்று சாளரம் வழியாக வந்து அவன் வியர்த்த உடலை குளிரச்செய்தது. இரும்பை நாவால் தொட்டதுபோல ஓர் இனிமையை அவன் உடலெங்கும் உணர்ந்தான்” எனும் வரிகளால் அவன் மனம் கொள்ளும் தவிப்பை அவன் உடல் வெளிப்படுத்தும் பாங்கை காட்சியாக்குகிறார் நாவலாசிரியர். இங்ஙனம் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் அகத்தையும், புறத்தையும் மட்டுமின்றி, ஆன்மாவையும் தன் வசப்படுத்தி பிரதிபலிக்கிறது இந்திரநீலம். 

ஜெயமோகன் காட்டும் துவாரகையின் காட்சிகள் மிகப் பிரம்மாண்டமானவை. உண்மையில் துவாரகையை நிறுவ சிற்பிகள் எடுத்துக்கொண்ட முயற்சியை விடவும், நம் முன்னே அந்நகரை தன்னுடைய எழுத்தால் நிறுவிக் காட்டும், ஜெயமோகனின் கற்பனை வளம் அபாரமானது. திருஷ்டத்யும்னன் துவாரகையில் காலடி வைத்தது முதல், சத்யபாமாவின் கதையைச் சூதர்கள் நடிக்கும் காட்சிக்கு முன்புவரையான பகுதிகள் காவியச்சுவையுடன் அமைந்து, கனவு எனும் கட்டற்ற வெளியில், நம்மை திளைக்கச் செய்கின்றன. துவாரகையின் வீதிகளில் திருஷ்டத்துய்ம்னன் காற்றைக் கிழித்துப் புரவியில் விரையும் காட்சியில் நாமும் விரைவதான சிலிர்ப்பு நம்மின் அகத்தே எழுகிறது. 


கால்கள், முழங்கால், இடை, நெஞ்சு, தோள், முகம், விழி என கிருஷ்ணனின் அங்கங்களுக்கு ஒரு தெய்வம் என்பதாக ஜெயமோகன் காட்டுவது ரசிப்பதற்குரியது. ஒவ்வொன்றிலும் சத்யபாமா விளையாட்டு, துணிவு, பெண்மை, பொறாமை, பெருஞ்சினம், நிகர்-பாதி, விழிநீர் என ஒவ்வொன்றாக அளிப்பது உள்ளம் உருக பிரார்த்தனை செய்வதற்குரியது.

திருஷ்டத்யும்னனை, துவாரகையின் வீதியில் பெண்கள் பலர் சூழ்ந்து கேலியும் கிண்டலும் செய்வது சுவாரஸ்யமானது. அப்போது பெண்கள் பலரை அவன் பார்க்கும் வர்ணனைகள் அதைவிட சுவாரஸ்யமானது. பெண்களை வர்ணிக்கத்தான் எத்தனை எத்தனை வார்த்தைகள் உள்ளன! பெண்கள் மீதான ஆண்களின் குறும்பை அநாகரிகமாக கருதும் பலரும், ஆண்கள் மீதான பெண்களின் குறும்பை ரசிக்க நேர்வது வியப்பானது! இப்பகுதியில் நுணுக்கமான புறக்காட்சிகளின் சித்தரிப்புகள் வாயிலாக, காட்சிகளை நம் அகத்தே கொண்டுவருகிறார் நாவலாசிரியர். 

தொடக்கத்தில் சுவாரஸ்யமாகத் தெரியம் சத்யபாமாவின் கதை போகப்போக தொய்வு தருவதாக ஆகிவிடுகிறது. அரசியல் சிக்கலை சத்யபாமா வாயிலாக சொல்ல வைத்திருப்பது அவளை முக்கியமான பாத்திரமாக துலங்கச் செய்கிறது எனினும், சத்யபாமாவின் கதையை இன்னும் கொஞ்சம் சுருங்கச் சொல்லியிருக்கலாம் என்று படுகிறது. கிருஷ்ணனை சத்யபாமா ஏழு அடிகளில் அடைவது பொருள் பொதிந்தது. ஏழு அடிகளை ஏழுபிறவிகள் என்றும் கொள்ளலாம். ஏழு அடிகளை நம் உடலில் உள்ள ஏழு சக்கரங்கள் என்றும் கொள்ளலாம். மூலாதாரத்தில் இருக்கும் சக்தி, ஸ்வாதிஷ்டானம், மணிபூரகம், அனாஹதம், விஷுத்தி, ஆக்னா, ஆகிய சக்கரங்களைக் கடந்து இறுதியில் சகஸ்ராரம் எனும் சிரஸை அடையும் போதே ஞானம் சித்திக்கிறது. அப்படி ஞானம் சித்திக்கும்போதே நாம் இறைவனை அடைகிறோம். அவ்வாறே சத்யபாமா கிருஷ்ணனை அடைகிறாள். 

கால்கள், முழங்கால், இடை, நெஞ்சு, தோள், முகம், விழி என கிருஷ்ணனின் அங்கங்களுக்கு ஒரு தெய்வம் என்பதாக ஜெயமோகன் காட்டுவது ரசிப்பதற்குரியது. ஒவ்வொன்றிலும் சத்யபாமா விளையாட்டு, துணிவு, பெண்மை, பொறாமை, பெருஞ்சினம், நிகர்-பாதி, விழிநீர் என ஒவ்வொன்றாக அளிப்பது உள்ளம் உருக பிரார்த்தனை செய்வதற்குரியது. எப்போதும் காலையிளமழையை கேட்டு கண்விழிக்கும் பாமா, மழையைக் காணும் காட்சியின் வர்ணனை, நம் உள்ளம் உடல் இரண்டையும் சிலிர்க்க வைப்பது. பட்டுநூல்காடு என நின்றிருந்த காலைமழை, கட்டடங்களின் பளிங்குகளில் வழிந்து உருகச்செய்து, கருங்கற்பாளங்களை நனைத்து கருகவைத்து, மரக்கிளைகள் வழிய, இலைநுனிகள் சொட்ட, அத்தனை அமைதியான மழை. இக்காட்சியை ஒலியற்ற திரைக்காட்சியென மனதில் கற்பனையை விரிக்கும்போதே அந்த மழையின் அமைதியை நாம் உள்வாங்க முடியும். 

சியமந்தகமணியை பெண்செல்வமாக கேட்டதால், பாமாவை கிருஷ்ணனுக்கு மணமுடிக்காமல், மகதத்தை எதிர்நோக்கி சத்ராஜித் காத்திருக்கும் காட்சிகளின் சித்தரிப்பில் மக்களின் மன இயல்புகளை மிகத் துல்லியமாக காட்சிப்படுத்தியுள்ளார் ஜெயமோகன். மக்களின் எண்ணங்கள், சிந்தனைகள் எவ்வாறு கருக்கொண்டு, உருக்கொண்டு அலைந்து திரிகின்றன என்பதை நாம் தெளிவாக அறிந்து உணரும் இப்பகுதி இந்திரநீலத்திற்கு மேலும் வண்ணம் சேர்க்கிறது. ஒரு மனிதன் தவறு செய்யும்போது அல்லது சந்தர்ப்பத்தை புறக்கணிக்கும்போது, அவனுள் நாம் மேலானவர்கள் என்ற எண்ணமே ஓங்கியிருக்கிறது. ஆனால் அதனால் விளையும் விளைவுகள் நம்மை துயரத்தில் ஆழ்த்தும் போதுதான், நாம் உண்மையாக மேலானவர்களா அல்லது ஆணவக்காரர்களா என்பது புரிய வருகிறது. இல்லையேல் ஒரு மணிக்காக சத்ராஜித், கிருஷ்ணனை ஏன் உதறித் தள்ள வேண்டும்? கிருஷ்ணனும் சியமந்தகமணியைக் கொண்டு அனைவரின் ஆணவம், அகங்காரம் இவற்றை அன்றோ சோதிக்கிறான்? 


மிக அற்புதமான அண்மைக் காட்சி! இந்திரநீலத்தின் காட்சிகள் அனைத்தையும் இத்தகைய சேய்மை அண்மைக் காட்சிகளின் ஒருங்கிணைவைக் கொண்டு, ஜெயமோகன் தேர்ந்த ஒளிப்பதிவாளராக படம் பிடித்திருக்கும் விதம், திரைக்காட்சிக்கு நிகரான அனுபவத்தைத் தருகிறது.

பிரசேனருக்கு, சியமந்தகமணியை அபகரிக்கும் எண்ணம் இருந்ததை சத்ராஜின் உணர்ந்ததைச் சுட்டும் கிருஷ்ணன், “தந்தையிலும் மைந்தர்மேல் வஞ்சம் என ஒன்று உறைகிறது எனில் தமையனிடம் இருக்காதா?” என்பது சாதாரணமாகத் தெரியினும், “இருளை அறிய யோகியரே துணிவுள்ளவர். இருளில் மின்னும் ஒளியை மட்டுமே காண்க” என்று கிருஷ்ணன் அறிவுரை சொல்வது சாதாரண மனிதனுக்கான அசாதாரணமான வார்த்தைகள்! மேலும், “செல்வமெனும் தெய்வம் தனக்குரியவர்களை தேடிச்சென்று தொட்டு எடுத்துக்கொள்ளும் விந்தையை எண்ணி எண்ணி வியக்கலாம். அதிலுள்ளது இப்புடவியை நடத்தும் முதன்மைப்பெருநெறி” என்று கிருஷ்ணன் உரைப்பது நம்மை வியப்பில் தள்ளுகிறது. மனிதன்தான் செல்வத்தை தேடுகிறான் என நினைக்கிறோம் ஆனால் செல்வம்தான் மனிதனைத் தேடி வருகிறது என்ற உண்மையை கிருஷ்ணன் சொல்கிறான். ஆசை எனும் வித்தை மனிதனிடத்தில் விதைத்து, அதன் மூலம் இந்த உலகை ஆட்டிவைக்கிறான் இறைவன்.

துவாரகையின் கோட்டை உச்சியில் ஏறி சாத்யகியும், திருஷ்டத்யும்னனும் நகரைக் காணும் காட்சி நம்மை உளஎழுச்சி கொள்ளவைக்கிறது. நகரத்தின் காட்சிகளில் தன்னை இழந்து எங்கோ என திருஷ்டத்யும்னன் நின்றிருப்பது, அறம் கதையான 'பெருவலி'யில் இமயத்தின் உச்சியில் நின்ற கோமலின் அனுபவத்தை ஒத்திருக்கிறது. சததன்வா அபகரித்துச் சென்ற சியமந்தகமணியை மீட்க, கிருதவர்மனும் அக்ரூரரும் படைகொண்டு செல்கையில் அக்ரூரைப் பற்றி, “நானறிந்த நாள் முதல் ஒவ்வொரு கணமும் இளையயாதவரின் கண்முன் தன்னை நிறுவிக்கொள்ள முயன்றுகொண்டிருக்கிறார்” என்கிறான் சாத்யகி. மனிதர்கள் எல்லோருமே தங்கள் அகத்தை இறைவன் அறிவான் என்றறியாமலேயே, தங்களை முற்றாக மறைத்துக் கொண்டு, நல்லவனாகத்தானே நடிக்கிறார்கள்?  

மகாபாரதம் இப்பிரபஞ்ச வெளியில் தீட்டப்பட்ட மானிடனின் பெருங்கனவு எனக்கொண்டால், அதை மீண்டும் மீண்டும் நினைவில் நிறுத்துவது அவனுக்குப் பேரின்பம்! அந்த இன்பத்தை உடல், உள்ளம், ஆன்மா என்ற மூன்றிலும் நிலைபெறச் செய்யும் வெண்முரசு ஓர் அற்புதம்!

(தொடரும்…) 

Related Posts Plugin for WordPress, Blogger...