June 8, 2016

ந.சிதம்பர சுப்ரமண்யனின் இதயநாதம்: இதயத்திற்கு இதம்

ந.சிதம்பர சுப்ரமண்யன் அவர்களின் 100-வது ஆண்டு நினைவாக சந்தியா பதிப்பகம் அவரது இதயநாதம் நாவலை வெளியிட்டுள்ளது. கடந்த புத்தகத் திருவிழாவில் நான் கடைசியாக வாங்கிய புத்தகம் அதுவே. எதேச்சையாக கண்ணில் படவே வாங்க முடிந்தது. பல நாட்களாக படிக்கவேண்டும் என்று விரும்பிய புத்தகம். அதைப் பற்றிய எனது விமர்சனம்:

கிட்டுவின் அப்பா சங்கீதம் கற்றுவிட்டு அதை முறையாகப் பயன்படுத்தாமல் சோம்பித் திரிந்து இறந்து போகிறார். தன் குடும்பத்திற்கு பயன்படாத சங்கீதத்தின் மீது கிட்டுவின் அம்மாவிற்கு அசாத்திய கோபம். தன் பிள்ளையும் சங்கீதத்தால் உருப்படாமல் போகக்கூடாது என தன் அண்ணனிடம் படிக்க அனுப்ப நிச்சயிக்கிறாள். எட்டு வயது நிரம்பிய அவனுக்கு படிப்பது என்றாலே வேப்பங்காயாக கசக்கிறது. எனவே கோபக்கார மாமாவிடமிருந்து தப்பிக்க வீட்டைவிட்டு ஓடிப்போகிறான். காலம் அவனை சங்கீத வித்வான் சபேசய்யரிடம் சேர்ப்பிக்கிறது. சபேசய்யர் பேரன் மகாதேவனுடன் சேர்ந்து, அங்கே சங்கீதம் பயில்வதோடு அவரது அன்பிற்கும் ஆதரவிற்கும் ஆளாகிறான். ஜனங்களும் அவனின் திறமையை மெச்சி அவனது அபிமானியாகிறார்கள். தீடீரென சபேசய்யர் உடல் நலம் கெட்டு இறந்துவிடுகிறார். இதனால் மனமுடைந்து போகும் கிட்டு, அங்கிருக்க முடியாமல் தன் ஊருக்குச் செல்கிறான். ஆனால் அங்கே அவனது தாயார் இறந்துபோன செய்தி அறிந்து மேலும் மனம் வாடுகிறான். மீண்டும் சுபேசய்யர் வீட்டுக்கே வருகிறான். அவர் மனைவி தன் தங்கை மகள் நீலாவை அவனுக்கு மணமுடித்து வைக்கிறாள்.

தன் சங்கீத் திறமையால் அவன் புகழ் எங்கும் பரவுகிறது. ஒரு சமயம் மிராசுதாரர் வீட்டுக் கல்யாணத்துக்கு பாட ஒப்புக்கொள்கிறான். முன்கோபியான அவர் அவன் சரியான நேரத்துக்கு வராமையால் கோபம் கொண்டு தான் சரியாக பணம் கொடுப்பது போல் அவனும் சரியான நேரத்துக்கு வரவேண்டாமா என்கிறார். இதனால் மனம் காயப்படும் அவன் இனிமேல் பணத்துக்காக கச்சேரி செய்வதில்லை என முடிவெடுக்கிறான். சங்கீத வித்தையை விற்பனைப் பொருளாக ஆக்காமல் தன் மன சந்துஷ்டிக்கும் பிறரை மகிழ்விக்கவுமே பயன்படுத்துகிறான். பொருளின் இன்றியமையாமையை உணராத அவனால் பல்வேறு நெருக்கடிகளுக்கு ஆளாகிறாள் நீலா. இதனால் இருவருக்கும் வாக்குவாதமும் சண்டையும் அனுதினமும் நடக்கிறது. கந்தசாமி பாகவதர் இவர்களின் பிரச்சினையை தீர்க்க முடியாது தவிக்கிறார். உத்தமபாளையம் ஜமீன்தாரிடம் அவனை கொண்டு சேர்த்தால் அவன் பிரச்சினை தீர்ந்தவிடும் என நினைக்கிறார். ஆனால் கிட்டு அதற்கு சம்மதிக்க மறுக்கிறான்.

அவன் வாழ்வை மாற்றும் சம்பவம் ஒரு சமயம் நடக்கிறது. ஒரு நாள் மகாதேவன் கிட்டுவைப் பார்க்க வருகிறான். நீலா தன் கணவன் நாலு காசு சம்பாதிக்க புத்திமதி கூறும்படி சொல்கிறாள். அவனும் கிட்டுவிடம் பணத்தின் முக்கியத்தையும், இந்த அளவு வித்தையிருந்தால் தான் உலகத்தையே ஜெயித்துவிடுவேன் என்பதாகவும் சொல்கிறான். கிட்டுவோ என்னை நான் ஜெயித்தால் போதும் உலகத்தை ஜெயிக்க வேண்டியதில்லை என்கிறான். அன்று நீலாவால் அதிகமும் மனம் புண்படும் கிட்டு என்னசெய்வதென்று தெரியாமல் கால் போன போக்கில் செல்கிறான். அவனை தடுத்து நிறுத்தும் கந்தசாமி பாகவதர் அவனிடம் அகங்காரம் இல்லையென்றால் இந்த சிக்கல் எழாது என்று அறிவுறுத்துகிறார். அது அவனது அறிவுக் கணணை திறந்ததுபோல் இருக்கிறது. வாழ்க்கையின் மீதான தன் பார்வை அன்று மாறிவிட்டதாக உணர்கிறான் கிட்டு. நீலாவுக்கும் அவனுக்குமான உறவில் பெருத்த மாறுதலும் நிகழ்கிறது. அவனது புகழ் மேன்மேலும் வளர்கிறது. கிட்டு கிருஷ்ண பாகவதர் ஆகிறான்.

பாலாம்பாள் என்ற தாசி கிட்டுவிடம் சங்கீதம் கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறாள். அவள் குரல் வளத்திற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இருந்தும் முறைப்படியான சங்கீதம் கற்க வேண்டுமென விரும்புகிறாள். ஆரம்பத்தில் மறுக்கும் கிட்டு, அவளிடமும் சங்கீத ஞானம் இருப்பதை அறிந்து பாடம் சொல்ல சம்மதிக்கிறான். இதனால் ஊரில் இருவரையும் பற்றிய தவறான சேதிகள் பரவுகிறது. நீலாவுக்கு பாலாம்பாள் மீது பிரியமிருந்தாலும் பலர் சொல்வதைக்கேட்டு அவள் மீதான அபிப்ராயம் மாறிக்கொண்டே வருகிறது. கிட்டுவிற்கு அடிக்கடி நெஞ்சு வலியும் வந்து வந்து போகிறது. இதனால் சங்கீதத்தையும் தாண்டி பாலாம்பாளுக்கு கிட்டுவின் மீது நேசம் ஏற்படுகிறது. இந்நிலையில் சங்கீதம் மனிதனின் ஒழுக்கத்தை கேடடையச் செய்கிறது என்பதான ஒரு விவாதம் கிட்டு, கந்தசாமி பாகவதர் மற்றும் அய்யாசமி சாஸ்திரிகளுக்கு இடையே நடக்கிறது. இதன் பிறகு பாலாம்பாளின் மனதை அறியும் கிட்டு அவளிடமிருந்து விலகுகிறான். கந்தசாமி பாகவதர் நடத்தும் பஜனை மடம் சீர் கெட்டு கிடப்பது ஒரு நாள் கிட்டுவிற்கு உறைக்கிறது. அதை சரிசெய்வதற்காக தான் கச்சேரி செய்வதாகவும் அதற்காக பணம் வசூலிக்குமாறும் சொல்கிறான். இதுவரை பணம் வாங்காமல் இருந்த அவன் இப்போது இந்த மடத்தின் பொருட்டு அதைச்செய்வது பாகவதருக்கு மகிழ்ச்சியளிக்கிறது.

ஆனால் ஜலதோஷம் பிடித்து கச்சேரியில் பாடமுடியாமல் போகிறது கிட்டுவிற்கு. அவன் தன் குரல் வளத்தை இழந்துவிட்டதாக அறிகிறான். ஏதேதோ வைத்தியம் செய்தும் சரியாகாமல் போகிறது. இதனால் கிட்டு பித்துப் பிடித்தவன் போலாகிறான். தன் குரலைக் காதால் கேட்கும் நிலை இனி வராது என்று உணர்கிறான். அப்போது முன் போலவே கந்தாசாமி பாகவதர் அவனுக்கு புத்தி சொல்கிறார். நாதம் என்பது வெறும் காதால் கேட்பது மாத்திரமல்ல அதையும் தாண்டியது என்கிறார். இனி மௌனம் மூலமே அவன் நாதத்தை இசைக்கவேண்டும் என்கிறார். அதைக்கேட் கிட்டு விஸ்வரூப தரிசனம் கண்டவன் போல் புல்லரித்துப் போகிறான்.

மோகமுள் போலவே சங்கீதத்தை அடிப்படையாகக் கொண்ட நாவல் என்றாலும் சங்கீதத்தைப் பற்றிய நுட்பங்களை லாவகமாச் சொல்லத் தெரியாமல் இருக்கிறார் நாவலாசிரியர். அவரது நோக்கம் சங்கீதப் பின்னனியில் கதையைச் சொல்வது மட்டுமே. சங்கீதம் பணம் சம்பாதிக்கும் வழி அல்ல என்பதை இந்நாவல் அழுத்தமாகச் சொல்கிறது. சங்கீதம் நம் ஆத்மாவை மேம்படுத்தும் நோக்கம் கொண்டது என்பதைச் சொல்லும் ஆன்மீகமான நாவல் என்றும் சொல்லாம். வாழ்க்கையில் ஏதோ ஒன்றை இழந்த பின்னர் வாழ்க்கை முடிந்து போவதில்லை. அங்கேயிருந்து மேலும் பயணப்பட இறைவன் காட்டும் பாதை அது. அது புரியாமல் நாம் கலங்குவதோ, திகைத்து நின்றுவிடுவதுதோ நம் அறியாமையைக் காட்டுவதாகும் என்பது நாவல் நமக்குக் காட்டும் பாடமாகும். நாவல் சரளமான நடையில் செல்கிறது.

ஒரே நேர்கோட்டில் செல்லும் கதை. வாசக இடைவெளிக்கும், சிந்தனைக்கும் இடம் தராத நாவல். காலத்தின் மாற்றங்கள் நாவலில் திறம்படச் சொல்லப்படவில்லை. எனவே காலத்தின் பரந்த வெளியில் நாம் சஞ்சரித்ததான உணர்வை நாவல் நமக்குக் கொடுக்கவில்லை. இருந்தும் நாவலின் பல பகுதிகள் நம் மனதை நெகிழ வைக்கின்றன. கிட்டுவிற்கும் அவன் மனைவிக்கும் இடையே நடக்கும் சண்டையிலும் சச்சரவிலும் ஆசிரியரின் எழுத்தாற்றல் புலப்படுகிறது. அதுவரை மனித வாழ்க்கையை மண் மீது காட்டிய நாவல் அதன் பிறகு ஆன்மீகமாக பயணிக்கிறது. மற்றபடி இதயநாதம் நம் நெஞ்சில் ஓங்கி ஒலிக்கவில்லை. கலைக்கும் வாழ்க்கைக்குமான போராட்டத்தை சித்தரிக்கும் நாவல் என்ற வகையில் இதயநாதம், நம் இதயத்தை ஈர்க்காவிட்டாலும், இதயத்திற்கு இதம் தரும் நாவல் என்று சொல்லலாம்.

(மறுபிரசுரம். முதற்பிரசுரம் பிப்ரவரி 19, 2013)

Related Posts Plugin for WordPress, Blogger...