June 21, 2016

கிருஷ்ணன் நம்பியின் 'மருமகள் வாக்கு': மறக்க முடியாத கதை

என் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்ட, கிருஷ்ணன் நம்பியின் மருமகள் வாக்கு ஒரு அற்புதமான சிறுகதை. மனித மனத்தின் குரூரத்தை இவ்வளவு மென்மையான மொழியில் இதுவரை யாரும் சொன்னதில்லை. ஒரு காலகட்டத்தில் சமூகத்தில் நிலவிய மாமியார் மருகள் கொடுமையை அழகாக, எளிமையாக, அதேசமயம் மிக அழுத்தமாகக் காட்டியிருக்கிறார் கிருஷ்ணன் நம்பி. மனித மனத்தின் கோணலை, பிறரை இம்சித்துப் பார்க்கும் அவனது ஆதி குணத்தை நம் மனதில் தைக்கும்படி சொல்லியிருக்கிறார். இது வெறும் கதை மட்டுமல்ல, எல்லோர் வாழ்க்கையிலும் அனுதினமும் நடக்கும் நிதர்சனம். உறவு என்ற போர்வையில் பிறர் சுதந்திரத்தைக் கேள்விக் குறியாக்கும் சமூகத்தின் அவலத்தைக் காட்டும் கண்ணாடி. மனிதர்கள் பிற மனிதர்கள் மீது நடத்தும் ஆக்கிரமிப்பை பற்றிய நல்லதொரு சித்தரிப்பு. கிருஷ்ணன் நம்பியின் அனைத்துக் கதைகளின் அடிநாதமாக ஓடுவது “புறக்கணிப்பின் துக்கம்” என்று சொல்கிறார் சுந்தர ராமசாமி. அதற்கு மிகச் சிறந்த உதாரணமாக இருப்பது மருமகள் வாக்கு கதைதான் எனலாம்.

கணவனை இழந்த மீனாட்சி செல்வச்செழிப்பான குடும்பத்தைச் சார்ந்தவள். தாலுக்கா பியூனாக அவர் இறந்தபடியால் அவரது வேலை அவர் மகன் ராமலிங்கத்துக்குக் கிடைக்கிறது. மெலிந்து துரும்பாக இருக்கும் ருக்மணி அவன் மனைவியாகிறாள். ஓயாமல் வேலை செய்வாள். அப்படியிருந்தும் மீனாட்சி அவளைக் குற்றமும் குறையும் சொல்லியபடிதான் இருப்பாள். திருமணத்திற்கு முன்னே ருக்மணிக்கு நெஞ்சுவலியும் இறைப்பும் உண்டு. இருந்தும் மறுபேச்சு பேசாமல் எல்லா வேலையையும் செய்வாள். அவளை மருத்துவரிடம் காட்டி வைத்தியம் பார்க்கவேண்டும் என்று யாரும் நினைக்கவில்லை. அப்படி யாராவது கேட்டால், “ஒரு குழந்தை பிறந்தா எல்லாம் சரியாகிவிடும்“ என்று மீனாட்சியம்மாளே டாக்டராகிவிடுவாள்.

மாமியாரும் மருமகளும் சேர்ந்துதான் சாப்பிடுவார்கள். சாப்பிடும் போது, “பெண்டிற்கழகு உண்டி சுருங்குதல்“ என்பதைச் சொல்லுவாள். மாமியார் வாக்கை தட்டாது அப்பாவிப் பெண்ணான அவள் அப்படியே சாப்பிடுவாள். பசியைக் கட்டுப்படுத்த முடியாமல் இரண்டு மூன்று முறை மாமியாருக்குத் தெரியாமல் அள்ளி அள்ளி சாப்பிட்டிருக்கிறாள். ருக்மணி, புகுந்த வீட்டில் காலடி வைத்ததுமே மீனாட்சி தன் கீதா உபதேசத்தை ஓதிவிட்டபடியால் அக்கம் பக்கம் வாயைத் திறக்காமல், தொழுவத்தில் இருக்கும் மாடுதான் துணை என்று அதனுடன்தான் தன் மனக்குறைகளைச் சொல்வாள்.

இந்நிலையில் ஊரில் தேர்தல் வருகிறது. கிளியும் பூனையுமாக இரண்டு சின்னங்கள் தேர்தல் களத்தில் போட்டியிடுகின்றன.

அன்று வாக்கு தினம். மீனாட்சி அம்மாள் வாக்கு பூனைக்குதான். ருக்மணிக்கு பூனையைப் பிடிக்காது. கிளியைப் பிடிக்காதவர்கள் இருக்க முடியுமா? ருக்மணிக்கு கிளிதான் பிடிக்கிறது. எல்லோருடனும் அவளை அனுப்பும்போது மீனாட்சி, “பூனைக்கு ஓட்டு போடு“ என்று சொல்லி அனுப்புகிறாள். அன்றைய தினம் அதிசயமாக வெளியே வந்தது ருக்மணிக்கு சந்தோஷத்தைக் கொடுக்கிறது. பள்ளியில் இருக்கும் அனிச மரம் அவள் பள்ளிப் பருவத்தை நினைவுக்குக் கொண்டுவந்து அவள் மனதை நிறைக்கிறது. மரத்தில் கரீச்சிடும் கிளி அவளுக்கு மிகவும் மகிழ்வைத் தருகிறது. என் ஓட்டு உனக்குத்தான் என்று மனதில் அதனுடன் பேசுகிறாள்.

ருக்மணி தனக்குக் கொடுக்கப்பட்ட வாக்குச்சீட்டை பெற்று வாக்களிக்கும் நேரம். கிளிக்கு நேரே முத்திரையைக் குத்த முயலும் போது தன் கையை யாரோ பிடித்தது போல் திடுக்கிடுகிறாள். அவள் மாமியாரின் கைதான் அவள் கையைப் பற்றியிருக்கிறது. பூனைக்கு நேராக அவள் கையை நகர்த்த வாக்கு பூனைக்கு விழுகிறது.

பரபரவென வெளியே வருகிறாள் ருக்மணி. யாருக்கு ஓட்டு போட்டாய் என்று கேட்கிறார்கள். “எங்க மாமியாருக்கு“ என்றுவிட்டு பொங்கிவந்த கண்ணீரையும் துக்கத்தையும் கட்டுப்படுத்த மிகவும் சிரமப்படுகிறாள்.

கதையைப் படித்து முடித்ததும் ருக்மணி மீது நமக்கு ஏற்படும் துக்கம் ருக்மணியோடு நிற்பதில்லை. ஆயிரக்கணக்கான குடும்பங்களில் இவ்வாறு துன்புறும் எண்ணற்ற ருக்மணிகள் மீதும் கவிகிறது. மனிதர்கள் ஏன் இப்படி இருக்க வேண்டும்? அவர்களை எது அப்படிச் செய்யச் சொல்கிறது? மனித மனங்களில் மனிதத்தன்மை ஏன் முற்றாக உலர்ந்துவிட்டது? போன்ற எண்ணற்ற கேள்விகள் நமக்குள் எழுகிறது. எல்லாவற்றையும் விட முக்கியமான கேள்வி, அவள் ஓட்டளித்தது யாருக்கும் தெரியப்போவதில்லை என்றாலும் அவளை பூனைக்கு வாக்களிக்கச் செய்தது எது என்பதுதான். யானையை அதன் சிறிய வயதில் சங்கிலியில் கட்டிவைப்பார்கள். தப்பிக்க முயற்சிக்கும் யானை சங்கிலியை இழுத்து இழுத்து சோர்ந்து போய் முயற்சியைக் கைவிட்டுவிடும். அது பெரிதாக வளர்ந்த பின்னரும் அந்த சங்கிலியை அறுத்துக்கொண்டு ஓட முயற்சிக்காது. ஏனெனில் சிறுவயதிலிருந்தே அதன் மனதில் அந்த சங்கிலியை அறுக்க முடியாது என்ற எண்ணம் ஆழமாகப் பதிந்துவிடுகிறது. இதே நிலைதான் ருக்மணிக்கும் ஏற்படுகிறது. அடுத்தவர் மனங்களை ஆக்ரமிப்பதைவிடக் கொடுமை உலகத்தில் வேறெதுவும் இருக்கமுடியாது. அதைத் திறம்பட, கதையாக நம் மனதில் பதிவு செய்கிறார் கிருஷ்ணன் நம்பி.

மறக்கமுடியாத எத்தனையோ கதைகளில் மருமகள் வாக்கும் ஒன்று. இந்தக் கதையைக் குறித்து, Feb 7, 2016 தினமணி நாளிதழில், சாருநிவேதிதா இப்படிச் சொல்கிறார்
நான் தொடர்ந்து பல காலமாகச் சொல்லி வரும் ஒரு விஷயம், ஜனரஞ்சிகைப் பத்திரிகைகளின் மூலம் இலக்கியம் வளராது. மலையாளம், வங்காளம் போன்ற சூழல்கள் விதிவிலக்காக இருக்கலாம். ஆனால் தமிழில் அது சாத்தியமில்லை. லா.ச.ரா. ஜனரஞ்சகப் பத்திரிகைகளில் மட்டுமே எழுதினார். அதை ஒரு அதிசயம் என்று மட்டுமே நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். பத்திரிகையாளர் சாவி எழுத்தாளர்களை வளர்த்து விடுவதில் பெரும் ஆர்வம் கொண்டிருந்தவர். சுஜாதா, ஜெயகாந்தன் ஆகியோர் பிரபலமானதில் சாவிக்குப் பெரும் பங்கு உண்டு. ஆனால் அப்பேர்ப்பட்ட சாவியே மேற்கண்ட கதையைப் பிரசுரிக்க முடியவில்லை என்று கிருஷ்ணன் நம்பிக்குத் திருப்பி அனுப்பியிருக்கிறார். பின்வருவது சாவியின் கடிதம்: ‘மருமகள் வாக்கு’ கதை மிகவும் பிரமாதமாக இருக்கிறது. ஆனால், சில காரணங்களினால் என்னால் வெளியிட இயலவில்லை. நீங்கள் விரும்பியபடி, கதையை இத்துடன் திருப்பி அனுப்பியிருக்கிறேன்.’
கிருஷ்ணன் நம்பியின் இந்தக் கதையை செகாவின் வான்கா கதையோடு ஒப்பிட்டுப் பார்த்தால் இக்கதையின் வீச்சும், அது நம் அகத்தே ஏற்படுத்தும் தாக்கத்தையும் உணர முடியும். வான்கா தன் தாத்தாவுக்கு எழுதும் கடிதத்தை,  “கன்ஸ்தந்தீன் மக்காடிச், கிராமம்” என்ற முகவரிக்கு எழுதி தபாலில் சேர்க்கும்போது நம் உள்ளத்தில் எத்தகைய துயரமும், வலியும் ஏற்படுகிறதோ அதற்குச் சற்றும் குறையாத உணர்வை, ருக்மணி தான் ஓட்டளித்தது “எங்க மாமியாருக்கு” என்று சொல்கையில் நாம் அடைகிறோம். ஆனால் இந்தக் கதையை சாவி பிரசுரிக்க முடியாமல் திருப்பி அனுப்பினார் எனும்போது, எத்தனை எத்தனை படைப்பாளிகளை நாம் இப்படிப் புறக்கணித்திருக்கிறோம் என்ற ஆதங்கம்தான் மேலோங்கி நிற்கிறது.

(திருத்திய மறுபிரசுரம். முதற்பிரசுரம் மார்ச் 18, 2013)

Related Posts Plugin for WordPress, Blogger...