June 27, 2016

பிரபஞ்சனின் மூன்று கதைகள்

பிரபஞ்சனின் கதைகள் வாசிப்பிற்கு அலாதியானவை. கச்சித வடிவமும், சொற்சிக்கனமும் கொண்டு தனித்துவம் மிக்கவையாக மிளிர்பவை. மனிதனிடம் இருக்கும் கீழ்மைகளைவிட மேன்மைகளையே அவருடைய கதைகள் அதிகமும் பேசுகின்றன. அதனால்தான் அவர் கதைகளை வாசித்த பிறகு, நம்மைச் சுற்றியிருக்கும் மனிதர்கள் அனைவரும் நல்லவர்களாகவே நம் கண்களுக்குத் தெரிகிறார்கள். எப்போதும் நாம் மேலானவற்றுக்கே திறப்பாக இருக்கவேண்டும் என்பார் ஓஷோ. அதற்கு மிகச்சிறந்த உதாரணங்களாக விளங்குபவை பிரபஞ்சன் கதைகள்தான். பின்வரும் மூன்று கதைகளிலிருந்து பிரபஞ்சனின் இந்த மனப்போக்கை தெளிவாக அறிந்துகொள்ள முடியும். சமீபத்தில் நற்றிணை பதிப்பகம் அவர் சிறுகதைகளை தனித்தனி சிறு தொகுதிகளாக கொண்டு வந்திருக்கின்றன.

1. மரி என்கிற ஆட்டுக்குட்டி

இந்தக் கதையில், பிரபஞ்சனின் சரளமான நடை, வட்டார பேச்சு வழக்கு, அனாவசியமான வார்த்தைகளும் வாக்கியங்களும் இல்லாத சொற்சிக்கனம் ஆகியன நம்மை ரசிக்கவும் வியக்கவும் வைக்கின்றன. கச்சிதமான கதை அமைப்பும் வடிவமும் பிரபஞ்சன் சிறுகதைகளின் சிறப்பம்சம். அதற்கு சிகர உதாரணமாக இருப்பது மரி என்கிற ஆட்டுக்குட்டி கதைதான் என்று சொல்லலாம்.

தலைமை ஆசிரியரின் அணுகுமுறையும், டிசி கொடுப்பதாக அவர் எடுத்த முடிவும், அதற்காக அவர் வைக்கும் காரணங்களும் சாதாரணமாக யாரும் செய்யக்கூடியதுதான். ஆனால் அப்படி முடிவு செய்வதும் தண்டிப்பதும் சரியாக இருக்குமா? ஒரு மாணவன் அல்லது மாணவி மீது எடுக்கும் தண்டணைக்கு இத்தகைய மேம்போக்கான புரிதல்கள் போதுமானவைதாமா? ஆகிய கேள்விகளை இக்கதையின் மூலம் நாம் எதிர்கொள்கிறோம்.

யாரையும் கண்டிப்பதற்கும் தண்டிப்பதற்கும் முன் அரவணைக்க வேண்டும். அப்படி இல்லாமல் எடுத்தவுடன் தண்டிப்பது பலன் தராது என்பதைவிட, அது எதிர்விளைவையே ஏற்படுத்தும் என்ற உளவியல் தன்மையின் பின்னனி நுட்பத்தை மிக அற்புதமாக இந்தக் கதையில் எடுத்துக் காட்டியிருக்கிறார் பிரபஞ்சன். இந்த தன்மை, இந்த புரிதல் யாருக்கு இருக்கிறதோ இல்லையோ, ஆசிரியர்களுக்கு அவசியம் தேவை. எதிர்கால சமுதாயத்தை உருவாக்கும் ஆசிரியர்கள் அப்படி இருக்கும்போதே நல்ல மாணவர்கள் உருவாக முடியும் என்பதை அழுத்தமாக இந்தக் கதை பதிவு செய்கிறது.

ஒரு ஆசிரியன் மாதா, பிதா, குரு என்ற மூன்று நிலையிலும் நின்று செயல்படும்போதுதான் அவன் மாணவர்களுக்குச் சிறந்த ஆசிரியனாக ஆகமுடியும். ஆனால் பிரபஞ்சன் ஆசிரியனை இங்கே தெய்வத்தின் நிலைக்கும் கொண்டுவைக்கிறார். மரியை ஆட்டுக்குட்டியுடன் ஒப்பிட்டு அதற்கு நல்ல மேய்ப்பன் தேவை என்பதைச் சுட்டிக்காட்டுவதன் மூலம் இதை நாம் விளங்கிக்கொள்ள முடியும்.2. அப்பாவின் வேஷ்டி

நம் குழந்தைப் பருவத்து ஆசைகள் அலாதியானவை; அழகானவை. குழந்தைகளுக்கு அவர்களின் அப்பாவே ஆதர்சமாகத் தெரிவதால், அவரைப் போல் உடுத்த வேண்டும், நடக்க வேண்டும் என்ற ஆசையை அவர்கள் வளர்த்துக்கொள்வது இயல்பு. அப்படியான ஒரு குழந்தையின் ஆசையை நுட்பமாகவும் அழகாகவும் அப்பாவின் வேஷ்டி என்ற கதையில் சொல்கிறார் பிரபஞ்சன்.

கதையின் வசீகர அம்சம் பட்டு வேட்டி பற்றிய விவரணைகள்தான். அந்த சிவப்பு நிறமும், பச்சைக் கரையும், கரையில் நீந்தும் அன்னப் பறவைகளும், அது பெட்டியில் பதுங்கியிருக்கும் பவிசும், பெட்டியிலிருந்து வெளிப்படும் பச்சைக் கற்பூர வாசனையும், அதன் வழவழப்பும் நம் மனதில் அழகான சித்திரத்தை தோற்றுவிக்கிறது.  அது வெயிலில் காயும்போது நாமும் அதனுடன் காய்கிறோம். அது தண்ணீரில் துவைபடும்போது நாமும் அதனுடன் சேர்ந்து நனைகிறோம். அதன் இருப்பு நம் மனதில் ஆழமாகவும் அழகாகவும் பதிந்துவிடுகிறது. அலமாரியிலிருந்து அது வெளிப்படும் தருணத்திற்காக நம் மனமும் காத்திருக்கிறது.

நம் வாழ்க்கையில் நாம் ஆசைப்படும் அனைத்தும் அப்போதே உடனடியாக நிறைவேறும் என்று சொல்லமுடியாது. ஆசைக்கும் அது நிறைவேறும் காலத்துக்குமிடையே எப்போதும் இருக்கும் இடைவெளி தவிர்க்க முடியாதது. கால மாற்றம் நம் ஆசைகளை வேறு திசைகளில் திருப்பினாலும்கூட குழந்தைப் பருவத்தில் தோன்றிய ஆசைகள் நமது ஆழ்மனதில் ஆழப்பதிந்துவிடுகின்றன. நாம் வாழ்க்கையை உணரும் தருணங்களாக அப்படிப்பட்ட ஆசைகளே இருக்கின்றன. ஆனால் நாம் வளர வளர லட்சியம் என்றும் கொள்கை என்றும் நம் ஆசைகள் மாற்றமடைந்துவிடுகின்றன. அது நம் சொந்த ஆசைகளாக இல்லாமலும், பிறரைப் பார்த்து நாம் உருவகித்த ஆசைகளாகவுமே இருக்கின்றன.

அந்த பட்டு வேட்டிக்கு ஏதோ நேரப்போகிறது என்பதை நாம் கதையைப் படித்துவரும்போதே ஊகித்துவிடுகிறோம். எனவே கடைசியில் அதன் கிழிசல் நாம் எதிர்பார்த்ததுதான் என்றாலும், அதன் இழப்பு நம் மனதில் வெறுமையை ஏற்படுத்துகிறது. பட்டு வேட்டியின் இழப்பு வெறும் பொருளின் இழப்பு மட்டுமல்ல, அதன் பின்னால் அதை உடுத்துபவரின் நினைவுகளின் இழப்பும் கலந்திருக்கிறது எனும்போது இனம் புரியாத ஒரு மெல்லிய சோகம் மனதின் ஓரத்தில் ஏற்படவே செய்கிறது. குழந்தைப் பருவத்து ஆசை நிறைவேறாமல் போன சோகமும் அதில் கலந்திருக்கிறது.

எளிமையான அழகான கதை. நம் மன உணர்வுகளை கிளர்ந்து எழச்செய்யும் கதை. நம் எல்லோரின் குழந்தைப் பருவத்து ஆசைகளையும் நினைவுபடுத்தும் கதை.

3. கடன் தீர்ந்தது & அபஸ்வரம்

தன்னை தேள் மீண்டும் மீண்டும் கொட்டியபோதும் அதைத் தண்ணீரிலிருந்து மேலே மீண்டும் மீண்டும் எடுத்துவிட்டார் ஒரு துறவி. அதைப் பார்த்துக்கொண்டிருந்தவர் கேட்டார், “தேள் கொட்டுகிறது என்று தெரிந்தும் ஏன் அதை மேலே எடுத்துவிடவேண்டும்?” அதற்கு துறவி சொன்னார், ”கொட்டுவது அதன் இயல்பு எனில் காப்பாற்றுவதும் என் இயல்புதான்” என்று. இந்தக் கதையிலிருந்து நாம் பாடம் பெறுவது எளிது. ஆனால் அதன்படி வாழ்க்கையில் நடக்கமுடியுமா? இல்லை அப்படி வாழ்வதுதான் சாத்தியமாகுமா? என்பதெல்லாம் நாம் சிந்திக்கவேண்டியவை.

இந்த மன்னிப்பு என்பதைப் பிரதானமாக பேசும் கதைகள் தி.ஜானகிராமனின் கடன் தீர்ந்ததும் பிரபஞ்சனின் அபஸ்வரமும். பணம் கொடுத்து ஏமாந்தவன், தன்னை ஏமாற்றியவனை மன்னிக்கிறான் என்பதுதான் இரண்டு கதைகளும் சொல்லும் பாடம்.

அபஸ்வரம் கதையில், கதைசொல்லியாக வரும் இளைஞனின் அப்பா  தன் நண்பன் சுந்தரேசனுக்கு ஒரு லட்சம் ரூபாய் தருகிறார். அவன் அதை இல்லை என்று நீதிமன்ற விசாரணையில் சொல்லிவிடுகிறான். இதனால் இளைஞனுக்கு ஆத்திரம் வருகிறது. அவன் அப்பா அவனை சாந்தப்படுத்துகிறார். சுந்தரேசன் மனைவி அவர் வீட்டுக்கு வந்து அதற்கு பதிலாக தன் நகைகளைக் கொடுக்கிறாள். அதை வாங்க மறுத்துவிடுகிறார் அவர். அவள் அவரிடம், ”உங்களுக்கு இதனால் வருத்தம் இல்லையா?” என்று கேட்கிறாள். அதற்கு அவர், ”வருத்தம் அவன் மீது இல்லை,  தங்கள் இருவருக்கும் இடையேயான இசையெனும் நட்பில் அபஸ்வரம் வந்துவிட்டதே என்பதுதான் வருத்தம்” என்கிறார்.

நாம் கண்கள் கலங்க கதையைப் படித்து முடிக்கிறோம்.

தி.ஜாவின் கதையை பிரபஞ்சனின் கதையின் நீட்சி என்று சொல்லலாம். அவர் இன்னும் ஒருபடி மேலே சென்று மன்னிப்பின் பரப்பை விஸ்தரிக்கிறார். இந்த ஜன்மத்துக்கு மட்டுமல்லாது வரும் ஜன்மங்களுக்குமான மன்னிப்பை அளிக்கிறார். சுந்தர தேசிகரை  நிலம் ஒன்று சகாயவிலையில் வாங்கித்தருவதாக சொல்லி ராமதாஸ் ஏமாற்றிவிடுகிறான். அதனால் இடிந்துபோகிறார் சுந்தர தேசிகர். நீதிமன்றத்தில் வழக்கு நடக்கிறது. இந்நிலையில் ராமதாஸ் உடல் நலம் கெட்டு படுத்த படுக்கையாகிறான். அவனை சென்று சந்திக்கும் தேசிகர், ”சாகும்போது கடனோடு சாகக்கூடாது. அதன் துன்பம் ஜன்மத்துக்கும் தொடர்ந்து வரும். எனவே உன்னிடம் இருப்பதைக்கொடு. அதன் மூலம் உன் கடனை தீர்த்துவிடுகிறேன்” என்கிறார். அவனிடம் இரண்டணாவை வாங்கிக்கொண்டு, ”கடன் தீர்ந்தது” என்று சொல்லி வெளியேறுகிறார்.

இங்கே நம் கண்களையும் தாண்டி நம் இதயம் நெகிழ்ந்துபோகிறது.

மன்னிப்பின் மகத்துவத்தை நாம் உணரும் தருணமாக இந்தக் கதைகள் நம் மனதில் தங்கிவிடுகிறது. மன்னிக்கும் மனோபாவத்துக்கு நம் சமூகத்தில் ஒரு மதிப்பு (வேல்யூ) இருக்கிறது. உண்மையில் அப்படி இல்லாத போதும்கூட, அதை ஒட்டிய கதைகள் சிலாகிக்கப்படுவது தவிர்க்கமுடியாதது.

உண்மையில் மன்னிப்பு என்பது மன்னிப்பா?

நுட்பமாக கவனித்தால் மன்னிப்பும் கூட தண்டணைதான் என்பது புரியும். தண்டிப்பதைவிட  இன்னும் அதிக பாதிப்பை மன்னிப்பு ஏற்படுத்தும். ஒருவனை நாம் மன்னிக்கும்போது அவனது அகங்காரத்தையே நாம் தண்டிக்கிறோம் என்பதுதான் பொருள். எனவே ஆழமாகப் பார்க்கும் போது மன்னிப்பு என்பது உண்மையில் மன்னிப்பதல்ல, மாறாக ஏமாற்றியவனுக்குக் கொடுக்கும் ஒருவகையான தண்டணை என்றுதான் தோன்றும். அவன் வாழும் காலம் வரை அவன் மனசாட்சி, மன்னிப்பின் வடிவாக அவனைத் தொடர்ந்து வந்து தண்டித்தபடியேதான் இருக்கும்.

இக்கதைகள் பேசுவது மன்னிப்பு பற்றியதாக இருப்பினும், அவை முழுக்கமுழுக்க மன்னிப்பு அல்ல என்பதும், அதுவும்கூட ”மன்னிப்பு தண்டணை” தான் என்பதும் விளங்கும்.

(திருத்திய மறுபிரசுரம்)
Related Posts Plugin for WordPress, Blogger...