ஆனி ஃபிராங்க் டைரிக் குறிப்புகள்

நம்பிக்கைதான் வாழ்க்கை. இன்று இல்லாவிட்டாலும் நாளை அல்லது நாளை மறுநாள் நாம் நினைப்பது நிறைவேறிவிடும் என்ற நம்பிக்கைதான் மனித வாழ்க்கையின் ஆதாரம். இந்த நம்பிக்கை நிலையானது அல்ல. மாறுதலுக்கு உட்பட்டது. இன்று இருக்கும் நம்பிக்கை நாளை இருக்கும் என்று சொல்ல முடியாது. ஒவ்வொரு நாளும் இதுவரை வைத்திருந்த நம்பிக்கையிலிருந்து சரிந்து, மீண்டும் புதிய நம்பிக்கை வைத்து எழுவதாகவே வாழ்க்கை அமைந்திருக்கிறது. இது மனிதனின் குறையுமல்ல, நம்பிக்கையின் குறையுமல்ல.

வாழ்வைக்குறித்த இத்தகைய நம்பிக்கைகள் இருப்பது சரிதான். ஆனால் தான் உயிரோடு இருப்போமா இல்லையா என்பது பற்றிய நம்பிக்கையைக் குறித்து என்ன சொல்ல? சாதாரண வாழ்க்கையில் மனிதன் தன் உயிரைப் பற்றிய சந்தேகத்துக்கு ஆட்படுவது இல்லை. ஆனால் ஒரு அசாதாரணமான சூழ்நிலை என்பது முற்றிலும் வேறானது. போர் அத்தகைய ஒரு அசாதாரணமான சூழல். அங்கே நம்பிக்கை என்பது வாழ்வது பற்றியல்ல, உயிருடன் இருப்பது குறித்தே எழமுடியும். நாளை உயிருடன் இருப்போமா இல்லையா என்பது குறித்த பயமாக, நம்பிக்கையாக வாழ்வு மாறிவிடுவது எவ்வளவு பெரிய சோகம்?

ஆனி ஃபிராங்குக்கு அத்தகைய சூழ்நிலை ஏற்படுகிறது. இருந்தும் வாழ்வைக் குறித்த நம்பிக்கைகள் அவளது நாட்குறிப்பில் தொடர்ந்து வருகிறது. வாழும்போது அவள் வைத்திருந்த நம்பிக்கையை விட, அவள் மறைந்த பின்னர், அவளது நம்பிக்கைகள் பொய்த்துப் போய்விட்டதை நாம் அறிவது, அவளுக்குத் தனது நம்பிக்கையில் ஏற்பட்ட சரிவைவிடக் கொடுமையானதாக, வலி நிறைந்ததாக நமக்கு இருக்கிறது. ஆனி ஃபிராங்கின் டைரிக்குறிப்புகள் புத்தகத்தை பற்றி சொல்லும்போது எஸ்.ராமகிருஷ்ணன் இவ்வாறு குறிப்பிடுகிறார்:
இரண்டாம் உலகப்போரின் போது ஹிட்லரின் நாஜிப்படையால் படுகொலை செய்யப்பட்ட யூதர்கள் குறித்து நிறைய ஆவணங்கள், புனைகதைகள், நாடகங்கள் எழுதப்பட்டிருக்கின்றன, அதில் மிக முக்கியமானதாக கருதப்படுவது ஆனி பிராங்கின் நாட்குறிப்புகள்.
பதிமூன்று வயதான யூதச்சிறுமி எழுதிய இந்த நாட்குறிப்புகள் வரலாற்றின் முக்கிய ஆவணங்களில் ஒன்றாகக் கருதப் படுகிறது, ஆனி பிராங்க் டச்சு மொழியில் இந்த டைரியை எழுதியிருக்கிறாள்.
ஜுன் 14 1942ல் டயரி துவங்குகிறது. முதல் 22 நாட்கள் அவர்களின் இயல்பு வாழ்க்கையை விவரிக்கும் இந்த குறிப்பு அதன் பிறகு 1944 வரையான அவர்களின் ஒளிந்துவாழும் காலத்தைப் பதிவு செய்துள்ளது. ஆனி தனது டயரிக்கு கிட்டி என்று பெயர் சூட்டியிருக்கிறார். ஒரு தோழியிடம் நடந்த செய்திகளைச் சொல்வதைப் போலவே நாட்குறிப்புகளை எழுதியிருக்கிறாள்.
காகிதம், மனிதர்களை விடவும் பொறுமையானது. அந்தப் பொறுமையை நான் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஒரு இடத்தில் ஆனி குறிப்பிடுவது கவனிக்கத்தக்கது.
ஆனி ஃபிராங்கின் இந்த டைரிக் குறிப்புகள் உலகம் முழுதும் கொண்டாடப்படும் ஒரு புத்தகமாக இருக்கிறது. எதிர் வெளியீடு இதை தமிழாக்கத்தில் அற்புதமாக வெளியிட்டுள்ளது. கருப்பு-வெள்ளை, வண்ணம் என இரண்டு முறை திரைப்படமாகவும் எடுக்கப்பட்டிருக்கிறது. நான் முக்கியமானதாகக் கருதும், ஒரு நாள் டைரிக் குறிப்பினை பிடிஎஃப் கோப்பாகத் தருகிறேன்.
Related Posts Plugin for WordPress, Blogger...