June 19, 2016

வைக்கம் முகம்மது பஷீரின் இரு முக்கிய நாவல்கள்

பாத்துமாவின் ஆடு

மனித வாழ்வின் ஆதாரத் தேவை பொருள். பொருளின்றி இவ்வுலகில் ஏதுமில்லை. உறவுகளில்  அன்பை வளர்ப்பதற்கு மட்டுமல்ல, துவேஷத்தையும் பகையையும் ஏற்படுத்துவதும் பொருளாலேயே நிகழ்கிறது.  தனி மனிதனை மட்டுமல்ல உலகின் இயக்கமே பொருளை அடிப்படையாக் கொண்டுதான் இயங்குகிறது. அறம் பொருள் இன்பத்தில் பொருளே பிரதானமாகிறது. பொருள் இல்லையெனில் முன்னதும் இல்லை, பின்னதும் இல்லை. நம் வாழ்வின் ஒவ்வொரு நடவடிக்கையும் பொருள் சார்ந்தே இருக்கிறது. மனிதன் தன் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொண்ட பின்னரே, அவன் சமூகத்திற்காக ஏதும் பங்காற்ற முடியும். பொருளின் தேவை வாழ்வின் தேவை.

மனித வாழ்க்கை சுகமானதுதான். மனிதர்களும் நல்லவர்கள்தான். உறவுகள் இனிமையானவைதான். இந்த வாழ்க்கை நமக்கு வாழத்தான் கொடுக்கப்பட்டிருக்கிறது. எல்லாம் சரிதான், பொருள் இருக்கும்வரை. பொருள் இல்லையென்றால் இவையனைத்தும் நேர் எதிரானதாகிவிடுகிறது என்பது நிதர்சனமான உண்மை.

இத்தகைய பொருளின் இன்றியமையாமையை, அலாதியான நடையில் நகைச்சுவை மிளிர பஷீர் இந்நாவலில் சொல்கிறார். காலத்தின் சாரத்தைத் தன்னுள் கிரகித்துக்கொண்ட படைப்பாளி, அதை அப்படியே தன் படைப்புகளில் பிரதிபலிக்கலாம் அல்லது அப்படியே நேர் எதிராகத் திருப்பிப்போட்டுவிடலாம். பஷீர் செய்தது அதைத்தான். நாவலின் தொடக்கம் முதல் முடிவு வரை நகைச்சுவையோடு நாவல் பின்னப்பட்டிருந்தாலும் அதன் பின்புலத்தில் சோகம் எங்குமாக வியாபித்திருப்பதை நாம் உணர முடிகிறது. அடுத்தூர்வது அஃதொப்பதில் எனும் மனோபாவம் கொண்டவர்களாலேயே அது சாத்தியமாக முடியும். பஷீருக்கு அத்தகைய மனோபாவம் இருந்ததினாலேயே நமக்கு இத்தகைய ஒரு படைப்புக் கிடைப்பது சாத்தியமாயிற்று.

அவரே சொன்னதுபோல், "இது ஒரு தமாஷ் கதை. இருந்தாலும், எழுதும்போது நான் மனதிற்குள் வெந்து சாம்பலாகிக் கொண்டிருந்தேன். வேதனையை மறக்க வேண்டும். எழுத வேண்டும், மனதை." அது மட்டுமல்ல, அவர் மனநோயால் பீடிக்கப்பட்டு சிகிச்சைக்காக இருந்த இடத்தில் எழுதப்பட்ட நாவல் இது. இந்நாவல் வெளியான பிறகு அவர் மீது மற்ற எழுத்தார்கள் பொறாமைப் பட்டதையும் இப்படிக் குறிப்பிடுகிறார், "பஷீருக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறது. நமக்கு மட்டும் ஏன் பிடிக்கவில்லை என்று சில இலக்கிய கர்த்தாக்கள் வருத்தப்பட்டுக் கொண்டதாகத் தெரிகிறது."

பஷீர் தானே இதில் கதாபாத்திரமாக வருகிறார். இது உண்மைக் கதை என்றும் சொல்கிறார். அவரது குடும்பம் பெரிய குடும்பம். அதில் போதாக்குறைக்கு அவரது தங்கை பாத்துமாவின் ஆடும் சேர்ந்துகொள்கிறது. அவ்வப்போது ஊர் வரும் பஷீர், ஒரு முறை வரும்போது நடக்கும் நிகழ்ச்சிகளைத் தனக்கேயான நையாண்டியுடன் விவரிக்கிறார். சிறுவயது நிகழ்ச்சிகளை, சிறுவர்களின் மனோபாவங்களைச் சிறப்பாகச் சித்தரித்து நம்மை நம் கடந்து காலத்துக்குள் சஞ்சரிக்கவைக்கிறார். பறவைகள், விலங்குகள் அனைத்தும் நாவலுக்குள் வலம் வருகின்றன. மனிதர்களுக்கு மட்டுமல்ல அவற்றுக்கும் ஆதாரமாக தேவைப்படுவது பொருள்தான் என்று சொல்கிறாறோ என்று தோன்றுகிறது.

நாவலைப் படிக்கும்போதும் படித்தபிறகும் நாம் மனம்விட்டுச் சிரிக்கலாம். அந்த சிரிப்பு நம் மனதை லகுவாக்குகிறது. ஆனால் அடுத்த சில கணங்களில் வாழ்க்கையின் துக்கம் நம் மீது கனமாகக் கவிகிறது. மனம் மீண்டும் பஷீரின் படைப்பைத்தேடி ஓடுகிறது. அதுவே பஷீரின் படைப்புகளை அர்த்தமுள்ளதாக  ஆக்குகிறது.

எங்க உப்பப்பாவுக்கொரு ஆனையிருந்தது

வைக்கம் முகம்மது பஷீரின் எங்க உப்பப்பாவுக்கொரு ஆனையிருந்தது, பழம்பெருமைகள் பேசி சோம்பி திரிவதையும், மதம் என்பதாக நாம் கொண்டிருக்கும் பல்வேறு நம்பிக்கைகளையும் சாடும் நாவல்.  பெண்களை மதம் என்ற பெயரில் மூடத்தனத்தின் மொத்த உருவமாக சமைப்பதை வன்மையாகக் கண்டிக்கிறது இந்நாவல். வாழ்க்கையை இவற்றுக்குள் புதைத்துவிடாமல் மேலேறி வரவேண்டும் என்பதைக் கிண்டலும் கேலியுமாகச் சொல்கிறார் அவர்.

மதம் என்பது நாம் வளரத்தானே ஒழிய, கீழ்மையில் உழன்று நம்மை நாம் சுருக்கிக்கொள்ள அல்ல மாறாக நம்மை நாம் விரிவு செய்துகொள்வதற்காகத்தான். மதத்தில் இருப்பதாகச் சொல்லப்படும் பல நம் பார்வையின் கோளாறால் நமக்கு நாமே கற்பித்துக்கொண்ட கற்பிதங்களன்றி வேறில்லை. நம் பிடிவாதங்களையும் கற்பனைகளையும் மதத்தின் மேல் ஏற்றுவது சரியல்ல. மனித வாழ்க்கையை முடக்க எழுந்தது அல்ல மதம் மாறாக நாம் எழுச்சியுடனும் வீறுகொண்டும் எழுவதற்கான மார்க்கம் அது. வாழக்கைக்கு முன்நோக்கிய பார்வைதான் தேவை பின் நோக்கிய பார்வை நம் கண்களை குருடாக்கிவிடுகிறது. மதம் வேறு மூடநம்பிக்கை வேறு என்பது நம் சிற்றறிவிற்கு எட்டாமலிருக்கும் விந்தையை என்னென்பது? சில அடிப்படை கேள்விகளின் ஞானம் கூட மனிதனுக்கு ஏன் இன்னும் பிறக்கவே இல்லை?. என்று கேட்கும் பஷீர் பார்வையாளனாக எட்ட இருந்து நாவலை நடத்திச்செல்கிறார். கிண்டலும் கேலியும் செய்யும்போது அதைக் கேள்வியாக்கி வாசகனை நோக்கி வீசிவிட்டு தம் பாட்டுக்கு செல்கிறார் அவர்.

காலத்தின் அடுக்குகளும், பாத்திரங்களும் மிகக் குறைவாகக் கொண்டு படைக்கப்பட்ட நாவல் இது. ஆங்காங்கே வாசக இடைவெளிகள் இருந்தாலும் அவைகள் பொருட்படுத்தத் தக்கனவாக இல்லை. ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு சிறுகதைக்கான அமசத்தைக் கொண்டிருக்கிறது. ஒரே நேர்கோட்டில் செல்லும்விதமாக நாவல் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. பொதுவாகவே, அக்காலத்திய நாவல்கள் எல்லாமே அத்தகைய போக்கையே கொண்டிருந்தன என்றுதான் சொல்லவேண்டும்.

குஞ்நுபாத்துமா என்ற பெண் பாத்திரத்தின் மூலம் கதை சொல்லப்படுகிறது. செல்வச் செழிப்புடன் வாழ்ந்த அவர்களின் குடும்பம் வழக்கு ஒன்றின் தீர்ப்பால் திசை திரும்பிவிடுகிறது. சொத்திழந்து, வீடிழந்து ஒரு சிறு வீட்டில் வாழும் அவலம் ஏற்படுகிறது. செல்வச் செழிப்பும் மத நம்பிக்கைகளும் அவர்களை முடமாக்கிவிட்டிருப்பதை பாத்துமா உணர்கிறாள். பக்கத்தில் குடியேறும் ஒரு குடும்பம் காலத்துக்கேற்ற மாற்றங்களை தன்னகத்தே கொண்ட குடும்பமாக இருக்கிறது. அந்த வீட்டு நிஸார் அகமதுவுடன் பாத்துமாவிற்கு காதல் பிறக்கிறது. இருவரும் திருமணம் செய்துகொள்கிறார்கள் என்பதாக கதை முடிகிறது.

மதத்தை மூடநம்பிக்கை எனும் புதைகுழியாக்கி அதில் புதைந்துபோக இருக்கிறோமா இல்லை அதை ஏணியாக்கி விண்னைத் தொடப்போகிறோமா என்பது இந்நாவல் நம்முன் வைக்கும் கேள்வி. மலையாள இலக்கிய உலகில் போற்றத்தக்க ஒரு படைப்பாளியாகத் திகழ்ந்த பஷீரின்  புகழ் பெற்ற நாவலாக இந்நாவல் கொண்டாடப்படுகிறது.

(திருத்திய மறுபிரசுரம்)

Related Posts Plugin for WordPress, Blogger...