நாவல் கலையின் அவசியமும் தமிழில் அதன் நிலையும் -சி.மோகன்

படித்த ஒன்று நமக்குப் பிடித்திருக்கிறது என்றாலே, அது நம்முள் ஏதோ பாதிப்பை, சலனத்தை, மாற்றத்தை ஏற்படுத்திவிட்டது என்பதுதான் பொருள். கதைகள், கவிதைகள், நாவல்கள் மட்டுமல்ல கட்டுரைகளிலும் நமக்குப் பிடித்தவை இருக்கவே செய்யும். அந்த வகையில் என்னுள் பாதிப்பை ஏற்படுத்தி, சலனத்தைத் தந்து, என்னை மாற்றிய கட்டுரை என்றால் சி.மோகனின் “நாவல் கலையின் அவசியமும் தமிழில் அதன் நிலையும்” என்ற கட்டுரையைச் சொல்லலாம்.

1987-ல் புதுயுகம் பிறக்கிறது என்ற இதழில் முதன்முதலாக அக்கட்டுரையை வாசித்த போது பெரியதோர் மனக்கிளர்ச்சியை அடைந்தேன். அவர் சொன்னதின் முழுமையான அர்த்தம் எனக்கு விளங்காதபோதும் என்னவோ முக்கியமாகச் சொல்கிறார் என்று பட்டது. ஆனால் அவர் கருத்தோடு என் மனம் உடன்படவில்லை. இதுவரை நான் முக்கியமாகக் கருதிவந்த பல எழுத்தாளர்களை தூக்கிக் குப்பைத்தொட்டியில் வீசுகிறாரே என்று அவர் மீது கோபம் கிளர்ந்தது. லட்சக்கணக்கான வாசகர்கள் அங்கீகரித்துவிட்ட பின்னர் இவர் என்ன அவர்களைத் தூக்கி எறிவது என்று என் மனம் வாதாடியது.

இருந்தும் கட்டுரையின் தாக்கம் பல நாட்கள் என்னுள் ஊறிக்கிடந்தது. நண்பர்களுடன் விவாதிக்கவும் நேர்ந்தது. அவர் சொல்வதைத்தான் கேட்போமே என்று சுந்தர ராமசாமி அவர்களின் ஜே.ஜே.சில குறிப்புகள் படிக்க ஆரம்பித்தேன். படிக்கப் படிக்க அப்படியே ஸ்தம்பித்து நின்றுவிட்டேன். என் வாசிப்பின் ரசனை மாறியது. நானும் மாறினேன். ஹென்றி மில்லர் தஸ்தயேவ்ஸ்கியின் நாவலான கரமசோவ் சகோதரர்கள் படித்துவிட்டு அந்நாவல் ஏற்படுத்திய பாதிப்பை இவ்வாறு சொல்கிறார்:

“…..தஸ்தயேவ்ஸ்கியை முதன்முதலாகப் படிக்க அமர்ந்த அந்த இரவு என் வாழ்வில் மிக முக்கியமானதொரு நிகழ்வு…..அவனிடம் ஆழமாக மூழ்கிய இந்தத் தருணத்திலிருந்து நான் நிச்சயம் ஒரு வித்தியாசமானவனாக ஆனேன். அசைக்க முடியாதபடியும், மனநிறைவோடும் இந்நிகழ்வு அமைந்தது. விழிப்பதும், அன்றாட காரியங்களுமான தினசரி உலகம் என்னைப் பொருத்தவரை மடிந்துவிட்டது…..நான் நெருப்பினுள் வாழ்பவன் ஆனேன். என்னைப் பொருத்தவரை, மனிதனின் சாதாரண துயரங்கள், போட்டி பொறாமைகள், ஆசாபாசங்கள், அனைத்தும் உதவாக்கரை விஷயங்கள், குப்பைக் கூளங்கள் என்றாகின…”

இதற்குச் சற்றும் குறையாத பாதிப்பை என்னுள் ஜே.ஜே. ஏற்படுத்தியது. இதுவரை நான் படித்து வந்தவை வெறும் குப்பைகள் என்பதை ஜே.ஜே. எனக்கு உணர்த்திற்று. சுந்தர ராமசாமி என் ஆதர்ச எழுத்தாளர் ஆனார். எல்லா கலைகளையும்விட நாவல்கலை மிகச்சிறந்த ஒன்று என்பதை சி.மோகன் கட்டுரை எனக்குப் புரியவைத்தது. நாவலைப் பற்றி சொல்லும்போது அவர் இவ்வாறு சொல்கிறார்:

“….சங்கீதம், நாட்டியம், ஓவியம், கவிதை, சிறுகதை, நாடகம் போன்ற கலைகளின் உன்னதங்களில் ஈடுபாடு கொண்டு பெறும் அனுபவச் சேர்க்கைகளால் தன்னை மேம்படுத்த முடிகிற ஒருவன், அவற்றிலிருந்து பெறுவது மனித அனுபவங்களின் வெவ்வேறு அம்சங்கள். நாவல் தருவது, மனித அனுபவங்களின் முழுமை….இவற்றை ஏற்கும்போது, வாழ்வைப் புரிந்துகொள்ளும் மேலான நிலை அவனுக்குக் கிட்டுகிறது. நாவல் கலையினால் மனிதன அடையக்கூடிய பெரும் பேறு இது. இதனால்தான் நாவல் மனிதனுக்கு உகந்த மிகச்சிறந்த கலை.”

வெறும் பொழுதுபோக்கு, கற்பனைகளில் மூழ்கித் திளைப்பதையே நாவல் என்றிருந்த நம் மனோபாவத்தை மோகன் மாற்றியமைக்கிறார். வாழ்க்கையின் சிறு கீற்றுகூட வெளிப்படாதவைகளைப் படைப்புகளே அல்ல என்று நிராகரிக்கிறா அவர். ஒரு படைப்பின் தரத்தை தீர்மானிப்பது எது என்பது பற்றி சொல்லும்போது,

“….ஆக, அனுபவம், எண்ணம், கருத்து, சிந்தனை என வாழ்வினூடான சகல உறவுகளுமே மனம் கொள்ளும் உறவுகள்தாம். இவற்றில் செழிப்பதுதான் மனம். எனில், மனம் என்பதே ஆளுமை. அனுபவங்களின் பாதிப்பை ஏற்கும் மனம் அவற்றினூடான சிந்தனைகளின் பயணத்தில் கண்டடையும் கருத்துகளால் வாழ்வின் பொது ஓட்டத்தைப் பாதிக்கும் ஆற்றல் கொள்ளும்போது, அந்த மனம் சக்தி வாய்ந்த ஆளுமையாகிறது. இத்தகைய ஆளுமை கலைமனமும் கொண்டிருந்தால் கலை சிறக்கிறது. இப்படிப் பார்க்கும் போதுதான், கலை என்பது அனுபவங்களின் ஆத்மார்த்தப் பரிசீலனையில் உருவான வடிவம் என்றாகிறது. அனுபவங்கள், ஆத்மார்த்தம், பரிசீலனை, வடிவம் என்ற இந்த நான்கின் ஒருங்கிணைந்த லயம்தான் நாவல் கலை. இவை ஒருங்கிணையும் தன்மைக்கேற்பவே படைப்பு தரம் கொள்கிறது.”

என்கிறார். அதைத் தொடர்ந்து இதுவரை தமிழில் வெளியான முக்கியமான, குறிப்பிடத் தகுந்த, நல்ல நாவல்களின் பட்டியல் ஒன்றையும் கொடுத்து, நம்மை வாசிக்கச் சொல்கிறார். இப்படைப்புகளை எதிர்கொள்ளும்போது நமக்கு ஏற்படும் சிக்கல்கள் பற்றியும் பேசுகிறார். இந்த பட்டியலில் உள்ள நாவல்களைத் தேர்ந்தமைக்கான காரணத்தை இப்படிச் சொல்கிறார்:

”…அனுபவம், ஆத்மார்த்தம், பரிசீலனை, வடிவம் என்ற நான்கு அம்சங்களும் வெவ்வேறாக இணைந்தும் பிரிந்தும் உருவாகியிருப்பதன் மூலம் படைப்புலகம் அடைந்திருக்கிற தன்மைக்கேற்ப, அதன் காரணமாகப் பெற்றிருக்கிற தரத்திற்கேற்ப இப்பட்டியல் தயாரிக்கப் பட்டிருக்கிறது. இந்நாவல்களோடு வாசகன் கொள்ளும் உறவு வாழ்வைப் புதிதாய்ப் பார்க்க உதவும். வாசகன் அவற்றை அணுகும், ஏற்றுக்கொள்ளும் தன்மைக்கேற்பவே இது நிகழும்.”

இவரின் இந்த பட்டியல் மூலமே ப.சிங்காரத்தின் படைப்புகளான புயலிலே ஒரு தோணியும், கடலுக்கு அப்பாலும் கவனம் பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று, நான் வாசிப்பின் மேலான தளத்தில் நின்றிருப்பதற்கு அடித்தளமாக இருந்தது சி.மோகனின் “நாவல் கலையின் அவசியமும் தமிழில் அதன் நிலையும்” கட்டுரைதான் என்ற வகையில், அது எனக்கு மிகவும் பிடித்ததாக இருக்கிறது. இந்தக் கட்டுரை என்னுள் ஏற்படுத்திய தாக்கத்தாலும், நாவல் என்ற கலை வடிவத்தைப் பொருத்தவரை இக்கட்டுரையை மிக முக்கியமானதாகக் கருதுவதாலும் அதை அப்படியே பிடிஎஃப் வடிவில் தருகிறேன்.

Novel - c.mohan by Kesavamani TP

Related Posts Plugin for WordPress, Blogger...