June 10, 2016

அசோகமித்திரனின் ஒற்றன்-வாழ்க்கைப் பயணம்

இன்று நாவல் என்றால் எல்லா சாத்தியங்களிலும் எழுதுவது வாடிக்கையாகிவிட்டது. அதன் தளம் பரந்துபட்டதாக மாறியிருக்கிறது. நாவலைக் கட்டமைக்கும் விதத்தில் பல்வேறு உத்திகள் கையாளப்படுகின்றன. ஆனால் 1985-லேயே தன் ஒற்றன் நவாலில் புதுமையைப் புகுத்தியவர் அசோகமித்திரன். அன்றே அவர் அப்படி எழுதியுள்ளார் என்று இன்று பெருமைப்படுகிறோம். ஆனால் அன்று புத்தகம் விற்பனையாகாமல் தேங்கிக்கிடந்தது. அதனால்  பதிப்பாளரைப் பார்க்கவே தான் சங்கடப்பட்டதாக அவரே முன்னுரையில் சொல்கிறார். நாவலின் ஒவ்வொரு அத்தியாமும் முழுமைபெற்ற சிறுகதையாக அமைக்கப்பட்டிருக்கிறது. எல்லா அத்தியாங்களையும் இணைக்கும் மெல்லிய சரடு அசோகமித்திரன்தான். ஏனெனில் நாவலின் மையப் பாத்திரமாக, கதைசொல்லியாக வருவது அவர்தான். அமெரிக்காவின் அயோவா சிடியில்  ஏழு மாத காலம் பல்வேறு நாட்டு எழுத்தாளர்களுடன் தங்கியிருந்தபோது தனக்கு நேர்ந்த அனுவங்களையே நாவலாக்கியிருக்கிறார். பயணக் கட்டுரை, சிறுகதை, நாவல் என்ற முப்பரிமாணங்களைக் கொண்டதாக இந்நூல் மிளிர்கிறது.

விமான நிலையத்திலிருந்து அசோகமித்திரன் கிளம்புவதிலிருந்து நாவல் தொடங்குகிறது. முன்பின் தெரியாத இடத்தில் ஏற்படும் தடுமாற்றங்கள். உணவிற்கான பிரச்சினை. மனதுக்கும் உடலுக்கும் ஏற்படும் ஒவ்வாமை. மொழி கலாச்சாரம் ஆகிவற்றால் சக எழுத்தாளர்களுடன் பேசுவதில் இருக்கும் தடுமாற்றம். அவர்களுடன் உறவு கொள்வதில் எழும் சிக்கல்கள். வந்த நேரத்தில் சொந்த நாட்டில் ஏற்படுகிற பிரச்சினைகளை எதிர்கொள்ளும் தவிப்பு. ஒவ்வொருவருக்கிடையே ஏற்படும் சிநேகம் மற்றும் விரோத பாவம். தட்பவெப்ப மாறுபாட்டால் எழும் அசௌகரியங்கள். இருக்கும் இடத்திலிருந்து மற்றொர் இடத்திற்கு செல்லும்போது ஏற்படும் பிரயாணச் சிக்கல்கள். நம் ஊர் போலவே கடைகளில் நடக்கும் ஏமாற்று வேலைகள். பல சின்னஞ் சிறு விசயங்கள்கூட தெரியாமல் அவதிப்படுவது. போன்ற ஏராளமான அனுபவங்களை சாறுபிழிந்து கொடுத்திருக்கிறார் அசோகமித்திரன். ஒவ்வொரு விசயத்தையும் நுணுக்கமாக அவர் தனக்குள் கிரகித்துக்கொண்டு எழுதிய அவரது எழுத்தாற்றல் அசாதாரணமானது. நாம் முன்பின் அறியாத தேசத்தில் அலைந்ததான ஒரு உணர்வு நமக்கு வருகிறது.
நடைபாதையில் வரிசையாக நின்ற அந்தப் பத்துப் பதினைந்து பேர்களுடைய முகங்களையும் கடைசி முறையாகப் பார்த்தேன். நன்கு பழகிப்போன முகங்கள். எவ்வளவோ உற்சாகமும் நம்பிக்கையும் பகிர்ந்து கொள்ளுதலும் நினைவூட்டும் முகங்கள். எனக்கு இனிமேல் பார்க்கக் கிடைக்காத முகங்கள். நான் இனிமேல் அவர்களை பார்க்க முடியாமல் போகும், என்றென்றுமாக.
நாவலின் இறுதி வரிகள் இவை. நாவல் முழுதும் நகைச்சுவை ததும்ப எழுதிய அசோகமித்திரன்,  இறுதி  வரிகளின் மூலம் மொத்த நாவலின் தொனியையே மாற்றிவிடுகிறார்.  நாம் இருக்கும் இடத்தோடு நம் மனம் பந்தப்பட்டு, அந்த இடத்தின் மீது ஒரு வாஞ்சை ஏற்பட்டுவிடுகிறது. அந்த இடத்தில் இருக்கும் வரை அதன் முக்கியத்துவமும் அருமையும் நமக்குத் தெரிவதில்லை. ஆயிரம் குறைகளும் குற்றங்களும் சொல்லித் திரிகிறோம். ஆனால் அதை இழந்தபின்னர்தான் அதன் மதிப்பும் முக்கியத்துவமும் நமக்குத் தெரியவருகிறது. இது எல்லா சந்திப்பு பிரிவுகளிலும் நிலைத்திருக்கும் ஒரு அம்சம். அந்த பிரிவு சொல்லமுடியாத ஒரு சோகத்தை, வெறுமையை நம் மனதில் நிரப்பிச்செல்கிறது. நாவலின் கடைசிப் பகுதியைப் படிக்கும்போது நாம் அடையும் உணர்வு அத்தகையதே.

மனம் பல்வேறு சிந்தனைகளுக்கு ஆட்பட்டுக் கலங்கி, அது இப்படியாகுமோ இது இப்படியாகுமோ என்ற கவலைகளில் தறிகெட்டு ஓடும்போது அதைப் பிடித்து நிலைநிறுத்தும் லகானாகத்தான் புத்தக வாசிப்பு இருக்கிறது. அந்த வாசிப்பு வாழ்க்கை மீதான நம் புரிதல்களை விஸ்தரிக்கும்போது நம் மனம் அலைபாய்வது மட்டுப்படுகிறது. அதனால் வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்வது எளிதாகிறது. நம் வாழ்க்கைப் பயணத்தை லகுவாக்கும் வி்த்தையை ஒற்றன் நமக்குள் விதைத்துச்செல்கிறது. அசோகமித்திரன் தன் எழுத்துக்களில் எதையும் வெளிப்படையாகச் சொல்வதில்லை. அவர் படைப்பிலேயே எல்லாம் உள்ளது. வாசகன்தான், வாசிப்பினூடாக பயணித்து தனக்கு வேண்டியவற்றைக் கண்டடையவேண்டும். ஜெயமோகன் சொன்னதுபோல், “படைப்புகளை ஒட்டி கற்பனை செய்யவோ சிந்திக்கவோ பயிற்சியில்லாத வாசகர்களுக்கான எழுத்தல்ல இது.” தேர்ந்த வாசகர்களுக்கானது என்பதுதான் உண்மை.

(மறுபிரசுரம். முதற்பிரசுரம் ஜனவரி 29, 2013)

Related Posts Plugin for WordPress, Blogger...