June 3, 2016

விக்தோர் ஹ்யூகோவின் 'மரண தண்டனைக் கைதியின் இறுதி நாள்'

விக்தோர் ஹ்யூகோவின் 'மரண தண்டனைக் கைதியின் இறுதி நாள்' நாவலை இரு தினங்களில் வாசித்து முடித்தேன். படித்துவிட்டேனே தவிர, அதைப் பற்றி எழுதுவதுதான் சவால் மிக்கதாக இருந்தது. ஏனெனில் எதைச்சொல்வது எதை விடுவது எனத் தீர்மானிக்க முடியாதவாறு ஹ்யூகோவின் ஒவ்வொரு வார்த்தையும், வாக்கியங்களும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்ததுதான். கதையை ஹ்யூகோ நடத்திச் செல்லும் பாங்கும், காட்சிகளின் சித்தரிப்பும் மிகப் பிரமாதமாக அமைந்து வாசிப்பின் மேலான அனுபவத்தை நாவல் தருகிறது. காட்சிகளின் தீவிரத்தை படிப்படியாக எடுத்துச்சென்று இறுதியில் அதன் உச்சத்தை நோக்கிச் செலுத்தும் விதமாக ஹ்யூகோ நாவலைக் கட்டமைத்திருக்கும் விதம் அபாரமானது. நாவலின் எந்தவொரு பக்கத்திலிருந்தும் எதையும் விலக்க முடியாதபடி நாவலை வடிவமைத்திருப்பது ஹ்யூகோவின் படைப்பாற்றல் திறத்திற்கும், மேதமைக்கும் சான்று.

மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி ஒருவன், மரணத்தை எதிர்நோக்கி ஐந்து வாரங்களாக காத்திருக்கும் போது, அவனுள் எழும் நம்பிக்கை, அவநம்பிக்கை, ஆசை, அச்சம், ஏக்கம், நெகிழ்ச்சி, குழப்பம் ஆகிய உணர்வுகள் மாறிமாறி எழுவதன் மூலம் அவனுள் எழும் மனப்போராட்டங்களை, வேதனைகளை, கோபதாபங்களை விவரிப்பதாக இந்நாவலைக் கட்டமைத்திருக்கிறார் ஹ்யூகோ. எல்லோரையும் போல இருந்த அவனுடைய வாழ்க்கை புறத்தேயும் அகத்தேயும் முற்றிலும் மாற்றமடைந்து, எல்லா சிந்தனைகளும் மறத்துப்போக, “மரணம்” என்ற ஒற்றைச் சொல் மட்டும் அவனது உள்ளத்தை பூதாகரமாக வியாபித்திருக்கும், ஆட்டுவிக்கும் அவனது மரண அவஸ்தையிலிருந்து தொடங்குகிறது நாவல்.


ஒர் ஒப்பற்ற சோக கீதமாக நம் காதுகளில் ரீங்காரமிடுகிறது. அதன் உச்சமாக, கைதிகள் அனைவரும் வட்டமிட்டு, ஆட்டம் பாட்டம் என்று அந்நிகழ்வை கொண்டாட்டமாக மாற்றும்போது, அந்தத் துயரம் பன்மடங்காக பெருகி நம்மை நிலையழியச் செய்கிறது.


ஆகஸ்ட் மாத அழகிய காலையில் அவனுக்கு தீர்ப்பு வழங்கிய நீதிமன்றக் காட்சிகளை மிக நேர்த்தியாக விவரிக்கிறார் ஹ்யூகோ. அன்றைய தினத்தின் பிரகாசமான வெளிச்சமும், நீதிபதிகளின் புன்னகையும், நடைபாதையில் பூக்காரிகளின் சிரிப்பும், ஜன்னல் ஓரத்தில் கல் இடுக்கில் பூத்திருக்கும் மஞ்சள் நிறப் பூவும், இன்னபிறவும் “இவ்வளவு அழகு நிறைந்த சூழலில் மரண தண்டனை என்ற கொடிய எண்ணம் எப்படி உதிக்க முடியம்?” என்ற கேள்வியை தன்னுள் எழுப்புவதன் மூலமாக விடுதலை குறித்த நம்பிக்கையைப் பெறுகிறான் அவன். ஆனால் அவனது நம்பிக்கைக்கு மாறாக, மரண தண்டனை விதிக்கப்படும்போது, அந்த அழகான மஞ்சள் நிறப் பூவை அவன் பார்ப்பதும், பிரகாசமான சூரியன், தூய்மையான வானம், அழகிய பூ, அனைத்தும் சவச்சீலை நிறத்தில் வெளிறிப்போனதாகவும், மனிதர்கள் அனைவரும் பேய்களாகவும் அவனுக்குக் காட்சியளிப்பதாக ஹ்யூகோ காட்சிப்படுத்தியிருப்பது திரைக்காட்சியின் தேர்ந்த ஒளிப்பதிவுக்கு ஒப்பானது.

விடுதலையும் கிடைக்காமல், கடுங்காவல் தண்டனையும் இல்லாமல் மரண தண்டனை விதிக்கப்பட்டதும், “சிறையின் இருண்ட பகல், கறுத்துப்போன ரொட்டி, தண்ணீர் போன்ற கஞ்சி, அடி, உதை, நான் செய்ததை நினைத்தும், என்னை என்ன செய்வார்கள் என்று நினைத்தும் முடிவில்லாமல் பயந்து நடுங்குவது, இவைதான் கிட்டத்தட்ட என்னிடமிருந்து மரண தண்டனை நிறைவேற்றுபவன் பறிக்கப்போகும் சொத்துகள்” என அவன் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்கிறான். வாழ்க்கையில் எவ்வளவோ ஆசைப்பட்டாலும் ஆசைக்கு மாறாக ஒன்று நடக்கும்போது அதிலுள்ள சாதகங்களை தொகுத்துக்குக் கொள்வதன் மூலம் மனம் ஆறுதல் தேடிக்கொள்கிறது என்பதை மிக அழகாக இப்பகுதியில் நமக்குப் புரியவைக்கிறார் ஹ்யூகோ.


குற்றத்திற்கு தண்டனை மட்டுமே சரியான தீர்வல்ல என்பதை வலியுறுத்தவே இவற்றை காட்சிப்படுத்துகிறார் ஹ்யூகோ என்பதைப் புரிந்துகொண்டால் மட்டுமே இக்காட்சிகளின் தீவிரமும், முக்கியத்துவமும் நமக்குப் புரியும்.


சிறையின் தனிமையில் மனதில் கட்டற்று ஓடும் சிந்தனைகளை எழுதிவைத்தால், தண்டிக்கப்பட்டவனின் சித்தத்தைக் குறித்த ஒருவித 'பிரேதப் பரிசோதனை' யில், தண்டனை வழங்கியவர்களுக்கு மேலான பாடம் அடங்கியிருக்கலாம் என்று யோசிக்கும் அவன் எழுதத் தொடங்குகிறான். வயதான தாய், உடல்நலமற்ற மனைவி இருவரும் சீக்கிரம் இறந்துவிடுவார்கள் என்பதால் அவர்களைப் பற்றிகூட கவலைப்படாத அவன், தன் மகளை நினைத்து, அப்பாவியான அவளுக்கு ஏன் இந்த தண்டனை என, மனம் வலிக்க வருந்துகிறான். அதைத் தொடர்ந்து, முன்னர் இருந்த கைதிகள் சிறையின் சுவர்களில் தங்களுடைய பெயர்களை பதித்திருக்கும் சித்தரிப்பின் காட்சியைக் காட்டுகிறார் ஹ்யூகோ. இப்படி ஒரு காட்சியைச் சித்தரிக்க வேண்டும் என்று முடிவு செய்த ஹ்யூகோவின் எழுத்தாற்றல் வியந்து போற்றுதற்குரியது. ஏனெனில் அதன் மூலமாக, தண்டனைகள் ஒருபோதும் குற்றம் செய்பவர்களை குறைப்பதில்லை என்ற செய்தியை ஆழமாக படிப்போர் மனங்களில் பதியச்செய்கிறார் ஹ்யூகோ. குற்றத்திற்கு தண்டனை மட்டுமே சரியான தீர்வல்ல என்பதை கருத்தை வலியுறுத்தவே இவற்றை காட்சிப்படுத்துகிறார் ஹ்யூகோ என்பதைப் புரிந்துகொண்டால் மட்டுமே இக்காட்சிகளின் தீவிரமும், முக்கியத்துவமும் நமக்குப் புரியும். 

துலோன் நகரத்திற்கு கடுங்காவல் கைதிகளை கொண்டு செல்வதை ஒரு கொடூர சம்பவமாக அவன் விவரிக்குபோது அச்சத்தால் நாம் உறைந்துபோகிறோம். எத்தனை மனிதத் தன்மையற்ற செயல், மனிதர்களாலேயே பிற மனிதர்களுக்கு செய்யப்படுகிறது என்பதைக் காண்கையில் நாம் பேச்சழிந்து விடுகிறோம். கைதிகளை நீண்ட சங்கியால் வரிசையாகப் பிணைத்து, கழுத்தில் இரும்புப் பட்டைகளை மாட்டுகிறார்கள். அப்பட்டைகளை மாட்ட கைதிகளின் முதுகில் அழுத்தப்பட்ட பட்டறைக்கல் மீது சுத்தியால் அடிக்கிறார்கள். ”ஒவ்வொரு அடியும் அவர்களின் முகவாயை அதிரச் செய்தது; முன்னிருந்து பின்னுக்குச் சிறிது அசைந்தால்கூட அந்த அடி அவர்களின் கபாலத்தை ஒரு கொட்டையைச் சிதறச் செய்வதுபோல் சிதறச் செய்திருக்கும்” என்பதை வாசிக்கையில் நம் உடல் நடுங்குகிறது; உள்ளம் பதறுகிறது. அப்போது திடீரென பெய்யும் மழையில் கைதிகள் அனைவரும் தெப்பமாக நனைய, குளிர் தாங்காமல் பற்கள் கிட்டிக்க கைதிகள் உறைந்துபோகிறார்கள். அப்போது ஒருவன், “நிகழ்ச்சிநிரலில் எதிர்பார்க்காதது” என்று கத்துவது ஒர் ஒப்பற்ற சோக கீதமாக நம் காதுகளில் ரீங்காரமிடுகிறது. அதன் உச்சமாக, கைதிகள் அனைவரும் வட்டமிட்டு, ஆட்டம் பாட்டம் என்று அந்நிகழ்வை கொண்டாட்டமாக மாற்றும்போது, அந்தத் துயரம் பன்மடங்காக பெருகி நம்மை நிலையழியச் செய்கிறது.


கதையை ஹ்யூகோ நடத்திச் செல்லும் பாங்கும், காட்சிகளின் சித்தரிப்பும் மிகப் பிரமாதமாக அமைந்து வாசிப்பின் மேலான அனுபவத்தை நாவல் தருகிறது. காட்சிகளின் தீவிரத்தை படிப்படியாக எடுத்துச்சென்று இறுதியில் அதன் உச்சத்தை நோக்கிச் செலுத்தும் விதமாக ஹ்யூகோ நாவலைக் கட்டமைத்திருக்கும் விதம் அபாரமானது.


இதுவரையான அவனது மனப்போராட்டங்கள், அவஸ்தைகள், வேதனைகள் கடைசியில் அதன் இறுதிமுடிவை எட்டுவதை இப்படிச் சொல்லலாம்: மூளையின் மூலை முடுக்கெல்லாம் ஓயாத சிந்தனைகளால் முட்டி மோதி, அதன் முடிவற்ற சுழலில் சிக்கித்தவித்து, தப்பிக்கும் சாத்தியங்களை யோசித்துப் பரிதவித்து, இறுதியில் ஓய்ந்துபோய் சாந்தமடைகிறான் அவன். அதுவரை இருந்த நம்பிக்கைகள் பொய்த்துப்போக, “இனி நான் நம்பமாட்டேன்” என்று அமைதியடைகிறான். நம்பிக்கை மட்டுமல்ல அவநம்பிக்கையும் கூட நம்மை சாந்தப்படுத்துகிறது; ஆசுவாசத்தைக் கொடுக்கிறது எனும்போது நம்முடைய மனதில் புதியதோர் திறப்பு நிகழ்கிறது. இந்த உலகில் எல்லாவற்றையும் நம்பும் மனிதர்களைவிட எதிலும் எதற்கும் அவநம்பிக்கை கொள்ளும் மனிதர்கள்தாம் அதிகம். அவர்களுக்கு ஹ்யூகோவின் இந்த வாசகம் ஒரு வரப்பிரசாதம்.

இறுதியில் அந்த இறுதி நாளும் வருகிறது!

கில்லட்டின் என்ற மரண இயந்திரத்தை வடிவமைத்த மருத்துவரை, “அதற்குத் தன் பெயரையே வைத்த அந்தப் பாவி மருத்துவர் இதற்காகவே பிறவி எடுத்தான் போல” எனக் கடிந்துகொள்வதோடு, அந்த இயத்திரத்தின் பயங்கரத்தை நினைத்து நடுங்குகிறான். மேலும் அந்த இயந்திரத்தைக் கற்பனை செய்யும்போது, “அதைப் பற்றித் தெரிந்துகொள்ள எனக்குத் தைரியமில்லை. அது என்னவென்று தெரியாததும், அது எப்படி இயங்குகிறது என்று தெரியாததும் கொடுமை. ஒரு மேடை மேல் உங்களைக் குப்புறப் படுக்க வைப்பார்களாம். அதன் மேல் ஒரு எடை இழுத்துக் கட்டப்பட்டிருக்குமாம். ஆ! என் தலை விழுவதற்கு முன் என் முடி நரைத்துவிடும்!” என்கிறான். மரண தண்டனையின் கொடூரத்தை எள்ளல் தொனிக்க வெளிப்படுத்தும் ஹ்யூகோ, அந்த இயந்திரம் வலியில்லாமல் கொல்லும் என்பதை கிண்டலும் கேலியுமாக பின்வருமாறு காட்சிப்படுத்துகிறார்.
ஒன்றுமில்லை, வலிக்காது, மென்மையாகத்தான் சாவோம், இதுதான் மரணத்தை எளிதாக வழங்கும் முறை என்று சொல்கிறார்கள்.
அப்படியானால் இந்த ஆறு வரா கால அவஸ்தையும் இந்த ஒரு நாள் புலம்பலும் என்ன? வேகமாகவும், மெதுவாகவும் நகரும் இந்தத் தவிர்க்க முடியாத தினத்தின் மனஉளைச்சல்கள் என்ன? மரண மேடையில் போய் முடியும் இந்தச் சித்திரவதை ஏணி எதற்கு?
இதெல்லாம் துயரமில்லையாம்.
சொட்டுச்சொட்டாக ரத்தம் வற்றிப்போவதற்கு, சிந்தனை பின் சிந்தனையாக அறிவு அணைந்துபோவதற்கு இணையான அவஸ்தை உண்டா?
மேலும் வலியில்லை என்று அவர்களுக்கு நிச்சயமாகத் தெரியுமா? யார் அவர்களிடம் சொன்னது? துண்டிக்கப்பட்ட தலை ஒன்று கூடையிலிருந்து எழுந்து கூட்டத்திடம் “எனக்கு வலிக்கவில்லை” என்று சொன்ன கதை உண்டா? 
செத்தவர்கள்தான் யாராவது ஆவியாகத் திரும்பி வந்து நன்றி கூறிவிட்டு, “பிரமாதமான கண்டுபிடிப்பு! இப்படியே தொடருங்கள். இதன் செயல்பாடு நன்றாக இருக்கிறது” என்று சொல்லியிருக்கிறார்களா? 
இல்லை, இல்லை, ஒன்றுமில்லை! ஒரு நிமிடத்திற்குக் குறைவான, ஒரு கணத்திற்குக் குறைவான நேரத்தில் காரியம் முடிந்துவிடும். கனத்த கத்தி விழுந்து சதையைக் கடிக்க, நரம்புகளை அறுக்க, கழுத்து எலும்புகளை உடைக்கும்போது அந்தக் கணத்தை வாழ்பவன் இடத்தில் தங்களைக் கற்பனையாவது செய்துபார்த்திருக்கிறார்களா? அதனால் என்ன! ஒரு அரை வினாடி! வலி மறைந்துபோய்விடும்.. கொடுமை! 
தண்டனையின் கொடுமைகளை ஆரம்பித்திலிருந்தே வெவ்வேறு விதங்களில் காட்சிப்படுத்தும் ஹ்யூகோ, அதன் சிகரமாக இப்பகுதியில், மரண தண்டனையின் எல்லையற்ற கொடூரத்தை, மனிதத் தன்மையற்ற கொலையை எள்ளலும் கேலியுமாக மிகக் கடுமையாகச் சாடுகிறார். இப்பகுதியைப் படிக்கும் எவரும், ஒரு கணமேனும் தங்களை அந்த நிலையில் பொருத்திப் பார்த்தால் மட்டுமே மரண தண்டனையின் இரக்கமற்ற அரக்கத்தனத்தை உணரவும், புரிந்துகொள்ளவும் இயலும். 

மூளையின் மூலை முடுக்கெல்லாம் ஓயாத சிந்தனைகளால் முட்டி மோதி, அதன் முடிவற்ற சுழலில் சிக்கித்தவித்து, தப்பிக்கும் சாத்தியங்களை யோசித்துப் பரிதவித்து, இறுதியில் ஓய்ந்துபோய் சாந்தமடைகிறான் அவன். அதுவரை இருந்த நம்பிக்கைகள் பொய்த்துப்போக, "இனி நான் நம்பமாட்டேன்" என்று அமைதியடைகிறான்.


க்ரேவ் சதுக்கத்தில் அமைந்திருக்கும் மரண மேடைக்கு அழைத்துச் செல்லும் பொருட்டு அவனைத் தயார் செய்கிறார்கள். அவன் மரணத்தைக் காண மக்கள் கூட்டம் திரண்டிருக்கிறது. எதையும் வேடிக்கை பார்க்கும் இந்த மனிதர்களின் மனோபாவத்தை என்னவென்பது? அவனுடைய சட்டையின் கழுத்துப் பட்டையை வெட்டும்போது, கத்தி தவறுதலாக அவன் கழுத்தில் படுகிறது. அந்த அதிர்ச்சியில் அவன் கைகள் உதற, “மன்னிக்கவும், காயப்படுத்திவிட்டேனா?” என்று அந்தப் பணியைச் செய்தவன் கேட்கிறான். ஹ்யூகோவின் இந்த வார்த்தைகள் நம்மை ஒரு கணம் உறையச்செய்கிறது எனில், “மரண தண்டனை நிறைவேற்றுபவர்கள் மென்மையான நபர்கள்” என்று அவன் நினைப்பது பின்னந் தலையில் சம்மட்டி கொண்டு அடிப்பதாக இருக்கிறது. அதிலிருந்து நாம் விடுபடுவதற்குள் “வெளியே கூட்டம் பலமாகக் கத்தியது” என்ற வரியை எழுதுகிறார் ஹ்யூகோ. அந்த வினாடியில், யாரோ நம்முடைய சதையைப் பற்றிப் பிய்ப்பது போல உடலில் ஓர் அதிர்வு உண்டாகிறது.

இறுதியாக நாவல் இவ்வாறு முடிகிறது:
ஓநாய்போல் ஊளையிடும் கொடிய மக்கள்! யாருக்குத் தெரியும் நான் அவர்களிடமிருந்து தப்பிக்க மாட்டேன் என்று? அவர்களிடமிருந்து காப்பாற்றப்பட மாட்டேன் என்று? எனக்குக் கருணை கிடைக்காது என்று? எனக்குக் கருணை கிடைக்காமல் இருக்க வாய்ப்பேயில்லை!
ஐயோ பாவிகள்! படிகள் ஏறும் சத்தம் கேட்பதுபோல் இருக்கிறது.
மணி பிற்பகல் நான்கு.
நாவல் முடிந்த தருணத்தில் நாம் ஸ்தம்பித்து நின்றுவிடுகிறோம். கருணையற்ற பல மனிதர்களின் திட்டமிட்ட கூட்டுக் கொலைதான் மரண தண்டனையோ? என்ற கேள்வி கபாலத்தில் இடியென இறங்கி நம்முடைய மூளையைத் தாக்குகிறது.

சாதாரணமான உலகில் வாழும் நம்மை, ஓர் அசாதாரணமான உலகிற்கு அழைத்துச்சென்று அதன் பயங்கரத்தைக் கண்முன் நிறுத்தி, திகைப்பும், அதிர்ச்சியும் அடையவைத்து, குற்றவாளிகளை கருணையோடும், மனிதாபிமானத்தோடும் நடத்தவேண்டும் என்பதை அழுத்தம் திருத்தமாக, ஆணித்தரமாக உலகிற்குக் காட்டியிருக்கிறார் ஹ்யூகோ. தண்டனை என்பது ஒரு மனிதன் திருந்துவதற்கான வாய்ப்பாக மட்டுமே அல்லாது ஒருபோதும் அது அவன் உயிரைப் பறிக்கும் காட்டுமிராண்டித்தனமான செயலாக இருக்கக்கூடாது என்பதை உளப்பூர்வமாக உணரச்செய்த வகையில் இந்நாவல் முக்கியத்துவம் வாய்ந்ததும், அவசியம் வாசிக்க வேண்டியதுமாகும்.

வள்ளுவர் சொன்னது போல,

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்

என்பதே தண்டனைகளின் குறிக்கோளாக இருக்கவேண்டும் என்பதையே, இந்நாவல் வாயிலாக, ஹ்யூகோ என்ற படைப்பாளி நம்மிடம் கேட்டுக்கொள்கிறார். நெருடல் இல்லாத, தடங்கள் இல்லாத வார்த்தைகளும், சரளமான, நேர்த்தியான வாக்கியங்களும் அமைய, ஹ்யூகோவின் கதை கூறல் முறையையும், படைப்பின் திறத்தையும் நம்மை முழுதும் உணரும்படி செய்திருக்கும் குமரன் வளவன் மொழியாக்கதிற்கு  ஒரு “சபாஷ்” போடலாம்.

Related Posts Plugin for WordPress, Blogger...