May 22, 2016

The Book Thief (2013)


Run time: 131 min, Rated: PG-13
Released: 27 Nov 2013
Director: Brian Percival
Writer: Markus Zusak (novel), Michael Petroni (adaptation)
Actors: Roger Allam, Sophie Nélisse, Heike Makatsch, Julian Lehmann
DVD release: 11 Mar 2014
Box Office: $20.5M, Company: 20th Century Fox

ஏப்ரல் 1938-ம் வருடம் லிசல் எனும் சிறுமியும் அவள் தம்பியும் அவளது தாயுடன் புகைவண்டியில் பயணிக்கிறார்கள். அவளது தாய் ஆபத்தில் இருப்பதால் இருவரையும் ஹேன்ஸ், ரோசா தம்பதிகளிடம் ஓப்படைப்பதற்காக அழைத்துச் செல்கிறாள். போகும் வழியில் லிசலின் தம்பி இறந்துவிடுகிறான். அவனை வழியிலேயே புதைத்துவிட்டு திரும்பும்போது, வெட்டியானிடமிருந்து கீழே விழுந்த புத்தகம் ஒன்றை எடுத்துக்கொள்கிறாள் லிசல். ஆரம்பத்தில் தனது புதிய தாய் தந்தையரை வெறுக்கும் அவள், போகப்போக இருவரின் அன்பையும் புரிந்துகொள்கிறாள். அவளுக்கு எழுதப்படிக்கத் தெரியாது என்பதை உணர்ந்த ஹேன்ஸ், லிசல் வெட்டியானிடம் எடுத்துவந்த புத்தகத்தைக்கொண்டே, அவளுக்குக் கற்றுத் தருகிறார். பள்ளியில் ரூடி என்ற சிறுவன் அவளுக்கு உற்ற தோழனாக அமைகிறான். 

அந்நகரத்தில் ஹிட்லரின் நாசி படையினர் புத்தக எரிப்பு நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்கிறார்கள். அனைவரும் புத்தகங்களைத் தீயிலிட்டு எரிக்கிறார்கள். லிசலுக்கு இதில் வருத்தமாக இருக்கிறது. எல்லோரும் சென்ற பிறகு எரியாமல் மிஞ்சிய புத்தகம் ஒன்றை யாருக்கும் தெரியாமல் எடுத்து வருகிறாள். அதை அந்த நகரத்தின் மேயரின் மனைவி பார்த்துவிடுகிறாள். அதை அறிந்த அவள் தந்தையும் அவள் செய்த காரியத்தை யாரிடமும் சொல்லக்கூடாது என்கிறார். லிசலின் தாயார் தான் துவைத்துத் தரும் துணிகளை மேயரின் வீட்டுக்கு எடுத்துச் செல்லும் வேலையை அவளுக்குத் தருகிறாள். அதை மேயரின் வீட்டுக்கு எடுத்துச் செல்லும் அவள் அவர்களின் வீட்டில் மிகப்பெரிய நூலகம் ஒன்று இருப்பதை அறிகிறாள். அவள் எப்போது வேண்டுமானாலும் வந்து புத்தகங்களைப் படிக்கலாம் என்று மேயரின் மனைவி அவளுக்கு அனுமதி தருகிறாள். இதை அறிந்த மேயரின் கணவர் துணிகளை ரோசாவிடம் சலவைக்குப் போடுவதை நிறுத்திவிடுகிறார். இருந்தும் யாருக்கும் தெரியாமல் ஜன்னல் வழியாகப் புகுந்து புத்தகங்களைத் திருடிப் படிக்கிறாள் லிசல்.


இந்நிலையில் யூதர்களுக்கு எதிரான ஹிட்லரின் அராஜகம் தொடர்கிறது. அவர்களிடமிருந்து தப்பிக்க மேக்ஸ் என்ற இளைஞன் ஹேன்ஸ், ரோசா தம்பதிகளைத் தஞ்சமடைகிறான். அவர்கள் அவனை தங்கள் வீட்டின் நிலவறையில் மறைத்து வைக்கிறாகள். அதைப் பற்றி யாரிடமும் சொல்லக்கூடாது என்று லிசலையும் எச்சரிக்கிறார்கள். நிலவறையில் நிலவும் குளிரால் மேக்ஸின் உடல் நலம் கெடுகிறது. அவன் இறந்துவிடுவான் என்று அனைவரும் அஞ்சுகிறார்கள். லிசல் தான் திருடிக்கொண்டு வரும் புத்தகங்களை மேக்ஸிக்கு வாசித்துக்காட்டுகிறாள். அதைக் கேட்கக்கேட்க அவன் உடல் நிலை மெல்ல மெல்ல குணமடைகிறது. பிறகு அவன் அங்கிருந்து சென்றுவிடுகிறான். மூவருக்கும் அவன் பிரிவு வேதனை தருகிறது.

நாசிப் படையினர் எல்லா ஆண்களையும் போர்முனைக்கு கட்டாயமாகக் கூட்டிச்செல்கிறார்கள். இதனால் ஹேன்ஸிம் போகவேண்டிய நிலைமை ஏற்படுகிறது. இதனால் லிசலும் ரோசாவும் மிகவும் வருந்துகிறார்கள். அதிர்ஷவசமாக தனக்கு ஏற்பட்ட கால் முறிவால் ஹேன்ஸ் சில நாட்களுக்குப் பிறகு வீடு திரும்பிவிடுகிறார்.


இந்நிலையில் போர் தீவிரமடைகிறது. நகரில் குண்டுகள் வீசப்படுகின்றன. அதிலிருந்து தப்பிக்க பதுங்கு அறைகளில் தஞ்சமடைபவர்களை ஆசுவாசப்படுத்த லிசல் கதைகள் சொல்ல ஆரம்பிக்கிறாள். பிறகு அவளே தனது சொந்தக் கதையை மேக்ஸ் கொடுத்த டைரியில் புத்தகத் திருடன் எனும் புத்தகமாக எழுத ஆரம்பிக்கிறாள். ஒரு நாள் அந்நகரில் வீசப்பட்ட குண்டுகள் வீடுகளைத் தரைமட்டமாக்குகிறது. இதில் லிசல் மட்டும் தப்பிக்கிறாள். இறுதியாக அவள் மேயரின் மனைவியிடம் தஞ்சமடைகிறாள். 

இரண்டு வருடங்களுக்குப் பிறகு ஜெர்மனியை அமெரிக்கத் துருப்புகள் கைப்பற்றுகின்றன. ரூடியின் அப்பாவின் தையல் கடையில் லிசல் வேலைசெய்து வருகிறாள். ஒரு நாள் அங்கே மேக்ஸ் வருகிறான். லிசல் அவளவுகடந்த மகிழ்ச்சி அடைகிறாள்.

இந்தக் கதை மரணத்தின் தூதுவன் எனும் யாரோ ஒரு மூன்றாம் மனிதன் சொல்வது போல் தொடங்கி முடிகிறது. லிசல் மேக்ஸை சந்தித்த பிறகான கதையை இந்தக் குரல் தொடர்ந்து சொல்கிறது. தனது கணவன், குழந்தைகள், பேரக்குழந்தைகளுடன் லிசல் தனது 90 வயது வரை வசித்தாள் என்றும் தான் எழுதிய புத்தகத்தின் மூலமாக அவள் எழுத்தாளர் ஆகிறாள் என்பதையும் லிசலின் கடந்த கால புகைப்படங்களையும், புத்தகங்களையும் காட்சிப்படுத்துவதன் மூலமாக தெரியப்படுத்துகிறார் இயக்குனர்.


திரைப்படம் படமாக்கப்பட்ட விதமும், நடித்துள்ளவர்களின் நடிப்பும் அற்புதமாக அமைந்து பார்வையாளர்களுக்கு ஒரு பேரனுபவத்தைத் தருகிறது இந்த புத்தகத் திருடன். ஹிட்லர் என்ற தனி ஒரு மனிதனின் கொள்கைகளும் நம்பிக்கைகளும் நாட்டில் எத்தனை எத்தனை உயிர்களைப் பலிவாங்கியிருக்கிறது என்பதை இந்தப் படம் அற்புதமாகச் சித்தரிக்கிறது. இது ஒரு நாவல். நாவலை இயக்குனர் சிறப்பாக படமாக்கியிருக்கிறார். நுட்பமான பல திரைக்காட்சிகள் நம்மைத் திரைப்படத்தோடு ஒன்ற வைக்கிறது. ஒரு அமைதியான மொழியில் போரின் கோர தாண்டவத்தை, பயங்கரத்தை நம்மை உணரச் செய்திருப்பது இப்படத்தின் பெரும் சிறப்பு.

கலைகளும் இலக்கியங்களும் மனித குலத்திற்குத் தேவையற்றவை எனும் கருத்தைக் கொண்டிருந்த ஹிட்லருக்கு எதிரான கருத்தாக இத்திரைப்படம் அமைந்துள்ளது. புத்தகங்கள்தான் மனிதனை வாழவைக்கின்றன, அவன் துன்பங்களைப் போக்குகின்றன என்பதை இத்திரைப்படம் நமக்கு அறிவுறுத்துகிறது. லிசல் மேயரின் வீட்டில் உள்ள நூலகத்தை வியப்புடன் பார்ப்பதும், அந்தப் புத்தகங்களை கைகளால் வருடிக்கொண்டு செல்வதும் நம்முள் அற்புதமான உணர்வுகளைக் கிளர்ந்து எழச்செய்யும் காட்சிகள். லிசலும் ரூடியும் ஆற்றின் கரையில் நின்று, “நான் ஹிட்லரை வெறுக்கிறேன்” என்று கத்தும் காட்சிகள் இத்திரைப்படத்தின் மொத்த உணர்ச்சியையும் ஒருங்கே திரளச்செய்து நம் மனதை நெகிழவைக்கிறது.


போரைக் குறித்து எத்தனையோ திரைப்படங்கள் வெளியாகியிருக்கின்றன. சமீபத்தில் வெளியான ஒரு நல்ல திரைப்படம் இது. நாம் பார்த்து ரசிக்கவேண்டிய ஒரு படம். மனிதர்களிடம் மனிதத் தன்மை முற்றாக உலர்ந்து வரும் காலகட்டத்தில் இத்தகைய திரைப்படங்கள் வாயிலாகவே மனித மனத்தில் உள்ள ஈரம் உலர்ந்துவிடாமல் காக்க முடியும் என்று தோன்றுகிறது.

(மறுபிரசுரம். முதற்பிரசுரம் ஏப்ரல் 16, 2014)

Related Posts Plugin for WordPress, Blogger...