நவீன திருவிளையாடல்!

“நாட்டு மக்களுக்கு ஓர் நற்செய்தி. நற்றமிழ் இலக்கியம் கற்றவருக்கு ஓர் அறிய வாய்ப்பு. நமது மன்னர் செண்பகப் பாண்டியன் சிறந்த நாவல் எழுதும் எழுத்தாளருக்கு ஒரு கோடி ரூபாய் பரிசளிப்பதாக அறிவித்துள்ளார். எனவே எழுத்தாளர்கள் திரளாக கலந்துகொண்டு பரிசினைப் பெற்றுச் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்” என்று பறை அறிவிப்பவன் பறை அறைந்து தெரிவிக்கிறான். அதைக் கேட்கும் தருமி என்ற எழுத்தாளர் திகைத்து நிற்கிறார். வறுமையில் வாடும் தனக்கு அந்தப் பரிசு மட்டும் கிடைத்தால் என்ற ஆசை எழுகிறது. ஆனால் அதற்கான வழி இல்லாமல் தவிக்கிறார்.

“ஒண்ணா ரெண்டா, கோடியாச்சே! ஒரு கோடியாச்சே!.... இந்த நேரம் பார்த்து கதை எழுத வரல்லே. நா என்ன செய்வேன்? யாரைப் போய் கேட்பேன்?.. சொக்கா...” என்று கூவிக்கொண்டு கோயிலுக்குப் போகிறார். தன்னுடைய இயலாமையை வாய்விட்டுப் புலம்புகிறார்.

”எனக்கில்லே, எனக்கில்லே. வேறெவனோ, வேறெவனோ அடிச்சிக்கிட்டுப் போயிடப் போறான். சொக்கா! அரசன் கொடுக்கற ஒரு கோடியும் எனக்கே கெடைக்கற மாதிரி அருள்புரிய மாட்டாயா?"

அப்போது சொக்கநாதரான கடவுளே மனித வேடம் பூண்டு தருமியிடம் வருகிறார். 

"எழுத்தாளரே!"

"யாருய்யா அது?" 

"அழைத்தது நான் தான்." 

"ஏன் அழைச்சீங்க, யார் நீங்க?" 

"சொற்சுவை, பொருட்சுவை அனைத்தும் கூட்டி, சுந்தரத் தமிழினிலே நடையமைத்து, செந்தமிழ் நாவல் எழுதும் எழுத்தாளன் நான்." 

"தண்டோரா போட்டத நீங்களும் கேட்டாச்சா? என் வயித்தில அடிக்கறதுக்குன்னே வந்திருக்கீங்க. ஓ ஹோ ஹோ." 

"உனக்கு மட்டும் நாவல் கிடைத்து விட்டால் பரிசத்தனையும் கிடைக்குமல்லவா?" 

"ஐயஹோ! அந்த நாவல் மட்டும் எனக்குக் கெடச்சது அடுத்த க்ஷணம் என் கையில ஒரு கோடி ரூபாய்." 

"கவலைப் படாதே. அந்த நாவலை நான் உனக்குத் தருகிறேன்." 

"என்னது? நாவலை நீங்க தர்றீங்களா? உங்க நாவலைக் கொண்டு போய் என் நாவல்னு சொல்லிக்கவா? ஏற்கெனவே சொந்தமா எழுதற நாவலையே கன்னாபின்னானு பேசறாங்க. அப்படி இப்படி இருந்தாலும் எழுத்தாளன்னு ஒத்துகிட்டிருக்காங்க அதையும் கெடுக்கலாம்னு பாக்கறயா? ”

கடவுள் புன்னகைக்கிறார். அதைக் கண்ட தருமிக்கு சந்தேகம் வருகிறது.

”யோவ்! நீ புதுசா எழுதற போலிருக்கு அதை என்னை வச்சு சோதிக்கலாமுன்னு என் தலைலே கட்டப் பாக்கறே." 

"அப்படி என் திறமை மீது உனக்குச் சந்தேகமிருந்தால் என்னைப் பரிட்சித்துப் பாரேன் உனக்குத் திறமை இருந்தால்.." 

"என்னது! என் கிட்ட என் கிட்டயே மோதப் பாக்கறியா? நான் பார்வைக்கு சுமாரா இருப்பேன். ஆனா என்னோட திறமையப் பத்தி உனக்குத் தெரியாது." 

"ம்.. கேள்விகளை நீ கேட்கிறாயா? அல்லது நான் கேட்கட்டுமா?" 

"ஆங்.. நீ கேட்காதே. நானே கேக்கறேன். எனக்குக் கேட்கத்தான் தெரியும்"

பிரிக்க முடியாதது? – எழுத்தும் சர்ச்சையும்.

பிரியக் கூடாதது? – கதையும் தரமும்.

சேர்ந்தே இருப்பது? – கோஷ்டியும் சண்டையும்.

சேராதிருப்பது? – சாஹித்ய அகாதமியும் இலக்கியமும்.

சொல்லக் கூடாதது? – நாவலை எங்கிருந்து உருவினோம் என்ற ரகசியம்.

சொல்லக் கூடியது? – எல்லாமே நான்தான்.

பார்க்கக் கூடாதது? – அவதூறுகளை.

பார்த்து ரசிப்பது? – புகழ்ச்சிகளை.

குரு சிஷ்யன்? –சுந்தர ராமசாமி, ஜெயமோகன்.

சுந்தர ராமசாமி? –இறுதிக் காலத்தில் தனிமை(படுத்த)ப்பட்டவர்.

ஜெயமோகன்? –நவீன வியாசர்.

தாகம் தீர்த்தவர்? –அசோகமித்திரன்.

ப.சிங்காரம்? –தமிழன் தொலைத்த பெயர்.

ஜீரோ டிகிரி? –படித்தால் நூறு டிகிரி.

பாண்டவர்களின் துணைவன்? -எஸ்.ராமகிருஷ்ணன்.

அரிவாள் வெட்டுக்கு? –லா.ச.ரா.

சிவப்பு விளக்கு ஸ்பெஷலிஸ்ட்? –ஜி.நாகராஜன்.

நகுலன்? –ஜிங்ளி... ஜிங்கிடி... ஜிங்ளி...

க.நா.சு? –தனி ஆள் இல்லை.

வண்ணதாசன்? –கல்யாண்ஜிக்கு மேலானவர்.

நாம் யாருடையை சாயை? யாருடைய நிழல்? -மௌனி.

தமிழில் சரித்திரக் கதை இல்லையென்ற வசையை ஒழித்தவர்? –பிரபஞ்சன்.

பூமணி? –அம்மாடி.

காவல் கோட்டம்? –நல்ல தலையணை.

தி.ஜானகிராமன்? –உணர்ச்சிகள்.

ஆசைக்கு? – எழுத்தாளர்.

அறிவுக்கு? – வாசகன்.

“ஐயா... ஆளைவிடு... நீர் எழுத்தாளர். நீர் எழுத்தாளர்....”

“நீர்?”

“இல்லை. நான் எழுத்தாளன் இல்லை. பரிசு என்ன தருகிறார்களோ அதை அப்படியே தங்களிடம் கொடுத்து விடுகிறேன்.”

“இல்லை. எல்லாவற்றையும் நீயே வைத்துக்கொள்.”

“எல்லாவற்றையுமா?... சரி.... பரிசு கிடைத்தால் நான் வாங்கிக்கொள்கிறேன். வேறு ஏதாவது கிடைத்தால்....?”

“என்னிடம் வா. நான் பார்த்துக்கொள்கிறேன்.”

“எங்கெங்க வீங்கி இருக்குதுன்னா?”

“ஹாஹா...”

“தெய்வீகச் சிரிப்பையா தங்களுக்கு. தங்களை மீண்டும் எங்கு பார்க்கலாம்?”

“எங்கும் பார்க்கலாம்.”

“தெருத்தெருவா அலைபவர் போலிருக்கு...”

“ஹாஹா..”

“அதற்கும் சிரிப்புத்தானா?”

“இங்கேதான் இருப்பேன். வெற்றியோடு திரும்பி வா.”

அங்கிருந்து தருமி அரண்மனைக்குச் செல்கிறார். அவர் நாவலைப் படித்துப் பார்த்தவர்கள் நாவல் பிரமாதமாக இருப்பதாகப் பாராட்டுகிறார்கள். மன்னர் அவனுக்குப் பரிசளிக்க முடிவு செய்கிறார். அப்போது நக்கீரர் குறுக்கிட்டு, "மன்னா, சற்றுப் பொறும். எழுத்தாளரே சற்று இப்படி வாரும்" என அழைக்கிறார்.

அதற்கு தருமி, "வர மாட்டேன். பரிசை வாங்கிக்கொண்டு பிறகு வருகிறேன். அதற்குள் என்னய்யா அவசரம்?" எனக் கேட்கிறார்.

"அதில்தான் பிரச்சினை இருக்கிறது. இப்படி வருகிறீரா?"

“என்னையா பிரச்சினை?” பரிசு கிடைப்பது தவறிவிடுமோ என்ற அச்சத்தில் நக்கீரரிடம் செல்கிறார்.

"இந்த நாவலை எழுதியது நீர் தானே?" 

"பின்னே! கோயில்ல யாராவது எழுதிக் கொடுத்து அதையா வாங்கிட்டு வந்திருக்கேன், என்னுடையதுதான். என்னுடையது தான். என்னுடையது தானையா" என்கிறார் தருமி நடுங்கும் குரலில்.

"எழுத்தாளரே! உமது எழுத்தில் பிழை இருக்கிறது."

"இருந்தாலென்ன? எவ்வளவு பிழை இருக்கிறதோ அதற்குத் தகுந்தபடி பரிசைக் குறைத்துக் கொள்ளுங்களேன்."

“இந்த நாவலுக்கு விளக்கத்தைச் சொல்லிப் பிறகு பரிசைப் பெற்றுச் செல்லலாமே?”

“போங்கப்பா! அரசருக்கே விளங்கிவிட்டது. இடையில் நீர் என்ன?”

"எழுத்தாளரே! இச்சபையிலே முறையானதொரு நாவலுக்கு எம்மன்னவன் பரிசளிக்கிறார் என்றால் அதைக் கண்டு சந்தோஷப்படும் முதல் மனிதன் நான்தான், ஆனால் அதே சமயம் க.நா.சுவும் சி.சு.செல்லப்பாவும் கட்டிக் காத்த தமிழ் இலக்கியத்திலே தவறான ஒரு நாவலுக்கு மன்னன் பரிசளிக்கிறார் என்றால் அதைக் கண்டு வருத்தப் படுபவனும் அடியேன்தான்."

"இங்கே எல்லாமே நீர் தானோ? ஆனால் ஒன்று மட்டும் நிச்சயமையா. நாவல் எழுதிப் பேர் வாங்கும் எழுத்தாளர்களும் இருக்கிறார்கள். குற்றம் கண்டுபிடித்தே பேர் வாங்கும் எழுத்தாளர்களும் இருக்கிறார்கள். இதில் நீர் எந்த வகையைச் சார்ந்தவர் என்பதை நீரே முடிவு செய்து கொள்ளும்" என்றுவிட்டு அங்கிருந்து ஓடுகிறார். 

மீண்டும் கோயிலுக்கு வரும் தருமி கையில் கிடைத்தது தவறிப்போயிற்றே என்ற பச்சாதாபத்தில் புலம்புகிறார்.

“எனக்கு வேணும்... ஆசை... ஆசை... நல்லவேளை ஒதக்காம விட்டாங்க... இனிமே நானே சொந்தமா எழுதினாலும் வேற யாரச்சும் எழுதினதான்னு கேட்பாங்களே. அசிங்கமா போச்சே... சொக்கா... அவனைக் கூப்புடக்கூடாது. ஏன் கூப்புடனும்? எதுக்குக் கூப்புடனும்?”

அப்போது கடவுள் அவன் முன் வருகிறார்.

“எழுத்தாளரே பரிசு கிடைத்ததா?

“நல்லவேளை ஒதைக்காம விட்டாங்க. இன்னும் கொஞ்சம் பொருத்திருந்தா அதையும் வாங்கிட்டுத்தான்யா வந்திருப்பேன்.”

“எழுத்தாளரே நடந்ததைச் சொல்லும்?” என்று கோபமாகக் கேட்கிறார் கடவுள்.

“பேசும் போது நல்லா ஏத்த இறக்கமா பேசு. ஆனா எழுதும்போது கோட்டை விட்டுரு.. உன்னோட நாவலைக் குற்றம்னு சொல்லிட்டாங்க.”

“என் நாவலிலா? குற்றமா? யார் சொன்னது?”

“அங்க ஒருத்தன் இருக்கான் உங்க அப்பன். அவன்தான்யா சொன்னான்.”

“புறப்படு என்னோடு” என்று கோபமாக தருமியைக் கூட்டிக்கொண்டு அரண்மனை செல்கிறார் கடவுள்.

“இந்த எழுத்தளார் கொண்டுவந்த நாவலில் குற்றம் சொன்னவன் எவன்?”

“அவன் இவன் என்ற ஏக வசனம் வேண்டாம். அவையடக்கத்துடன் கேட்டால் தக்க பதில் தருவார்கள்” என அரசன் பதில் சொல்கிறார்.

“மன்னரை விட இங்கு மற்றவருக்கு அதிகாரம்...”

“இது அரச சபையன்று. இலக்கியச் சபை. மன்னரைவிட மற்றவருக்கு அதிகாரம் உண்டு” என்கிறார் அரசர்.

அப்போது எழுந்த நக்கீரர், “தவறுள்ள எழுத்தாய் இருந்ததால் பரிசுக்கு அறுகதை இல்லையென்று மறுத்தவன் நான்தான்” என்கிறார்.

“யார் இந்தக் கிழவன்?”

“தமிழ் இலக்கியத்தின் பிதாமகன் நக்கீரர்.”

“ஓ! கீரரா. தமிழ் இலக்கியத்தின் பிதாமகன் என்ற ஆணவத்திலேதான் இந்த எழுத்தாளர் கொண்டுவந்த நாவலிலே குற்றம் சொன்னீரோ?”

“முதலில் இந்த நாவலை எழுதியது யார்?”

“யாம். யாம் எழுதினோம்.”

“எழுதிய நீர் வராமல் இன்னொருவரிடம் கொடுத்தனுப்பியதற்குக் காரணம்?”

“அது நடந்து முடிந்த கதை. தொடங்கிய பிரச்சினைக்கு வாரும்.”

“எழுத்தாளருக்கு முதலில் பொய்யுரை தேவையில்லை. அதைத் தாம் புரிந்துகொள்ள வேண்டும்.”

“புரிந்தது புரியாதது. தெரிந்தது தெரியாதது. புரந்தது புரவாதது. அனைத்தும் நாமறிவோம். அது பற்றி உமது அறிவுரை எமக்குத் தேவையில்லை. எல்லாம் எமக்குத் தெரியும்" எனக் கடவுள் கோபத்தில் கர்ஜிக்கிறார்.

“எல்லாம் தெரிந்துவிட்டால் எழுதும் எழுத்திலே பிழையிருக்காது என்று அர்த்தமா? அது பற்றி நான் குற்றம் கூறக்கூடாதா?”

“என் எழுத்திலா? குற்றமா? கூறும் கூறும். கூறிப் பாரும்.”

“எழுத்தாளர்களே சாந்தமாக விளையாடுங்கள். எழுத்தாளர்களுக்கு சர்ச்சை தேவைதான் ஆனால் அதுவே சண்டையாகி விடக்கூடாது.” என்று அரசர் இடைமறிக்கிறார்.

“சண்டையும் சச்சரவும் எழுத்தாளர்களின் பரம்பரைச் சொத்து. அதை மாற்ற யாராலும் முடியாது. பொறுத்திருந்து பாரும்! நக்கீரரே என் நாவலிலே எங்கு குற்றம் கண்டீர்? பொருட் சுவையிலா இல்லை சொல்லிலா?”

“சொல்லில் குற்றம் இல்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்படலாம். பொருளில்தான் குற்றம் இருக்கிறது.”

“என்ன குற்றம்?”

“எங்கே நீர் எழுதிய நாவலின் சுருக்கத்தைச் சொல்லும்.”

“ஒரு சாதாரண மனிதன் தன் வாழ்க்கையில் படும்பாடுகளை, கஷ்டங்களை எழுதியிருக்கிறேன். அதன் மூலம் இந்த சமூகத்தின் அமைப்பைக் கேள்வியாக்கி இருக்கிறேன்.”

“அதற்காக அவனுடைய சலூன் கணக்கு, மளிகைக் கடை கணக்கு, சமயல் குறிப்புகள், பால் கணக்கு, லாண்டரிக் கணக்கு ஆகியவற்றை எழுதுவது ஒரு நாவலாக ஆக முடியாது.”

“இவையெல்லாம் மனித வாழ்வில் தவிர்க்க முடியாதவை. இதை விட்டுவிட்டு அவன் வாழ்க்கை இல்லை. எனவேதான் அதைப் பட்டியலிட்டு அதற்காகும் செலவு அவன் வருமானத்தை மிஞ்சுகிறது என்பதாகக் காட்டியிருக்கிறேன்.”

“அப்படியானால் இது வெறும் வரவு-செலவு கணக்குதானே தவிர நாவலுமல்ல வாழ்க்கையுமல்ல. நாவல் வாழ்க்கையை ஆராய வேண்டும். வாழ்க்கையின் அடிப்படையை ஆராய வேண்டும். சும்மாவேணும் வரவையும் செலவையும் எழுதி வைப்பது நாவலல்ல.”

“வரவும் செலவும்தான் வாழ்க்கை. பிறப்பிலிருந்து இறப்புவரை எல்லாவற்றுக்கும் வரவு-செலவு இருக்கிறது. வரவு-செலவு இல்லாமல் வாழ்வு இல்லை. மனிதனும் இல்லை.”

“இவற்றைக் கூட பொறுத்துக் கொள்ளலாம். ஆனால் ஓரிடத்தில் நாயகன் தன் மூல நோய்க்கான காரணத்தையும் அதைத் தீர்க்க தான் மேற்கொண்ட வைத்திய முறைகளையும் இருநூறு பக்கங்களுக்கு மேல் விவரிக்கிறான். இதை நாவலில் பொறுத்துக் கொள்ளவே முடியாது.”

“மனிதனின் வியாதி என்பது உடன் பிறந்தது. மனிதனைப் பற்றி எழுதும் போது நோயைப் பற்றியும் எழுதியே ஆகவேண்டும். அப்படி விரிவாக அவற்றை எந்தக் கொம்பனாலும் எழுத முடியாது. ஆனால் நான் எழுதியிருக்கிறேன். அதைக் குற்றம் கூறுவதை என்னால் பொறுத்துக் கொள்ளவே முடியாது. நக்கீரா நன்றாக என்னைப் பார். நான் எழுதிய நாவலிலே குற்றமா?”

கடவுள் தன்னுடைய உண்மை வடிவத்தை நக்கீரனுக்குக் காட்டுகிறார். அந்த வடித்தோடு உக்கிரமாக தன் நெற்றிக் கண்ணைத் திறந்து காட்டுகிறார்.

“எழுத்துக்களின் அதிபதி நீயே ஆகுக. உமது நெற்றியிலொரு கண்ணைத் திறந்து காட்டிய போதும் குற்றம் குற்றமே. நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே?” என்று நக்கீரன் ஆவேசமாக வாதிடுகிறார்.

“அங்கம் புழுதிபட பேனாவில் மைபூசி, பங்கம் படவிரண்டு கைகளால் பேனாவைக் கீர்கீர் என எழுதும் நக்கீரனோ எம் நாவலை ஆராய்ந்து சொல்லத் தக்கவன்?” என்று கடவுளும் கோபத்துடன் கேள்வி எழுப்புகிறார்.

“பேனாவால் எழுதுவது எங்கள் குலம். உமக்கு ஏது குலம்? நாங்கள் பேனாவில் எழுதுவோம் ஆனால் அரனே உம் போல் கணினியில் தட்டச்சு செய்வதில்லை.”

“நக்கீரா!” என்று ஆவேசத்துடன் கடவுள் நக்கீரனை நெற்றிக் கண்ணால் எரித்து விடுகிறார்.

“பெருமானே! அறியாமல் நக்கீரன் செய்த பிழையைப் பொறுத்தருள வேண்டும். இலக்கியத்தின் தலைமைப் பிதாமகனைத் திருப்பித் தரவேண்டும்” என்று வேண்டிபடி செண்பகப் பாண்டியன் பொற்றாமைக் குலத்திற்கு ஓடுகிறார்.

அங்கே நக்கீரன் நலமுடன் திரும்புகிறார்.

“ஐயனே. தமிழ் மொழியின் மீதும் தமிழ் இல்க்கியத்தின் மீதும் கொண்ட பற்றினால் நாவலில் பொருட் குற்றம் ஏற்படலாகாது என்று எதிர்வாதம் செய்துவிட்டேன். அடியேனை மன்னியுங்கள் தவறிருந்தால்” என நக்கீரன் வணங்கி நிற்கிறான்.

இறைவன் குரல் ஒலிக்கிறது.

“நக்கீரனே! உமது இலக்கியத்தோடு விளையாடவே நாம் வந்தோம். வந்திருப்பது இறை என்றறிருந்தும், நெற்றிக் கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே என்று வாதாடிய உமது இலக்கியத் திறனை யாம் மெச்சினோம்.”

“அரசே! தாங்கள் அறிவித்தபடி ஒரு கோடி பரிசை எழுத்தாளர் தருமிக்கே கொடுத்தருள வேண்டும்” என்று நக்கீரர் மன்னனிடம் கேட்டுக் கொள்கிறார்.

குறிப்பு:எல்லாம் கற்பனையே. யாரையும் எவரையும் குறிப்பிடவில்லை; புண்படுத்தும் நோக்கம் இல்லை.

(மறுபிரசுரம். முதற்பிரசுரம் செப்டம்பர் 22, 2014)

Related Posts Plugin for WordPress, Blogger...