இந்திரநீலம், காண்டீபம் கிடைத்தது!

கடந்த ஐந்து மாதங்களாக சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் என்று எதையுமே வாசிக்கவில்லை. 'ஆரோக்கிய நிகேதனம்', 'லே மிஸ்ரபில்' இரண்டையும் பாதியில் படித்து நிறுத்திவிட்டதால், அவைகள் சுத்தமாக மறந்துவிட்டன. மீண்டும் முதலிலிருந்து வாசிக்கவேண்டும். இலக்கியம் சம்பந்தமான புத்தகங்கள் எதையும் வாங்கவுமில்லை எனினும் சதுரங்கம் (Chess) குறித்த பல புத்தகங்களை வாங்கினேன். சதுரங்கம் எனக்கு மிகவும் பிடித்தமான விளையாட்டு. பைத்தியம் என்றுகூடச் சொல்லலாம். கணிணியோடும், இணையத்திலும் சதுரங்க ஆட்டத்தில் என்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டேன். தற்போது படித்துக் கொண்டிருக்கும் சதுரங்கம் சம்பந்தமான ஒரு புத்தகம்: Yasser Seirawan எழுதிய 'Chess Duels: My Games with the World Champions' என்ற புத்தகம். என்ன ஒரு அற்புதமான புத்தகம்! என்ன ஒரு எழுத்து! அதைக்குறித்து எழுத ஆவல் எழுந்தாலும் எத்தனை பேர் சதுரங்கத்தில் ஆர்வமாக இருப்பார்கள் என்று தெரியாமல் அதைப் பற்றி எழுதுவது உசிதமா என யோசிக்கிறேன்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இலக்கியம் சம்பந்தமான இரு புத்தகங்கள் இன்று தபாலில் வந்துசேர்ந்தது. முன்பதிவில் தவறவிட்ட வெண்முரசு வரிசை நாவல்களான இந்திரநீலம், காண்டீபம் என்ற இரண்டு புத்தகங்களே அவை. இரண்டுமே செம்பதிப்பு புத்தகங்கள்தான் என்றாலும் ஜெயமோகனின் கையெழுத்து மட்டும் இல்லை. முதற்கனலில் தகித்து, மழைப்பாடலில் நனைந்து, வண்ணக்கடலில் நீந்தி, நீலத்தில் மூழ்கி, பிராகையில் நீராடி, வெண்முகில் நகரத்தில் நுழைந்து இந்திரநீலத்தையும் காண்டீபத்தையும் கைப்பற்றியிருக்கிறேன்.

வழக்கம்போல இரு புத்தகங்களையும் கிழக்குப் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. முந்தைய இரு புத்தகங்களை விட இந்தப் புத்தகங்கள் அளவிலும் கட்டமைப்பிலும் கச்சிதமாக அமைந்திருக்கின்றன. ஓவியங்கள் இல்லாமை ஒரு குறை எனினும், அவைகள் இல்லாததால் புத்தகத்தின் கனம் வெகுவாகக் குறைந்திருப்பது ஒருவகையில் ஆறுதலைத் தருகிறது. இரு புத்தகங்களும் இரு தூண்களென மேசை மீது வீற்றிருக்கின்றன! புத்தகத்தின் அட்டை படம் அபாரமாக அமைந்து நம் கற்பனையைப் பறக்கவிடுகிறது. ஒன்று நீல வண்ணம் மற்றது செங்குருதி வண்ணம். நீலம் கிருஷ்ணனுக்குரியது. குருதி அர்ச்சுனனுக்குரியது. ஒன்று விண் எனில் மற்றது மண்.

எட்டு நாயகியரோடு கிருஷ்ணன் கொள்ளும் காதலையும், மோதலையும், பிரிவையும், பிரிவின் துயரத்தையும் பற்றி இப்போதே மனம் கற்பனையைப் பின்னத்தொடங்கிவிட்டது. அர்ஜுனன் தன்னுடைய மனைவிகளோடு காண்டீபத்தை கைக்கொள்ளும் சாகசத்தைப் படிக்கும் ஆர்வத்தில் உற்சாகம் மேலிடுகிறது. கிருஷ்ணன், அர்ஜுனன் இருவரையும் ரத்தமும் சதையுமாக காட்டுவது மட்டுமில்லாது, அவர்களின் உள்ளத்தோடும், ஆன்மாவோடும் நம்மை நெருங்கி உறவாடச் செய்யும் விந்தையை, ஜெயமோகன் எங்ஙனம் நிகழ்த்தியிருக்கிறார் என்பதைக் கண்டு வியந்தோதும் தருணத்திற்காய் காத்திருக்கிறேன்.

Related Posts Plugin for WordPress, Blogger...