May 17, 2016

சுப்ரபாரதிமணியனின் சாயத்திரை: வண்ணங்களின் விபரீதம்

திரை என்பது கண்களை மறைப்பது; எதையும் பார்க்கவிடாமல் செய்வது. சாயம் என்ற திரை நம் அனைவரின் கண்களையும் மறைத்துவிடுகிறது. எனவே புறச்சூழலில் ஏற்படும் மாறுதல்களில் நாம் கவனம் கொள்ளாமல், கடிவாளம் கட்டிய குதிரையாக, வாழ்க்கையில் முன்னேறிச் செல்வதையே குறியாகக் கொண்டு வாழ்கிறோம். நமக்கும் நம் வாழ்வுக்கும் உற்சாகம் தரும் என நாம் கருதும் வண்ணங்கள் நம்மைச் சீரழித்துப் புதை குழியில் தள்ளிக்கொண்டிருப்பதை நாம் கண்ணிருந்தும் குருடராக பாராமல் இருக்கிறோம். அதிலிருந்து தப்பிக்க சற்றேனும் பொது நோக்கும், பொறுப்புணர்வும், நேசமும், உடையவர்களாக நாம் நடந்துகொள்வது அவசியம் என்பதை வலியுறுத்துகிறது சுப்ரபாரதிமணியனின் சாயத்திரை.

தொழில் வளரும்போது ஒரு நகரத்தின் மாற்றம் என்பதைத் தவிர்க்க முடியாது. நம்மையும் மீறி நகரம் பிரம்மாண்டமாய் வளர்ந்து விடுகிறது. எனவே அது சுற்றுச்சூழல் சீர்கேடு எனும் தன் கரங்களால் நம்மை விழுங்கத் தயாராகிவிடுகிறது. புதுத் தொழில்கள் எழும்போது பழைய தொழில்கள் நசிந்துபோவதும், அர்த்தமிழந்து போவதும் ஒரு சமூகத்தில் இயல்பாய் நடக்கும் விசயங்கள்தாம். ஆனால் அவை மிக வன்மையாக, வேகமாக தனி மனிதனிடம் மட்டுமின்றி, சமூக, கலாச்சாரத்திடையேயும் என்னென்ன மாற்றங்களை நிகழ்த்திவிடுகின்றன என்பதை நுட்பமான அவதானிப்புகள் மூலம் புனையப்பட்ட நாவல்தான் சாயத்திரை.

திருப்பூர் நகரை மையமாகக் கொண்டு பின்னப்பட்ட இந்நாவலில் மனித வாழ்வுக்கு ஆதாரமான நொய்யல் ஆறு சாயங்களால் நிரம்பிவிடுகிறது. வீதிகளில் சாக்கடையெங்கும் சாயம் கலந்த நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கிணற்று நீரில் சாயத்தண்ணீர்தான் வருகிறது. நகரத்தில் ஒரு பக்கம் தண்ணீர் தட்டுப்பாடு இருந்தும் மறுபக்கம் இருக்கும் சிறிது தண்ணீரையும் சாயங்களால் மாசுபடுத்துவது நமக்கு ஏற்புடையதாய் இருக்கும் அவலம் நாவலில் துயரத்துடன் வெளிப்படுகிறது. வரும் காலங்களில் தண்ணீர் தட்டுப்பாடு மாபெரும் அரக்கனாக உருக்கொண்டு மொத்த நகரத்தையும் விழுங்கத் துடிப்பதான சித்திரம் நாவலை வாசிக்கும்போது மனதில் எழுகிறது. எனவே இது ஒரு நகரத்தின் கதையாக மட்டுமல்லாது இதுபோல் உலகெங்கும் இருக்கும் பல நகரங்களின் கதையாகவும் நாவல் வியாபிக்கிறது.

படிக்கச் சிரமம் தராத சரளமான நடையில் அமைந்த நாவல். நாவலின் அத்தியாயங்கள் சிறியனவே ஆதலால் நாவல் காட்சிகளுக்குக் காட்சி வேகவேகமாக தாவித்தாவி செல்கிறது. சுப்ரபாரதிமணியனுக்கு மினுங்கும், மின்னும் என்ற வார்த்தை மிகவும் பிடிக்கும் போலும். பக்கத்திற்கு ஒருமுறையேனும் அந்த வார்த்தை வந்துகொண்டே இருக்கிறது. நாவலின் பக்கங்களைச் சற்றே குறைத்திருந்தால் நாவல் செறிவாக இருந்திருக்கும். திருப்பூர் நகரை அறிந்தவர்களைவிட அறியாதவர்களுக்கு இந்நாவல் தரும் வாசிப்பின் அனுபவம் வேறானதாக இருக்கும்.

நாவலில் வரும் செஸ் விளையாட்டும், செட்டியார் பாத்திரமும் ஒரு குறியீடு. செஸ் ஆட்டத்தில் காய்கள் வெட்டுப்படுவது போன்று மனிதர்கள் எல்லோரும் சுற்றுச்சூழல் பாதிப்பினால் வெட்டுப்படுவார்கள். அதில் ராஜா, ராணி, மந்திரி, சிப்பாய் என்று யாரும் விதிவிலக்கல்ல. இனி இந்த மண்ணில் மனிதர்கள் எவ்வாறு இருக்கப்போகிறார்கள் என்பதற்கு செட்டியார் பாத்திரம் அத்தாட்சியாக இருக்கிறது. உடலநலம் கெட்டு, உறவுகள் அவரைவிட்டுச் சென்ற பின்னால் அவர் படும் சிரமத்தைப்போலவே, ஆரோக்கியமான தண்ணீர், காற்று, உணவு ஆகியவை நம்மைவிட்டு விலகிவிடும்போது நமக்கு நேரப்போவது அவரின் கதிதான் என்பதைக் குறிப்பாக உணர்த்துகிறார் சுப்ரபாரதிமணியன்.

நிரந்தர வேலையின்றி அவ்வப்போது கனவுகளில் சஞ்சரிக்கும் பக்தவச்சலம், தொழில் நசிவுற்றதால் பாதிப்படையும் சாமியப்பன், வேலையின்றி வெறும் கம்பனியை காவல் காக்கும் நாகன், பக்தவச்சலத்துடன் உறவுகொண்ட ஜோதிமணி, சாயத்தினால் உடம்பு முழுதும் புண்ணாகிப்போன வேலுச்சாமி என்று பல பாத்திரங்கள் நாவலில் உலாவருகிறார்கள். வண்ணங்கள் அவர்களின் வாழ்க்கையில் எப்படி விளையாடியிருக்கிறது என்பதை நாவலின் வாசிப்பில் நாம் உணர்கிறோம்.

தன் கையில் கிடைத்திருக்கும் மிகப்பெரும் பொக்கிஷத்தைக் கூழாங்கல்லாக அறியும் நிலையிலேயே மனிதன் இருக்கிறான். இயற்கையின் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்பதை ஏனோ அவன் மறந்துவிடுகிறான். எனவே அவன் செய்யும் எல்லா கெடுதல்களையும் இயற்கை சீர் செய்ய முயற்சிக்கிறது. அதனாலேயே அது சீற்றம் கொண்டு தண்ணீர், நெருப்பு ஆகியவற்றின் மூலம் மனிதன் செய்த தவறுகளை முற்றாக அழித்து, மீண்டும் அனைத்தையும் ஆரம்பத்திலிருந்து உருவாக்க முயற்சிக்கிறது. நாவலின் கடைசியில் வரும் வெள்ளப்பெருக்கு நமக்கு உணர்த்துவது அதைத்தான். தன்னை அழிக்கும் மனிதர்களை அழிப்பதின் மூலமாகவே தன்னைக் காத்துக்கொள்ள முடியும் என்பதை இயற்கை உணர்ந்திருக்கிறது.

சாயங்கள் துணிக்கு வண்ணங்கள் சேர்க்கலாம். ஆனால் மனித வாழ்க்கைக்கு? அவற்றால் ஏற்படும் சுகாதாரக்கேடுகள் மனிதனின் வாழ்வில் எத்தகைய வண்ணத்தைச் சேர்க்க முடியும்? வண்ணங்களுக்காக ஒரு சமூகம் அழிந்துபடுவது பரிதாபத்திற்குரியது. வண்ணங்கள் வெறும் வண்ணங்கள் மட்டுமல்ல அவற்றின் பின்னால், மண்ணையும், காற்றையும், நீரையும் பாழாக்கும் எத்தனையோ விசயங்கள் உள்ளன என்பதை அறியும்போது, வண்ண உடைகளை விரும்பும் நம் மனத்தின் மீது குற்ற உணர்வு எழுவதைத் தவிர்க்க முடியாதவாறு நாவல் அமைந்திருக்கிறது. தவிர்க்க முடியாது என்றாலும் நாம் சர்வசாதாரணமாக அவற்றைப் புறங்கையால் உதறித் தள்ளிவிட்டுச் சென்றுகொண்டுதான் இருப்போம் என்பதும் நிதர்சனமான உண்மை. மனசாட்சியின் குரல் கேட்காதபடி நம் காதுகள் எப்போதோ செவிடாகிவிட்டன. எனவே இவற்றின் விளைவுகளை நம் வருங்காலச் சந்ததியினர் அனுபவிப்பார்கள் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

(மறுபிரசுரம். முதற்பிரசுரம் மே 5, 2014)

Related Posts Plugin for WordPress, Blogger...