December 1, 2015

ஜி.நாகராஜனின் யாரோ முட்டாள் சொன்ன கதை

நம் வாழ்க்கை எக்குத் தப்பாக, ஏறுக்கு மாறாக ஏன் இருக்க வேண்டும்? ஒரே நேர் கோட்டில் சீராகச் செல்வதாக, சிரமங்கள் தராததாக ஏன் இருக்கவில்லை? வேண்டுவது அனைத்தும் கிட்டுவதாகவும், வேண்டாதது எதுவும் நடக்காததாகவும் ஏன் இல்லை? இவற்றுக்கெல்லாம் ஜி.நாகராஜன் சொல்லும் காரணம் நம் வாழ்வு யாரோ முட்டாள் சொன்ன கதையாக இருப்பதுதான் என்கிறார். ஒரு முட்டாள் சொல்லும் கதை எங்கேயாவது சீராக இருக்குமா? கடவுள் எனும் முட்டாள் நம் கதையைச் சொல்கிறான். அதனால்தான் நம் வாழ்க்கையும் இப்படி இருக்கிறது என்கிறார் நாகராஜன்.

தன் கதைகளைப் பற்றிய சுய விமர்சனத்தில், இந்தக் கதையை, சிறுகதை அம்சங்கள் கூடிய கதையாக அவர் சொல்கிறார். “இத்தொகுப்பில் அடங்கியுள்ள என் கதைகளில் முழுமையாக சிறுகதை இலக்கணத்தைப் பெற்றிருக்கும் ஒரே கதை ‘யாரோ முட்டாள் சொன்ன கதை‘. மற்றவை எல்லாம் வெறும் முயற்சிகளே.” என்றும், ”விமர்சனத் தகுதி பெற்ற ஒரு சிறுகதை ‘யாரோ முட்டாள் சொன்ன கதை‘ மட்டுமே. யாரும் அதைக் கூர்ந்து படித்ததாகவோ, அதைப் பற்றி சற்று விரிவாகப் பேசியதாகவோ நான் இதுவரை அறியவில்லை. நண்பர்கள் அதை விமர்சித்தால் எனக்கு உதவியாக இருக்கும்.” என்றும் சொல்கிறார்.

அவருடைய இந்தக் கதை தரும் அனுபவத்தை அவர் கதைகளிலிருந்து சில பகுதிகளைச் சுட்டிக்காட்டுவதன் மூலமே அறிய முடியும் என்று கருதுகிறேன்.

1. தான் சிறு வயதிலே கிராமத்தை விட்டு வந்தது, பல ஊர்களில் சுற்றி அலைந்தது, பிச்சை எடுத்தது, சிறு சிறு வேலைகள் பார்த்தது, இறுதியாக அந்த ஊருக்கு வந்தது, ஒரு ஓர்க்க்ஷாப்பில் சேர்ந்தது, படிப்படியாக வேலை கற்றுக்கொண்டது, நண்பர்களால் ஏமாற்றப்பட்டது, சின்ன மொதலாளிகிட்டே இன்னும் அடியும் உதையும் வாங்கிவருவது எல்லாம் அவன் நினைவைச் சுற்றி வரும். “எல்லாம் ஏதோ முட்டாப் பய சொன்ன கதெ மாதிரி இருக்கு” என்று வேதனைப்பட்டுக் கொள்வான்.

2. “போடா பைத்தியக்காரா. இன்னிக்குக் கெடுதிம்பான், நாளெக்கு நல்லதும்பான் இந்த டாக்டர் பசங்க. ஆமா கேக்கறேன், எதான் ஒடம்பக் கெடுக்கலே? அந்த எஞ்சின் பொகெ எல்லாம் ஒடம்புக்குள்ளாற போவுதே, அது மட்டும் என்னவாம்? இல்ல கேக்கறேன். சாவு எதுலும் இருக்குடா. அதான் படெச்செப்பபோவே எளுதிப் போட்டானே அவன், நீ செத்துப்போன்ட்டு.”

3. மணிக்கு எல்லாமே அவனிடத்திருந்து மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு திட்டத்தின்படி நடப்பது போன்றதொரு திகில் ஏற்பட்டது. யாரோ தட்டியெழுப்பியது போன்றுணர்ந்து எழுந்து உட்கார்ந்தான். ‘நடராஜன் ஒரு பத்து நாள் முன்னாலெ செத்திருந்தா? அவன் நடராசனையே சந்திச்சிருக்காட்டி? காரனேசன் ஒர்க்சாப்பிலே அன்னைக்கு வேலே இல்லைன்னு சொல்லியிருந்தா? அவன் வேலே கேக்கப்போன நேரம் பெரிய மொதலாளிக்குப் பதிலா சின்ன மொதலாளி இருந்திருந்தா? அவன் அந்த ஊருக்கே வந்திராட்டி? அவன் கிராமத்தெ விட்டே ஓடிருக்காட்டி? அய்யோ, பாக்கியம்! நீ யாரு? அளகரு, அளகரு, நீ யாரு? பாவிப்பய பரமன்! ஏன் அப்படி ஒதச்சான்? நாம்பாட்டுக்கு ஏதோ கேட்டிட்டு வரவன்தானே? ஏன் அப்படி ஒதெச்சான்? நான் லூஸ்னு நெனச்சுப் போட்டான்! நா என்னடான்னா பாட்லெ எடுத்து, ஆளெயே குளோஸ் பண்ணிட்டேன்! நா நெனக்கிறேன், எவனோ ஒரு கிறுக்கன் என்னென்னவோ நெனச்சபடி செய்திட்டிருக்கான்! ஆனா எனக்குத்தான் எல்லாரும் ‘லூஸ்‘ பட்டம் கட்டிட்டாங்க!

மனித மனத்தின் எண்ணவோட்டங்களைக் கதை முழுக்கவே வெளிப்படுத்திச் செல்வது இக்கதையின் சிறப்பு. காட்சிகளை முன்னும் பின்னுமாக, மாற்றி மாற்றிக் காட்டி, தேர்ந்த திரைப்படம் ஒன்றின் திரைக்தையாகக் கதையை நம் மனக் கண்ணில் விரியச் செய்திருக்கிறார் நாகராஜன்.

இதைப் பற்றி சுந்தர ராமசாமி சொல்லும்போது, “யாரோ முட்டாள் சொன்ன கதையை அவர் நிகழ்த்திக்கொண்டு போகும் முறை ரசிக்கும்படியாக இருக்கிறது. நிகழ்காலத்தில் இரண்டு கீற்று, நிகழ்ந்து முடிந்தவை இரண்டு கீற்று, இப்படி முடைகிறார் ஆசிரியர். மேற்பரப்பில் இது சாதாரணமாகத் தெரியலாம். எளிது என்று கூடப் படலாம். கை வந்த வித்தைகளில்-பானை வனைவதிலிருந்து பல்லாங்குழி ஆடுவது வரையிலும்-அவற்றின் நேர்த்தி அவற்றைச் சாதாரணம் போல் காட்டுகிறது” என்கிறார்.

கதையின் இறுதியில் போலீஸ்காரர்களும் மற்றும் பலரும் மணியைத் துரத்த அவன் ஓடுகிறான். ஒரு வீட்டுக்குள் நுழைந்து கொல்லைப் புறம் வழியாக அவன் ஓடும் காட்சியின் வர்ணனைகள் சமீபத்தில் படித்த ஜெயமோகனின் புறப்பாடு முதல் பகுதியின் இறுதியில் வரும் தப்பி ஓடும் ஓட்டத்தின் காட்சியை நினைவுக்குக் கொண்டுவருகிறது. நாகராஜனின் இந்தக் கதை நமக்கு நாளை மற்றுமொரு நாளேயை நினைவுறுத்துகிறது என்று சொல்லத் தேவையில்லை. அவர் காட்டும் உலகம் பொதுவாக அவ்வாறானதே. அவற்றின் மற்றுமொரு பகுதிதான் யாரோ முட்டாள் சொன்ன கதை.

இந்தக் கதையை வாசித்து முடித்ததும் நம் மனதில் எழும் கேள்வி, நம் வாழ்க்கையும் யாரோ ஒரு முட்டாள் சொன்ன கதையா இல்லை புத்திசாலி ஒருவன் சொன்ன கதையா என்பதுதான். யார் சொல்லும் கதையாக இருப்பினும், அது எப்படி இருப்பினும் அதில் வாழ்ந்தாக வேண்டிய கட்டாயத்தைத் தவிர நாம் செய்யக்கூடியது ஒன்றுமில்லை.

(மறுபிரசுரம். முதல் பிரசுரம் செப்டம்பர் 12, 2013)

Related Posts Plugin for WordPress, Blogger...