November 9, 2015

தி.ஜானகிராமனின் திகட்டாத ‘பாயசம்’

ஜானகிராமனின் ஆகச்சிறந்த கதை பாயசம். இந்தக் கதையைப் பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறேன் என்றாலும் இன்றைய மாறுவாசிப்பில் அதை மேலும் செழுமைப்படுத்துவது அவசியம் என்று தோன்றியது. எத்தனை முறை படித்தாலும் அலுக்காத கதை. இந்தக் கதையை ஜானகிராமன் தந்திருக்கும் இலாவகமும் செய்நேர்த்தியும் ஒவ்வொரு வாசிப்பிலும் நாம் வியக்கும்படி கூடிக்கொண்டே போகிறது.

கதையின் ஆரம்பத்தில், காவேரியில் குளித்துத் திரும்பும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் பற்றிய வர்ணனைகள் சில வரிகள்தான் என்றாலும் நம் மனதில் ‘பச்’ என்று ஈரத்துணியாய் ஒட்டிக்கொள்கிறது. அதுவும் ஐந்து வயது பெண் குழந்தையை, “கீரைத்தண்டு மாதரி ஒரு குட்டி - ஐந்தாறு வயசு - குளித்துவிட்டு அம்மணமாக வருகிறது” என்ற வரிகள் வாசிப்பில் தரும் வருடல் அலாதியானது.

காவேரிக் கரையில், அரசமரத்தடி பிள்ளையாரை கும்பிடும் சாமநாதுவுக்கு தன் உடம்பின் மீதும், அதன் வலிமை மீதும் அபாரமான பெருமை. எழுபத்தேழு வயதான அவர் அறுபத்தாறு வயதான, அவர் அண்ணன் மகன், சுப்பராயனைவிட வலுவாக இருப்பதாக எண்ணிப் பெருமிதமடைகிறார். தன் உடலின் கம்பீரத்தை சுப்பராயனின் நோஞ்சான் உடம்போடு ஒப்பிட்டு இறும்பூது எய்துகிறார். “திறந்தபாள மார்பு, எக்கின வயிறு, சதை வளராத கண், முழுக்காது - இவ்வளவையும் தானே பார்த்துக்கொண்டார்” என்று சொல்வதன் மூலம் சாமநாதுவுக்கு தன்னுடைய உடம்பின் மீதிருக்கும் அசாதரணமான தற்பெருமையை சுட்டிக்காட்டுகிறார் ஜானகிராமன்.

சுப்பராயன் படிக்காதவன். மளிகைக் கடை வைத்து, அது பெரிதாக வளர்ந்து இருபது வருடத்தில் இருபது லட்சம் சொத்து சேர்த்தவன். அதில் பாதியை சித்தப்பாவான அவருக்கு எழுதி வைக்கிறான். அவர் பங்கு ஊருக்கு சற்று எட்டாக் கையில் விழுந்தது என்பதில் அவருக்கு அதிருப்தி. ஊரின் வளர்ச்சியில் சுப்பராயனின் முயற்சிக்கு பெரும் பங்குண்டு. புதுப்பாலம், பள்ளிக்கூடம், வெல்ல ஆலை எல்லாம் அவன் முயற்சியால் உருவானவை. இப்படி ஊர் முழுக்க சுப்பராயனாகவே காட்சியளிப்பது சாமநாதுவுக்கு பொறுக்கமுடியாமல் இருக்கிறது.

சுப்பராயன் மகளுக்குக் கல்யாணம். ஊரே ஜேஜே என்று திரண்டிருக்கிறது. ஆற்றில் குளித்து முடித்து திரும்பும் சாமநாது நிலைகொள்ளாமல் தவிக்கிறார். கல்யாண வீட்டில், ஐந்நூறு அறுநூறு பேர் குடிக்கிற பெரிய பாயச அண்டாவைப் பார்க்கிறார். அதைப் பார்த்து, நான் ஒண்டியாகவே கவிழ்த்து விடுவேன் என்று, தன் உடல் வலுவின் மீது நம்பிக்கை வைத்து இரண்டு கைகளையும் கொடுத்து மூச்சை அடக்கி, மேல் பக்கத்தைச் சாய்க்கிறார். பாயசம் சாக்கடையில் ஓடுகிறது. அதைப் பார்த்துவிட்டவர்களைச் சமாளிக்க, “படவாக்களா, எங்கே போயிட்டேள் எல்லாரும் இத்தனை பெரிய எலியைப் பாயசத்திலே நீஞ்சவிட்டுவிட்டு. இத்தனை பாயாசத்தையும் சாக்கடைக்கா படைச்சேள் கிராதகன்களா! மூடக்கூடவா தட்டு இல்லே?” என்று கத்துகிறார்.

தி.ஜாவின் இந்தக் கதை மனித மனத்தின் பொறாமையை நுட்பமாகப் படம் பிடிக்கிறது. தன் உடல் வலுவின் மீது அபாரமான பெருமை கொண்ட அவருக்குக் கேவலம் அது பாயச அண்டாவைக் கவிழ்க்கத்தான் பயன்படுகிறது. ஆனால் சுப்பராயனிடம் உடல் வலிமை இல்லாவிட்டாலும், அவனது நல்ல மனதால் ஊருக்குப் பல நன்மைகளைச் செய்ய அவனால் முடிகிறது. மனிதனிடம் இருக்கும் பல நல்ல விசயங்கள், அவனது பொறாமைக் குணத்தினால் கெட்ட விசயங்களுக்கே பயன்படுகிறது. துரியோதனனிடம் இருந்த பல நல்ல விசயங்கள் பிறரை அழிக்கத்தானே பயன்பட்டன?

இந்தக் கதையில் முக்கியமாக கவனிக்கவேண்டியது சுப்பராயன் என்ற பாத்திரம் கதையில் எங்கேயும் வருவதில்லை என்பது. ஓரே ஒரு இடத்தில் மட்டும், “சித்தப்பா, எங்க போய்ட்டேள்?” என்ற குரல் மட்டும் கேட்கிறது. அந்த பாத்திரத்தை அப்படி அமைக்க வேண்டிய அவசியம் என்ன? பொறாமைக் குணம் உள்ளவர்களுக்கு, எப்போதும் எங்கேயும் தான் பொறாமை கொண்டவர்களின் உருவமே காட்சியளிப்பதால், அவர்களின் கோபத்தைத் தூண்ட வெறும் பெயர் மட்டுமே போதுமானதாக இருக்கிறது. பீமன் என்ற பெயரே துரியோதனனுக்கு எத்தகைய வெறியை ஊட்டியது?

சுப்பராயன் மீது சாமநாது கொள்வது வெறும் பொறாமை மட்டும்தானா? அந்தப் பொறாமையைச் சுட்டுவது மட்டும்தான் இந்தக் கதையா என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். பொறாமை என்பது சாமநாதுவின் புறத்தே வெளிப்படும் ஒரு விளைவு மட்டுமே. ஆனால் அவர் அகத்தே அதற்குக் காரணமாக இருக்கும் அவரது உளச்சிக்கலை, அவர் மனைவி வாலாம்பாள் குரல் மூலம் நாம் அறிந்கொள்ளும்படி செய்கிறார் ஜானகிராமன். சுப்பராயனை படிக்கவைக்க முடியாமல் போவது, அவரது முதல் இரண்டு பிள்ளைகள் இறந்துபோவது, அவரது பெண் விதவையாவது போன்றவை அவர் மனதை வெகுவாக பாதிக்கின்றன. அந்த பாதிப்பின் காரணமாக தன்னுடைய மனதில் ஏற்பட்டுவிட்ட வெறுமையை சரிசெய்ய, தன்னையும் அறியாமல், அவர் பொறாமையை இட்டு நிரப்பிக்கொள்கிறார்.

சாமநாது தன்னுடைய உடலின் திடகாத்திரத்தை நினைத்து பெருமிதம் கொண்டாலும் அவருடைய உள்ளம் மிக மென்மையானது என்பதை நாம் மிகச்சூட்சுமமாகப் புரிந்துகொள்ளும்படி கதையைக் கட்டமைத்திருக்கும் ஜானகிராமனின் மேதமை வியக்கவைக்கிறது. “என்னை மனுஷனா வச்சிருந்தியேடி, என் தங்கமே... போயிட்டியேடி” என்று வாலாம்பாள் இல்லாததை நினைத்து அவர் கொள்ளும் சுயபச்சாதாபம் இதை நமக்குத் தெளிவாக உணர்த்திவிடுகிறது.

மனிதனிடம் குடிகொள்ளும் குணக்கேடுகளில் பொறாமையைப் போல் கேடு விளைவிப்பது ஏதுமில்லை என்பதையும். அதற்குக் காரணமான சாமநாதுவின் நிலையையும் மிக அழகாக, அதே சமயம் ஆழமாக நம் மனதில் பதியச் செய்துவிடுறார் தி.ஜானகிராமன். எத்தனை முறை ப(கு)டித்தாலும் திகட்டாத பாயசம் இது.

Related Posts Plugin for WordPress, Blogger...