எண்ணிய முடிதல் வேண்டும் -மகாகவி பாரதி

எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே எண்ணல் வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்தநல் லறிவு வேண்டும்
பண்ணிய பாவ மெல்லாம்
பரிதிமுன் பனியை போல
நண்ணிய நின்முன் இங்கு
நசித்திடல் வேண்டும் அன்னாய்.

மகாகவி பாரதியின் பாடல்களில் முக்கியமான பாடல். மேலோட்டமாகப் படிக்கும்போது இப்பாடலின் நுட்பங்கள் நமக்குப் புலப்படாது. பாடலின் ஒவ்வொரு வரியும் தனித்தனியாக இவை இவை வேண்டும் என்றுதான் நாம் புரிந்துகொள்வோம். ஆனால் கூர்ந்து கவனித்தால் ஒவ்வொரு வரியும் அடுத்தடுத்த வரியுடன் தொடர்பு கொண்டு செல்லும் சங்கிலித்தொடர் என்பதை நாம் உணரலாம். கவனமாகத் தொடுக்கப்பட்ட பூச்சரம் இது. ஒரு பூ இல்லாமல் அடுத்த பூ இல்லை. வார்த்தைப் பூக்களை பாமாலையாகத் தொடுத்த மகாகவி அவன்.

எண்ணிய முடிதல் வேண்டும். எல்லோருக்கும் அவரவர் தாம் எண்ணியவை முடியவேண்டும் என்பதில்தான் ஆசை. மனித வாழ்க்கையே எண்ணங்களினால் கட்டமைக்கப்பட்ட கட்டிடம் அன்றி வேறில்லை. எண்ணங்களில் நல்லவையும் உண்டு. தீயவையும் உண்டு. நல்வர்கள் தாம் எண்ணியவை நடக்கவேண்டும் என நினைக்கும்போது தீயவர்களும் அப்படியே நினைப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. இருந்தும் நாம் நல்லவே எண்ணல் வேண்டும். அப்படி நல்லனவற்றை நினைப்பதே நமக்கும் நல்லது பிறருக்கும் நல்லது. சில சமயம் நாம் நினைக்கும் நல்லன நடக்காமல் கூட போகலாம். அதர்மம் ஜெயித்து தர்மம் தோற்கவும் செய்யலாம். அதனால் நாம் சோர்ந்துவிடக்கூடாது. விடாமல் நல்லன நினைப்பதிலேயே கவனம் செலுத்து வேண்டும். அதற்கு நமக்குத் திண்ணிய நெஞ்சம் வேண்டும். தோல்விகளையும் வலிகளையும் தாங்கும் மன வலிமை வேண்டும். அந்த வலிமை கிட்டிட நம் அறிவு தெளிவாக இருக்கவேண்டும். தெளிந்த நல்லறிவாவேயே நாம் திண்ணிய நெஞ்சம் உடையவர்களாக ஆக முடியும்.

இத்தனையும் இருந்தால்தான் நாம் நினைத்தது கைகூடும். சில சமயம் அவைகள் கூடாமலும் போகலாம். எண்ணியவை நல்லனவாகவே இருக்கலாம். தெளிந்த அறிவால் நம் நெஞ்சம் உறுதியாக இருக்கலாம் ஆனால் ஏதோ ஒன்று நாம் நினைப்பதை நடக்கவிடாமல் தடுக்கிறது. அது நாம் பண்ணிய பாவம். மனிதனாகப் பிறந்தாலே பாவங்கள் செய்யாமல் இருக்க முடியாது. மனித ஜன்மமே நாம் பாவங்கள் செய்ததால்தான் எடுக்கிறோம். பாவங்கள் கூடலாம் இல்லை குறையலாம், ஆனால் பாவங்கள் செய்யாமல் உலக உயிர்கள் ஜனிப்பதில்லை. ஆசையால் பாவமும் பாவத்தால் பிறப்பும் மனித வாழ்க்கையில் சுழலும் வட்டங்கள். அதற்காக பாவ விமோசனமே இல்லை என்று சொல்லமுடியாது. சூரியன் முன் பனித்துளி எவ்வாறு ஆவியாகிவிடுகிறதோ அதேபோல் இறைவன் எனும் மகா சூரியன் முன் நின்று கண்ணீர் விட்டு கதறும்போது நாம் செய்த பாவங்கள் தொலைந்துவிடுகின்றன என்கிறான் பாரதி.

இறைவன் முன் நம் பாவங்கள் நீங்கிவிடும்போது, நமக்கு நல்லறிவு கிடைக்கும். நல்லறிவால் மன வலிமை உண்டாகும். மன வலிமையால் நாம் நல்லனவே நினைப்போம். நல்லன எண்ணும்போது, நாம் எண்ணியன நடப்பதில் தடையேதும் இல்லை.

(மறுபிரசுரம். முதல் பிரசுரம் டிசம்பர் 17, 2012)

Related Posts Plugin for WordPress, Blogger...