விட்டல்ராவின் ‘வாழ்வின் சில உன்னதங்கள்’

புத்தகங்களைத் தேடி அலைவது ஒரு சுகமான அனுபவம். அவற்றை சேகரிப்பதும், பாதுகாப்பதும் ஓர் அரிய கலை. அதைக் கலையாகக் காண்பவர்களுக்குப் புத்தகங்கள் பெரும் பொக்கிஷம். மற்றவர்களுக்கு அவை வெறும் காகிதங்கள்தான். நம் வாழ்வின் உன்னத தருணங்கள் என்று புத்தகங்களோடு நாம் கொள்ளும் உறவைச் சொல்லலாம். வாழ்வின் சில உன்னதங்கள் என்ற நூலில் விட்டல்ராவ் அதைத்தான் சொல்கிறார்.

தான் புத்தகங்களைத் தேடி அலைந்ததை, அதனால் தனக்கு ஏற்பட்ட சுவையான அனுபவங்களை இந்நூலில் விவரிக்கிறார் அவர். அதுவும் குறிப்பாக பழயை புத்தகங்கள், இதழ்கள், ஆகியவற்றைச் சேகரித்து பைண்டு செய்து பாதுகாத்த தனது அனுபவங்களை அவர் சொல்லும்போது நமக்கு நாம் புத்தகங்களைத் தேடி அலைந்து திரிந்த காலங்கள் நினைவுக்கு வருகின்றன.

மனிதர் எத்தனை வகையான புத்தகங்களைச் சேகரித்திருக்கிறார் என்பதைப் பார்க்கும் போது வியப்பு ஏற்படுகிறது. நம்மிடம் அத்தகைய புத்தகங்கள் இல்லையே என்ற ஆதங்கம் எழுகிறது. அவரது அனுபவங்கள் வாயிலாக நமக்கு மிகவும் நெருக்கமானவராக அவரை நாம் உணர முடிகிறது. அதற்குக் காரணம் புத்தகங்கள்தான் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. புத்தகங்களைப் பற்றிப் பேசும் அனைவருடனும் நாம் மானசீகமாக ஒர் உறவை ஏற்படுத்திக்கொள்கிறோம். அதன் மூலம் அவர்கள் நமக்கு மிகவும் நெருக்கமானவர்களாக ஆகிவிடுகிறார்கள்.

புத்தகங்கள் மட்டுமல்ல அதன் மூலமாக அவர் சந்தித்த தொடர்பு கொண்ட சேலம் நடேச ஆசாரி, ஆழ்வார், ஊமையன், ஐயர் என்று பல்வேறு பழைய புத்தக வியாபாரிகள் பற்றியும் நாம் அறிந்துகொள்கிறோம். சென்னையின் மூர் மார்க்கட் பழைய புத்தகங்கள் கடையும், நடைபாதை புத்தகக் கடைகளும்  நம் மனதில் அழியாத சித்திரங்களாக பதிந்து விடுகின்றன. அவைகள் தீக்கிரையாகி எரிந்து போனது நம் மனதில் பெரும் சோகத்தைக் கொண்டு சேர்க்கிறது.

புத்தகங்கள் முழுதும் புகைப்படஙகள் நிரம்பியிருப்பது இந்நூலின் சிறப்பு. பல்வேறு வகையான நூல்கள், இதழ்களின் படங்கள் இப்புத்தகத்திற்கு அழகும், அர்த்தத்தையம் கொணர்கிறது. இது வெறும் தனி ஒரு மனிதனின் அனுபவங்களை மட்டும் கொண்ட நூல் என்பதைவிட ஒரு காலகட்டத்தின் ஆவணமாகவும் திகழ்வதை வாசிப்பினூடாக நாம் அறிகிறோம். இந்த புத்தகம் வாசிப்பின் மூலம் நாம் புதிதான, வித்தியாசமான ஓர் அனுபவத்தை அடைகிறோம்.

இந்நூலைப் பற்றி சில பிரபலங்களின் கருத்துக்கள்:
“இந்த நூலில்தான் எவ்வளவு உன்னதமான எழுத்தாளர்கள், பத்திரிக்கைகள், ஆசிரியர்கள்” -அசோகமித்திரன்
“வாழ்வின் சில உன்னதங்கள், வாழ்வின் பல உன்னதங்களை அறியவைக்கிறது” -சா.கந்தசாமி
“கலையுலக மேதைகள், புத்தகங்கள், பத்திரிக்கைகள், ஒரு புனைகதையின் சுவாரஸ்யம்” -திலீப்குமார்

விட்டல்ராவின் வாழ்வின் சில உன்னதங்கள் படிப்பதன் மூலம் நம் வாழ்விலும் அது உன்னத தருணமாக இருக்கும் என்று நிச்சயமாக நம்பலாம்.

(மறுபிரசுரம். முதல் பிரசுரம் ஆகஸ்ட் 29, 2013)


Related Posts Plugin for WordPress, Blogger...