November 17, 2015

அசோகமித்திரனின் ‘காலமும் ஐந்து குழந்தைகளும்’

கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகிய முக்காலமும் இயந்து முயங்கும் கதை காலமும் ஐந்து குழந்தைகளும். ‘காந்தி’ கதையைப்போலவே எண்ணங்களால் பின்னப்பட்டு, வாசிப்பிற்கு சவால் விடும் கதை இது என்று சொல்லலாம். கதையைப் படிக்கப் படிக்க நம்முடைய மனம் கதையை அனுமானிக்கும் முகமாக பல்வேறு எண்ணங்களை பின்னுகிறது. அடுத்தடுத்த வரிகளுக்குத் தாவும்போது, முந்தையை எண்ணத்தை அழித்துவிட்டு, புதிய எண்ணங்களை பின்னியபடியே மனம் ஓடுகிறது. ஆனால் கதையின் கடைசிப் பத்தி அத்தனை எண்ணங்களையும் தூக்கி வீசி நம்முடைய மனதை ஸ்தம்பித்து நிற்கச் செய்கிறது.

ஒன்றை தீவிரமாக அடையும் முயற்சியில் இறங்கும்போது அந்த ஒன்றை அடைந்துவிட்டதாகவோ அல்லது இழந்துவிட்டதாகவோ முன்னதாகவே கற்பனை செய்யும் குணம் மனதுக்கு உண்டு. கற்பனையில் அடைந்துவிட்ட ஒன்றை நிஜத்தில் அடையமுடியாமல் போவதும், கற்பனையில் இழந்து விட்டதாகக் காண்பதை நிஜத்தில் அடைவதும் எப்போதும் நிகழக் கூடியதே. அதைக் கொண்டு காலத்தின் உருவெளித் தோற்றத்தை நம்முடைய மனதில் விரியச்செய்கிறார் அசோகமித்திரன். காலத்தையும் தூரத்தையும் பிரிக்க முடியாதது போலவே மனதையும் கற்பனையையும் பிரிக்க முடியாது. இலக்கும் அதை அடையும் தூரத்திற்கும் இடைவெளி இருக்கும்வரையிலும் மனம் கற்பனையை பின்னிக்கொண்டுதான் இருக்கும். அத்தகையை ஒரு மனதின் பின்னலை அபாரமாகவும் அனாயசமாகவும் எழுத்தாக்கியிருக்கிறார் அசோகமித்திரன். எண்ணங்களை அசைபோடுவதன் வாயிலாக காலத்தை தின்று செறிக்கும் ஒரு மனிதனின் மனவோட்டங்கள் இவை.

கையில் பெட்டியும், தோளில் பையுடனும் ரயிலைப் பிடிக்க விரைகிறான் ஒருவன். அப்போது அவன் மனதில் எழும் தொடர்ச்சியான எண்ண அலைகள் இந்தக் கதையை ஓடவைக்கிறது. வேலை ஒன்றைப் பெறுவதற்காக அவன் ரயிலைப் பிடிக்க ஓடுகிறான். ஓடுகையில் அவன் காணும் காட்சிகள் அனைத்தும் பொருள் பொதிந்தவை. அவற்றில் மயங்கிக்கிடக்கும் ஐந்து குழந்தைகளின் காட்சி முக்கியமானது. அது ஒரு குறியீடாக கதை முழுதும் தொடர்ந்து இயங்கி கதையை அதன் உச்சத்திற்கு கொண்டுசெல்கிறது. ஓடும் அவனுக்குத்தான் எத்தனை இடையூறுகள்? பெரிய முட்டுக்கட்டையாக கடவுள் வேறு அவன் வழியை மறிக்கிறான்.

வாழ்க்கையில் இலக்கை நோக்கி ஓடும் ஒவ்வொருவருக்கும் இத்தகைய இடர்கள் ஏற்படத்தான் செய்கின்றன. ஒவ்வொருவரும் போட்டி போட்டுக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் தாண்டி இலக்கை அடைவது காலத்தில் நடக்கக்கூடியதா என்ன? அப்படி என்னதான் பிரயத்தனம் செய்தாலும் அதைத் தடுக்க கடவுள் என்று ஒருவன் வந்துவிடுகிறானே? அவனைத் தாண்டித்தானே இலக்கை அடைய முடியும். எதை அடையவேண்டும் என அவன் நிச்சயிக்கிறானோ அதைத்தானே நாம் அடையவும் முடியும்?

ஓடும் அவனுக்கு, கனவில் கனவை, கனவு என்றறிவது போல, காலத்தைப் பற்றிய சிந்தனை விரிகிறது. “.....எனக்குத் தெரியாது. எனக்கு காலமே என்னவென்று தெரியவில்லை. செய்கையே காலம். அல்லது ஒரு செய்கைக்கும் அடுத்ததற்கும் உள்ள இடைவெளி. செய்கை, இடைவெளி இரண்டும் கலந்ததே காலம். அல்லது இரண்டுமே இல்லை. என்னைப் பொறுத்ததுதான் காலம். என் உணர்வுக்கு ஒன்றை விடுத்து அடுதத்து என்று ஏற்படும்போதுதான் காலம். அப்படியென்றால் என்னைப் பொறுத்தவரையில் ரெயில் நின்று கொண்டிருக்கிறது. அது கிளம்பிவிடவில்லை நான் அதைப் பிடிப்பதற்கு அதைத் துரத்திக்கொண்டு போக வேண்டியதில்லை. இந்த ஓட்டைப் பெட்டி, உப்பிப்போன பையுடன் திண்டாடித் தடுமாறி ஓட வேண்டியதில்லை. ஆனால் அப்படி இல்லை. காலம் எனக்கு வெளியேதான் இருக்கிறது.....”

அவனது இந்த சிந்தனையிலிருந்து இந்தக் கதையை ஆன்மிக தளத்தில் வைத்து, வேதாந்தத்தில் சொல்லப்படும் ‘மாயை’ என்ற தத்துவத்தை இந்தக் கதை மிகச்சரியாக படம் பிடிக்கிறது எனலாம். காலத்தின் எல்லையற்ற விரிவை உள்வாங்கும் ஆற்றல் மனித மனத்துக்கு இல்லை. காலம் என்பது மகா பேரிருப்பு மட்டுமே. அதில் நிகழ்ந்தது, நிகழ்வது, நிகழப்போவது அனைத்தும் நம்முடைய மனதின் எல்லைக்குட்பட்ட மயக்கங்களே. நடப்பவை அனைத்தும் பொய் அல்லது இல்லை என்பதல்ல மாயை. மாறாக நடப்பவை அனைத்தும் காலத்தின் இடைவெளியால் உண்மையாக நமக்குத் தெரிகிறது என்பதுதான் மாயை. 

“நான் ஒரு மரத்தடியில் அமர்ந்திருக்கிறேன். நீங்கள் மரத்தின் மேல் அமர்ந்திருக்கிறீர்கள். அப்போது நீங்கள் வீதியில் ஒரு மாட்டு வண்டியைப் பார்ப்பதாகக் கூறுகிறீர்கள். ஆனால் எனக்குத் தெரியவில்லை. என்னைப் பொருத்தவரை மாட்டு வண்டி சிறிது நேரம் கழித்து எதிர்காலத்தில் தெரியலாம். மரத்தின் மேல் இருக்கும் உங்களுக்கு மாட்டு வண்டி நிகழ்காலம். நீங்கள் கூறுகிறீர்கள், “மாட்டு வண்டி வருகிறது” என்று. நான் கூறுகிறேன், “வண்டி வரலாம். ஆனால் இப்போது நான் காணவில்லை. சற்று நேரத்தில், எதிர்காலத்தில் பார்க்கலாம்” என்று. பிறகு எனக்கும் வண்டி தெரிகிறது. எதிர்காலத்திலிருந்து எனக்கும் அது நிகழ்காலமாகிவிட்டது. பிறகு சற்று நேரத்தில் வண்டி ஓடி மறைந்து விட்டது எனக்கு. என்வரை கடந்த காலமாகிவிட்டது. ஆனால் மரத்தின் மேல் இருந்து நீங்கள், “இல்லை, எனக்கு இப்போதும் தெரிகிறது” என்கிறீர்கள். எனக்கு முதலில் எதிர்காலத்திலிருந்து நிகழ்காலத்திற்கு வந்து கடந்த காலமாகிவிட்டது. ஆனால் உங்களுக்கு ஒரே தளத்தில், நிகழ்காலத்திலேயே இருக்கிறது. நீங்கள் என்னைவிட உயரத்தில் அமர்ந்திருக்கிறீர்கள்” என இந்த கால மயக்கத்தை அற்புதமாக விளக்குகிறார் ஓஷோ.

இந்த மாயை என்பதைப் பற்றி விளக்க ராமகிருஷ்ணர் யோக வாசிஷ்டத்திலிருந்து நாரதரின் கதையைச் சொல்வது வழக்கம். நாரதரரும் சர்வேசுவரனும் ஒரு பாலைவனத்தின் வழியே பயணம் செய்கிறார்கள். அப்போது சர்வேசுவரன் தாகம் மேலிட, நாரதரை தண்ணீர் கொண்டுவரும்படி பணிக்கிறார். தண்ணீரைத் தேடி ஆற்றுக்குச் செல்லும் நாரதர் அங்கே அழகான மங்கை ஒருத்தியைக் கண்டு மோகம் கொண்டு அவளை மணக்கிறார். அவருக்கு மைந்தர்கள் பிறக்க அங்கேயே பல வருடங்களை மகிழ்ச்சியாக கழிக்கிறார் நாரதர். இந்நிலையில் கொள்ளை நோய் காணரமாக அங்கிருந்து அனைவரும் இடம்பெயர நேர்கிறது. அதற்காக ஆற்றைக் கடக்கும்போது மனைவியும் மகன்களும் ஆற்றில் அடித்துச்செல்ல நாரதர் துன்பமடைந்து வாடி நிற்கும்போது அவர் முன்னே தோன்றும் சர்வேசுவரன், “நாரதரே தண்ணீர் எங்கே?” என்று கேட்கிறார். அப்போதே நாரதர் தன்னை உணர்ந்தவராக மாயை என்பதை அறிகிறார்.

ஐம்புலன்களும் அந்த ஐந்து குழந்தைகளைப்போல மயங்கிக்கிடக்கும்போது காலமும் தூரமும் இந்த மாயையைத் தோற்றுவிக்கிறது. ரயிலைப் பிடிக்க ஓடும் தூரத்தைக் கடக்கும் கால அவகாசத்தில், பல இடையூறுகள் ஏற்படுவதாகவும், அவற்றுக்கு காரணமாக பலவற்றையும் அவன் மனம் கற்பனை செய்து முடித்துவிடுகிறது. உண்மையில் அவன் ரயிலை இன்னும் காணவே இல்லை. எங்கே ரயில்? எங்கே ரயில்? என்று அவன் தன்னுடைய மனவோட்டத்திலிருந்து விழித்துக்கொள்ளும் போதுதான் பிளாட்பாரத்தில் நிற்கும் ரயிலைக் காண்கிறான். தூங்கிக்கிடக்கும் அவனது ஐம்புலன்களை விழிக்கச் செய்வதாய் அந்த அலுமினியத் தம்ளர் அவன் விலாவில் இடிக்கிறது. அது ஞானத்தின் திறவுகோலாக அவனது விலாவில் இடித்து நடப்பது அனைத்தையும் ‘மாயை’ என்பதை திரும்பத் திரும்ப அவனுடைய நினைவுக்குக் கொண்டுவருகிறது.

Related Posts Plugin for WordPress, Blogger...