ஜெயமோகனின் ‘வெண்முகில் நகரம்’-7: உணர்ச்சிகளின் உச்ச கட்டம்!

காசிநாட்டு இளவரசி பானுமதி, பலந்தரை இருவரையும் கவரும் பொருட்டு துரியோதனன், கர்ணன், பூரிசிரவஸ் மூவரும் செல்கிறார்கள். அதில் குறுக்கிடும் பீமன் பலந்தரையை கவர்ந்துசெல்கிறான். திருமணத்திற்குப் பின் பானுமதியிடம் அவளது விழிகள் கருணை நிரம்பியவை என்று சொல்லும் துரியோதனன், “அந்தக் கருணையிலிருந்து நான் தப்பவே முடியாது” என்கிறான். அதற்கு பானுமதி, “தப்ப விழைகிறீர்களா?” எனக்கேட்க, “இல்லை” என்று பதில் சொல்கிறான் துரியோதனன். அவர்கள் இருவருக்குமிடையே நிகழும் இந்த உரையாடல்கள், துரியோதனன் என்ற பெயருக்கு நாம் கற்பித்து வைத்திருக்கும் பிம்பத்திற்கு மாற்றான ஒரு பிம்பத்தை முன்வைக்கிறது. அதுமட்டுமில்லாது, ஒரு பெண் வந்தபின்னர் ஆணில் நிகழும் மாற்றத்தை, துரியோதனன் சிந்தனையிலும் செயலிலும் வந்துவிடுகின்றன என்று ஜெயமோகன் காட்டுவது நுட்பமானது.

குந்தி, திரௌபதி, பாண்டவர்கள் அனைவரையும் வரவேற்பதை பெரும் நிகழ்வாகக் கொண்டாட திருதிராஷ்டிரன் ஆணையிடுகிறார். இதனால் அஸ்தினபுரியே பெரும் திருவிழாக்கோலம் பூணுகிறது. திரௌபதிக்கு முன்னதாகவே வந்துவிட்ட பாண்டவர்களை திருதிராஷ்டிரனிடம் அழைத்துச் செல்ல பூரிசிரவஸ் கிருஷ்ணனைக் காண காந்தாரியின் அந்தப்புரம் செல்கிறான். அங்கே பெண்களோடு லயித்தவனாக கிருஷ்ணன் குலலூதுகிறான். அந்த இசையைக் கேட்கும் பூரிசிரவஸின் எண்ணங்கள் வாயிலாக இசையின் மகத்துவத்தை நாமும் அறிந்துணர்கிறோம். அதில் மயங்கும் அவன் அதிலிருந்து தப்பித்துவிட முயல்கிறான்.

அவனுடைய மனமயக்கத்தை வார்த்தைகளாக்கும் ஜெயமோகன் அதன் உச்சமாக, “வெளியே. இங்கிருந்து வெளியே. வெளியேறு. தப்பு. நீ மீண்டும் கண்டடையாதவற்றாலான உலகில் வாழ்வதற்காக ஓடு. பிரத்யட்சம் அனுமானம் சுருதி. சுருதியென ஏதுமற்ற வெளியில் அனுமானமில்லை. அனுமானமில்லாத நிலையில் பிரத்யட்சமென்பதும் இல்லை. எஞ்சியிருக்காத நேற்றால் இன்றை அறியமுடியாது மூடா. ஓடித்தப்பு. உன் சித்தத்தின் எல்லைகள் சிதறி காற்றில் கற்பூரமென நீ ஆவதற்குள் பிடித்துக்கொள் அதை. மீளமீள. மாற்றமில்லாது. என்றுமென. எப்போதுமென. இங்கென. இப்போதென…” எனச் சொல்வது அற்புதமான, அனுபவப்பூர்வமான சித்தரிப்பு. ஒவ்வொரு வரியும் ஆழ்ந்து சிந்திக்க வேண்டியவை.

ஒரு முறை பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்தேன். எனக்கு நான்கு இருக்கைகள் தள்ளி நின்றபடி ஒரு பெண் பயணம் செய்து கொண்டிருந்தாள். இளம் பெண். சிவப்பு நிறம். அவள் அணிந்திருந்த கருப்பு நிறப் புடவையும் ரவிக்கையும் அவளின் நிறத்தை இன்னும் எடுப்பாகக் காட்டியது. புடவையில் ஆங்காங்கே இருந்த வட்ட வட்டமான கரும் வட்டங்கள் அவளுக்கு அசாத்தியமான அழகை அளித்தது. அவள் இறுக்கமாக பின்னியிருந்த கருங்கூந்தல் நீண்டு அவளது இடுப்பைத் தாண்டி கிழே சென்றது. அவள் தலையில் சூடியிருந்த மல்லிகை கரும்பாறைகளுக்கிடையே கொட்டும் அருவியென அவள் கருங்கூந்தலில் தொங்கியது. அவளின் நீண்ட கழுத்தும், காது மடல்களும், கன்னக் கதுப்புகளும் என்னைக் கிறங்கடித்தது. ஒரு கை மேலே கம்பியைப் பற்றியிருக்க, மற்றொரு கை தொங்கியிருக்க ஓர் ஓவியப் பாவையென அவள் நின்றிருந்தாள். அவள் கைகளில் அணிந்திருந்த வளையல்களும், பொன்நிறக் கடிகாரமும், நீண்ட விரல்களில் இருந்த மோதிரமும் அவள் கைகளின் வனப்பைப் பன்மடங்கு உயர்த்தியது. அவள் உடலின் கச்சிதமான அமைப்பு, நீண்ட கால்கள், செந்நிற வண்ணம் சுற்றிலும் பூசிய பாதங்கள், அதன் மேலாக அணிந்திருந்த கொலுசு முதலியன என் கண்களைக் கவர்ந்திழுக்க, நான் அவளைத் திகைப்புடன் பார்த்துக் கொண்டிருந்தேன்.

ஒரு பெண்ணை ஒரு நாளும் இப்படிக் கூர்ந்து பார்த்து அறிந்ததில்லை என்பதை உணர்ந்த கணத்தில் எனக்குப் பெரும் வியப்பேற்பட்டது. அவள் தலையில் சூடியிருந்த மல்லிகையின் மணம் பரவி என் நாசியில் ஏறியபோது நான் வேறெங்கோ இருப்பதாக உணரத்தொடங்கினேன். என் உள்ளமும், உடலும் இலகுவாக, நான் மிதப்பது போல உணர்ந்தேன். மனம் முழுதும் இனம் புரியாத ஆனந்தம் நிரம்பியது. அது உடல் சம்பந்தப் பட்டதல்ல. பல வருடங்களுக்கு முன்னால் நான் தியானப் பயிற்சியில் ஈடுபட்டபோது கிடைத்த அனுபவம்தான் எனப் புரிய, நான் அச்சம் மேலோங்க என்னை அதிலிருந்து மீட்டுக்கொள்ள கவனத்தை திசைதிருப்பினேன். பாதிவழியில் இறங்கி விடலாமா என்று கூடத்தோன்றியது. நல்லவேளையாக அந்தப் பெண் முன்னதாக இறங்கிச் சென்றுவிட்டாள். நான் அச்சத்தில் அவளைத் திரும்பிக்கூட பார்க்க முயலவில்லை. என்னதான் அச்சம் இருந்தாலும் அத்தகைய அழகின் சுழலில் வீழ்ந்து என்னை நான் மூழ்கடித்துக் கொள்ளும் அந்தத் தருணத்திற்கான ஆவல் இருந்தபடியே இருந்தது.

நல்ல இசையிலும் இதை உணர முடியும். அத்தகைய ஓர் அனுபவத்தையே பூரிசிரவஸ் அடைகிறான். அதன் பிறகு அவனுடன் கிருஷ்ணன் உரையாடும்போது காசி இளவரசி பலந்தரையை கைநழுவ விட்டது குறித்து, “நழுவிச்செல்வதெல்லாம் ஊழால்தான். அந்த ஒரு சொல் இல்லையேல் எப்படி வாழ்க்கையை வாழ்ந்து முடிப்பது” என்கிறான். வாழ்க்கையில் நடந்தவை, நடப்பவை, நடக்கப்போகிறவை என்ற முக்காலத்துக்குமான தீர்வாக கர்மவினை என்ற ஒற்றைச் சொல் அமைகிறது. வாழ்வின் எக்கணத்தையும் கடந்துசெல்ல இந்தச் சொல் பெருமளவு உதவுகிறது. அதனால்தானே வள்ளுவரும், இளங்கோவும் ஊழ்வினையை எழுத்தாக்கி வைத்தனர்.

அப்போது பானுமதிக்கும் பூரிசிரவஸூக்கும் இடையே நிகழும் உரையாடல், உரையாடல் கலையின் உன்னதம் என்று சொல்லத்தக்க வகையில் அமைந்துள்ளது. நாம் மீண்டும் மீண்டும் வாசித்து இன்புறத்தக்கவை அந்த உரையாடல். (சந்தேகமிருப்பின் மீண்டும் வாசித்துப் பாருங்கள்). நெகிழ்ச்சியும் எழுச்சியும் கூடும் அற்புத தருணங்களாக அவை அமைந்திருக்கின்றன. அதன் பிறகு இதன் உச்சமாக வருவது துரியோதனன் பாண்டவர்களை சந்திக்கும் காட்சி. உணர்ச்சிகளின் ஒட்டுமொத்த திரட்சியாக அமைந்து இந்தக் காட்சி நம்மை உலுக்குகிறது. கண்களில் ஒரு சொட்டுக் கண்ணீராவது விடாமல் இந்தக் காட்சியை யாரும் வாசித்துவிட முடியாது. இந்தக் கண்ணீர் ஒரு மனிதன் தன் உண்மை இயல்பை, அகங்காரமின்றி உணர்வதால் வருவது. நேரில் சந்தித்தால் எல்லாம் தீர்ந்துவிடும் மாறாக தூரத்திலிருந்து நிந்தித்தால் விரோதம் வளரும் என்பதை புரியவைக்கும் மேலான சித்தரிப்பு இது.

இத்துடன் வெண்முகில் நகரத்தை முடித்திருக்கலாம். ஆனால் அதன் பிறகும் ஓர் அத்தியாயம் வருகிறது. மிகச்சிறிய அந்த அத்தியாயம் நுட்பமானது. பல்வேறு சிந்தனைகளை பூடகமாகச் சொல்வது. அதில் சாத்யகியும், பூரிசிரவஸூம் சந்திக்கிறார்கள். வெண்முகில் நகரத்தில் பூரிசிரவஸூம் சாத்யகியும் இருவேறு துருவங்களாக சித்தரிக்கப்பட்டிருப்பது அற்புதமானது. செயலில் தன்னை முற்றும் கறைத்துக் கொள்பவன் பூரிசிரவஸ். அறிதல் ஒன்றையே துணையாகக் கொள்பவன் சாத்யகி. பாண்டவர்களும் கௌரவர்களும் இணைந்தது உண்மையானால் நாடு ஏன் பிரியவேண்டும் என்று கேட்கிறான் சாத்யகி. எப்போதும் இரு துருவங்களுக்கிடையே பெண்டுலம் போல ஊசலாடுவது மனித மனத்தின் இயல்பு. ஒன்று வலப்புறம் அல்லது இடப்புறம், அது ஒருபோதும் நடுவில் இருப்பதில்லை என்று சொல்லும் ஓஷோ அது வலப்புறம் செல்வதே தன் சக்தியைத் திரட்டி இடப்புறம் திரும்புவதற்கே என்பார். அதுவே பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையே நிகழ்கிறது. அவர்கள் ஒருபுறத்திலிருந்து மறுபுறத்திற்கு திரும்பிவிட்டனர். இப்போது மறுபுறத்திலிருந்து எதிர்புறம் திரும்ப ஆயத்தமாகின்றனர்.

(முற்றும்)

Related Posts Plugin for WordPress, Blogger...