ஜெயமோகனின் ‘வெண்முகில் நகரம்’-6: மனவெழுச்சியின் கணம்!

வெண்முகில் நகரத்தில் ஒவ்வொரு நகரங்களின் சித்தரிப்பும் மற்றைய நகரங்களிலிருந்து தனித்துவம் உடையதாகவும், பூகோள இடத்திற்குத் தக்கதாயும், சீதோஷண நிலைக்கு ஏற்றவாறும் அமந்துள்ளதாக காட்சிப்படுத்தும் வர்ணனைகளும் விவரணைகளும் கதையோட்டத்திற்கு மெருகேற்றி வாசிப்பிற்குச் சுவைகூட்டுகிறது. நாம் பல்வேறு நகரங்களில் உலவும் உணர்வைப் பெறுவதோடு, அந்த நகரங்கள் ஒவ்வொன்றும் புதிது புதிதாகத் தோன்றுவதைக் கண்டு வியக்கிறோம்.

பால்ஹிக குடிகளின் கூட்டமைப்பை கௌரவர்கள் ஏற்றுக்கொண்டார்களா இல்லையா என்ற விவாதம் சலனுக்கும் பூரிசிரவஸூக்கும் நடக்கிறது. அப்போது சலன், “நாம் என்னசெய்வோம் என்பது ஒரு பக்கம் மட்டுமே. நாம் சிரிக்கலாம் அழலாம் வஞ்சினம் கூறலாம். நாம் செய்வதை அவர்கள் பார்க்கவேண்டுமே. அதை அவர்கள் அறிந்ததாகக்கூட நாம் அறியமுடியாது” என்கிறான். மனிதனுக்கிருக்கும் மிகப்பெரிய ஆசையே அவன் செய்வது அனைத்தையும் பிறர் பார்க்கவேண்டும், பார்த்து மெச்சவேண்டும் என்பதே. நாம் செய்யும் எதுவும் பிறருக்குத் தெரியவில்லை அல்லது பிறர் அதற்காக நம்மைப் போற்றவில்லை என்றால் அதைச் செய்வதில் என்ன அர்த்தமிருக்கிறது?

குருஷேத்திர யுத்தத்தின் தொடக்கத்தில் போர்தொடுக்க முடியாமல் சோர்வடையும் அர்ச்சுனன், தான் போரை விரும்பவில்லை என்று கிருஷ்ணனிடம் சொல்லி அதற்கான பல காரணங்களை வரிசையாக அடுக்குகிறான். அர்ச்சுனன் இதற்கு முன்னர் போர் புரியாதவனா? எதிரிகளின் தலைகளை துச்சமாக மதித்துக் கொய்யாதவனா? பின் எதற்காக இந்த இடத்தில், நான் யாரையும் கொல்லமாட்டேன், போர் புரிய மாட்டேன் என்று அடம்பிடிக்கிறான். “போரில் தன்னுடைய உறவினர்களைக் கொன்றுவிட்டு நாட்டைப் பெற்று அதில் அமர்ந்து ஆட்சி புரிந்தால் அதைக் காண உறவினர்கள் யாரும் இல்லையெனில் அந்த வெற்றியினால் என்ன சந்தோஷமிருக்கிறது என்ற எண்ணத்தினால்தான் அர்ச்சுனன் போர்செய்யத் தயங்குகிறான்” என்று இந்த இடத்தில் ஓஷோ அர்ச்சுனனின் நாடியைப் பிடித்தது போன்று ஓர் அழகான விளக்கத்தைத் தருகிறார். தான் அடைந்ததை உறவினர் யாரும் பார்த்து வியக்கவோ அல்லது பொறாமைப் படவோ இல்லையென்றால் அந்த ஒன்றை அடைந்ததில் என்ன பொருளிருக்கிறது?

சிபிநாட்டு இளவரசி தேவகைக்கு சுயம்வரம் என்பதை காலம் கடந்து அறியும் பூரிசிரவஸ், ‘காலம் கடந்த கெட்டசெய்தி அதன் வீச்சை இழந்துவிடுகிறது. துயரம்தாங்கி கடக்கவேண்டிய அந்தக் காலம் அறியாமலே கடக்கப் பட்டிருக்கிறது’ என்று எண்ணமிடுகிறான். உண்மையில் துயரம் என்பது எப்போதும் அது நிகழும் கணத்தையே பெரிதும் சார்ந்தது. எனவே காலம் கடந்த துயரச்செய்தி, துயரம் நிகழ்ந்த காலத்திலிருந்து அதன் எதிர்காலத்திற்கு நம்மை இட்டுச் சென்றுவிடுவதால் நடந்து முடிந்துபோன துயரம் குறைந்த துயரமாகிறது அல்லது துயரமில்லாமலாகிறது.

தேவகையின் சுயம்வரத்துக்கு ஒன்பது நாட்களே உள்ள நிலையில் அங்கு சென்று சேரவேண்டும் என்று விரைகிறான் பூரிசிரவஸ். அதற்காக மிகுந்த பிரயாசைப்பட்டு பயணிக்கிறான். ஆனால் நாட்டை நெருங்கும் வேளையில் அவன் ‘அனைத்தும் முடிந்துவிட்டது’ என்ற வெறுமையுணர்வை அடைகிறான். வாழ்வின் பல தருணங்களில் இத்தகைய வெறுமையை நாம் உணர முடியும். இனிசெய்வதற்கு ஒன்றுமில்லை என்றும் செய்வதில் அர்த்தம் இல்லை என்றும் தோன்றிவிடும். அப்போது, செயலுக்கு முன்னதாகவே மனம் அந்த இலக்கை எட்டிவிட்ட காரணத்தால் சோர்வுற்று, இதுவரையான முயற்சியைக் கைவிட்டுவிட்டு முற்றிலும் மாறான ஒன்றை நோக்கிப் பயணப்பட்டுவிடும்.

இளவரசிகள் பகடைக் காய்களாக உருள, ஒவ்வொரு சிற்றரசும் தங்களின் பாதுகாப்பை விழைய, அனைத்து மனிதர்களும், நாடுகளும் இரண்டாக பிளவு பட்டு, கௌரவர்கள் பாண்டவர்கள் என்று இருதரப்பாக பிரிந்து நிற்பதற்கான அனைத்து ஆயத்தங்களும் நடந்தேறுகின்றன. அந்த சூறாவழியில் அகப்பட்டுத் தவிக்கும் தனிமனிதனில் தானும் ஒருவனாக பூரிசிரவஸ் அலைக்கழிந்து துன்பமடைகிறான். அவன் விரும்பும் சிபிநாட்டு இளவரசி தேவிகையும், மத்ர நாட்டு இளவரசி விஜயையும் பாண்டவர்கள் அடைந்துவிட, எஞ்சியிருக்கும் அஸ்தினபுரியின் இளவரசி துச்சளையை அடைய பூரிசிரவஸ் துரியோதனனைச் சந்திக்கிறான்.

தனக்குச் சாதகமானவற்றை சிந்திக்கும் துரியோதனன் காசிநாட்டு இளவரசி பானுமதியை அடையவும், சிசுபாலருக்கு துச்சளையை மணமுடிக்கவும் திட்டமிடுகிறான். எல்லாவிடத்திலும் தன்னுடைய ஆசைகள் அனைத்தும் நிராசையாகி விடுவதைக் கண்டு பூரிசிரவஸ் நிலையழிகிறான். சட்சட்டென மாறும் அரசியல் முடிவுகளால், தன்னுடைய கண்முன்னரே, தனது அனைத்து ஆசைகளும் நொறுங்கிப்போவதைக் காண்கிறான். சதுரங்க ஆட்டத்தில் காய்களை நகர்த்தும் சமார்த்தியத்துடன் பூரிசிரவஸை அங்குமிங்குமாக நகர்த்தி ஜெயமோகன் கதையோட்டத்தை இணைக்கும் பாங்கு ரசிக்கத்தக்கது. பூரிசிரவஸின் அலைக்கழிப்பில் நாமும் சிக்குண்டு இழுபட்டுத் தவிக்கிறோம். தேவிகையை பீமன் கவர்ந்து சென்றபிறகு, பால்ஹிகபுரி திரும்பும் பூரிசிரவஸின் மனவோட்டங்களும், சூழலும் அபாரமாக அமைந்து மனவெழுச்சியின் கணங்களாகின்றன.

(தொடரும்)

Related Posts Plugin for WordPress, Blogger...