ஜெயமோகனின் ‘வெண்முகில் நகரம்’-5: வாசிப்பின் பரவசத் தருணம்!

பாண்டவர்களிடமிருந்து தூது வரும் கிருஷ்ணன் அஸ்தினபுரியில் காலடி வைப்பதிலிருந்து திரும்பிச் செல்லும் வரையான பகுதிகள் வெண்முகில் நகரத்தின் சிகரமாக அமைந்து ஜொலிக்கிறது. தூது செல்லும் கிருஷ்ணன், பலராமர், சாத்யகி மூவரையும் வழியனுப்ப தயாராகும் ஏவலர் தலைவரான சுஃப்ரரும் அவர் பணியாளர்களுக்கும் இடையே நிகழும் உரையாடல்கள் நாம் வெடித்துச் சிரிப்பதற்கு உரியவை. பின்னால் நிகழும் அழுத்தம் நிரம்பிய காட்சிகளின் சித்தரிப்பில் நுழைவதற்கு நம்மை ஆசுவாசப்படுத்திக்கொள்ள இந்தக் காட்சிகளின் சித்தரிப்பு உதவுகிறது.

பலராமர் அறிமுகமான தருணத்திலேயே அவரை தனித்துவமிக்க பாத்திரமாக அறியத்தொடங்கி விடுகிறோம். வெண்முரசில் ஒவ்வொரு பாத்திரத்திற்கும் ஒவ்வொரு குணாம்சத்தைக் கொண்டு வருவதற்கு அசாத்தியமான ஆற்றல் வேண்டும். நடை, உடை, பாவனை என்ற மூன்றின் சித்தரிப்பின் வாயிலாக ஒவ்வொரு பாத்திரத்தையும் தனித்துவமிக்கதாக துலங்கச் செய்வது குறிப்பிட்ட நான்கு அல்லது ஐந்து பாத்திரங்களைப் பொருத்தவரை எளிதாக இருக்கலாம். ஆனால் மகாபாரத்தில் இருக்கும் எண்ணற்ற பாத்திரங்களுக்கு இவ்வாறான சித்தரிப்பை வழங்குவதும், பின்னர் அதை இறுதிவரை கொண்டுசெல்வதும் எளிமையானதல்ல. ஆனால் தனது பண்பட்ட புனைவின் திறத்தால் ஜெயமோகன் அதைச் சாதித்திருக்கிறார். எதிர்படும் எவரிடத்தும் மற்போர் பற்றியும் உணவைப் பற்றியும் பேசும் பழக்கத்தால் பலராமர் நம் உள்ளத்தில் மிக எளிதாகப் இடம் பிடித்துவிடுகிறார். புதிது புதிதாகப் பாத்திரங்கள் தோன்றும்போது, அவர்களுக்கான நடை, உடை, பாவனைகளோடு புதிதாகத் தோன்றி நம்மைத் திகைப்பில் ஆழ்த்துகிறார்கள்.

அரசவை கூடுவதற்கு முதல் நாள் கிருஷ்ணன் சகுனியைச் சந்தித்து உரையாடும்போது நடக்கும் பகடையாட்டத்தின் வாயிலாக வாழ்க்கையின் பல்வேறு கூறுகளை படம் பிடித்துக் காட்டும் நுட்பம் ரசிக்கவும் வியக்கவும் வைக்கிறது. வாழ்க்கையில் திரும்பத் திரும்ப செய்யும் ஒரே மாதிரியான காரியங்களால் நாம் பலசமயம் அலுப்பும் சலிப்பும் கொள்கிறோம். எனவே ஒவ்வொரு நாளையும் புதிதாக உணர்வதற்கு முயற்சிக்கிறோம். ஆனால் குழந்தைகள் இதனால் ஒருபோதும் சலிப்பதில்லை. காரணம் அவைகள் எதையுமே திரும்பத் திரும்ப நிகழும் நிகழ்வாகப் பார்ப்பதில்லை. ஒவ்வொரு கணமும் குழந்தைகளுக்கு உற்சாகமும் உவகையும் தரும் புதுமை நிறைந்ததே. நாமும் விழிப்புணர்வோடு இருந்தால் வாழும் ஒவ்வொரு கணமும் நமக்கும் புதியதே. அப்போதே காமக்குரோத ரோகங்களிலிருந்து விடுபட முடியும். பகடையாட்டத்தில் கிருஷ்ணன் கையாளும் யுக்தி, ஒரு கட்டத்தில் சகுனியை சலிப்பும் ஆயாசமும் ஏற்படச் செய்து, சினம் கொள்ளச் செய்கிறது. தவறாக ஆடித் தோற்றுவிடுவோமோ என்ற அச்சம் அவனை பீடிக்கிறது. இருந்தும் சுதாரித்தவனாக பெரும் பிரயாசைக்குப் பின்னர் ஆட்டத்தை சமன் செய்கிறான்.

அடுத்த நாள் அரசவையில் நடக்கும் சூடான, உணர்ச்சிகரமான விவாதங்கள் ரசிக்கவும் வியக்கவும் வைப்பதோடு, காட்சிகளின் நுட்பமான சித்தரிப்பால் நம்மைக் கட்டிப்போட்டு விடுகின்றன. தருமனுக்கு முடி சூடுவதென்றும், அதன் பிறகு பாதி நாட்டை அவன் துரியோதனனுக்கு கொடுக்கவேண்டும் என்றும் அனைவரும் ஒருமனதாக முடிவுசெய்கிறார்கள். அரசவைக்குப் பின் கிருஷ்ணனும் சாத்யகியும் திருதிராஷ்டிரனைக் காணும் காட்சியில், மன்னன் தந்தை எனும் இரண்டு உணர்வுகளுக்கிடையே சிக்கித் தவிக்கும் திருதிராஷ்டிரனின் துயரம் கச்சிதமாக வெளிப்படுகிறது.

திருதிராஷ்டிரனைச் சந்தித்துத் திரும்பும் கிருஷ்ணன் அனைத்தையும் மறந்தவனாக சாலையில் தான் காணும் ஒவ்வொன்றிலும் தன்னை லயித்தவனாக இருப்பது சாத்யகியை பெரிதும் வியப்பில் ஆழ்த்துகிறது. அப்போது, “வேடிக்கை பார்க்கத் தெரிந்தவனுக்கு இவ்வுலகம் இன்பப்பெருவெளி” என கிருஷ்ணன் சொல்வது ஆழ்ந்த பொருள் கொண்டது. எதிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளாமல் அனைத்தையும் சாட்சியாக கவனித்தால், வாழும் ஒவ்வொரு கணமும் இன்பம்தான். அதனால்தானே பாரதி, “எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா” என்று பாடினான். “அள்ள அள்ளக்குறையாத பெருஞ்செல்வத்தின் நடுவே விடப்பட்டவர்கள் நாம்” என்று கிருஷ்ணன் சொல்வது எத்தனை சத்தியமான வார்த்தை. ஆனால் நாம்தான் கண்ணிருந்தும் குருடர்களாக, ஏதேனும் ஒன்றைப் பற்றிக்கொண்டு அதுவே சாசுவதம் என, அனைத்தையும் மறந்தவர்களாக, அந்த ஒன்றின் பின்னால் ஓடுகிறோம்.

கிருஷ்ணனைத் தனியாகச் சந்திக்கும் திருதிராஷ்டிரனும் காந்தாரியும், திரௌபதி மீது தங்களுக்குள்ள அச்சத்தை வெளிப்படுத்துகிறார்கள். அவள் சாதாரணப் பெண்ணாக இல்லாமல் வழிபாட்டுக்குரியவளாக இருப்பதே கர்ணன் துரியோதனன் இருவரின் அச்சத்திற்கும் நிலையழிதலுக்கும் காரணம் என்று சொல்லும் காந்தாரி அவளால் கொடுக்கப்படும் நாட்டை துரியோதனன் எவ்வாறு ஏற்பான் என்ற கேள்வியை முன் வைக்கிறாள். ஆக, தாங்கள் நினைத்தபடி செய்தால் விபரீதம் நிகழாமல் தடுக்கலாம் என்ற எண்ணத்தில் திருதிராஷ்டிரனும் காந்தாரியும் ஆளுக்கொரு உதவியைக் கிருஷ்ணனிடம் கேட்கிறார்கள்.

கிருஷ்ணன் காந்தாரியிடம் பேசும்போது துச்சளை, “இது ஒரு களம் அரசே. இதில் புண்படவும் தோற்கவும் ஒரு தரப்பு இருந்தாக வேண்டும் அல்லவா?” என்று கேட்டு, ஆண் வெற்றி கொள்ளும்போது வழிபடுபவர்கள் பெண் எனும்போது ஏன் அமைதி இழக்கவேண்டும் என்று கேட்பது நம்மில் பல்வேறு சிந்தனைகளை நுரைக்கச் செய்து, ஆண்களின் அகங்காரத்தை கேள்வியாக்குகிறது. அங்கிருந்து திரும்புகையில் கிருஷ்ணன் பித்துப்பிடித்த காந்தார அரசி சம்படையைச் சந்திக்கிறான். அவளிடம் நீண்ட நேரமாகப் பேசும் கிருஷ்ணனைக் கண்டு பொறுமை இழக்கிறான் சாத்யகி. எதையும் கேட்காத, பேசாத அவளிடம் அப்படி என்ன பேச முடியும் என்று சாத்யகி வியக்கிறான். கிருஷ்ணன் பேசுவது அவளிடமல்ல மாறாக அவள் ஆன்மாவிடம் என்றும், துன்பத்திலிருந்து அவளை விடுதலை செய்து அவளுக்கு முக்தியைத் தருகிறான் என்றும் உணரும் பரவசத்தருணத்தில் நாம் எண்ணங்கள் ஏதுமற்று ஸ்தம்பித்து நின்றுவிடுகிறோம்.

(தொடரும்)
Related Posts Plugin for WordPress, Blogger...