ஜெயமோகனின் ‘வெண்முகில் நகரம்’-4: இந்திரபிரஸ்தம்

கிருஷ்ணன் தனது படைகளோடு சாத்யகியை உடன் அழைத்துக்கொண்டு காம்பில்யத்தை அடைகிறான். பன்னிரண்டு நாட்கள் பயணத்துக்குப் பிறகு காம்பில்யத்தை அடைந்ததும் அவர்களுக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. வரவேற்புக்குப் பின் அவர்களுக்கு வழங்கப்படும் விருந்தின் விவரணைகள் நம்மைத் திகைப்பும் வியப்பும் அடையச் செய்கிறது. எத்தனை எத்தனை விதமான உணவுகள்! உணவுக்குப் பின் வேள்வியின் அவிப் பாகமான பசுவைப் பங்கிடும் கதையைச் சொல்கிறான் சூதன். இவற்றில் எதிலும் ஆர்வமின்றி சாத்யகி அலுப்பும் சலிப்பும் அடைகிறான். எல்லாமே பொருளற்றவையாக, தான் பொருந்தாத இடத்துக்கு வந்துவிட்டதாக அவன் உணர்கிறான்.

வெண்முகில் நகரத்தை வாசிக்கையில் சாத்யகியைப் போலவே பல இடங்களில் அலுப்பும் சலிப்பும் அடைந்து, எதற்கு இத்தனை விவரணைகள்? அதன் அவசியம் என்ன? என்று தோன்றும். படிக்கும்போது ஏற்படும் இந்த ‘ஆயாசம்’ படித்து முடித்து அடுத்தடுத்த அத்தியாயங்களுக்கு நகரும்போதே, முந்திய அத்தியாயங்களின் தேவையையும் அவசியத்தையும் உணர்ந்து வியக்க முடியும். வெண்முகில் நகரம் முழுதும் இப்படியாக நிகழும் பின்னல்களின் விந்தைதான். வெறும் கதையை மட்டும் வாசிக்கும் விழைவின்றி, வாசிப்பது மாபெரும் ‘இதிகாசம்’ என்பதை வாசிக்குந்தோறும் நினைவு கொள்ளும்போதே ஜெயமோகன் சொல்லிச் செல்லும் கதையாடல் எத்தனை கச்சிதமானது, விரிவானது என்பதை அறிய முடியும்.

விருந்துக்குப் பின் கிருஷ்ணன் குந்தியையும், பாண்டவர்களையும் சந்திக்கும் காட்சியும், திரௌபதியைச் சந்திக்கும் சித்தரிப்பும் இதுவரையான நிகழ்வுகளை தொகுப்பதாக அமைந்து ரசிக்க வைக்கிறது. பாண்டவர்களும், குந்தியும், திரௌபதியும் தங்களுக்கென்று ஒரு நாடில்லாத நிலையின் வருத்தத்தை கிருஷ்ணனிடம் சொல்கிறார்கள். அப்போது, “நான் எப்போதும் என்னைச் சூழ்ந்தவர்களின் விருப்புகளால் அலைக்கழிக்கப் படுகிறேன்” என தருமன் வருத்தம் தோய்ந்த குரலில் கிருஷ்ணனிடம் சொல்கிறான். மனிதர்கள் ஒவ்வொருவரும் வாழ்வின் பல கட்டங்களில் இந்தச் சோர்வை அடைவது தவிர்க்க முடியாதது. அப்போது தருமனுக்கு கிருஷ்ணன் வேடிக்கையாக தரும் மறுமொழி அபாரமானது. “பிறர் விருப்புகளை நாமே வகுத்தல். நான் செய்வது அதையே” என்று பதிலளித்துச் சிரிக்கிறான். மனிதர்களாகிய நம் ஒவ்வொருவர் உள்ளத்திலும் விருப்புகளை ஏற்படுத்தி தவிக்கவிட்டு அந்த மாயக் கண்ணன் சிரிக்கிறான். ‘எல்லா விருப்பும் அவனுடையதே’ என்ற தெளிவை அடைந்துவிட்டால் பிறகு கலக்கம், மயக்கம், தயக்கம், ஏது?

இந்த இடத்தில் மேலும் நுட்பமாக அறியவேண்டியது, தருமனுக்கிருக்கும் இந்தச் சோர்வை ‘அதுவே அறமறிந்தோனின் ஊழ்’ என்று கிருஷ்ணன் குறிப்பிடுவது. எல்லோருடைய விருப்பத்தையும் ‘அறமறிந்தோன்’ என்ற நிலையில் ‘தான்’தான் நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம் தருமனிடம் மிகுந்திருக்கிறது. அறத்தைப் பின்பற்றுவதாகச் சொல்லும் பலரும் இந்த எண்ணத்தை வலுவாகப் பற்றிக்கொண்டிருப்பதைச் சுட்டிக்காட்டவே அதைச் சொல்லும் கிருஷ்ணன், அனைத்தையும் ‘நானே’ செய்கிறேனாதலால் தருமா ‘நீ’தான் அனைத்தையும் செய்யவேண்டும் என்ற எண்ணத்தை விட்டுவிடு என்கிறான். ‘இதை ஏன் நீ அறியாமல் இருக்கிறாய்’ என்றே கிருஷ்ணன் சிரிக்கிறான். ஆழ்ந்து சிந்திக்கவேண்டிய, வாசிப்பில் போகிற போக்கில் தவறவிட்டுவிடக் கூடாத இடம்.

திரௌபதியைச் சந்திக்கச் செல்லும் வழியில், கடைவீதியில் கிருஷ்ணன் பீமனைப் பார்க்கிறான். நெருக்கமான சிறிய கடைவீதியைப் பற்றி பீமன் தரும் விளக்கம் உண்மையிலேயே ‘நல்ல அறிதல்’தான். “எளியமக்கள் வாங்கும் அளவு மிகக்குறைவு. அத்துடன் அவர்கள் விலைப்பூசல் செய்து வாங்க விழைகிறார்கள். பெரிய கடைவீதியில் அவர்கள் தனித்து நிற்கும் உணர்வை அடைகிறார்கள். தாங்கள் பிறரால் பார்க்கப்படுவதாக எண்ணி கூசுகிறார்கள். இங்கே நெரியும் பெருங்கூட்டம் ஒவ்வொருவருக்கும் பெரிய திரையென ஆகிவிடுகிறது” என்கிறான் பீமன். திருவிழாக் காலங்களில் பெரிய கடைகளை விடவும், இத்தகைய நெரிசலான கடைவீதியில் எத்தனை எத்தனை ஜனத்திரளைக் காண்கிறோம். விலை குறைவு, சக்திக்கு ஏற்றது என்பதைவிட, அந்தக் கூட்டம் அவர்களுக்குத் திரையென ஆகிறது என்பது எத்தனை அனுபவப் பூர்வமான உண்மை! மகாபாரத காலத்து மனிதர்களோடு மனிதர்களாக பல்வேறு நகரங்களில், குறிப்பாக கடைவீதிகளில், உலவும் உணர்வு வெண்முகில் நகரத்து நகரங்களின் சித்தரிப்பில் நாம் பெறுவது பெருமதியானது; அலாதியானது.

அங்கிருந்து போரில் படுகாயமடைந்து உயிர் பிழைத்த திருஷ்டத்யும்னனை பார்க்கிறான் கிருஷ்ணன். பல நூறு பக்கங்களுக்கு முன்னர் நிகழ்ந்த காம்பில்ய யுத்தத்தின் ஒரு புறத் தாக்குதலை மட்டுமே அப்போது சித்தரித்த ஆசிரியர் தற்போது திருஷ்டத்யும்னன் நடத்திய தாக்குதலை ரிஷபன் என்ற வீரன் வாயிலாக காட்சிப்படுத்துகிறார். கர்ணன் போரிட்ட காட்சியை விடவும் வாய்மொழி்யாக வெளிப்படும் இந்தக் காட்சிகளின் சித்தரிப்பு வாசிப்பில் எழுச்சியைத் தருகிறது. அதன் பிறகு கிருஷ்ணனைச் சந்திக்கும் திரௌபதி ஜயத்ரதன் மேற்கொண்ட மற்றொரு தாக்குதலையும், அவன் பின்னடைந்ததற்கான காரணத்தையும் விவரிக்கும்போது நாம் வியப்பும் திகைப்பும் அடைகிறோம். படகுகளை நீரில் எரியவிட்டு ஜயத்ரதனை பின்வாங்கச் செய்த தனது தந்திரத்தைச் சொல்கிறாள் திரௌபதி. இக்காட்சி அமைப்பினால் பெரும் காவியத்துக்குண்டான இயல்பு நாவலுக்குக் கூடிவந்திருக்கும் அழகு போற்றுதற்குரியது. மேலும் கிருஷ்ணன் திரௌபதி இருவருக்குமிடையே நிகழும் உரையாடல் பின்னால் நிகழும் பலவற்றை உய்த்தறியும் வாசிப்பின் பாய்ச்சலைத் தருகிறது.


அஸ்தினபுரிக்குத் தூது செல்லும் கிருஷ்ணனிடம் பாதி நாட்டைக் கேட்கும்படி சொன்ன குந்தியின் கருத்துக்கு மாறாக, யமுனை நதிக்கரையில் நிலமொன்றைக் கேட்கும்படி சொல்லும் திரௌபதி, அதற்கான தன்னுடைய பெருங்கனவை கிருஷ்ணனிடம் விவரிப்பது ‘சபாஷ்’ போட வைக்கிறது. போர்கள் அல்ல இனி அங்காடிகளே நாட்டைக் கைப்பற்றும் என்று திரௌபதி சொல்வது தற்கால உலகலாவிய வணிகத்தின் அன்றைய தீர்க்கதரிசனமாகக் கண்டு ரசிக்கலாம். “இங்கு நான்கு பெரிய காவல்மாடங்கள். நான்கும் செந்நிறக்கற்களால் ஆனவை. இங்கே படிகள் மேலேறும். படிகளுக்கு வலப்பக்கம் தேர்ப்பாதை. இடப்பக்கம் யானைப்பாதை. வளைந்து செல்லும் பாதைகள் ஒன்றுடன் ஒன்று முட்டிக்கொள்ளும் இடங்களில் அவை ஒன்றுக்கு அடியில் ஒன்றென செல்லும்படி பாறையைக் குடைந்து அமைக்க முடியும். ஒவ்வொரு உட்கோட்டைவாயிலிலும் காவல்கோட்டங்களும் வீரர் தங்குமிடங்களும் உண்டு” என மனவெழுச்சியுடன் தான் நிர்மாணிக்கும் ‘இந்திரபிரஸ்தம்’ நகரை அவள் விவரிக்கும்போது அவளுள் விரியும் கனவு நம்மில் உணர்ச்சிப் பெருக்காய் பற்றிப் படர்கிறது.

பின்னால் நிகழும் பல நிகழ்வுகளுக்கு அடித்தளமாக அமையும் திரௌபதி, கிருஷ்ணன் இருவருக்கும் இடையே நடக்கும் முக்கியத்துவம் வாய்ந்த உரையாடலை காவியச்சுவை ததும்பச் சித்தரித்த வகையில் வெண்முகில் நகரத்தின் ‘சொற்களம்’ பகுதி ஆகச்சிறந்ததாகும். ஒவ்வொருவரும் தங்கள் ஆசைக்கேற்ப சொற்களம் அமைக்கிறார்கள்! அது பின்னால் போர்க்களமாகும் விந்தையை காலம் அரங்கேற்றுகிறது.

(தொடரும்)
Related Posts Plugin for WordPress, Blogger...