ஜெயமோகனின் ‘வெண்முகில் நகரம்’-3: துவாரகை

தசசக்கரத்தில் தங்கியிருக்கும் துரியோதனனைச் சந்தித்து, தங்களது பத்து குடிகளின் நலனுக்காக, பூரிசிரவஸ் கௌரவர்களுடன் இணைகிறான். “இனி நீர் எங்களில் ஒருவர். உமக்கு உடன்பிறந்தார் நூற்றைவர்” என்று துரியோதனன் பூரிசிரவஸை அணைத்துக்கொள்கிறான். கர்ணனும் துரியோதனனும் காம்பில்யத்தின் மீது போர்தொடுக்கும் பொருட்டு விவாதிக்கிறார்கள். சகுனியும், கணிகரும் போர்வேண்டாமென மாற்றுக் கருத்தைச்சொல்ல, அதை மறுதலித்து துரியோதனன் போர்தொடுக்க நிச்சயிக்கிறான். பூரிசிரவஸ் அவர்களுடன் இணைந்து தன்னுடைய முதல் போர் அனுபவத்திற்குத் தயாராகிறான்.

உண்மையில் போர் என்பது என்ன? வெறும் நாட்டைக் கைப்பற்றும் ஆசை மட்டும்தானா? தான் மாண்டுவிடுவோம் என்றுணர்ந்தும் மனிதர்கள் போரில் உற்சாகமாக ஈடுபடுவதன் காரணம் என்ன? எனும் கேள்விகள் வாசிப்பில் நமக்குள் எழுவது போலவே, முதன் முதலாகப் போரில் பங்கேற்கும் பூரிசிரவஸூக்கும் எழுகிறது. அவன் அதற்கான பதிலைப் பெறும் முகமாகப் போர்க்களத்தைப் பார்க்கிறான். அந்தத் திரளான மனிதர்களிடையே மூழ்கி முற்றாகத் ‘தன்னை இழப்பதை’ அவன் மனம் விரும்புகிறது. “போரிலிருக்கும் பேரின்பமே அதுதானா? இனி நான் என ஏதுமில்லை என்ற உணர்வா? போரிடும் படை என்பது மானுடம் திரண்டுருவான மானுடப்பேருருவா? அந்த விராடவடிவம் ஒவ்வொருவனின் உள்ளத்திலும் இருப்பதனால்தான் அவன் தன் இறப்பையும் பொருட்டெனக் கொள்வதில்லையா? பெருந்திரளில் அன்றி தன்னை மறந்த பேருவகையை மானுடன் அடைய முடியாது. ஆகவேதான் திருவிழாக்கள். ஊர்வலங்கள்” எனும் அவனது எண்ணங்களின் வாயிலாக மனிதர்களுக்கு போர் மீதிருக்கும் இச்சைக்கான காரணம் புலப்படுகிறது.

பரபரப்பான போர்க்காட்சிகளின் சித்தரிப்பு வாசிப்பில் திரைக்காட்சிக்கு நிகரான அனுபவத்தை நமக்குத் தருகிறது. “கர்ணனின் வெண்ணிறமான குதிரை தழலின் செந்நிறத்தில் தானும் தழலாக தெரிந்தது. தழல் நுனி போல அதன் சரவால் சுழன்று பறந்தது. பறவை போல பாய்ந்து நெருப்பலைகளைக் கடந்து சென்ற அதன்மேல் குதிரைவிலாவில் நுனி ஊன்றி இடக்கையால் பற்றி நிறுத்தப்பட்ட வில்லும் வலக்கையில் அம்புமாக குழல் பறக்க அவன் அமர்ந்திருந்தான்” எனும் சித்தரிப்பை நம்முடைய மனக்கண்ணில் காண்கையில் திரைக்காட்சியின் நடுவே நிறுத்தப்பட்ட ஓவியமென அக்காட்சி ஜொலிக்கிறது. கர்ணனின் உக்கிரமான தாக்குதலில் தருமனும், அர்ச்சுனனும் காயம்படுகிறார்கள். கர்ணன், அஸ்வத்தாமன், ஜயத்ரதன் ஆகிய மூவரின் முப்புறத் தாக்குதலால் காம்பில்யம் வீழ்ந்துவிடும் எனத் தோன்றும் கணத்தில், ஜயத்ரதன் பின்வாங்கவே மொத்த கௌரவப்படையும் சற்றே பின்னடைய, அவர்களின் தோல்வி உறுதியாகிறது. “இது ஒரு போர் விளையாட்டு” என்று தருமன் அவர்களைத் திருப்பி அனுப்புகிறான்.

பூரிசிரவஸ் கௌரவர்களிடம் சேர்ந்தது போல சாத்யகி கிருஷ்ணனிடம் சென்று சேர்கிறான். துவாரகையில் நுழைந்து அந்நகரத்தைக் காணும் அவன், வீரநாரயண ஏரியைக் கண்டு வியக்கும் வந்தியத்தேவனின் மனநிலையை அடைகிறான். இதுவரை காதால் மட்டுமே கேட்டு, மனக்கண்ணால் கற்பனை செய்து வந்த துவாரகை, ஜெயமோகன் புனைவால் நம் கண் முன்னே நிஜமான தோற்றத்தோடு பிரம்மாண்டமாக எழுந்து நிற்கிறது. நம்மை வியக்கவைப்பது துவாரகையின் பிரம்மாண்டமான நிர்மானமும், அந்த நிர்மானம் தரும் அழகும் மட்டுமல்ல. அதற்கும் அப்பால் அந்நகருக்கு வரும் பல நாட்டவர்களும், அவர்களுக்குப் பணி அளிக்கும் முறமையும், அந்நகரம் இயங்கும் ஒழுங்கும்தான்.

துவாரகையின் கடலுக்குக் கீழே மேலும் பல துவாரகைகள் இருப்பதும், முதற்துவாரகை ஏழ்கடல்களும் சுழிக்கும் உந்தியின் நடுவே ஓர் ஓங்காரமாக மட்டும் எஞ்சியிருக்கிறது என்பதையும் வாசிக்கும்போது இந்த பூமியில் எதுவுமே புதிதாக உருவாக்கப்படுவதில்லை என்பது புரிகிறது. முன்னர் இருந்தவையே மீண்டும் மீண்டும் காலந்தோறும் உருவாகிறது. இங்கு எதுவுமே புதியதில்லை. எல்லாமே பழமையானது. முன்பிருந்தது. எப்போதும் இருப்பது.


தோரணவாயில், சோலை, மாளிகைகள், அங்காடி, அரசப் பெருவீதி, அரண்மனை வாயில், துறைமுகம், அதில் நகரும் பெருநாவாய்கள் என துவாரகை சொர்க்கபுரியாக நம்முன் விரிகிறது. கிருஷ்ணனிடம் சேர்வதையும் பணியாற்றுவதையும் விட வேறொன்னும் விரும்பாத சாத்யகி அடிமையாக முத்திரை பெற்று கிருஷ்ணனைச் சந்திக்கிறான். சாத்யகியை ஆரத்தழுவும் கிருஷ்ணன் தன் வலப்புறத்தில் அவனுக்கு இடமளிக்கிறான். இறைவனுக்கு அருகிலிருப்பதை மட்டும் விரும்பினாலே போதும், நம்மை எங்கே வைக்கவேண்டுமோ அங்கே வைப்பான் அவன்!

துவாரகையின் ஒட்டுமொத்தமும் ஓர் இயைந்த தாளகதியில் இயங்குவதற்கு கிருஷ்ணனே காரணம். ஆனால் அவனோ, “நான் எதையுமே செய்வதில்லை” என்கிறான். அதைக் கண்டு வியக்கும் சாத்யகியிடம், “இங்குள்ளவை அனைத்தும் நான் இயற்றுபவை என எண்ணுகிறார்கள். என் பெயர்சொல்லி செய்யப்படுபவை அனைத்திலும் நான் உள்ளேன் என்பது உண்மை. ஆனால் அச்செயல்களே நான் என்பவன் என்னை வந்தடைவதேயில்லை” என்கிறான். ‘செயலில் செயலின்மை’ என்ற கர்மயோகம் இந்த இடத்தில் கிருஷ்ணனால் சுட்டப்படுவது பொருள் பொதிந்தது. தியானிக்க வேண்டியது. கர்ணன் ‘தான்’ என்ற தன்முனைப்பால் இயங்குகிறான் எனவே போரில் தோல்வியைத் தழுவுகிறான். சாத்யகியோ கிருஷ்ணன் என்ற கடலில் தன்னை முற்றாக கரைத்துக்கொள்ள, துளி கடலாகிவிடுகிறது. துளியாக இருப்பது எப்போதும் துன்பம். கடலாகிவிடுவது விடுதலை தருவது. நித்தியமானது.

(தொடரும்)
Related Posts Plugin for WordPress, Blogger...