ஜெயமோகனின் ‘வெண்முகில் நகரம்’-2: பூரிசிரவஸ்

தன் மகளை பாண்டவர்கள் ஐவருக்கும் மணமுடித்து கொடுத்த துருபதன் மிகவும் மகிழ்கிறான். தனது மகள் பாரதவர்ஷத்தின் சக்கரவர்த்தினி ஆவாள் என்று இரும்பூது எய்துகிறான். எனவே அவன் அர்ச்சுனனை நோக்கி, “நீங்கள் எனக்கிழைத்தது பெரும் நன்மையை மட்டுமே. இல்லையேல் இவளுக்கு நான் தந்தையாகியிருக்க மாட்டேன். நான் அடைந்த வதையெல்லாம் முத்தைக் கருக்கொண்ட சிப்பியின் வலி மட்டுமே. அதற்காக இன்று மகிழ்கிறேன். எண்ணி எண்ணி நெஞ்சு நெகிழ்கிறேன். மாதவம் செய்தவர் அடையும் ஒன்று எனக்கு நிகழ்ந்தது” என்கிறான். வாழ்க்கையின் புரியாத புதிர்களில் ஒன்று ஒரு செயலின் விளைவான நன்மை தீமையை மனிதர்களாகிய நாம் நம்முடைய சிற்றறிவைக் கொண்டு கணிக்கமுடியாமலிருப்பதே.

ஒரு செயல் நடக்கும்போது அதன் விளைவுகளை யாரும் துல்லியமாக அறியமுடிவதில்லை. அப்போது ஏற்படும் அந்த செயலின் விளைவைக் கொண்டே, அந்த செயலின் தன்மையை முடிவு செய்கிறோம். ஆனால் காலப்போக்கில் அந்த செயலின் விளைவு முற்றிலும் மாறான விளைவைக் கொடுக்கலாம். ஏனெனில் கால மயக்கம் நம்மை அவ்விதம் சிந்திக்க வைக்கிறது. தன்னை அர்ச்சுனன் வென்று தனக்கிழைத்த அவமானத்தால் உள்ளம் மருகி செத்துப் பிழைத்த துருபதன், அர்ச்சுனன் தனக்குச் செய்தது நன்மையே என்று இப்போது சொல்கிறான். அப்போது நிகழ்காலத்தை மட்டுமே உணர்ந்த அவன் இப்போது அந்த விளைவின் எதிர்காலத்திற்கு வந்து சேர்ந்துவிட்ட காரணத்தால் முற்றிலும் மாறான கருத்தை முன் வைக்கிறான்.

பகவத் கீதையின் ஸாங்கிய யோகத்தைப் பற்றி விளக்கும்போது ஓஷோ, “நான் ஒரு மரத்தடியில் அமர்ந்திருக்கிறேன். நீங்கள் மரத்தின் மேல் அமர்ந்திருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் வீதியில் ஒரு மாட்டு வண்டியைப் பார்ப்பதாகக் கூறுகிறீர்கள். நான் பார்க்கிறேன். எனக்குத் தெரியவில்லை. என்னைப் பொருத்தவரை மாட்டு வண்டி சிறிது நேரம் கழித்து எதிர்காலத்தில் தெரியலாம். மரத்தின் மேல் இருக்கும் உங்களுக்கு மாட்டு வண்டி நிகழ்காலம். நீங்கள் கூறுகிறீர்கள், “மாட்டு வண்டி வருகிறது” என்று. நான் கூறுகிறேன், “வண்டி வரலாம். ஆனால் இப்போது நான் காணவில்லை. சற்று நேரத்தில், எதிர்காலத்தில் பார்க்கலாம்” என்று. பிறகு எனக்கும் வண்டி தெரிகிறது. எதிர்காலத்திலிருந்து எனக்கும் அது நிகழ்காலமாகிவிட்டது. பிறகு சற்று நேரத்தில் வண்டி ஓடி மறைந்து விட்டது எனக்கு. என்வரை கடந்த காலமாகிவிட்டது. ஆனால் மரத்தின் மேல் இருந்து நீங்கள், “இல்லை, எனக்கு இப்போதும் தெரிகிறது” என்கிறீர்கள். எனக்கு முதலில் எதிர்காலத்திலிருந்து நிகழ்காலத்திற்கு வந்து கடந்த காலமாகிவிட்டது. ஆனால் உங்களுக்கு ஒரே தளத்தில், நிகழ்காலத்திலேயே இருக்கிறது. நீங்கள் என்னைவிட உயரத்தில் அமர்ந்திருக்கிறீர்கள்” என அருமையான விளக்கம் ஒன்றைத் தருகிறார். மனிதர்களாகிய நாமும் பிரக்ஞையின் மிக உயர்ந்த தளத்தில் இருந்தால் வாழ்க்கையில் நமக்கு நடப்பவை அனைத்தும் வேடிக்கையாகவே தோன்றும். மகாபாரத பாத்திரங்கள் அனைவரும் இந்த உண்மையை அறியாமல் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள் நம்மைப்போல. எனவே துருபதனும் அதற்கு விலக்கல்ல.

பால்ஹிக குலத்தைச் சேர்ந்த மத்ரநாட்டு அரசர் சல்லியரும், சௌவீர நாட்டரசர் சுமித்ரரும், பால்ஹிக நாட்டின் மன்னர் சோமதத்தரும், பூரிசிரவஸூம் மற்றும் பலரும் கூடிப்பேசும் பகுதி, பொன்னியின் செல்வனில் பழுவூர் அரண்மனையில் நடக்கும் சதியாலோசனைக் கூட்டத்தை நினைவுக்குக் கொண்டு வருகிறது. காந்தாரத்தின் சகுனியிடமிருந்தும், துவாரகையின் கிருஷ்ணனிடமிருந்தும் தங்களுக்கு வரும் ஆபத்தைத் தடுக்க, ஒரே குருதியான பால்ஹிக குடிகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும் என்று அவர்கள் முடிவுசெய்கிறார்கள். அதற்காக பால்ஹிக குடியின் பிதாமகரான பால்ஹிகரை சைப்ரபுரியிலிருந்து அழைத்துவரும் பொருட்டு பூரிசிரவஸை அனுப்புகிறார்கள்.

பூரிசிரவஸ் அதற்காக சைப்ரபுரி பயணப்படுவதும், அவன் வழியெங்கும் காணும் காட்சிகளும், பால்ஹிகரை சந்தித்து அவரை அழைத்துக்கொண்டு தன் நாட்டுக்குத் திரும்பும் சித்தரிப்புகளும் மிகப்பிரமாதமாக அமைந்து நம்மை கடந்த காலத்துக்கே அழைத்துச் செல்கிறது. ஏழு அன்னையரின் கோயிலும், நகரப்பெண்களின் விழிப்பும், கடைவீதியும் இன்ன பிறவும் அற்புதமாக, நாவலின் கதையோட்டத்திற்கு சுவை கூட்டும் வண்ணம் ஆசிரியரால் சிறப்பாக சித்தரிக்கப்பட்டுள்ளது. பித்துப்பிடித்தவராக தோன்றும் பால்ஹிகரின் பாத்திரம் போகப்போக விஸ்வரூபம் அடைந்து நம் உள்ளத்தில் நீங்கா சிம்மாசனமிட்டு அமர்ந்துவிடுகிறது. இவை அனைத்தையும் ஒன்றிணைக்கும் விதமாக வேளாண்குடிகளுக்குரிய அரசை நிறுவும் ஆசை கொண்ட பூரிசிரவஸ் பாத்திரம் கச்சிதமாக அமைந்த கற்பனையின் வீச்சால் வாசிப்பின் இன்பத்தைப் பெருக்குகிறது.

வெறும் மலைவேடர் குழுக்களைக் கொண்டு தனக்கான அரசை ஸ்தாபிக்க முடியுமா என்று சந்தேகமும் கோபமும் கொள்ளும் பூரிசிரவஸ், கோட்டை அமைக்க வேண்டும் என்ற எளிய காரியத்தினால் விளையும் சாதகங்களை எண்ணிப் பார்த்துத் தனது சந்தேகத்தையும் கோபத்தையும் விட்டொழிப்பது வாசிப்பில் மனவெழுச்சி தருவதாக அமைந்திருக்கிறது. “மலைகள் சூழ்ந்திருக்கையில் பாதுகாப்புக்கென கோட்டை தேவையில்லைதான். ஆனால் கோட்டை கண்கூடான எல்லை. இன்று அந்நகரம் ஓர் அக உருவகம் மட்டுமே. ஒவ்வொருவருக்கும் அதன் எல்லை ஒவ்வொன்று. கோட்டை அதற்கொரு உடலை அளிக்கிறது. அதன்பின்னரே அந்நகரம் விழிகளால் பார்க்கப்படுவதாகிறது. தங்களை இம்மக்கள் இன்று ஒரு கூட்டமாகவே உணர்கிறார்கள். கோட்டைக்குப்பின் அவர்கள் ஒரு பேருடலாக உணர்வார்கள். ஒரு கொடியசைவு ஓர் எரியம்பு ஒரு முரசொலி அவர்களை முழுமையாகவே கட்டுப்படுத்தும்” என்று அவனுள்ளே ஓடும் சிந்தனைகள் மிக எளிமையான ஒரு காரியம் எத்தனை இன்னல்களை நீக்கிவிடுகிறது என்பதை உணர்த்துகிறது.

(தொடரும்)
1. பாஞ்சாலியும் பாண்டவர்களும்
Related Posts Plugin for WordPress, Blogger...