ஜெயமோகனின் ‘வெண்முகில் நகரம்’-1: பாஞ்சாலியும் பாண்டவர்களும்

பாஞ்சாலியை பாண்டவர்கள் ஐவரும் அடையும் ஆரம்ப அத்தியாயங்கள் வழியாக வெண்முகில் நகரம் தொடங்குகிறது. ஒவ்வொருவருக்கும் அவளை அடைய விருப்பம் இருந்தாலும், அடுத்தவர்தான் தன்னைவிடவும் அவளை அதிகமும் விரும்புகிறார்கள் என்றெண்ணி, தயக்கமும் சங்கடமும் கொள்கிறார்கள். அப்போது பாணன், “ஐவரும் அவளை அடைய அன்னை ஆணையிட்டபோது உங்கள் அகம் கிளர்ந்தெழுந்தது. அவ்விழைவை நீங்கள் அஞ்சினீர்கள். ஆகவே அதை வெல்ல முயன்றீர்கள். அந்தப் பொறுப்பை உங்கள் அன்னையே ஏற்றதை எண்ணி அகமகிழவும் செய்தீர்கள். அவள் கைப்பற்றும்போது உங்கள் உள்ளம் குளிர்ந்தது. அவளுடன் மணமேடையில் நின்றபோது உங்கள் தலைகள் தருக்கி நிமிர்ந்திருந்தன” என்று சொல்லி அனைவரின் உள்ளக்கிடக்கையை வெட்ட வெளிச்சமாக்குகிறான். எனவே தருமன் குளிர்காற்று காலத்திலும், அர்ஜூனன் மழைக்காலத்திலும், பீமன் காற்றடிக் காலத்திலும், நகுலன் கோடைக்காலத்திலும், சகதேவன் வசந்த காலத்திலும் பாஞ்சாலியோடு வாழவேண்டும் என்று விறலி சொல்கிறாள்.

“ஐந்து மைந்தரை பெற்றெடுக்க முடியும் என்றால் ஐந்து ஆடவரை காதலிக்கவும் பெண்ணால் முடியும்” என்று சொல்லும் விறலி பாண்டவர்களின் சந்தேகங்களையும், தயக்கங்களையும் உடைக்கிறாள். பாஞ்சாலியைப் பற்றிச் சொல்லும்போது ஓஷோ, “Man lives by ego and woman by jealousy. Really jealousy is the passive form of ego, and ego is the active form of jealousy. But here is a woman who rose above jealousy and pettiness; she loved the Pandavas without any reservations. In many ways Draupadi towered over her husbands who were very jealous of one another on account of her love. They remained in constant psychological conflict with each other, while Draupadi went through his complex relationship with perfect ease and equanimity” என்று அருமையான ஒரு கருத்தைச் சொல்கிறார். இதை பிரதிபலிப்பதாகவே பாஞ்சாலியுடனான பாண்டவர்களின் அணுகுமுறை பற்றிய சித்தரிப்பு ஜெயமோகனிடம் வெளிப்படுகிறது.

விதிவிலக்காக ஒன்று நிகழும்போது, அதை எதிர்கொள்வதும் அதன் உள்ளுறையும் நுட்பங்களை அறிந்துகொள்வதும் மிகச் சவாலானது. ஏனெனில் அது நமக்குப் பழக்கமான ஒன்றல்ல; முற்றிலும் அந்நியமானது. எனவே அதை கிரகிக்கவும் அறியவும் முற்றும் மாறான கோணத்தில் அதை அணுகவேண்டியது அவசியம். அந்த அணுகுமுறையை வெண்முகில் நகரத்தின் தொடக்க அத்தியாயங்களில் மிகச் சிறப்பாக கையாண்டிருக்கிறார் ஜெயமோகன். பாண்டவர்கள் ஐவரும் பாஞ்சாலியை எதிர்கொள்ளும் விரிவான சித்தரிப்பு அந்த அணுகுமுறையின் காரணமாகவே ரசிக்கத்தக்கதாக ஆகிறது.

தருமன் தயக்கத்துடனே பாஞ்சாலியை எதிர்கொள்கிறான். தான் இதுவரை கற்ற நூல்களின் துணைகொண்டு இந்நிகழ்வை எப்படி எதிர்கொள்வது என்று ஆராய்கிறான். “ஊழிப்பசி கொண்டவன் என அள்ளி உண்ட நூல்களெல்லாம் கருங்கல் துண்டுகளென பொருளற்றுப்போவது ஏன்? நூல்களை நோக்கி மூடிக்கொள்ளும் அகவாயில் என்ன?” என்று யோசிக்கும் அவன் அங்கிருந்து ‘ஓடிவிடலாமா’ என்று கூட முயற்சிக்கிறான். நூல்கள் பல கற்றவன் எல்லாவற்றுக்கும் நூல்களிலிருந்து விடை காண முயல்கிறான். ஆனால் அவன் எப்பொழுதும் எதிர்கொள்ளும் நிஜத்திற்கு, நூல்களிலிருந்து கற்றுக் கொண்டவைகள் ஒருபோதும் தீர்வாக அமைவதில்லை.

பாஞ்சாலியைக் காணும் அவன், ”இதுதான் இன்பமா? வாழ்க்கையின் இனிய தருணங்களெல்லாம் இப்படித்தான் வந்துசெல்லுமா? இனியவை என தன் வாழ்க்கையில் எதுவுமே நிழ்ந்ததில்லை என்று தோன்றியது. நெஞ்சம் அலைகளழிந்து அமைந்த கணங்கள் நினைவில் பதிந்து கனவென நீடிக்கின்றன. ஆனால் அவை உவகையின் கணங்கள் அல்ல. உவகை என்பதுதான் என்ன?” என்று சிந்திக்கிறான். வாழ்வின் இன்பமான தருணங்களில் நாம் அந்த இன்பத்தை முழுமையாக அனுபவித்தோமா என்று கேட்டால் அதற்கான பதில் ‘இல்லை’ என்பதாகத்தான் இருக்கும். அகம் மகிழ்ந்து முழுமையாக நாம் அனுபவித்த இன்பம் என்று ஒன்று எப்போதுமே கிடைப்பதில்லை. கிடைக்கும் இன்பத்தை ஐம்புலன்களும் தோய்ந்து அனுபவிக்க முடியாமல் ஏதோ ஒன்று தடையாகிறது. எனவே தர்மன் தத்தளிக்கிறான்; தவிக்கிறான்.

தர்மன் நிலை இவ்வாறெனில் அர்ஜூனன் எதையும் யோசிக்காமல் வெற்றுக் காமத்துடன் மட்டுமே பாஞ்சாலியை அணுகுகிறான். நகுலனும் சகதேவனும் சற்றே இயல்பாக அவளை நெருங்குகிறார்கள் எனினும் பீமன் ஒருவனே அவளை மிக இயல்பாகவும் இலகுவாகவும் எதிர்கொள்கிறான். மற்ற நால்வரையும்விட, மூளையில் ஏற்படும் சிக்கலான சிந்தனைகளன்றி, பீமன் தன்னுடைய உடம்பின் இயல்பான தன்மையில் பாஞ்சாலியை எதிர்கொள்கிறான். பாஞ்சாலியை சந்திக்கும் முன் உணவு உண்ட அவன், “உண்பதை நான் விலங்குகளிடமிருந்து கற்றுக்கொண்டேன். அதற்கு நான்கு நெறிகள்தான். இவ்வுணவு அரிதானது என எண்ணுதல். உண்ணும்போது உணவை மட்டுமே எண்ணுதல். வீணடிக்காது உண்ணுதல். பகிர்ந்துண்ணுதல்” என்கிறான். அவனது இந்த மனோபாவமே பாஞ்சாலியை எதிர்கொள்வதில் அவனுக்கிருந்த சிக்கல்களை முற்றாகக் களைகிறது. பாஞ்சாலியை நெருங்குவதில் தருமனும் பீமனும் இரு துருவங்களாக அமைய, இவர்கள் இருவருக்குமிடையே மற்ற மூவரும் நிற்கிறார்கள்.

பாண்டவர்கள் ஐவரும் பாஞ்சாலியுடன் கொள்ளும் உறவை நீண்ட பக்கங்களில் விரிவாக சித்தரித்திருப்பதன் மூலம், அந்த அறுவரின் உள்ளத்தைத் தெளிவாக அறியவும், அந்த அறிதலினூடே பாஞ்சாலி ஐவரை ஏற்றுக்கொண்ட ஒவ்வாமை குறித்த நம் கருத்தை விலக்கி, இயல்பான ஒன்றாக அதை எடுத்துக்கொள்ளவும் ஜெயமோகன் எழுத்து வழிசெய்கிறது. ஆக, மகாபாரத காலத்திற்கே நம்மை அழைத்துச் சென்று, அதன் கதை மாந்தர்கள் மனதில் உட்புக வைத்து, அவர்களின் உணர்வுகளை நுட்பமாக படம் பிடித்து, பெரியதோர் வாயிலை திறக்கச் செய்கிறது வெண்முகில் நகரத்தின் தொடக்கம்.

(தொடரும்)

Related Posts Plugin for WordPress, Blogger...