September 30, 2015

FACTOTUM -CHARLES BUKOWSKI: வாழ நினைத்தால் வாழலாம்!

HAM ON RYE-க்கு அடுத்ததாக சார்லஸ் புகோவெஸ்கியின் முக்கியமான நாவலாக கருதப்படுவது FACTOTUM. இதை ஒரு வகையில் முந்தைய நாவலின் தொடர்ச்சி என்று சொல்லலாம். HAM ON RYE-ல் ஓர் இளைஞனின் கல்வி கற்கும் பருவத்தை சித்தரித்த புகோவெஸ்கி இந்நாவலில் அவன் வேலைக்காக படும்பாடுகளை சொல்லிச் செல்கிறார். லாஸ் ஏஞ்சல் நகரத்திலிருந்து நியூ ஆர்லினென்ஸூக்கு வந்திறங்கும் ஹென்றி சினன்ஸ்கியின் கையில் இருக்கும் பெட்டியுன் விவரணையுடன் தொடங்கும் நாவல், அந்தப் பெட்டியின் சாயம் போன அவல நிலையைச் சொல்வதன் மூலமாக அவனது நிர்க்கதியான நிலையை படம் பிடித்துக் காட்டுகிறது. கிடைக்கும் வேலையைச் செய்து கொண்டு காலத்தை ஓட்டும் அவன் ஒரு கட்டத்துக்கு மேல் சலிப்புற்று, வீட்டுக்கே திரும்புகிறான். வீட்டில் சாப்பிடுவதற்கும், தங்குவதற்கும் பணம் கொடுக்க வேண்டும் என்று சொல்லும் அவன் தந்தை, ஒவ்வொரு நாளும் வேலை கிடைத்ததா என்று கேட்டு நச்சரித்து, ‘வேலை செய்யவேண்டும் என்று விரும்பினால் எந்த வேலையும் கிடைக்கும்’ என்று அறிவுரையும் சொல்கிறார்.

ஒரு முறை அவனும் அவன் நண்பனும் சேர்ந்து குடித்துவிட்டு, லாஸ் ஏஞ்சல் நகரத்தில் வரலாறு காணாத டிராஃபிக் ஜாம் ஒன்றைச் செய்யவே கைது செய்யப்படுகிறான். அதனால் கடும் கோபம் அடையும் அவன் தந்தை, லஞ்சம் கொடுத்து அவனை வெளியே கொண்டு வருவதோடு அதற்கான பணத்தையும் அவனுடைய கணக்கில் பற்றெழுதுகிறார். மீண்டும் வீட்டிலிருந்து வெளியேறும் ஹென்றி நகரம் நகரமாக அலைகிறான். எந்த ஒரு வேலையிலும் நிரந்தரமாக நில்லாது பல்வேறு வேலைகளைச் செய்துகொண்டு, எப்போதும் குடித்துக்கொண்டு நாட்களை ஓட்டுகிறான். இந்நிலையில் அவ்வப்போது தான் எழுதும் கதைககளை பத்திரிக்கைக்கு அனுப்பி வைக்கிறான். அனுப்பியவைகள் அனைத்தும் ‘நிராகரிக்கப்பட்டது’ என்ற குறிப்போடு திரும்பி வருகின்றன.

தான் எழுதிய பலவும் திரும்பிய நிலையில் Clay Gladmore என்ற பத்திரிக்கையிலிருந்து My Beerdrunk Soul is Sadder Than All The Dead Christmas என்ற சிறுகதையை ஏற்றுக்கொள்வதாக பதில் வருகிறது. அதைக் கண்டு உவகையும் உற்சாகமும் கொள்கிறான் ஹென்றி. தன்னுடைய எழுத்தை முதன் முதலாகப் பத்திரிக்கையில் பார்த்து பரவசமடையும் அவனது உணர்வுகளை, “I got up from the chair still holding my acceptance slip. MY FIRST. From the number one literary magazine in America. Never had the world looked so good, so full of promise. I walked over to the bed, sat down, read it again. I studied each curve in the handwriting of Gladmore's signature. I got up, walked the acceptance slip over to the dresser, propped it there. Then I undressed, turned out the lights and went to bed. I couldn't sleep. I got up, turned on the light, walked over to the dresser and read it again” என்று படம் பிடிக்கிறார் புகோவெஸ்கி.

ஆனால் அதற்குப் பிறகும் அவன் வாழ்வில் எந்தப் பெரிய மாறுதலும் நிகழாத நிலையில், நியூயார்க், செயின்ட லூயிஸ், மியாமி என்று நகரங்களையும் வேலையையும் மாற்றிக்கொண்டே இருக்கிறான். குடியும் பெண்களுடனான தொடர்பும் மட்டுமே அவனிடம் மாறாமல் நிரந்தரமாக இருந்து வருகிறது. இன்ன வேலைதான் என்றில்லாது கிடைத்த அத்தனை வேலைகளையும் செய்கிறான். ஒரு மனிதன் தன் வாழ்நாளில் இத்தனை வேலைகளைச் செய்திருக்க முடியுமா என வியக்குமளவிற்கு எண்ணற்ற வேலைகள். அவை அத்தனையும் புகோவெஸ்கியின் சொந்த அனுபவங்கள்தான். ஒரு மனிதன் வாழ நினைத்தால் எந்த வேலையையும் செய்து வாழ முடியும் என்பதையே, புகோவெஸ்கியின் அனுபவங்கள் நம்முன் கதையாக விரியும்போது, நாம் அறிந்துகொள்கிறோம்.

இத்தனைக்கும் இடையிலும் தான் ஒரு எழுத்தாளன் என்ற உணர்வும், அதற்கான தகிப்பும் ஹென்றியிடம் இருந்துகொண்டே இருக்கிறது. இருந்தும் அவன் வேலை தேடுவதும், கிடைத்த வேலையை இழப்பதும், மீண்டும் வேலை தேடுவதும் அவன் வாழ்வில் தொடர்கதையாக வளர்ந்து கொண்டே இருக்கிறது. ஒருவன் தான் என்னவாக ஆக விரும்புகிறான் என்பதைவிட அவனுடைய பிழைப்புக்கான வேலையைச் செய்வது நிர்பந்தமாகிறது என்பதை பின்வரும் புகோவெஸ்கி்யின் வரிகள் அற்புதமாகப் படம் பிடிக்கிறது: “That was all a man needed: hope. It was lack of hope that discouraged a man. I remembered my New Orleans days, living on two five-cent candy bars a day for weeks at a time in order to have leisure to write. But starvation, unfortunately, didn't improve art. It only hindered it. A man's soul was rooted in his stomach. A man could write much better after eating a porterhouse steak and drinking a pint of whiskey than he could ever write after eating a nickel candy bar. The myth of the starving artist was a hoax. Once you realized that everything was a hoax you got wise and began to bleed and burn your fellow man. I'd build an empire upon the broken bodies and lives of helpless men, women, and children - I'd shove it to them all the way. I'd show them!”

இதன் காரணமாகவே அவன் ஒவ்வொரு வேலையையும் ஏற்றுக்கொள்ளும் போது, "I always started a job with the feeling that I'd soon quit or be fired, and this gave me a relaxed manner that was mistaken for intelligence or some secret power" என்ற மனோபாவம் அவனிடம் இயல்பாக படிந்து விடுகிறது. ஒரு வகையில் அவனது அந்த மனோபாவமே அவனிடம் பொதிந்திருக்கும் எழுத்தாளன் என்ற உணர்வைத் தக்க வைக்கிறது எனலாம். சாதாரண மனிதர்களுக்கும் அசாதாரணமான மனிதர்களுக்கும் இடையே உள்ள மிகப்பெரும் வேறுபாடு இதுவே. வாழ்கையில் ஒருவர் தான் விரும்பியதை அடைய இந்த மனோநிலை மிகமிக அவசியமானது. ஒன்றையே சாசுவதம் என்று பற்றிக் கொள்வதைவிட, எதையும் ஏற்றுக்கொள்ளும் துணிச்சலே விரும்பியதை அடைய வழிகாட்டும் என்பதை புகோவெஸ்கியின் வாழ்க்கை நிரூபிக்கிறது.

மிகப்பிரபலமான ஒரு மனிதனின் கடந்த கால வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கும்போது, வாழ்க்கையின் உச்சியில் அவனைக் கொண்டு சேர்த்த அந்தத் தருணம் எது என்பதை நாம் ஆராய முற்படுகிறோம். ஏதோ ஒன்றை மட்டும் கண்டுபிடிக்கவும் அதை நம்முடைய சொந்த வாழ்க்கையில் பயன்படுத்தவும் விழைகிறோம். ஆனால் அது அப்படி அல்ல. அந்தப் பிரபலமான மனிதனின் வாழ்க்கையில் நடந்த ஒவ்வொரு தருணமும் முக்கியமானதுதான். அந்த அத்தனை தருணங்களும் ஒன்று சேர்ந்தே அவனை அந்த உச்சிக்கு அழைத்துச் சென்றிருக்கிறது. புகோவெஸ்கியின் இந்த நாவலை வாசிக்கும்போது நாம் உணர்வதும் அறிவதும் இப் பேரனுபவத்தைத்தான். வாழ நினைத்தால் வாழலாம் என்பது உண்மைதான் என்றாலும், நினைத்த வாழ்வை வாழ முடியுமா என்ற கேள்வியை புகோவெஸ்கியின் இந்த நாவல் நம்முள் எழுப்புகிறது.

Bent Hamer புகோவெஸ்கியின் இந்த நாவலை 2005-ல் திரைப்படமாக எடுத்திருக்கிறார்.

Related Posts Plugin for WordPress, Blogger...