என் வாசிப்பில் சாண்டில்யனும் கல்கியும்

நான் பத்தாவது படிக்கும்போது சாண்டியல்யன் புத்தகங்களைப் படிக்கத் தொடங்கினேன். அவர் சொல்வதில் வரலாறு இருக்கிறதா? எவ்வளவு தூரம் கதையில் வரலாறு வெளிப்பட்டிருக்கிறது? எது வரலாறு? எவையெல்லாம் கற்பனை? என்பதெல்லாம் அறியாத பருவம். சுவாரஸ்யமாக கதையில் மூழ்கி என்னை மறந்து நான் கற்பனையின் வெளியில் மிதக்க வேண்டும் என்பதுதான் ஒரே ஆசை. பள்ளி விடுமுறை நாட்களில் நான் மாமா வீட்டிற்குச் செல்வேன். பல்வேறு அறைகள் கொண்ட, இரண்டு மாடிகள் அருகருகே இணைக்கப்பட்ட பெரிய மாடி வீடு அவர்களுடையது. எனவே யார் எந்த அறையில் இருக்கிறார்கள் என்பதைக் கண்டுபிடிப்பது கடினம். மாமாவின் வாசிப்பறையில்தான் நான் முதன் முதலாக சாண்டியல் புத்தகங்கள் பலவற்றையும் பார்த்தேன். நான் என்னுடைய கூச்ச சுபாவத்தின் காரணமாக யாருடனும் சகஜமாகப் பழக மாட்டேன். எனவே அங்கே சென்றால் அந்த அறையில் புகுந்துகொள்வேன். எந்தவித இடையூறும் இன்றி நாள் கணக்காக புத்தகத்தில் மூழ்கியிருப்பேன். அது ஒரு அற்புத அனுபவம். மாடி அறை, தனிமை, நிசப்தம், கவலையின்மை, சுதந்திரம் ஆகியன புத்தக வாசிப்பின் ரசனையைப் பலமடங்காகப் பெருக்கிவிடும்! மீண்டும் திரும்பக் கிடைக்காத அந்தக் காலங்கள் மன ஏட்டில் தீட்டிய ஓவியமாய் இன்னும் அழியாதிருக்கிறது. நான் அங்கே படித்துக் கொண்டிருக்கும் காட்சி, அந்த அறை, ஜன்னல் கம்பிகளினூடே தூரத்தே தெரியும் பசுமை அடர்ந்த மரங்கள் (இன்று அந்தப் பசுமை காணாமல் போய்விட்டது) முதலியன இப்போதும் என் கண்முன்னே நிஜம் போல காட்சி தருகின்றன! 

மேல்நிலை முதலாம் ஆண்டு படித்த நாட்களில்தான் கல்கியை அறிந்தேன். சரித்திரக் கதைகள் என்றாலே அது சாண்டில்யதான், அவரைத் தவிர வேறு யாரும் அப்படி எழுத முடியாது என்ற எண்ணம் எனக்கிருந்தது. ஏனெனில் அவரது பல கதைகளை நான் படித்திருந்தேன். அந்த எண்ணத்தைத் தவிடு பொடியாக்கியவர் கல்கி. அவரது பொன்னியின் செல்வனை நண்பர் ஒருவரிடமிருந்து வாங்கிப் படித்தேன். என்னைக் கிறங்க வைத்து என் மனதை முழுவதுமாக ஆக்ரமித்து பல நாட்கள் நான் அந்தக் கற்பனை உலகிலேயே உலவிக் கொண்டிருந்தேன். எந்தப் புத்தகமும் எனக்குப் பிடித்திருந்தால் அதை உடனே என்னுடையதாக ஆக்கிக்கொள்வது என் குணம் (காசு கொடுத்து வாங்கித்தான்!). ஆனால் ஐந்து பாகங்கள் என்பதால் அதன் விலை என் சக்திக்கு அப்பாற்பட்டதாக இருந்தது. கல்கி வார இதழில் அது அவ்வப்போது மீண்டும் மீண்டும் தொடராக வரும். அப்படியான சந்தர்ப்பத்தில் வாரவாரம் வாங்கி சேகரித்து நானே பைண்டு செய்து வைத்துப் படித்தேன். அதன் பிறகு அவரது பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம் என்ற கதைகளை வாசித்தேன். 

சாண்டியல்யனின் கதைக்களன்கள் அரச குடும்பத்துக்கு இடையே மட்டும் நிகழும். அதில் சாதாரண மக்கள் பங்கெடுக்க முடியாது. ஆனால் கல்கி அப்படியல்ல. சாதாரண முனியனும் சுப்பனும் அவர் கதையில் அரசருக்கு நண்பராக உலா வருவார்கள். போரும் அதன் திட்டங்களும், சூழ்ச்சிகளும் சாண்டியல் கதையில் பிரதானமானவை. ஆனால் கல்கியின் கதைகளில் போர் முடிந்த பிறகான எஞ்சிய காட்சிகளையே நாம் காண முடியும். கதைகளில் புதிர் வைத்து அதை பின்னிச் சென்று அதன் உச்சியில் அவற்றை விடுவிப்பதாக கல்கியின் கதை இருக்கும். ஆனால் சாண்டில்யன் கதைகளில் அத்தியாயத்திற்கு அத்தியாயம் திருப்பங்களும் ஆச்சர்யங்களும் நிறைந்திருக்கும். கல்கியின் கதைகளில் வரும் நிலக்காட்சிகள் பரந்துபட்டவை. சாண்டில்யன் கதைகள் ஒரு எல்லைக்குட்பட்ட நிலப்பரப்பில் நடப்பவை. கல்கியின் கதைகளில் வரும் வெள்ளமும், புயலும் பிரசித்தி பெற்றவை. அவற்றின் வர்ணனைகளே புதிய வாசகர்களை ஈர்த்து படிக்கும் ஆவலை ஏற்படுத்துபவை. 

ஒவ்வொரு கதையிலும் கதாநாயகனுக்குக் கொடுக்கும் முக்கியத்துவம், அவன் எதிரிகளின் திட்டத்தை முறியடிக்கும் வழி முறைகள் ஆகியன மூலம் அவன் மேற்கொள்ளும் சாகஸம் சாண்டில்யன் கதைகளில் பிரமாதமாக இருக்கும். போரில் இரு தரப்பினரும் மேற்கொள்ளும் தந்திரங்களும், அது நிறைவேறும் அல்லது தோற்றுப் போகும் தருணங்களும் அவர் கதைகளை நாடுவோர் விரும்புபவை. எனவே அவரது கதாநாயகன் நமக்கு மிகுந்த ஆற்றலும் அறிவும் மிக்க, நம்மிலிருந்து விலகி நிற்கும் ஒரு பாத்திரமாக இருப்பான். ஆனால் கல்கியின் கதாநாயகர்கள் நம்முடன் நெருக்கமாக ஒட்டி உறவாடக் கூடியவர்கள். புத்திசாலித் தனத்தைப் போலவே அவர்களிடம் முட்டாள்தனமும் இயல்பாக வெளிப்படும் தருணங்கள் ஏராளமாக இருக்கும். சாண்டில்யன் கதைகளில் வரும் வர்ணனைகள் பலருக்குப் பிடிக்காது, அவற்றைத் தவிர்த்துவிட்டுக் கதைகளை மட்டுமே பலர் வாசிப்பார்கள். எனக்கோ கதையில் வர்ணனைகள் முக்கியமானவை. உரையாடல்களை விடவும் இத்தகைய வர்ணனைகள் நான் வெகுவாக விரும்பினேன். வாசிப்பில் மிகுந்த கவனத்தைக் கோருபவை இத்தகைய வர்ணனைகளே. எனவே இவற்றைப் படிக்கும்போது எதையும் கவனத்துடன் கூர்ந்து படிக்கும் பயிற்சி கிட்டுகிறது. பிந்தைதைய காலங்களில் படித்த பல்வேறு புத்தகங்களின் வாசிப்பிற்கு இந்தப் பயிற்சி ஒருவகையில் எனக்குத் துணை செய்திருக்கின்றன என்பதை நான் உணர முடிகிறது. 

சாண்டில்யன் கதைகளின் கதை மாந்தர்கள் சற்றேறக்குறைய ஒன்று போலவே இருப்பார்கள். கதைக்குக் கதை அவர்களிடம் அதிக வித்தியாசத்தை நாம் பார்க்க முடியாது. எனவேதான் ஒவியர்கள் கூட அவரின் எல்லா கதைக்கும் ஒன்று போலவே படத்தை வரைந்திருப்பார்கள். ஆனால் கல்கியின் கதாபாத்திரங்கள் ஒவ்வொருவரும் தனித்துவம் மிக்கவர்கள். நரேந்திர வர்மப் பல்வன், பார்த்திபன், நந்தினி, வானதி, பழுவேட்டையர், சின்ன பழுவேட்டையர், சிவகாமி, வந்தியத் தேவன் என தனித்தன்மை மிக்க கதாபாத்திரங்கள் நிரம்ப உண்டு. எனவே அவர்கள் ஒவ்வொருவரையும் நாம் நம்முடைய மனக்கண்ணில் துல்லியமாக அறிய முடியும். சாண்டில்யனின் கதாபாத்திரங்களை பொருத்தவரை நாம் அப்படி ஒரு அனுபவத்தைப் பெற முடியாது. 

சாண்டில்யன் கதைகள் வரலாற்றுக்கு அருகிலும், கல்கியின் கதைகள் வரலாற்றிலிருந்து விலகி தன்னிச்சையாக செல்வதாகவும் தெரியும். ஆனால் அவை இரண்டுமே உண்மை அல்ல. இவருமே தங்கள் போக்கில் பாத்திரங்களை வளர்த்துக் கொண்டு போகிறவர்கள்தான். படிப்பவர்களுக்கு சுவாரஸ்யம் தருவதும், வாசகனைச் சிந்திக்க விடாமல் அவனைத் தங்கள் போக்கில் தரதரவென இழுத்துச் செல்வதும்தான் அவர்களின் குறிக்கோள். வரலாறு, சரித்திரம் என்பது அவர்களுக்கு ஒரு பொருட்டல்ல. அவைகள் ஒரு சாக்கு அவ்வளவுதான். சுந்தர ராமசாமி சொல்வது போல, “ஏதாவது ஒரு வரி வாகாய் கிடைத்தால் போதும் தொள்ளாயிரம் பக்கத்துக்கு எழுதித் தள்ளிவிட மாட்டேன்” என்ற கதைதான்! நான் முதன் முதலாக சுந்தர ராமசாமியைப் படித்தபோது, “சிவகாமி அம்மாள் தன் சபதத்தை முடித்துவிட்டாளா?” என்ற ஜே.ஜேயின் கேள்வி எனக்குள் பல்வேறு கேள்விகளை எழுப்பியது. அதற்கு பதில்தேட முயன்றுதான் தீவிர இலக்கியத்தின் பக்கம் திரும்பினேன். இது நாள்வரை படித்தவை வெற்றுக் கதைகள் என்பதையும், வாழ்க்கையின் சிறு கீற்றைக்கூட அவைகளில் காண முடியாது என்பதையும் புரிந்து கொண்டேன். 

இன்று வாசிப்பின் எல்லைகள் பெருகப்பெருக அவர்களின் கதைகள் பைசா பெறுமானமில்லாதவை என்பது தெரிகிறது. அவர்களின் கதைகள் வாழ்க்கையைச் சொல்வதில்லை. வாழ்க்கையின் அடிப்படைகளை ஆராய்வதும் இல்லை. மாறாக நம்மைக் கட்டிப்போட்டு கதையின் சுழற்சியில், வெற்றுக் கற்பனைகளில் சஞ்சரிக்க வைக்கின்றன. அதில் கிடைக்கும் இன்பமே அக்கதைகளைப் பலரும் நாடிச்செல்ல காரணமாக இருக்கிறது. ஆனால் அவைகள் வாழ்க்கையின் மீது ஒரு சிறு தாக்கத்தைக் கூட ஏற்படுத்தும் சக்தியற்வை என்பதை உணரும்போது, அவற்றை படிக்கவேண்டிய அவசியமில்லாது போகிறது. சி.மோகன் வார்த்தைகளில் சொல்வதென்றால், “...மேலோட்டமான, பொக்கான மனம் கொண்டவர்கள் என்று தமிழப் பத்திரிக்கைள் மூலம் பிரபலமாகியிருக்கிற சகல 'நாவலாசிரியர்'களையும் சொல்லிவிடலாம். சுஜாதாவும் பாலகுமாரனும் இவற்றின் சிகர உதாரணங்கள். புத்திசாலித்தனத்தில், வாசகனை வசியம் பண்ணுவதில், மாயக் கற்பனைகளை விதைப்பதில் கொஞ்சம் கூடுதல் குறைவாக நாசூக்குகள் அமைந்திருக்கலாம். மற்றபடி, இவர்கள் வித்தியாசமற்றவர்கள், வியாபாரிகள்” என்பது இவர்களுக்கும் பொருந்தும். 

இருந்தும் இன்றைய என்னுடைய வாசிப்பிற்கு இவைகள் அடிப்படையாக இருந்தன என்பதை மறுப்பதற்கில்லை. இன்றைய தீவிர இலக்கிய வாசகர்களில் பெரும்பாலோர் அவர்களைக் கடந்து வந்தவர்களே. நம்மைச் சுற்றி இருக்கும் சூழலிலிருந்து கற்று, பின்னர் சுய உந்துதல் மூலம் கண்டடைந்து மேலும் மேலும் முன்னேறிச் செல்வது வாழ்க்கையைப் போலவே வாசிப்பிற்கும் உரியதே. அந்த வகையில் பெரும்பாலோர் இவர்களால் வாசகர்களாக உருவாகி முன்நகர்ந்தவர்களே. ஆனால் இவர்களே சாசுவதம் என்றிருப்பது நமது அறிவீனத்தை, அறியும் தாகம் இல்லாத சுயத்தை, வெற்றுக் கற்பனைகளில் மயங்கிக் கிடக்கும் இன்பத்தை நாடுவதைப் பறைசாற்றுவதாகவே அமையும். இவர்களின் கதைகள் வெறும் அரிச்சுவடிதான். அரிச்சுவடியைக் கற்றபின் மேற்கொண்டு கற்று முன்செல்வதே அறிவுடமை. முன்னேறும் பாதையில் கவனத்தைச் சிதறடிக்கும் இத்தகைய வெற்று ஆரவாரங்கள், மாய்மாலங்கள் இருக்கத்தான் செய்யும். அவற்றைப் புறக்கணித்து இளம் வாசகர்கள் சென்றேயாக வேண்டும். தன்னுடைய விரிவும் ஆழமும் தேடி என்ற கட்டுரையில் சுந்தர ராமசாமி ஓரிடத்தில் இவ்வாறு சொல்கிறார்: 

“தரமான புத்தகங்களைத் தேர்ந்தெடுப்பது ஓர் கலை. தரமற்ற புத்தகங்களை ஈவிரக்கமில்லாமல் நிராகரிப்பது அதை விடப் பெரிய கலை. நம்மை ஏமாற்ற வீசப்படும் தந்திர வலைகளுக்குத் தப்பி மிக மேலான புத்தகங்களைத் தேடி, தத்தம் காலங்களில் சமரசம் செய்துகொள்ள முற்றாக மறுத்த உண்மைகளின் குரல்களைத் தேடி, விடுதலைக்கான எழுத்துக்களைத் தேடி நாம் செல்ல வேண்டும். அது சற்று சிரமம் தரும் பயணம்தான். வழி நெடுகத் தரமற்ற புத்தகங்களின் குவியல். குறுக்கு வெற்றிகளின் சமரச இளிப்புகள். வணிகக் கனவுகளின் உப்பல்கள். பொய்ம்மையின் ஜாலங்கள். இவை நம் காலில் முள்ளாகக் குத்தும். இவற்றையெல்லாம் மிதித்துக் கொண்டு நாம் வெகுதூரம் போகவேண்டும்.” 

அது உண்மைதான். எல்லாக் கலைகளிலும் போலிகளின் தாக்கம் அபரிமிதமாக இருக்கத்தான் செய்யும். வாசிப்பை பொருத்த வரை அவற்றை இனம் கண்டு விலக்கும் விவேகம் வாசகர்களுக்கு இருப்பது அவசியம். இல்லையேல் மனதைக் கரையானாக அவைகள் அரித்துத் தின்று விடும். “... ஒரே வடிவமைப்பில் வெளிவரும் குளிர்பான, பீர் பாட்டில்களைப் போன்றவையே தயாரிப்புகள். இவற்றிலும்கூட ஒவ்வொரு நிறுவன பாட்டில்களும் சில வித்தியாசங்களைக் கொண்டிருப்பது போன்றே எழுத்தாளர்களின் முத்திரைத் தன்மைக்கேற்ப சில வித்தியாசங்கள் அமைந்துவிடும். ஆனால் அவை தயாரிப்புகள் என்பதில் எவ்வித பேதமும் அற்றவை. தயாரிப்புகளைப் படைப்புகளாகக் கொண்டாடும் துரதிருஷ்டம் நம்மைப் பீடித்திருக்கிறது. இவற்றை இனம் கண்டு பிரித்தறியும் ஒரு நல்ல வாசகன் தன்னையும் வளப்படுத்திக் கொள்கிறான் இலக்கியத்துக்கும் வளம் சேர்க்கிறான். அந்த நல்ல வாசகன் யார்?” என்ற கேள்வியை தன் கட்டுரை ஒன்றில் எழுப்புகிறார் சி.மோகன். அந்த நல்ல வாசகன் நாமாக இருக்க ஒவ்வொருவரும் பிரயத்தனப்பட வேண்டும்.

(மறுபிரசுரம். முதல் பிரசுரம் செப்டம்பர் 16, 2014)

Related Posts Plugin for WordPress, Blogger...