September 28, 2015

‘கு.ப.ரா’வும் அவரது மூன்று சிறுகதைகளும்

கு.ப.ரா. என்று சுருக்கமாக அழைக்கப்படும் கு.ப.ராஜகோபாலன் தமிழ் சிறுகதையின் முன்னோடி ஆவார். ஆண் பெண் உறவின் சிக்கலான பிரச்சினைகளை தன் கதைகளில் கொண்டுவந்தவர். குறிப்பாக ஆண் பெண் பாலியல் பிரச்சினைகளை நுட்பமாகத் தன் கதைகளில் சொல்லியவர். அது வெறும் பாலியில் சார்ந்த சிக்கல்களை பின்னனியாகக் கொண்ட படைப்புகள் மட்டுமல்ல, அதற்கும் அப்பால் அவை சார்ந்து எழும் உளவியல் சிக்கல்களைக் குறித்த கதைகள். அவை எழுதப்பட்ட காலத்தில் கண்டணத்துக்கும் நிந்தனைக்கும் உள்ளானவை. அவரின் எல்லா கதைகளின் அடிநாதமாக இருப்பது இதுவே. இதைப்பற்றி, ”செக்ஸ் என்பது பெண்ணின் அந்தரங்க உறுப்புகள் சம்பந்தப்பட்ட விஷயம் மட்டும் அல்ல. அது மானிட உணர்ச்சியின் அடிப்படை அம்சம்; மனக்கடலின் ஆழத்தில்-அடித்தளத்தில் பொதிந்து கிடக்கும் முதல் உணர்ச்சி” என்று சொல்கிறார் அவர்.

ஒரு படைப்பாளியின் எழுத்தாற்றலை அவர் எழுதும் காலத்தில் புரிந்து கொள்ளாமல், காலம் கடந்து புரிந்துகொள்வதும், போற்றுவதும் நம் சமூகத்திற்கு ஒன்றும் புதிதல்ல. எல்லா முக்கிய படைப்பாளிகளும் அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களே. செக்ஸ் விஷயங்களை எழுதுகிறார் என்ற குற்றச்சாட்டு கடைசிக் காலம் வரை கு.ப.ரா. மீது இச்சமூகத்தைக் கட்டிக்காப்பதாகச் சொல்லிக் கொண்டவர்களிடமிருந்து எழுந்தபடியே இருந்தது. `கனகாம்பரம்’ என்கிற சிறுகதை வெளியான போது `பழகுகிற நண்பனின் மனைவி காமக் கிளர்ச்சிகளை ஏற்படுத்தினால் அதை எழுதலாமா?’ என்ற சர்ச்சையை, ராஜாஜி கு.ப.ரா பெயரைக் குறிப்பிடாமல், இப்படியெல்லாம் எழுதக்கூடாது என்றார். `தாய்’ சிறுகதையைப் பத்திரிகைகள் பிரசுரம் செய்ய மறுத்துவிட்டன. 1943ஆம் ஆண்டு இன்னொரு சிறுகதையை இதே காரணம் சொல்லி கலைமகள் ஆசிரியர் கி.வா.ஜகந்நாதன் பிரசுரிக்க மறுத்துவிட்டார். இப்படி அவர் எழுத்துகள் நிராகரிக்கப்பட்டதை, இன்று அவர் வாழ்க்கையைப் பற்றி படிக்கும்போது நாம் அறிய முடிகிறது.

1
கு.ப.ராவின் ஆற்றாமை, சிறிது வெளிச்சம், கனகாம்பரம் மூன்று கதைகளும் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்பு உடையவை. இக்கதைகளில் பாலியல் ரீதியான உளவியல் சிக்கல்கள் பேசப்படுகின்றன. எல்லா கதைகளிலும் ஆண்-பெண்-பெண், ஆண்-பெண்-ஆண், ஆண்-பெண்-ஆண் என்றவாறு மூன்று கதாபாத்திரங்கள் மட்டுமே கதையை எடுத்துச் செல்கின்றன. இம் மூன்றிலும் ஆற்றாமை கதை மிகச் சிறப்பாக வந்திருப்பதாகக் கூறலாம். இதில் சாவித்திரி என்ற பெயர்  ஆற்றாமை, சிறிது வெளிச்சம் இரண்டு கதைகளிலும் கதாபாத்திரத்தின் பெயராக வருகிறது. ஆற்றாமை கதையின் நீட்சி என்று சிறிது வெளிச்சம் கதையைச் சொல்லலாம்.

ஆற்றாமையில், பக்கத்துக் குடித்தனம் நடத்தும் கமலா தன் கணவனோடு நெருக்கமாக இருப்பதைக் கண்டு சாவித்திரியின் மனம் கொதிக்கிறது. ராணுவத்தில் பணிபுரியும் அவள் கணவன் திருமணம் முடித்த கையோடு சென்றவன்தான் வருடம் இரண்டாகியும் வரவில்லை. எனவே அவளுள் கனன்று கொண்டிருக்கும் விரக தாபம் கமாலவின் மீதான பொறாமையாக மாறுகிறது. அவள் தன் கணவனோடு சந்தோஷமாக இருப்பது அவளுக்கு எரிச்சலையும் கோபத்தையும் தருகிறது.

இந்நிலையில் அன்று இரவு கமலாவின் கணவனைத் தேடி யாரோ வருகிறார்கள். அந்த இரவில் அவன் கமலாவோடு இருப்பான் என்பது சாவித்திரிக்குத் தெரிகிறது. அவள் மனதில் குரூரமான எண்ணம் எழுகிறது. கதவைத் தட்டுங்கள் வருவார்கள் என்று சொல்லி நடப்பதை வேடிக்கை பார்க்கிறாள். அவர்களின் சந்தோஷத்தைக் கலைத்துவிட்டதாக அவளுள் திருப்தி ஏற்படுகிறது. ஆனால் மறுகணமே, தான் தவறு செய்துவிட்டதாக உணர்ந்து, ”திருப்திதானா பேயே” என்று தன்னையே கடிந்துகொள்கிறாள்.

இந்த கதை நம் மனதில் எழுப்பும் கேள்விகள் பல. மனிதனுக்கு அடுத்தவர் சந்தோஷத்தைக் குலைப்பதில் ஏன் திருப்தி ஏற்படுகிறது? தனக்கு ஒன்று கிடைக்கவில்லை என்பதற்காக, அது கிடைத்தவன் மீது எரிச்சலும் போபமும் அடைவது ஏன்? இந்த குணத்தை தன்னிடமிருந்து முற்றாகக் களைய அவன் செய்யவேண்டியது என்ன? போன்ற கேள்விகள் பிறக்கின்றன. இந்த கதையின் வீச்சு எங்கே இருக்கிறது என்றால், சக மனிதனின் பொருட்களின் மீதும், உடைமைகள் மீதும் ஒருவன் பொறாமை அடைவது சரி. ஆனால் ஒரு மனிதன் பெரும் கண்ணுக்குப் புலப்படாத சந்தோஷத்தின் மீதும் அசூசையும் அதிருப்தியும் அடைய முடியும் என்பது எவ்வளவு கேவலமானது எனும் கேள்வியை கு.ப.ரா. நம்முன் வைப்பதன் மூலம் இக்கதையின் வீச்சை புலப்படுத்துகிறார்.

6
கணவன் மனைவி என்ற உறவில் விரிசலும், சிக்கல்களும் ஏற்பட அடிப்படையாக அமைவது இல்லற சுகத்தில் ஏற்படும் ஏமாற்றம் என்று இன்று வெளிப்படையாக ஒப்புக்கொள்கிறோம். ஆனால் அந்நாட்களில் இவ்விசயத்தைப் பேசுபவர்கள் யார்? கணவன் மனைவிக்குள் எழும் இந்த சிக்கல் மூன்றாம் மனிதருக்குத் தெரியவரும்போது அது வேறு வடிவத்திலேயே வருகிறது. எனவே உண்மையான காரணத்தை ஆராயாமல் விட்டுவிடுகிறோம்.

இந்த பிரச்சினையை சிறிது வெளிச்சம் கதை நமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. கோபாலய்யர் சாவித்திரி தம்பதிகள் வீட்டில் ஒரு எழுத்தாளன் குடிவருகிறான். ஒரு இரவு கதவு திறந்ததற்கு தாமதமானதற்கு அவளை அடிக்கிறான். அதை எழுத்தாளன் தட்டிக்கேட்கிறான். இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது. அன்று இரவு சாவித்திரியும் எழுத்தாளனும் உறக்கம் வராமல் இருக்கிறார்கள்.  அவள் கணவன் வெளியே சென்ற பிறகு அவள் எழுத்தாளன் அறைக்கு வருகிறாள். தன் கணவனால் தனக்கு சுகம் இல்லை என்றும், அவன் வேறோர் பெண்ணைத் தேடிக்கொண்டான் என்றும், எல்லா ஆண்களும் தங்கள் சுகம் தீர்ந்ததும் பெண்களை இப்படித்தான் நடத்துகிறார்கள் என்றும் சொல்கிறாள். எழுத்தாளன் நாம் இருவரும் சேர்ந்து வாழலாம் என்கிறான். இருவரும் நெருக்கமாக இருக்கிறார்கள். அப்போது அறையில் இருந்த சிறிது வெளிச்சம் அவளை பாதிக்கிறது. அவனை இனிமேல் இங்கே இருக்க்கூடாது வேறு வீடு பாருங்கள் என்று சொல்லி தன் அறைக்குச் சென்றுவிடுகிறாள்.

அவள் ஏன் அப்படி தீடீரென நடந்துகொள்ள வேண்டும்? அதன் பின்னனி என்ன? அந்த அறையின் சிறிது வெளிச்சம் அவளை என்ன செய்தது? தான் தன் கணவன் மீது குற்றம் சுமத்துகிறோம். ஆனால் இப்போது அவன் செய்த அதே தவற்றை தானும் செய்யமுற்பட்டுவிட்டது சரியா என்ற கேள்வி அவளிடம் எழுகிறது. தான் இப்போது செய்வது தனக்குத் தவறாகப் படாதபோது, தன் கணவன் மீது மட்டும் தான் தவறு சொல்வது, எந்தவிதத்திலும் நியாயமாகாது என அவளுக்குத் தோன்றிவிடுகிறது.7
மணியும் சாரதாவும் புதிதாகத் திருமணமான ஜோடிகள். சாரதா கிராமத்துப் பெண். மணியைத் தேடி வரும் அவன் நண்பர்களை யார் என்ன என்று கேட்காமல் அவள் திருப்பி அனுப்பி விடுகிறாள். வருகிறவர்களிடம் என்ன ஏது என்று விசாரிக்க வேண்டும் என்று சொல்கிறான் அவன். ஒரு நாள் ராமு மணியைத் தேடி வருகிறான். அவன் வீட்டில் இல்லை. சாரதா அவனை உள்ளே வந்து அமரும்படியும், தன் கணவன் வந்துவிடுவான் என்றும் சொல்கிறாள். ராமுவுக்குத் தயக்கம். அவன் இல்லாமல் தான் எப்படி வீட்டுக்குள் செல்வது, பிறகு வருவதாகச் சொல்லி சென்றுவிடுகிறான். மணி வந்ததும் அவள் அவன் நண்பன் வந்துவிட்டுப் போனதாகவும், அவன் பெயரைக்கேட்க மறந்துவிட்டதாகவும், வீட்டில் அமரச்சொன்னதற்கு பிறகு வருகிறேன் என்று சென்றுவிட்டதாகவும் சொல்கிறாள். மணிக்கு யார் வந்தது என்று தெரியவில்லை. அவன் மனதில் குழப்பம். பல சந்தேகங்கள் எழுகிறது. மதியம் சாப்பிட்டுவிட்டு வெளியே கிளம்புகிறான். ராமு கடைத்தெருவில் சுற்றிவிட்டு திரும்பும்போது மணியை பார்க்கிறான். இப்போது அவனிடம் பேசலாமா வேண்டாமா என்ற குழப்பம் அவனுள் எழுகிறது. இங்கே அவனுள் எழும் பல சிந்தனைகளை கு.ப.ரா. அழகாகவும், நுட்பமாகவும், அற்புதமாகவும் உளவியல் தன்மையுடன் சொல்லியிருக்கிறார். இப்போது பார்த்தால் குழப்பமே மிஞ்சும் என்று அவனைப் பாராதது போல் சென்றுவிடுகிறான்.

வீட்டுக்குத் திரும்பும் மணிக்கு இன்னும் அவன் மனதில் உள்ள கோபம் தீராதிருக்கிறது. அவள் தினமும் தலையில் வைத்துக்கொள்ளும் கனகாம்பரத்தின் மீது அவன் கோபம் செல்கிறது. வாசமில்லாத இதை யார் தலையில் வைப்பார்கள் என்கிறான். அவளோ, பட்டணத்தில் உள்ளவர்கள் இதைத்தான் வைக்கிறார்கள். பட்டணத்துக்காரர்கள் மாதிரி நடந்து கொள்ள வேண்டும் என்று நீங்கள்தானே சொன்னீர்கள் என்கிறாள். அதற்காக முன்பின் தெரியாதவர்களை வீட்டுக்குள் உட்காரச் சொல்லலாமா என்று அவன் கத்துகிறான். இருவருக்கும் சண்டையாகிறது. அன்று இரவு ஏழு மணிக்கு ராமு வருகிறான். தான் காலையிலேயே வந்ததாகவும் அப்போது அவன் இல்லை என்பதாகவும் சொல்கிறான். இதனால் மணி தன் சந்தேகங்கள் தீர்ந்து ஆசுவாசம் அடைகிறான். அதன் பிறகு மணி சாரதாவை சமாதானப் படுத்துகிறான்.

11
சந்தோஷமான இரண்டு ஆண்-பெண்ணிடையே ஒரு பெண் குறுக்கிடுவதால் எழும் சிக்கல்களை ஆற்றாமையும், சண்டையும் சச்சரவுமாக இருக்கும் ஆண்-பெண்ணிடையே ஒரு ஆண் வருவதால் ஏற்படும் சிக்கல்களை சிறிது வெளிச்சமும், அவ்வப்போது சந்தோஷமாகவும் சண்டையாகவும் இருக்கும் ஆண்-பெண்ணிடையே ஒரு ஆண் புகுவதால் வரும் சிக்கல்களை கனகாம்பரம் கதையும் சொல்கின்றன.

ஒரு தவறான எண்ணத்தையும், அதன் விளைவாக மேற்கொள்ளும் தவறான நடத்தையையும், பிறகு தவற்றுக்கு வருந்துவதாகவும் இந்த கதைகளில் கு.ப.ரா. சொல்கிறார். மனிதர்கள் மீது வெறும் குற்றத்தை சுமத்துவதோடு அவர் நின்றுவிடவில்லை. குற்றம் செய்த பின்னர் அதற்கான காரணத்தை ஆராய்ந்து அதிலிருந்து பாடம் பெற்றதாகவும் அவர் கதாபாத்திரங்கள் சித்தரிக்கப் பட்டுள்ளன.

இந்தக் கதைகளை ஏற்றுக்கொள்கிறவர்களையும் நிராகரிப்பவர்களையும் இரண்டு விதமாக பார்க்கலாம். இந்த சமூகம் சில நியதிகளையும் கட்டுப்பாடுகளையும் விதிக்கிறது. ஆனால் தனிமனிதன் தன் வாழ்வினூடான பயணத்தின் பல்வேறு கட்டங்களில் அதை மீறியபடியே சென்றுகொண்டிருக்கிறான். எனவே சமூகத்தின் முகத்தோடு தன்னை பொருத்தி, தன்னை இச்சமூகமாகவே பாவிப்பவர்கள் இக்கதைகளைப் புறக்கணிக்கிறார்கள். மாறாக தன்னை தனி மனிதனாக மட்டுமே காண்பவர்கள் இக்கதைகளை ஏற்றுக்கொள்கிறார்கள்.

(மறுபிரசுரம். முதல் பிரசுரம் ஜூலை 1, 2013)

Related Posts Plugin for WordPress, Blogger...