க.நா.சுவின் நாவல்கள்: சில குறிப்புகள்

க.நா.சுவின் ‘பொய்த்தேவு’ அனைவரும் அறிந்த பிரபலமான நாவல். அதைத் தவிரவும் மேலும் ஒன்பது நாவல்களை க.நா.சு எழுதியிருக்கிறார் என்பது பலருக்கும் தெரியாது. க.நா.சு.நூற்றாண்டை ஒட்டி அவரது பல நாவல்களை நற்றிணைப் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. தமிழ் இலக்கியத்தில், அசலான நாவல் முயற்சி அவர் நாவலில் இருந்தே தொடங்குகிறது. அவர் நாவல்கள் ஒவ்வொன்றும் ஒருவிதம். விதவிதமான தினுசுகளில் நாவல்களை எழுதிப் பார்த்த அவரின் எழுத்தாற்றல் பிரமிப்பை ஊட்டுவது. தமிழ் இலக்கியத்தில் பன்முக ஆளுமை கொண்ட படைப்பாளிகளில் சிறந்தவரான அவர் எழுதிய இந்நாவல்கள் ஒவ்வொரு இலக்கிய ஆர்வலரும் அவசியம் படித்து இன்புறத் தக்கவை. நற்றிணைப் பதிப்பகம் இந்நாவல்களை நோ்தியாகவும் அழகாகவும் வெளியிட்டிருப்பது பாராட்டப்பட வேண்டியதாகும். நாவலைப் பற்றி அவரே எழுதிய சில முன்னுரைக் குறிப்புகளைப் படிப்பதன் மூலம் அவர் நாவல்களின் பரந்துபட்ட தன்மையை அறிவதோடு, அவற்றை வாசிக்கவேண்டும் என்ற உந்துதலையும் நாம் பெறுகிறோம். (கடைசி இரு நாவல்களைப் பற்றிய குறிப்புகள் சி.மோகன் எழுதியவை).

1. கோதை சிரித்தாள்: நன்றி மறவாத ஒரு மாணாக்கன் தன் பழைய உபாத்தியாயரையும், சில நாட்கள் தனக்கு உணவு அளித்துத் தன் குடும்பத்தில் ஒருவனாக நடத்திய உபாத்தியாயரின் மனைவியையும் எண்ணித் திரும்பி வந்தால் எப்படி உணருவான், என்ன செய்வான் என்று சொல்லிப் பார்க்க எனக்கு ஆசை. இதை உணர்ச்சி வசப்பட்டு விடாமலும் மெலோட்ராமாடிக்காகச் சொல்லாமல் சொல்லிச் செய்து பார்க்க வேண்டும் என்கிற ஆசையில் கோதை சிரித்தாள் நாவலை எழுத ஆரம்பித்தேன்.

2. ஒருநாள்: ஆரம்ப முதலே என் நாவல்களில் பலருக்கும் பிடித்த நாவலாக 'ஒருநாள்' அமைந்ததை என்னால் உணர முடிந்தது. சாத்தனூர் என்ற கிராமமும் அதன் மக்களும் என்னைத் தாக்கிப் பாதித்த வேகத்தில் எழுதிய நாவல். பல சுவாரசியமான மனிதர்களை நானே நேரில் கண்டு தெரிந்துகொள்ள ஆசைப்பட்டு விரிவாக உருவாக்கினேன். இந்த நாவலை எழுதுவதில் எனக்கு ஒரு வேகம் இருந்தது. வேகம் கெட வேண்டும் என்கிற நினைப்புள்ள எனக்குக்கூட இந்த வேகம் பிடித்ததாக இருந்தது. நிரந்தரமான ஓர் உண்மையின் கூறுகள் இந்த நாவலில் வருகிற வாழ்க்கை வழிகளிலும், கதாபாத்திரங்களிலும் அடங்கிக் கிடப்பதாக நான் எண்ணுகிறேன். வாசகர்களில் இந்த தலைமுறையைச் சேர்ந்த சிலரும் அப்படியே எண்ணுவார்கள் என்று நம்புகிறேன்.

3. சர்மாவின் உயில்: நான் 1938இல் இரண்டு மாதங்கள் சேலத்தில் ஒரு ஹோட்டலில் போய் உட்கார்ந்துகொண்டு ஒரு நாவலை எழுதி முடிப்பது என்று தீர்மானித் தேன். நாற்பத்தைந்தே நாட்களில் 'சர்மாவின் உயில்' நாவலை எழுதி முடித்துவிட்டு, அடுத்த பத்து நாட்களில் அதைத் திரும்பவும் எழுதி விட்டேன். இரண்டாவது தடவை எழுதியது பல அனாவசியமான பகுதிகளை அகற்றவும் நாவலைச் சுருக்கமாக எழுதவும் எனக்குப் பயன்பட்டது. இந்நாவலில் வரும் கதையோ சம்பவங்களோ ஜோசியமோ முக்கியமல்ல. ஆனால் குணச் சித்திரங்கள், மனப்போராட்டம், உலகமே ஒரு குடும்பம் என்கிற சித்தாந்தம் இவற்றில் நம்பிக்கை வைத்து நான் எழுதிய நாவல் 'சர்மாவின் உயில்'. எனக்குத் திருப்தி தந்த முதல் நாவல் இது.

4. அவரவர் பாடு: எனக்கு மர்ம நாவல்கள் படிப்பதில் கனமான நாவல்கள் படிப்பது போல ஈடுபாடு உண்டு. மர்ம நாவல்களையும் இலக்கியத் தரமுள்ளதாக பிரெஞ்சு நாவலாசிரியர் ஜியார்ஜஸ் ஸிமனான் என்பவர் எழுதுகிறார் என்பதைக் கவனித்தபோது ஏன் அம்மாதிரி சில நாவல்கள் எழுதக் கூடாது என்று தோன்றியது. சிதம்பரத்தில் என் தகப்பனார் கண்முன் நடந்த ஒரு சம்பவத்தை வைத்து அதற்கு கண், காது, மூக்கு, கால், மனம், காலம் என்று எல்லாம் சேர்த்து 'அவரவர் பாடு' என்கிற நாவலை எழுதினேன். இன்னும் பல மர்ம நாவல்கள் எழுதிப் பார்க்க ஆசை உண்டு.

5. ஆட்கொல்லி: ஆட்கொல்லி என்கிற இந்த நாவல் தொடராக எழுதப்பட்டதுதான். பத்திரிகைக்காக அல்ல, ரேடியோவுக்காக. நண்பர் டி.என். விசுவநாதன் என்பவர் இதை மிகவும் அழகாக ரேடியோவில் வாரவாரம் வாசித்தார். எனக்கு மிகவும் பிடித்த நாவல் இது. என் கதாநாயகரின் பணம் ஈட்டும் சக்தி எனக்கு வரவில்லை என்றாலும் என் குண விசேஷங்களில் பாதியாவது அவர் காரணமாக வந்தவைதான். இளவயதில் அவர் வீட்டில் வளர்ந்தவன் நான்.


6. பித்தப்பூ: மனித மனத்தில் பைத்தியம் என்று ஒரு வியாதி ஏன் ஏற்படுகிறது. அது ஏற்படுகிற விதத்தை நாவலாகச் செய்ய முடியுமா என்று யோசித்து பித்தப்பூ என்ற நாவலை 1959இல் எழுத எண்ணினேன். மூன்று தரம் வெவ்வேறு கோணங்களிலிருந்து வெவ்வேறு வழிகளில் எழுதிப் பார்த்தேன். திருப்தி அளிப்பதாக இல்லை. இப்போது இருக்கிற வடிவம் நான்காவது. எல்லாச் சம்பவங்களும் கற்பனை, பாத்திரங்களும் பொய் என்று சொல்வது நாவல் மரபு. மாறாக இதில் வருகிற எல்லாக் கதாபாத்திரங்களும் சம்பவங்களும் எனக்குத் தெரிந்தவரையில் முழு உண்மை.

7. அவதூதர்: 'அவதூதர்' நாவலை டைப் செய்து அப்பொழுது விளம்பரப்படுத்தப்பட்டிருந்த ஒரு சர்வதேச நாவல் போட்டிக்கு அனுப்பினேன். நாவலுக்குப் பரிசு வரவில்லை. ஆனால் பிரசுரிக்க ஏற்றுக்கொண்டிருப்பதாகச் சொல்லி ஒரு ஆயிரம் டாலர் ராயல்டி முன்பணமும் கான்ட்ராக்ட்டும் அமெரிக்கப் பிரசுரலாயத்திலிருந்து வந்தது. அச்சுக்கு நூலைக் கொடுக்கும் போது சில மாறுதல்கள் செய்ய வேண்டும் என்று எழுதினார்கள். முக்கியமாக அவதூதர் சித்து விளையாடுவதாய் வருகிற இடங்களை மாற்ற வேண்டும். பகுத்தறிவுக்கு இந்த அதிசயங்கள் ஒத்துவரவில்லை என்றார்கள். இந்த நம்பிக்கைகள், அதிசயங்கள் இந்தச் சமுதாயத்தில் ஒரு பகுதியினரிடம் உள்ளவை என்று சொல்லி நான் மறுத்துவிட்டேன்.

8. அசுரகணம்: க.நா.சு.நாவல்களில் எனக்கு மிகவும் பிடித்தது அசுரகணம். அசுரகணங்களின் மீது மனித மனம் கொண்டிருக்கும் அலாதியான கவர்ச்சியை அற்புதமாக வசப்படுத்தியிருக்கும் நாவல். இப்படைப்பில் புறநிகழ்வுகள் வெகு சொற்பம். மன நிகழ்வுகளால் கட்டமைக்கப் பட்டிருக்கும் நாவல். அசாதாரணமானவன், விசித்திரமானவன், சிந்தனையாளன் என்றெல்லாம் தன்னைக் கருதிக்கொள்ளும் ஒரு இளைஞனிடம் சுழித்துச் சுழன்றோடும் சுபாவமான எண்ண ஓட்டங்களில் இப்படைப்பு உருப்பெற்றிருக்கிறது. ஒரு நிகழ்வின் அடியாக ஓர் எண்ணம் எழுந்து, அது அதன் எல்லாப் பக்கங்களிலும் விரிந்து, பரவி வியாபிக்கிறது. மனித மனத்தில் எவ்வித பிரயாசைகளுமின்றி ஓயாது அலையடித்துக்கொண்டிருக்கும் எண்ணங்களின் பிரவாகத்தை அகப்படுத்தும் ஆற்றல் கொண்ட ஒரே கலை வடிவம் நாவல். ஒரு சாதனத்தின் தனித்துவமிக்க சிறப்பம்சத்தில் உயிர் கொள்ளும் படைப்புதான் அச்சாதனத்தின் உச்சங்களைத் தொடுகிறது. இவ்வகையில் தமிழின் மிகவும் குறிப்பிடத்தகுந்த நாவல்களில் ஒன்று அசுரகணம்.

9. வாழ்ந்தவர் கெட்டால்: தமிழின் மகத்தான நாவல் மரபைத் தோற்றுவித்தவர் க.நா.சு. தமிழ் நாவல் பிராந்தியத்தின் எல்லைகளை விஸ்தரிக்கும் வேட்கையோடும் முனைப்போடும் அவர் விதவிதமான நாவல்களை எழுதினார். கதைக்களன்களில் புதிய உலகங்களையும் கட்டமைப்புகளில் புதிய பாணிகளையும், அவர் தொடர்ந்து உருவாக்கியபடி இருந்தார். அவருடைய நாவல்களில் மிகுந்த சுவாரஸ்யமும், விறுவிறுப்பும் கூடியது ‘வாழ்ந்தவர் கெட்டால்’. நாவலின் பரப்பு சிறியது. பாத்திரங்களும் நிகழ்வுகளும் விரல் எண்ணிக்கையில் அடங்கிவிடுபவை. ஆனால் இந்த நாவலை வாசிக்கும் போது நாம் பெறும் சுபாவமான அனுபவப் பெருவெளி பிரமிப்பூட்டக் கூடியது. மனித மனங்களின் புதிர்ப் பாதைகளில் நம்மைச் சுழற்றி எறிந்து திகைக்க வைக்கிறது இப்படைப்பு. க.நா.சுவின் நூற்றாண்டு வருடத்தில் அவரின் படைப்பு மேதைமையை உணர்வதற்கான ஒரு வாய்ப்பாக இப்படைப்பு வெளிவந்திருக்கிறது.

(திருத்திய மறுபிரசுரம். முதல் பிரசுரம் ஏப்ரல் 4, 2013)

Related Posts Plugin for WordPress, Blogger...