‘தமிழை யார் எடுத்துச் செல்வது?’: சாரு நிவேதிதா

‘தமிழை யார் எடுத்துச் செல்வது?’ எனும் தலைப்பில் செப்டம்பர் 27 ‘தி இந்து’ நாளிதழில் சாரு நிவேதிதா கட்டுரை ஒன்று எழுதியிருந்தார். அவர் குறிப்பிடும் கருத்துக்கள் நூற்றுக்கு நூறு உண்மை என்பதில் சந்தேகமில்லை. தமிழின் முக்கியமான படைப்புகள் பற்றியும் படைப்பாளிகள் பற்றியும் ஆங்கிலத்தில் எடுத்துச் சொல்வதற்கு மட்டுமல்ல தமிழில் எடுத்துச் சொல்வதற்கும் கணிசமாக யாரும் இல்லை என்பதுதான் இன்னும் நிதர்சனமான உண்மை. தமிழில் எழுதும் ஒரு படைப்பாளி, தமிழிலேயே ஒரு குறுகிய வட்டத்திற்குள்தான் அறியப்படுகிறார் என்பது வருத்தம் தரும் செய்திதான். எல்லோராலும் பரவலாக ஏற்றுக்கொண்ட படைப்பு அல்லது படைப்பாளி என்று தமிழில் எதையும் அல்லது யாரையும் குறிப்பிடுவது அரிதிலும் அரிதானது. நமது இலக்கியச் சூழலில் நிலவும் குழு மனப்பான்மை இதற்குப் பெரும் தடையாக இருந்துவருகிறது. ஒரு குழுவைச் சேர்ந்தவர்கள் ஏனைய குழுவோடு ஒத்துப்போவதில்லை. எனவே தமிழிலேயே இந்தப் பின்னடைவு இருக்கும்போது ஆங்கிலத்தில் எடுத்துச் சொல்வதைப் பற்றி என்ன சொல்ல?

பொள்ளாச்சி டாக்டர் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மைய’த்தின் மூலம் ஆண்டுதோறும் நூறு அயல்மொழி நூல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்படவுள்ளது பற்றிய செய்தியை ‘தி இந்து’ செப்டம்பர் 26 இதழில் கண்டேன். மிகவும் வரவேற்கத்தக்க பணி. பாரதி தொடங்கி வைத்த இந்தப் பணியை க.நா.சு. தீவிரப்படுத்தினார். நிறுவனங்களும் பல்கலைக்கழகங்களும் செய்ய வேண்டிய அந்தப் பணியை க.நா.சு. ஒருவரே நின்று ஆயுள் பூராவும் செய்தார். அவர் செய்ததைத் தொடர்ந்து இன்று பல மொழிபெயர்ப்பாளர்கள் ஆங்கிலத்திலிருந்து ஏராளமான அளவில் தமிழில் மொழிபெயர்த்துக்கொண்டிருப்பதையும் நாம் அறிவோம். உலக அளவில் பிரபலமான எந்த எழுத்தாளராக இருந்தாலும் அல்லது, பிரபலம் ஆகாத தாஹர் பென் ஜெலோன் (மொராக்கோ) போன்றவர்களாக இருந்தாலும் அவர்களின் படைப்புகள் தமிழ் மொழிபெயர்ப்பில் கிடைக்கிறது. ஆனால், அதே அளவுக்குத் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் ஆங்கிலத்திலோ அல்லது பிற ஐரோப்பிய மொழிகளிலோ கிடைக்கிறதா என்றால் இல்லை என்றே பதில் சொல்ல வேண்டியிருக்கிறது. ஒப்பீட்டளவில் பார்த்தால் ஆங்கிலத்திலிருந்து தமிழில் வருவதில் நூற்றில் ஒன்று அல்ல; ஆயிரத்தில் ஒரு சதவீதம் கூட தமிழ் நூல்கள் ஆங்கிலத்தில் செல்வதில்லை.

தமிழகத்துக்கு வெளியே தெரியாது:

பல மொழி எழுத்தாளர்கள் கலந்துகொள்ளும் சர்வதேச எழுத்தாளர் கருத்தரங்குகளில் தமிழைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு ஆட்களே இல்லை. ஆனால் இங்குள்ள ஒவ்வொரு எழுத்தாளரும் நூற்றுக் கணக்கான புத்தகங்களை எழுதியவர்களாகவும் சர்வதேசத் தரத்தில் எழுதுபவர்களாகவும் இருக்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டுக்கு வெளியே அவர்கள் பெயர் தெரிவதில்லை. இந்தியின் நிர்மல் வர்மாவை நமக்குத் தெரிகிறது. மொழிபெயர்ப்பும் உள்ளது. ஆனால், இங்கே உள்ள அசோகமித்திரனை இந்தியில் தெரியாது. இவ்வளவுக்கும் அசோகமித்திரன் இந்தியாவே பெருமைப்பட வேண்டிய ஒரு மேதை. இலக்கியத்தில் அவர் அளவுக்கு சாதித்திருப்பவர்கள் உலக இலக்கியத்திலேயே கம்மி என்று சொல்லலாம். ஆனால், நமக்கே அவரைப் பற்றி அதிகம் தெரியவில்லை. அது மட்டும் அல்ல. நோபல் பரிசு பெறத் தக்க அளவுக்குத் தமிழில் ஒரு டஜன் பேருக்கு மேல் இருக்கிறார்கள். பெயரையும் சொல்ல முடியும். அசோகமித்திரன், சா.கந்தசாமி, ந.முத்துசாமி, ஆ.மாதவன், இந்திரா பார்த்தசாரதி, ஞானக்கூத்தன், தேவதச்சன், தேவதேவன், வண்ணநிலவன், மனுஷ்ய புத்திரன், எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன், ஷோபா சக்தி, இளங்கோவன் (சிங்கப்பூர்) என்று பலர். இந்தப் பட்டியல் என்னுடைய தனிப்பட்ட ரசனை சார்ந்தது. சீரிய தமிழ் இலக்கிய வாசிப்பு இருப்பவர்களால் இந்தப் பட்டியலில் இன்னும் சிலரையும் சேர்க்க முடியும். இவர்கள் அனைவரும் இன்னமும் தீவிரமாக எழுதிக்கொண்டிருப்பவர்கள். பிரெஞ்சு மொழியைத் தவிர உலகின் வேறு எந்த மொழியிலும் இந்த அளவுக்கு சர்வதேசத் தரத்தில் படைப்புகள் உருவாகிக்கொண்டிருக்கவில்லை. உலக இலக்கியத்தைக் கூர்மையாக அவதானித்துக்கொண்டிருப்பவன் என்ற முறையில் இதை என்னால் அழுத்தமாகச் சொல்ல முடியும்.

ஆங்கிலம், தமிழ் வித்தியாசம்:

இவ்வளவு பேர் இருந்தும், இவ்வளவு அதிகமாக எழுதியும் தமிழ்நாட்டுக்கு வெளியே ஏன் தமிழ் எழுத்து செல்லவில்லை? இரண்டு காரணங்கள். நம் பெருமையை நாமே சொன்னால்தானே அடுத்தவருக்குத் தெரியும்? சொல்வதற்கு யார் இருக்கிறார்கள்? தமிழ் அறிந்தோருக்கு ஆங்கிலம் தெரியவில்லை. ஆங்கிலம் தெரிந்தவர்களுக்குத் தமிழ் இலக்கியப் பரிச்சயம் அறவே இல்லை. இன்று நேற்று அல்ல; நூறு ஆண்டுகளாக இதே நிலைமைதான். உதாரணமாக, 1954-ல் நடந்த ஒரு சம்பவம். சுந்தர ராமசாமியின் ‘க.நா.சு. நினைவோடை’ என்ற அற்புதமான நூலில் இந்தச் சம்பவம் வருகிறது.

பிற மொழிகளில் எழுத்தாளர் நிலை:

திருவனந்தபுரத்துக்கு வந்திருந்த க.நா.சு.வை நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்டியன் கல்லூரிக்குப் பேச அழைக்கிறார்கள் சு.ரா.வும் கிருஷ்ணன் நம்பியும். ஆனால், அந்தக் கல்லூரிப் பேராசிரியருக்கு க.நா.சு.வைத் தெரியவில்லை. ஆனால் க.நா.சு. ‘தி இந்து’ (ஆங்கிலம்) நாளிதழில் மதிப்புரை எழுதும் விஷயம் ஞாபகம் வந்த சு.ரா. அதைப் பேராசிரியரிடம் சொல்கிறார். உடனே பேராசிரியர், “ஓ… கே.என்.எஸ்-ஸா? அதை முதலிலேயே சொல்லக் கூடாதா? நன்றாகத் தெரியுமே” என்கிறார். “ஹிண்டுவில் எழுதுவதென்றால் எவ்வளவு பெரிய ஆளாக இருக்க வேண்டும் என்று என்னை விட க.நா.சு.வைப் புகழ ஆரம்பித்துவிட்டார் பேராசிரியர்” என்கிறார் சு.ரா. ஆங்கிலத்துக்கும் தமிழுக்குமான இடைவெளியை இந்தச் சம்பவத்திலிருந்து நாம் புரிந்துகொள்ளலாம். ஆனால், பிற மொழிகளில் எப்படி இருக்கிறார்கள்?

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிரான்ஸிலிருந்து ஒரு எழுத்தாளர் இந்தியா வந்திருந்தார். உடனே இந்தியாவின் எல்லா முக்கிய நகரங்களிலும் உள்ள அலியான்ஸ் ஃப்ரான்ஸேஸ் மற்றும் பிரெஞ்சைப் பாடமாக போதிக்கும் சர்வகலாசாலைகள் எல்லாவற்றிலும் அவருடைய கலந்துரையாடல் நடந்தது. மறுநாளே அது பற்றி தினசரிகளில் செய்தி வருகிறது. சென்னைப் பல்கலைக்கழகத்தின் பிரெஞ்சுத் துறையிலும் அவர் விரிவுரையாற்றினார். அவருடைய புத்தகத்தைப் புகைப்பட நகல் எடுத்து, ஒரு மாதத்துக்கு முன்பே மாணவர்களிடம் கொடுத்து, படித்துவிட்டுக் கலந்துரையாடலுக்கு வரச் சொல்லியிருந்தார்கள் பிரெஞ்சுத் துறை பேராசிரியர்கள். இவ்வளவுக்கும் அவர் எழுதியிருந்தது அந்த ஒரே ஒரு நூல்தான்.

பரிசுகளின் பயன்பாடு:

தமிழ் அளவுக்கு இவ்வளவு தீவிரமாக இலக்கியச் செயல்பாடுகள் உலகின் பிற மொழிகளில் நடக்கவில்லை என்ற போதும் தமிழ் இலக்கியத்துக்கு இதுவரை ஒரு சர்வதேச விருது கூட வழங்கப்படாததற்குக் காரணம் வேறு யாரும் அல்ல; நாம்தான். உதாரணமாக, தாகூரை விடவும் கவிதையில் சிறந்த பாரதிக்கு ஏன் நோபல் கிடைக்கவில்லை? தாகூரின் கீதாஞ்சலி மொழிபெயர்ப்புக்கு அப்போது உலகப் புகழ் பெற்றிருந்த டபிள்யூ,பி. யேட்ஸ் முன்னுரை கொடுத்ததோடு மட்டுமல்லாமல் உலக அளவில் அதை அறிமுகமும் செய்தார். அதை எடுத்துக்கொண்டு தாகூர் சுமார் 30 நாடுகளுக்குச் சென்று அறிவுஜீவிகளிடமும் கவிகளிடமும் அறிமுகம் செய்துகொண்டார். தாகூருக்கு நோபல் கிடைத்தது 1913-ல். பாரதி இறந்த ஆண்டு 1921.

பரிசுகளின் பயன்பாடு என்னவென்றால், எந்த மொழிக்குப் பரிசு கிடைக்கிறதோ அந்த மொழியில் நடக்கும் இலக்கியச் செயல்பாடுகள் உலக அளவில் பிரபலமாகும். இலக்கியத்துக்கான நோபல் பரிசு தாகூருக்குப் பிறகு எந்த இந்திய எழுத்தாளருக்கும் கிடைக்காவிட்டாலும் பல சர்வதேசப் பரிசுகளை இந்தியாவின் பிற மொழிகள் வாங்கியிருக்கின்றன. குறிப்பாக இந்தி, வங்காளம், மலையாளம், கன்னட மொழிகள். சர்வதேச அளவில் தமிழ் இலக்கியம் பற்றிப் பேச ஆள் இல்லை. ஒருசிலரே இருந்தாலும் அவர்கள் சங்க இலக்கியத்திலிருந்து ஒரு அங்குலம்கூட நகர்வதாகத் தெரியவில்லை. அதேபோல் சமகாலத் தமிழ் இலக்கியத்துக்குச் சரியான ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இல்லை. அப்படியே கிடைத்தாலும் அது தரமான மொழிபெயர்ப்பாக இல்லை. எனவே இப்போதைய உடனடித் தேவை, ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பதை விட தமிழ் இலக்கியம் ஆங்கிலத்துக்கும் பிற ஐரோப்பிய மொழிகளுக்கும் செல்வதற்கான வழிவகைகள் காணப்பட வேண்டும். அதற்கான மொழிபெயர்ப்புக் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். மேலும், எந்த மொழியில் மொழிபெயர்ப்பு நடக்கிறதோ அந்த மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களும் அந்தக் குழுவில் பங்கேற்றிருக்க வேண்டும்.

Related Posts Plugin for WordPress, Blogger...