September 24, 2015

‘காந்தி’ -அசோகமித்திரன்: உண்மையும் பொய்யும்

அசோகமித்திரனின் இந்தக் கதை காபி பற்றியதா அல்லது உண்மை பற்றியதா என்ற சந்தேகம் தோன்றலாம். ஆனால் கதையைப் படித்தபிறகே காபிக்கும் உண்மைக்கும் இடையேயிருக்கும் தொடர்பையும் பொருத்தத்தையும் நாம் அறிந்து வியக்க முடியும். காபியில் ஆரம்பித்து காபியில் முடியும் இந்தக் கதை உண்மை-பொய், நண்பன்-எதிரி என்பதைப் பற்றிச் சொல்லும் முகமாக இரு நபர்களுக்குள்ளே நிலவும் உறவுகளைப் பற்றிய சில பார்வைகளை முன்வைக்கிறது. உண்மை எப்போதும் நிகழும் தருணத்தில் உண்மையாகவே இருக்கிறது ஆனால் அதற்குப் பிறகு அது ஆறிப்போன காபியாக ஏடு (பொய்) படிந்து, மனிதர்களின் உறவில் சிக்கலைக் கொணர்கிறது என்பதை இந்தக் கதையில் மிக அற்புதமாக சித்தரித்திருக்கிறார் அசோகமித்திரன்.

காபியின் கசப்பை விரும்பி ஏற்றுக்கொள்ளும் கதைசொல்லி ‘உண்மை கசப்பானது’ என்று எப்போதும் சொல்லிவந்த நிலையில், காபியில் கசப்பை உணர்வது, அவன் உண்மையின் கசப்பை இப்போதுதான் முழுமையாக உணர்கிறான் என்பதைத் தெரியச்செய்கிறது. காபியின் கசப்பு தினமும் தொடர்ந்த பருகுதலில் சலித்தது போலவே உண்மையின் கசப்பும் சலித்து அலுத்து விடுகிறது. காபியின் கசப்பு, சங்கோசமாக இருந்து சங்கடமாகி பிறகு அதுவே பெருமையாகி இறுதியில் சம்பிரதாயமாவது போலவே உண்மையும் பல்வேறு நிலைகளைக் கடந்து கடைசியில் வெறும் சடங்காக ஆகிவிடுகிறது என்பதைச் சொல்லும் இந்தக் கதை அசோகமித்திரனின் மேதமைக்குச் சான்று.

தனது நண்பன் எதிரியாகிவிட்டான் என்பதும், தன்னைப் பற்றிய பொய்களைப் பரப்பிவருகிறான் என்பதுமே, இன்றைய தினத்தின் காபியின் கசப்பிற்குக் காரணம் என்பதை உணரும் அவன், தன்னைப் பற்றிப் பொய்கள் வெளியில் உலவுகின்றன என்பதைவிட, அவற்றை அந்த நண்பன்தான் உலவவிடுகிறான் என்பதில் மிகுந்த வருத்தமடைகிறான்.  பரிசுத்தத்தின் எல்லையையும் சோகத்தின் எல்லையையும் உணர்வில் காட்டி மகத்தான அனுபவத்தை பகிர்ந்தளித்த நண்பன், இப்பொழுது முன் திட்டத்தோடும் துவேஷத்தோடும் பொய்களைக் கூறி பரப்பி வருவது, காபி கசப்பானது போல, உண்மை பொய்யானது போல, நண்பன் எதிரியாகிவிட்டான் என்பதை உணரச்செய்து அளவற்ற சோகத்தை அவன் மனதில் திணிக்கிறது.

ஹோட்டலில் மாட்டியிருந்த காந்தி படத்தை கதைசொல்லி கண்டதும், அவன் மனதில் இருந்த காபி, உண்மை, கசப்பு, நண்பன், எதிரி என்ற சிந்தனை இயல்பாக அவரைப் பின்தொடர்ந்து செல்கிறது. காந்தியைப் பற்றி அவன் நினைவுகளில் ஓடும் எண்ணங்களின் வழியாக, காந்தியைப் பற்றிய மொத்த சித்திரத்தையும், ஒண்ணரைப் பக்க விவரணையில், மிகத் துல்லியமாகப் படம்பிடித்துவிடுகிறார் அசோகமித்திரன். “தனக்கு அந்தரங்கம் என்று எதையுமே வைத்துக் கொள்ளாதவர், ஒரு நாளில் இருபத்திநான்கு மணி நேரத்திலும் தன்னை மற்றவர் பார்வைக்கும் பரிசோதனைக்கும் பாராட்டுக்கும் கண்டனத்திற்கும் வெளிப்படுத்திக் கொண்டவர். தனக்கே கூச்சமேற்படுத்தும் நினைவுகளையும் அனுபவங்களையும் அவரைப் பேர் ஊர் தெரியாதவர்கள் கூட என்றோ எப்போதோ அறிந்து அவரைப்பற்றி விகாரமாக எண்ணிக் கொள்ளக்கூடிய வகையில் ஒப்புதல் வாக்குமூலம் போல சுயசரிதை எழுதியவர்” என்பதாகச் செல்லும் சிந்தனைகளின் வாயிலாக தன்னையும் தன் நண்பனைக் குறித்தும் ஓர் ஒப்பீடு செய்துகொள்கிறான் அவன்.

காந்தியைப் பற்றி இருவருக்குமிடையே நிகழும் விவாதம், ஒவ்வொரு மனிதனும் பிரிதொரு மனிதனை வெறுக்க, துவேஷிக்க ஏதாவது ஒரு காரணம் இருக்கவே செய்யும் என்பதையும், ஒவ்வொருவரும் தத்தம் இயல்புக்கேற்ப அந்தக் காரணங்களைக் கண்டடைகிறார்கள் என்பதையும் காட்டுகிறது. உலகில் எல்லா மனிதர்களைப் பற்றியும் இத்தகைய பொய்யும், உண்மையும் இல்லாமலிருக்காது. எனவே, அவைகளின் உண்மையில் பொய்யையும், பொய்களில் உண்மையையும் காணும் மனிதர்கள் பிறர் மீது வெறுப்பும் துவேஷமும் கொள்வது இயல்பானது. ஆக, அந்தக் காரணங்களைக் கண்டுபிடிப்பதைவிடவும், அந்தக் காரணங்களைக் களைவதே நாம் முக்கியமாகச் செய்யக்கூடியது என்பதையும், அப்படிச்செய்பவனே உண்மையான மனிதன் என்பதையும் இந்தக் கட்டத்தில் நம்மை உணரச் செய்கிறார் அசோகமித்திரன்.

காந்தியைப் பற்றிய தனது எண்ணங்களும் நண்பன் கருத்துக்களும் இடையே உள்ள பேதமே தங்களின் இப்போதைய நிலைக்குக் காரணமோ என்று தோன்றும் அவனுக்கு, நண்பன் காந்தியைப் பற்றிச் சொல்லும் குற்றச்சாட்டுகள், காந்தி என்ற ஒரு மிகப்பெரிய ஆளுமைக்கே இந்த நிலை எனில், தான் எந்த மூலை என்ற தெளிவை அவனுக்குத் தருகிறது. எனவே தனது வேதனை சற்றே தணிந்தவனாக ஆகும் அதே நேரத்தில், தன்னுடைய பிரச்சினைகளுக்காக, சுயநலத்திற்காக, கேவலம் காந்தியோடு பிணைத்து பலவற்றையும் யோசிக்க நேர்ந்துவிட்ட எண்ணங்களின் கட்டற்ற தன்மை மீதான கசப்பையும் உணர்கிறான்.

அதன் பிறகான கதையின் கடைசி பத்தியை அசோகமித்திரன் இவ்வாறு முடிக்கிறார்: “அவன் எதிரே அரைக் கோப்பையளவில் ஆறிக்குளிர்ந்து போயிருந்த காபி மீது காற்று வீசும்போது நூற்றுக்கணக்கான நுணுக்கமான கோடுகளின் நெளிவுமூலம் காபி திரவத்தின் மேற்பரப்பில் பரவிய மெல்லிய ஏடு தன்னை வெளிக்காட்டிக் கொண்டிருந்தது.” நண்பன் எதிரியாவது போலவே காலமாற்றத்தில் உண்மை பொய்யாகி விடுகிறது. நல்ல மனிதர்கள் கெட்டவர்களாகி விடுகிறார்கள். உண்மையில், உண்மை என்று ஒன்று இருந்தால்தானே அது பொய்யாக முடியும்? காபியை ஏடு பல்வேறு நெளிவு சுளிவுகள் மூலம் மறைத்து விடலாம். ஆனால் அதன் உள்ளே காபி இருப்பது உண்மையானது, அதன் கசப்பும் உண்மையானது உண்மையைப் போல.

இந்தக் கதையை காபியில் ஆரம்பித்து அசோகமித்திரன் பின்னிச் செல்லும் அழகு அற்புதமானது. காபியிலிருந்து கசப்புக்கும், கசப்பிலிருந்து உண்மைக்கும், உண்மையிலிருந்து பொய்க்கும், பொய்யிலிருந்து நண்பனுக்கும், நண்பனிலிருந்து எதிரிக்கும் செல்லும் கதை அதன் உச்சமாக, சமூகத்தில் உண்மைக்கு உதாரணமாகத் திகழும் காந்திக்கு சென்று, ஒரு மனிதன் மற்றோர் மனிதன் மீது கொள்ளும் வெறுப்புக்கும், துவேஷத்துக்கும் காரணம் என்ன என்பதை ஆராயும் முகமாகப் பயணித்து, தனி ஒரு மனிதன் பிற மனிதனோடு கொள்ளும் உறவின் அடிப்படை இயல்பை பரிசீலிக்கிறது. கதையைப் படித்துவரும்போது, இந்தக் கதையின் இதயம் என்று சொல்லத்தக்க பின்வரும் பகுதியில் கவனம் செலுத்தியிருந்தாலே இந்தக் கதையில் அசோகமித்திரன் என்ன சொல்லவருகிறார் என்பதை நாம் புரிந்துகொள்ள முடியும்.
காபிக் கோப்பை மீது உட்கார வந்த ஒரு ஈயைச் சட்டென்று விரட்டினான். அரைக் கோப்பை அளவு மிஞ்சியிருந்த காபி மீது லேசாக ஏடு பரவ ஆரம்பித்திருந்தது. இந்த காபியைத்தான் குடிக்கப் போவதில்லையே, ஏன் ஈயை விரட்டினோம் என்று அவனுக்குத் தோன்றியது. ஓர் ஈ எத்தனை நாட்கள் உயிர் வாழ்ந்திருக்கும்? பத்து நாட்கள்? இருபது நாட்கள்? ஒரு மாதம்? அந்தக் குறுகிய கால வாழ்க்கையில் ஒரு கணம், அதன் ஒரு வாய் உணவு, பெரும்பங்கைத்தான் வகிக்க வேண்டும். அவனால் இப்போது சாக்கடையில் கொட்டப்பட இருக்கும் அந்த காபி எத்தனை ஜீவ ராசிகளின் முழு ஜீவித ஆதாரமாக இருக்கக்கூடும்? எவ்வளவு எளிதில் சிருஷ்டி தர்மத்தை, ஓருயிர் தான் வாழவேண்டும் என்று மேற்கொள்ளும் இயக்கத்தை, தன்னால் ஒரு சலனம் கூட இல்லாமல் புறக்கணிக்க முடிகிறது, துஷ்பிரயோகம் செய்ய முடிகிறது? மனிதனுக்கும் மனிதனுக்கும்கூட இப்படித்தானோ? காந்தி இதற்குத்தான் மீண்டும் மீண்டும் தான் ஆங்கிலேயரை வெறுக்கவில்லை, ஆங்கிலேயரைத் துவேஷிக்கவில்லை என்று கூறிக் கொண்டாரோ?
இந்தக் கதையை ஒரு முறை வாசிக்கும் போது புலப்படாத நுட்பங்கள் பல்வேறு இடைவெளிகளில், பலமுறை வாசிக்கும்போதே கிட்டும். பலருக்கு இந்தக் கதையை உள்வாங்குவதில் சிரமமிருக்கலாம். காரணம், இந்தக் கதையின் வடிவம் அத்தகையது. எனவேதான் இந்தக் கதையைப் பற்றிச் சொல்லும் ஜெயமோகன், “இந்தக்கதையில் வெறும் எண்ணங்கள் மட்டுமே உள்ளன. அவையே ஒரு கதையை உருவாக்குகின்றன. இது கதை என்பதைவிட எண்ணங்களின் உணர்வுகளின் ஒரு துண்டு மட்டுமே. ஒருமனிதனின் அகவுலகின் ஒரு தருணம் அல்லது ஒரு கீற்று மட்டுமே இது என்று வாசித்தால் இதை அணுகத் தடை இருக்காது. இந்த எண்ணங்கள் ஒரு கட்டுரை அல்ல. இது ஒரு மன ஓட்டம். ஆகவே இந்த மன ஓட்டம் என்னென்ன விஷயங்களைப் பின்னிப்பின்னிச் சொல்லிச்செல்கின்றது என்பது முக்கியமானது. எப்படி பின்னிச் செல்கிறது என்பது அதைவிட முக்கியமானது. மனதின் ஒரு தருணத்தைச் சொல்லிவிட்டமையால் இது இலக்கியப்படைப்பு. மிக நுட்பமாகச் சொல்லியிருப்பதனால் ஒரு சாதனை. பிற கதைகளை வாசிப்பதுபோல இது என்ன சொல்கிறது என்று மட்டுமே பார்ப்பதனால்தான் இது பிடிபடாமல் போகிறது. பிற கதைகளுடன் ஒப்பிட்டு தொடக்கம் முடிவு என்ன என்று பார்ப்பதனால் கதையாக அல்லாமலாகிறது” என்கிறார்.

Related Posts Plugin for WordPress, Blogger...