September 22, 2015

ஆர்.சண்முகசுந்தரம் படைப்புகள்

திருப்பூர் மாவட்டத்தில் கீரனூர் என்னும் கிராமத்தில் செல்வாக்குமிக்க, வசதியுள்ள குடும்பம் ஒன்றில் பிறந்தவர் ஆர்.சண்முகசுந்தரம். இவரது தாயார் ஜானகி அம்மாள், தந்தை எம்.இரத்தினாசல முதலியார். சண்முகசுந்தரத்தின் மனைவி வள்ளியம்மாள். இளம் வயதிலேயே தாயை இழந்ததால், தந்தை வழிப் பாட்டியின் அரவணைப்பில் இவரும் இவர் தம்பியும் வளர்ந்தனர். இவரது தம்பி ஆர்.திருஞானசம்பந்தமும் ஒரு எழுத்தாளர். பதிப்பாளராகவும், பத்திரிகையாளராகவும்  இருந்தவர்.

மணிக்கொடி இதழில் சிறுகதை எழுதத் தொடங்கினார். இவரது முதல் சிறுகதை ‘பாறையருகே’ பி.எஸ்.ராமையா மணிக்கொடியின் ஆசிரியராக இருந்த போது வெளிவந்தது. ‘நந்தா விளக்கு’ என்ற மற்றொரு கதையையும் மணிக்கொடியில் எழுதினார். வசந்தம் என்னும் இதழைத் தம் தம்பியுடன் இணைந்து பல ஆண்டுகள் நடத்தியுள்ளார். இவ்விதழின் கௌரவ ஆசிரியராக பொருளாதார நிபுணர் ஆர்.கே.சண்முகம் செட்டியார் இருந்தார். ஆர்.சண்முகசுந்தரத்தின் பல சிறுகதைகளும், வசன கவிதைகளும் அதில் வெளிவந்தன.

சண்முகசுந்தரம் ‘பாரததேவி'யில் உதவி ஆசிரியராக இருந்போது கு.ப.ரா.வுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது. ஒருமுறை, திருவல்லிக்கேணி கடற்கரையில் இருவரும் சந்தித்துக்கொண்டபோது, “கிராமிய மணம் கமழும் வகையில் உங்கள் சிறுகதைகள் அமைந்திருப்பதால், நாவல் ஒன்று எழுதுங்களேன்'' என்று கு.ப.ரா. ஊக்கமளித்ததால், இரண்டே மாதங்களில் ‘நாகம்மாள்' என்ற நாவலைப் படைத்தார். கு.ப.ரா.வுக்கு வியப்பு ஏற்பட்டது. பெரிய நாவல் ஒன்று எழுத வேண்டும் என்று ஆண்டுக்கணக்கில் திட்டமிட்டுக் கொண்டிருக்கும்போது, இந்த இளைஞர் திடீரென நாவல் ஒன்றை எழுதி முடித்ததைக் கண்டு மகிழ்ச்சியடைந்த கு.ப.ரா இந்நாவலுக்கு முன்னுரை எழுதினார்.

‘மணிக்கொடி எழுத்தாளர்களில் சண்முகசுந்தரம்தான் முதன் முதலில் நாவல் எழுதியவர்' என்று திறனாய்வாளர் சிட்டியும், சிவபாத சுந்தரமும் புகழ்ந்தனர். ‘நாகம்மாள்' நாவலுக்குப் பிறகு 1944ல் ‘பூவும் பிஞ்சும்' என்ற நாவலும், 1945ல் ‘பனித்துளி'யும் அவரால் எழுதப்பட்டன. நாகம்மாள், பூவும் பிஞ்சும் ஆகிய இரு நாவல்களையும் ‘இரட்டை நாவல்கள்' என்று விமர்சகர்கள் குறிப்பிடுவர். கொங்கு மணம் கமழும் ‘நாகம்மாள்' ஆர்.சண்முகசுந்தரத்தின் பெயரை தமிழ்நாட்டில் முன் நிறுத்திய பெருமைக்குரிய நாவல். இந்நாவலை எழுதிபோது சண்முகசுந்தரத்துக்கு வயது 22. தமிழகத்தின் மேற்குப் பகுதியான கொங்கு வட்டார வழக்கில் அமைந்த இந்நாவலை க.நா.சுப்பிரமணியம் தமிழின் முதல் வட்டார நாவல் என்று குறிப்பிட்டார்.

தமிழின் முதல் வட்டார நாவலைப் படைத்த ஆர்.சண்முகசுந்தரம் சிறுகதை, நாடகம், கவிதை, மொழியெர்ப்பு என பல தளங்களிலும் தன்னுடைய படைப்புகளைத் தந்துள்ளார். பார்சி, உருது மொழிகளைக் கற்றுக்கொண்ட அவர், சரத் சந்திரரின் நாவல்கள் பலவற்றை மொழிபெயர்த்தார். இவர் எழுதிய நாவல்கள் மொத்தம் 18. அவற்றுள் பூவும் பிஞ்சும், தனிவழி, அறுவடை, சட்டிசுட்டது ஆகியவை முக்கியமானவை. எண்ணம் போல் வாழ்வு, விரிந்த மலர் ஆகியவை குறுநாவல்கள். இவை இரண்டும் ஒரே நூலாக வெளியாயின. சரத் சந்திரர், பங்கிம் சந்திரர், விபூதிபூஷன் பந்தோபாத்யாய, தாராசங்கர் பானர்ஜி முதலிய வங்க புதின ஆசிரியர்களின் நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். ஆனந்த விகடனில் இவர் மொழிபெயர்த்த "சந்திரநாத்" என்ற சரத் சந்திரரின் நாவல் தொடராக வெளிவந்தது. பதேர் பாஞ்சாலி இவரது மொழிபெயர்ப்பில்தான் தமிழுக்கு வந்தது.

சகோதரர் திருஞானசம்பந்தம் இறந்தபிறகு, தனக்கென வாழாமல், தம்பியின் குழந்தைகளுக்காக வாழ்ந்தார். "பணத்தை அளவுகோலாக வைத்துக்கொண்டு என்னை மதிப்பவர்களை நான் மதிப்பதில்லை. வறுமையை நான் விரும்பியே ஏற்றுக்கொண்டேன். நான் போய்விட்டாலும், என் எழுத்துகள் நிற்க வேண்டும்'' என்று சொன்ன சண்முகசுந்தரம், 1977ம் ஆண்டு தம் அறுபதாவது வயதில் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டு இவ்வுலகை விட்டு நீங்கினார். அவர் எழுதிய புத்தகங்களின் பட்டியல்:

நாவல்கள்:
 1. நாகம்மாள் (1942)
 2. பூவும் பிஞ்சும் (1944)
 3. பனித்துளி (1945)
 4. அறுவடை (1960)
 5. இதயதாகம் (1961)
 6. எண்ணம் போல் வாழ்வு, விரிந்த மலர் (1963)
 7. அழியாக்கோலம் (1965)
 8. சட்டிசுட்டது (1965)
 9. மாலினி (1965)
 10. காணாச்சுனை (1965)
 11. மாயத்தாகம் (1966)
 12. அதுவா இதுவா (1966)
 13. ஆசையும் நேசமும் (1967)
 14. தனிவழி (1967)
 15. மனநிழல் (1967)
 16. உதயதாரகை (1969)
 17. மூன்று அழைப்பு (1969)
 18. வரவேற்பு (1969)
சிறுகதைகள்:
 1. நந்தா விளக்கு (சிறுகதைத் தொகுப்பு)
 2. மனமயக்கம் (சிறுகதைத் தொகுப்பு)
 3. புதுப்புனல் (நாடகத் தொகுப்பு)
மொழிபெயர்ப்புகள்:
 1. பதேர்பாஞ்சாலி
 2. கவி
 3. சந்திரநாத்
 4. பாடகி
 5. அபலையின் கண்ணீர்
 6. தூய உள்ளம்
உறவுகளின் உன்னதமும் உடைசலும்:

சண்முகசுந்தரத்தின் நாவல்களில் முக்கியமான நாவல்கள் என ‘நாகம்மாள்’ ‘சட்டிசுட்டது’ இரண்டையும் சொல்லலாம். எளிமையான நடையில் கிராமத்து வாழ்க்கையையும், அம் மனிதர்களின் ஆசாபாசங்களையும் விவரிக்கும் விதமாக, உறவுகளின் உன்னதங்களையும் உடைசல்களையும் சித்தரிக்கும் அற்புதமான படைப்புகள் இவை. இந்த இரண்டு நாவல்களும் நாம் அவசியம் படிக்கவேண்டியவை. எளிய மனிதர்களின் கதையை எளிமையாகவும், வலிமையாகவும் சொன்னது மட்டுமின்றி உள்ளதை உள்ளபடிச் சொன்னதாலேயே இந்நாவல்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.

1. நாகம்மாள்:

நாவல் எளிமையான நடையில் செல்கிறது. கிராமத்து வாழ்க்கை நம் கண்முன் சிறப்பாகவே விரிகிறது.  நாகம்மாள், சின்னப்பன், ராமாயி, கெட்டியப்பன் ஆகிய பாத்திரங்கள் தத்தம் குணங்களோடு சித்தரிக்கபட்டிருக்கிரார்கள். எல்லாருக்குமே அவரவர்களுக்கு என்று தனிதனி ஆசைகள் உள்ளன. சுயநலம் என்று கூட சொல்லலாம். அதுவே நாவலின் கருவாகவும் உள்ளது. கணவனை இழந்த நாகம்மாள், தன் கணவனின் தம்பி கெட்டியப்பனுடன் சேர்ந்து வாழ்கிறாள். கெட்டியப்பன் மனைவி ராமாயிக்கும் நாகம்மாவை பிடிப்பதில்லை. நாகம்மாவின் அதிகாரம், ராமாயின் சுய கௌரவத்தை பாதிக்கிறது. மணியகாரருக்கு நாகம்மாவின் கணவன் மேல் கோபம் இருக்கிறது. கெட்டியப்பனுக்கும் அதே கோபம் இருக்கிறது. ராமாயின் அம்மா காளியம்மாவுக்கு, தன் மகள் மருமகனை தன்னுடன் வைத்துக்கொள்ளவேண்டும் என்ற ஆசை. இப்படி ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் சுய நலத்திற்காக, நாகம்மாவுக்கும் சின்னப்பனுக்கும் இடையேயான பிரச்சினையை பயன்படுத்தி கொள்கிறார்கள். இந்த உறவுகளின் சிக்கலால் என்ன நிகழ்கிறது என்பதுதான் கதை.

ஆசிரியர் சரளமாக கதையை நகர்த்திசெல்கிறார். இருந்தும், 'நாவலாசிரியர் ஏன் இடையிடையே பேசுகிறார்?' என்பதுதான் நாவலை வாசிக்க ஆரம்பித்ததும் நம்முள் எழும் முதல் கேள்வி. அவர் பேசுவது ஒரு குறையே என்றாலும் கதை அதன் கடைசி முடிவை நோக்கி நகரும் ஒற்றைப்படை தன்மை உடையதாக, சிறுகதைக்கான ஒரு அம்சத்தை, கொண்டதாக இருக்கிறது. கடைசியில் கதையும் சடாரென ஒரு முடிவுக்கு வந்துவிடுகிறது. கடைசியில் நடந்துவிட்ட விபரீதம், நாகம்மாள் சம்மதத்துடன் நடந்ததா என்பதை ஆசிரியர் நம் ஊகத்திற்கே விட்டுவிடுகிறார். ஆசிரியர் பாஷையில் சொல்வதென்றால், 'நாகம்மாளும் அதைத்தான் விரும்பினாளா என்பது நமக்குத் தெரியவில்லை'. ஒவ்வோர் சமயம் கோபம், மற்றோர் சமயம் கனிவு என்பதாகவே நாகம்மாள் மற்றும் சின்னப்பனின் மனவோட்டங்கள் சொல்லபடுகிறது. என்ன இருந்தாலும் அவர்களும் மனிதர்கள்தானே என்று ஆசிரியர் காட்டுகிறார். கதை முடிவிலும் அதையே நாம் எடுத்துகொள்ளலாம்.

இந்த நாவலின் விவாத தளம் எது என்று பார்க்கும்போது, பெண்களுக்கு சொத்தில் பங்கு உண்டா இல்லையா என்பதை இந்நாவல் சொல்லவருகிறது. ஆனால் அது முழுமையாக விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளவில்லை. இருந்தும் வாசகன் மனதில் அது பற்றிய ஒரு கேள்வியை எழுப்புகிறது. இன்றும் கூட அது பற்றி சமூகத்தில் இரண்டு விதமான பார்வை இருப்பதை நாம் பார்க்கிறோம்.

நாகம்மாள் எளிமையான ஒரு குறுநாவல். நாவலுக்குண்டான  அம்சங்கள் அதில் குறைவு. அலங்காரமான வார்த்தைகளோ, ஆர்பாட்டமான உத்திகளோ எதுவும் இல்லாத ஒரு குறுநாவல். படித்து முடித்ததும், பசுமையான சோலையில், கிராமத்தில், சில்லென்ற காற்றின் இதத்தில், மோருடன் சேர்ந்து பழைய சோறு சாப்பிட்ட உணர்வு ஏற்படுகிறது. கூடவே கடித்துக்கொள்ள மிளகாயும் உண்டு.

2. சட்டி சுட்டது:

சில நாவல்கள் படிக்க ஆரம்பித்தவுடனேயே நமக்குப் பிடித்துப்போகின்றன. சட்டி சுட்டதும் அப்படித்தான். கிராமம் என்றாலே அழகு, அமைதி. ஆனால் மனித உறவுகளிடையே ஏற்படும் சிக்கல்கள் அந்த அழகையும் அமைதியையும் சிதறடித்துவிடுகின்றன. ஒரத்தபாளையம் கிராமத்தில் தனது அமைதியையும் நிம்மதியையம் தொலைத்த சாமிக்கவுண்டர் என்ற பண்ணாடியின் கதைதான் சட்டி சுட்டது. சாமிக்கவுண்டருக்கும், அவர் மகன்கள் இருவருக்குமிடையே நடக்கும் உறவின் மோதலையும், போராட்டத்தையும் வெளிக்காட்டும் ஆர்.ஷண்முகசுந்தரத்தின் சிறந்த படைப்பு இது. 

உறவு என்பதன் அர்த்தம் என்ன? அது சுயநலமா? அன்றி பிறருக்கு உதவும் மனம் படைத்த பொதுநலமா? உறவுகள் சதையும் ரத்தமுமாக உள்ள மனிதனையும் அவன் உள்ளத்தையும் ஆதாரமாகக் கொண்டதா அன்றி அது வெறும் உயிரற்ற ஜடப்பொருட்களைச் சார்ந்ததா? வளர்ந்ததும் பறந்து செல்வனவா உறவுகள்? அவற்றிற்கு வேர்களும் கிளைகளும் இல்லையா? வேரைப் புறக்கணிக்கும் கிளைகளும் விழுதுகளும் என்றாவது நன்றாக இருக்குமா? போன்ற எண்ணற்ற கேள்விகளை நம் மனம் முழுதும் நிரப்பும் நாவல் சட்டி சுட்டது.

நாகம்மாவை விட சட்டி சுட்டது சிறந்தது என்று சொல்லலாம். நாகம்மாவில் சொத்தைக் கைப்பற்றும் முயற்சியின் ஒற்றை இழையைப் பற்றிக்கொண்டு நாவல் பயணிக்கிறது. ஆனால் சட்டி சுட்டது வாழ்வின், மனிதர்களின் பல்வேறு உணர்வுகளைச் சித்தரிப்பதாக இருக்கிறது. சாமிக்கவுண்டர் மற்றும் அவர் மகள் வேலாத்தாளின் நினைவுகளனூடே பழைய நினைவுகள் நிழ்காலத்தின் சம்பவங்களுடன் கைகோர்த்து வரிவதாக நாவல் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. மேலும் பல விசயங்கள் தெளிவுபடுத்தப் படாமல் நாவல் செல்வது நாவலில் வாசகன் பங்கினைக் கோருகிறது. இது நாவலுக்கு வலு சேர்க்கிறது.

ஆசைகளும், விருப்புகளும், வெறுப்புகளும், சுயநலமும் உறவுகளில் எத்தகைய சிக்கல்களை கொண்டு சேர்த்துவிடுகின்றன என்பதை விவரிப்பதன் வாயிலாக அப்பா மகன் உறவின் சிக்கல்களை நாவல் ஆராய்கிறது. முன்னெரெல்லாம் அவர்களுக்கிடையே ஒரு இடைவெளி இருந்தது. இருவரும் தள்ளியே இருந்தார்கள். ஒருவேளை அந்த இடைவெளிதான் அவர்களைப் பிணைத்தும் வைத்திருந்ததோ என்னவோ? இன்று இவர்களுக்கிடையே நெருக்கம் இருக்கிறது. அந்த இடைவெளி இல்லாமல் போய்விட்டது. அதுவே இன்று பிரிவுக்கும், குரோதத்துக்கும், வெறுப்புக்கும் காரணமாகிவிடுகிறது என்று தோன்றுகிறது.

வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் ஆண் சலிப்பும், சோர்வும் கொண்டுவிடுகிறான். எல்லாவற்றையும் உதறிவிடும் மனப்பான்மை அவனை எளிதாகப் பற்றிக்கொள்கிறது. ஆனால் இறுதிவரை குடும்பத்தைக் கட்டிக்காக்கப் பாடுபடுபவள் பெண்தான். தன் மகன்கள் வளர வளர அவர்கள் மீது அவநம்பிக்கையும் நிராசையுமே சாமிக்கவுண்டரிடம் வெளிப்படுகிறது. சாமிக்கவுண்டர் தன் மகன் மாரப்பன் திருமணத்தில் மனமுடைந்துபோவது இதை நமக்கு உணர்த்துகிறது. இரு மகன்களிடையே ஒத்துவராமை கடைசியில் அவரை தனது மகள் வேலாத்தாளுடன் தனியாக சென்று வசிக்க வைக்கிறது. அவர்களுக்கிடையே என்ன சிக்கல் எது சிக்கல் என்பதை ஷண்முகசுந்தரம் இலாவகமாக தவிர்த்து, பூடகமாகச் சொல்லும் முறையால் நாவல் வேறோர் கட்டத்துக்குத் தாவிவிடுகிறது.

உறவுகளிடமிருந்து கடைசியில் தனித்து நிற்கும் சாமிக்கவுண்டர் பாத்திரம் நம் மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்துவதோடு அழுத்தமாகப் பதிந்தும் விடுகிறது. அது, நாம் நமது குடும்பத்தாரோடு கொண்டுள்ள உறவைக் குறித்து பல கேள்விகளை எழுப்பி நமக்கும் அவர்களுக்குமிடையேயான பந்த பாசங்களைப் பற்றிய மறுபரீசீலனையில் நம்மை ஈடுபடத் தூண்டுகிறது.

எவ்வளவுதான் ஜாக்கிரதையாகக் கையாண்டாலும் சட்டி எப்படியும் சுடத்தான் செய்யும். அப்படிச் சுட்டதின் வடுவாக மிஞ்சி நிற்பதுதான் ஷண்முகசுந்தரத்தின் இந்த சட்டி சுட்டது. சுட்டதும் விட்டுவிடாமல் தாங்கிப் பிடிப்பதினாலேயே சட்டியை உடையாமல் பாதுகாக்க முடியும் என்பது இந்நாவல் தரும் வாசிப்பின் அனுபவம்.

Related Posts Plugin for WordPress, Blogger...